Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 7 பிப்ரவரி, 2013

பறக்கும் படை பணிகளை புறக்கணிப்போம்... முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு


தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் 1ம் தேதி பிளஸ் 2 தேர்வுகள் ஆரம்பமாகிறது. இதனையொட்டி பிராக்டிக்கல் தேர்வுகள் கடந்த 4ம் தேதி ஆரம்பமாகி தொடர்ந்து நடக்கிறது. வரும் 18ம் தேதிக்குள் பிராக்டிக்கல் தேர்வுகளை முடிக்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிளஸ் 2 பொது தேர்வில் தேர்வு மையங்களில் தேர்வுகளை கண்காணிக்கவும், முறைகேடுகளை தடுக்கவும் பல்வேறு பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

பறக்கும் படையில் குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு நாளும் உழைப்பூதியமாக 100 ரூபாய் வழங்கப்படும். ஒவ்வொரு உறுப்பினரும் குறைந்தது 10 நாட்கள் முதல் 12 நாட்கள் வரை இப்பணியில் ஈடுபட்டனர். இதில் நெல்லை கல்வி மாவட்டத்தில் அனைத்து தேர்வு மையங்களிலும் கண்காணிக்க நியமிக்கப்பட்டிருந்த பறக்கும் படையினருக்கு இதுவரை உழைப்பூதியம் வழங்கப்படவில்லை. இதுசம்பந்தமாக தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் வரும் பிளஸ் 2 தேர்வுக்கு முன்பாக பறக்கும் படையினருக்கு உழைப்பூதியம் வழங்க வேண்டும். இல்லையெனில் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வுக்கு பறக்கும் படை பணிகளை புறக்கணிக்க முதுகலை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதுசம்பந்தமாக நெல்லையில் நேற்று முதன்மை கல்வி அலுவலர் காதர் சுல்தானை சந்தித்து, தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் மனோகரன், மாவட்ட துணைத் தலைவர் ஜோஸ்வா கிறிஸ்டோபர், நெல்லை கல்வி மாவட்ட தலைவர் ஆசீர் சார்லஸ் நீல் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக