Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 16 ஜூலை, 2013

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனில் டெக்னிகல் காலி இடங்கள்

இந்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஒரு பொதுத் துறை நிறுவனமாகும்.  மின் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு இந்த நிறுவனம் 1987ல் நிறுவப்பட்டது.

இந்த நிறுவனத்தின் குஜராத் கிளையில் ஸ்டைபண்டரி டிரெய்னி பிரிவில் உள்ள பல்வேறு காலி இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவுகளும் காலி இடங்களும்
என்.பி.சி.ஐ.எல்., நிறுவனத்தின் ஸ்டைபண்டரி காலி இடங்கள் டிப்ளமோ ஹோல்டர், பி.எஸ்.சி., ஹோல்டர், பிளாண்ட் ஆபரேட்டர், பிட்டர்  மெஷின்ஸ்ட் என்ற நான்கு பிரிவுகளின் கீழ் நிரப்பப்பட உள்ளன.  இவற்றில் முதல் பிரிவில் 21 இடங்களும், இரண்டாவது பிரிவில் 21 இடங்களும், பிளாண்ட் ஆபரேட்டர் பிரிவில் 45 இடங்களும், மெஷினிஸ்ட் பிரிவில் 49 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

தேவைகள்
முதல் இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவராகவும், மூன்றாவது மற்றும் நான்காவது பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

டிப்ளமோ ஹோல்டர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் மெக்கானிகல், எலக்ட்ரானிக்ஸ் அல்லது கெமிக்கல் பிரிவில் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு மூன்று வருட டிப்ளமோ படிப்பை தொடர்புடைய துறையில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இரண்டாவது பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.எஸ்.சி., படிப்பை இயற்பியல் அல்லது வேதியியலில் முடித்திருக்க வேண்டும்.  பிளான்ட் ஆபரேட்டர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ப்ளஸ்டூவிற்கு நிகரான படிப்பை முறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களுடன் முடித்திருக்க வேண்டும்.

மெஷினிஸ்ட் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு பிட்டர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் அல்லது மெஷினிஸ்ட் பிரிவில் ஐ.டி.ஐ., சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும்.  மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் உயரம் குறைந்த பட்சம் 160 செ.மி.,யும், எடை குறைந்த பட்சம் 45.05 கிலோவும் இருக்க வேண்டும்.

பிற தகவல்கள்
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பங்களை முழுமையாக நிரப்பி, உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு 31.07.2013க்குள் கிடைக்குமாறு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

முழுமையான தகவல்களை இந்த நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.

விண்ணப்பங்கள் கிடைக்க இறுதி நாள்: 31.07.2013

இணையதள முகவரி: www.npcil.nic.in/main/JobsRecent.aspx

கர்ப்பிணிகளுக்கு இலவச மருத்துவ வசதி: மத்திய அரசு திட்டம்

"கர்ப்பிணி பெண்களுக்கு, இலவச மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ் வசதி ஆகியவற்றை மத்திய அரசு வழங்கும்,'' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறினார்.

ஜெய்ப்பூரில், நிருபர்களுக்கு பேட்டியளித்த, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், குலாம் நபி ஆசாத் கூறியதாவது: ஜனனி சுரக்ஷா திட்டத்தின் கீழ், கர்ப்பிணி பெண்களுக்கு, பிரசவத்தின் போது, இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் பிரசவத்திற்கு பின் தாய் மற்றும் சேய் நலனை பேணி காக்க, அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.

 பிறந்த பச்சிளம் குழந்தைக்கு, ஓராண்டு காலத்திற்கு தேவையான இலவச மருத்துவ வசதிகள் வழங்கப்படும். 16 வயது அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, ரத்த சோகை பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். புதிதாக நியமிக்கப்படும் டாக்டர்கள், கிராமப்புறங்களில் பணியாற்ற மறுக்கின்றனர். இதை தடுக்க, எம்.பி.பி.எஸ்., மாணவர்களுக்கான களப்பயிற்சியை, கிராமப்புறங்களில் மேற்கொள்ளும் வகையில், நடைமுறை கொண்டு வரப்படும். தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் நியமிக்கப்படும் டாக்டர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் கூடுதல் சம்பளம், சலுகையாக வழங்கப்படும். இவ்வாறு, குலாம் நபி ஆசாத் கூறினார்.

திங்கள், 15 ஜூலை, 2013

அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவருக்கு பல்வேறு உதவிகள்

  "அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் படிக்கும், பி.சி., எம்.பி.சி., சீர்மரபின மாணவ, மாணவியருக்கு, அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது' என, தஞ்சை கலெக்டர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்படி படிக்கும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு, அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.


எவ்வித நிபந்தனையுமின்றி வழங்கப்படும் உதவித்தொகையை பெற, முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோர்களின் ஆண்டு வருமானம், ஒரு லட்சத்துக்குள் இருக்க வேண்டும். உதவித்தொகைக்கான விண்ணப்ப படிவங்களை மாணவர்கள், தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று, பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் வழங்க வேண்டும்.
மேலும் விபரம் அறிய, தஞ்சை கலெக்டர் அலுவலகத்திலுள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுக வேண்டும்.

மதுரையிலிருந்து துபாய், சிங்கப்பூருக்கு அடுத்த ஆண்டுக்குள் நேரடி விமான சேவை

"மதுரையிலிருந்து துபாய், சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை அடுத்த ஆண்டுக்குள் துவக்கப்படும்,''என, மத்திய விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.

அருப்புக்கோட்டையில் அவர் கூறுகையில்,"" மதுரை ஏர்போர்ட்டை விரிவுபடுத்தி, 12 ஆயிரம் அடிக்கு புதிய "ரன் வே' அமைக்கும் திட்டம் உள்ளது. இதற்கு தேவைப்படும் 615 ஏக்கர் நிலத்தை, மாநில அரசு கையகப்படுத்தி கொடுத்தால், உடனடியாக "ரன் வே' அமைக்கும் பணி துவக்கப்படும். இதற்காக, ஏர்போர்ட் அருகே உள்ள மதுரை- அருப்புக்கோட்டை ரோட்டிற்கு, மாற்று வழி அமைக்க வேண்டும்.


 மதுரை - சிங்கப்பூர், துபாய் நாடுகளுக்கு நேரடியாக விமான சேவை துவங்க, ஏர் இந்தியா நிறுவனத்துடன் பேசப்பட்டுள்ளது. பைலட் உட்பட பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதால், அடுத்த ஆண்டிற்குள் இந்த விமான சேவை துவக்கப்படும்,'' என்றார்.

ஞாயிறு, 14 ஜூலை, 2013

இன்று இரவு 12 மணியோடு தந்தி சேவை வரலாறாகிறது

நூற்றி அறுபது ஆண்டுகளாக, நடைமுறையில் இருந்த தந்தி சேவை, இன்று இரவு, 12:00 மணியோடு நிறைவு பெறுகிறது.

இந்தியாவில், மிகப் பழமையான சேவைகளில் ஒன்று, தந்தி சேவை. 1850ம் ஆண்டு, இந்தியாவில் அறிமுகமான தந்தி சேவை, கிழக்கு இந்திய கம்பெனியின் பயன்பாட்டுக்கு மட்டும், முதலில் இருந்தது. பின், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, தந்தி கம்பிகள் பதிக்கப்பட்டு, 1853ல், தந்தி சேவை அறிமுகமானது. 


1854ல், தந்தி சேவைக்கு தனித் துறை துவங்கப்பட்டது. 1855ல், "இந்திய தந்தி சட்டம்' உருவாக்கப்பட்டது. இணையதளம் மற்றும் மொபைல் போன்களின் பயன்பாடு அதிகரித்த நிலையில், தந்தியின் முக்கியத்துவம் படிப்படியாகக் குறைந்தது. சில அரசுப் பணிகளுக்காக மட்டுமே, தந்தி சேவை புழக்கத்தில் இருந்தது. இந்நிலையில், "தந்தி சேவை, ஜூலை, 15ம் தேதியுடன் நிறுத்தப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது. "மிகப் பழமையான மற்றும் சட்ட அங்கீகாரம் பெற்ற, தந்தி சேவையை நிறுத்தக் கூடாது. மக்களுக்கான சேவையில், லாப நஷ்ட கணக்கு பார்க்காமல், சேவையைத் தொடர, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பல தரப்புகளிலிருந்து கோரிக்கை எழுந்தது. 


தமிழகத்தில், ஐகோர்ட்டிலும் வழக்கு பதியப்பட்டு, அது தள்ளுபடியானது. ஆனால், தந்தி சேவையைத் தொடர, மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இதனால், திட்டமிட்டபடி, ஜூலை, 15ம் தேதியுடன், தந்தி சேவை நிறைவு பெறுகிறது. பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்க, சென்னை மாவட்டச் செயலர், ஸ்ரீதர் சுப்ரமணியன் கூறுகையில், ""இன்று நள்ளிரவு, 12:00 மணியுடன், தந்தி சேவை, முற்றிலும் நிறுத்தப்படும். தந்தி சேவையில் ஈடுபட்ட ஊழியர்கள், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின், வேறு பணிகளுக்கு மாற்றப்படுகின்றனர்,'' என்றார்.

பின்தங்கிய மாணவர்களுக்கு கல்லூரிகளில் விரைவில் சிறப்பு வகுப்பு

தமிழகத்தில், 62 அரசு கல்லூரிகளில், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில் பலர், படிப்பில் ஆர்வமின்மை, குறிப்பிட்ட பாடத்தில் பின்தங்கி இருத்தல் உள்ளிட்ட காரணங்களால், கல்லூரி படிப்பை பாதியில் கைவிடுகின்றனர்.

இம்மாணவர்களை கண்டறிந்து, சிறப்பு பயிற்சி வகுப்புகளை அரசு நடத்த உள்ளது. முதல் கட்டமாக, 25 கல்லூரிகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதற்காக, தலா, ஒரு கல்லூரிக்கு, 1.25 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தேர்வுகளில், எந்தெந்த பாடத்தில் மாணவர் அதிகம் தோல்வியடைகின்றனர்; எந்தெந்த பாடங்களில் குறைவான மதிப்பெண் எடுக்கின்றனர் உள்ளிட்ட விவரம் சேகரிக்கப்படும். இம்மாணவருக்கு, தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், உளவியல் ரீதியான பயிற்சி அளிக்கப்படும்.

இப்பயிற்சிக்கு, கல்லூரி அளவில், மூத்த பேராசிரியர், பொறுப்பாசிரியராக நியமிக்கப்படுவர். வரும் கல்விஆண்டில், இத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது. கல்லூரி வகுப்பு முடிந்த பின்பும், விடுமுறை நாட்களிலும், சிறப்பு வகுப்பு நடத்தப்படும்.

இதுகுறித்து, உயர்கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இத்திட்டத்தில், பல்கலை மானிய குழுவின், நிதி உதவியை பெறாத கல்லூரிகள், பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் பின் தங்கியுள்ள கல்லூரிகள் மட்டுமே நிதி பெற தகுதியானவை.

கல்லூரி படிப்பை முடிக்கும் மாணவர்கள் பலர், பல பாடங்களில்,"அரியர்" வைக்கின்றனர். இதனால், பட்டப் படிப்பை முடித்தும், சான்றிதழ் பெற முடியாமல், வேலைவாய்ப்பிலும் பெரும் பின்னடைவை சந்திக்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

சனி, 13 ஜூலை, 2013

முதல் மலாலா விருதை இந்திய மாணவி ரஷியா சுல்தானாவிற்கு வழங்கியது ஐ.நா.


பெண் குழந்தை கல்விக்காக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ள முதல் மலாலா விருது இந்தியாவை சேர்ந்த 15 வயது மாணவி ரசியா சுல்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த ரசியா சுல்தான் 48 பெண் குழந்தை தொழிலாளர்களை மீட்டு பள்ளியில் சேர்த்தற்காக அவர் இந்த விருதை பெறுகிறார். விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து ரசியா சுல்தானின் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரஷியா சுல்தான் மீரட்டில் உள்ள ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். குடும்ப வறுமை காரணமாக 5 வயதாக இருக்கும் போதே வேலைக்கு சென்றார். இவரை அரசு சாரா நிறுவனம் ஒன்று மீட்டு கல்வி வழங்கி வருகிறது.
தற்போது பள்ளியில் படித்து வரும் இவர், அந்நிறுவனத்துடன் இணைந்து கிராமத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருகிறார்.

முன்னதாக தனது 16வது பிறந்த நாளையோட்டி ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் மலாலா யூசப்சாய் உரையாற்றினார். ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு பேனா இருந்தால் உலகையே மாற்றிவிடலாம் என மலாலா நம்பிக்கை தெரிவித்தார். பாகிஸ்தானில் பெண் கல்விக்கு எதிரான தலிபான்கள் நடத்திய தாக்குதலை சந்தித்த மலாலாவை பெருமைப்படுத்தும் விதமாக ஜூலை 12ந் தேதியை மலாலா தினமாக ஐ.நா. அறிவித்துள்ளது. வரும் காலங்களில் மலாலாவின் அனைத்து சமுதாய கல்வி பணிகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபை உதவி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.