Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 14 ஜூலை, 2013

பின்தங்கிய மாணவர்களுக்கு கல்லூரிகளில் விரைவில் சிறப்பு வகுப்பு

தமிழகத்தில், 62 அரசு கல்லூரிகளில், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில் பலர், படிப்பில் ஆர்வமின்மை, குறிப்பிட்ட பாடத்தில் பின்தங்கி இருத்தல் உள்ளிட்ட காரணங்களால், கல்லூரி படிப்பை பாதியில் கைவிடுகின்றனர்.

இம்மாணவர்களை கண்டறிந்து, சிறப்பு பயிற்சி வகுப்புகளை அரசு நடத்த உள்ளது. முதல் கட்டமாக, 25 கல்லூரிகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதற்காக, தலா, ஒரு கல்லூரிக்கு, 1.25 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தேர்வுகளில், எந்தெந்த பாடத்தில் மாணவர் அதிகம் தோல்வியடைகின்றனர்; எந்தெந்த பாடங்களில் குறைவான மதிப்பெண் எடுக்கின்றனர் உள்ளிட்ட விவரம் சேகரிக்கப்படும். இம்மாணவருக்கு, தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், உளவியல் ரீதியான பயிற்சி அளிக்கப்படும்.

இப்பயிற்சிக்கு, கல்லூரி அளவில், மூத்த பேராசிரியர், பொறுப்பாசிரியராக நியமிக்கப்படுவர். வரும் கல்விஆண்டில், இத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது. கல்லூரி வகுப்பு முடிந்த பின்பும், விடுமுறை நாட்களிலும், சிறப்பு வகுப்பு நடத்தப்படும்.

இதுகுறித்து, உயர்கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இத்திட்டத்தில், பல்கலை மானிய குழுவின், நிதி உதவியை பெறாத கல்லூரிகள், பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் பின் தங்கியுள்ள கல்லூரிகள் மட்டுமே நிதி பெற தகுதியானவை.

கல்லூரி படிப்பை முடிக்கும் மாணவர்கள் பலர், பல பாடங்களில்,"அரியர்" வைக்கின்றனர். இதனால், பட்டப் படிப்பை முடித்தும், சான்றிதழ் பெற முடியாமல், வேலைவாய்ப்பிலும் பெரும் பின்னடைவை சந்திக்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக