Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 3 ஜூன், 2013

மலேசிய இந்திய சமூகத்தில் அதிகரித்து வரும் விவாகரத்துகள்

மலேசியாவில் வாழும் இந்திய சமூகத்தில் விவாகரத்துகள் பெருகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வருடத்துக்கு சுமார் 5 ஆயிரம் என்ற அளவில் விவாகரத்துகள் அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இதுகுறித்து தமிழ் பெல் கிளப் மலேசியாவின் தேசிய தலைவர் எஸ்வி லிங்கம் கூறுகையில், இது போன்ற நிலை தொடர்ந்தால், சமூகத்தில் பிளேக் நோய் போல் இது பரவி, சமூகச் சிக்கலை ஏற்படுத்திவிடும் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

மலேசிய நண்பன் பத்திரிகையில், இது குறித்து அண்மையில் வெளியான செய்தியில், மலேசிய இந்திய சமூகத்தில் தம்பதிகளுக்கு இடையேயான அன்னியோன்யம் குறைந்து, புரிந்துணர்வும் குறைந்து இடைவெளி அதிகரித்து வருவதும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போகும் மனப்பாங்கு குறைந்துள்ளதும் காரணம் என்று கூறியுள்ளது. இதனால் விவாகரத்துகள் மிக அதிகமாக ஆகிவிட்டன என்று கூறப்பட்டுள்ளது, சில வருடங்களுக்கு முன்னர் வருடத்துக்கு 200 என்ற அளவில் இருந்த விவாகரத்துகள் இப்போது 5000 என்ற அளவுக்கு உயர்ந்துவிட்டது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த லிங்கம், மலேசிய இந்து சங்கம் தம்பதிகளை அழைத்து அவர்களுக்கு கட்டாய வகுப்புகளை நடத்த வேண்டும், அவர்களுக்கு வழிகாட்டி, அவர்களின் கடமைகளை எடுத்துச் சொல்லி, திருமண பந்தத்தை வெற்றிகரமானதாக்க முயற்சி எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

குற்றாலத்தில் சீசன் களைகட்டியது

குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் சீசன் தொடங்கும். இந்த சீசன் ஜூலை, ஆகஸ்ட் வரை 3 மாதங்கள் வரை நீடிக்கும். சீசன் தொடங்குவதற்கான அறிகுறி மே மாத இறுதியில் தென்படும். அந்த வகையில் கடந்த 3 நாட்களாக குற்றாலம் பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது.

பகலில் வெயில் அடித்தாலும் மாலை நேரங்களில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. 3 நாட்களாக பெய்த மழையின் காரணமாக குற்றாலத்தின் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவியில் தண்ணீர் விழத்தொடங்கியுள்ளது. மெயினருவியில் ஆர்ச்சை தொட்டப்படி தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியின் 5 கிளைகளிலும் ஓரளவு தண்ணீர் விழுகிறது.

குற்றாலத்தில் சீசன் தொடங்கியதையடுத்து சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இருப்பினும் குறைந்த அளவு தண்ணீர் விழுவது சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் குற்றாலம் மலைப்பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கக்கூடும். இதையடுத்து அனைத்து அருவிகளிலும் தண்ணீர் அதிகரித்து சீசன் முழுவீச்சில் களை கட்ட தொடங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு சீசன் முழுவதுமாக கைவிட்ட நிலையில் வியாபாரிகளும் பொதுமக்களும் ஏமாற்றமடைந்தனர். இந்த ஆண்டு சீசன் குறிப்பிட்ட காலத்தில் தொடங்கியுள்ளதால் முழுவதுமாக களைகட்டும் என நம்புகின்றனர்.

வெள்ளத்தில் மிதக்கும் ஐரோப்பிய நாடுகள்

மத்திய ஐரோப்பிய நாடுகளில் தற்போது பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் ஜெர்மனி, செக்குடியரசு, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆறுகள் மற்றும் ஏரிகள் நிரம்பி வழிவதால் கரைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து நகரங்களுக்குள் வெள்ளம் புகுந்து குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. எனவே, மக்கள் வெளியே செல்ல முடியவில்லை. பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

இந்த மழை வெள்ளத்துக்கு செக்குடியரசு மற்றும் ஜெர்மனி நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. செக் குடியரசில் உள்ள விடாவா ஏரி உடைந்தது. இதனால் கரை புரண்டோடும் வெள்ளம் பிராகு நகருக்குள் நுழைந்து சூழந்துள்ளது. டிராபெனிஸ் நகரில் வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளுக்குள் சிக்கி ஒரு பெண் பிணமாக கிடந்தார். இதுபோன்று பலர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

வெள்ளம் பாதித்த செக் குடியரசில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில் 200 ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் பீட்டர் நெகாஸ் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் மழை வெள்ளம் மற்றும் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பலியாகி உள்ளனர். இங்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வெள்ளப்பகுதிகளில் மீட்பு பணிகளை பிரதமர் ஏஞ்சலா மெர்கல் முடுக்கி விட்டுள்ளார். மீட்பு பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

ஞாயிறு, 2 ஜூன், 2013

ஈராண்டில் பல்லாண்டு சாதனை படைத்த ? ஜெயலலிதா ஆட்சியில் இன்று சென்னை அண்ணா சாலையில் ஓட ஓட விரட்டி இளைஞர் வெட்டப்பட்டார்

சென்னை அண்ணா சாலையில் அமெரிக்க தூதரகம் அருகில் இன்று காலையில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ,தன்னை ஒரு கும்பல் ஆட்டோவில் வேகமாக விரட்டி வருவதை பார்த்தார். இதனால்  மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தார். ஆனால், ஆட்டோவில் வந்த 3 பேர்  ஓட ஓட விரட்டிச் சென்றுச் சென்று தப்பி ஓடிய வாலிபரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

இதில் அவருக்கு உடலில் பல இடங்களில் வெட்டு விழுந்து அலறியபடி கீழே விழுந்தார். இதைப் பார்த்து சாலையில் போய்க் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து நின்றனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஆயிரம் விளக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தவேல் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 108 ஆம்புலன்சில் வாலிபரை ஏற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.போலீஸார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் கென்னத் (40) என்பது தெரிய வந்தது.கோயம்பேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்த இவர் அதே பகுதியில் உள்ள ஜெப கூடத்துக்கு பிரார்த்தனைக்கு வந்தபோதுதான் எதிரிகளிடம் மாட்டிக் கொண்டார். ரியல் எஸ்டேட் தொழில் போட்டியில் கென்னத்தை கொலை செய்ய முயற்சி நடந்திருப்பது தெரியவந்தது.இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தா.பாண்டியனை ராஜ்யசபா வேட்பாளராக்க தியாகி நல்லகண்ணு கடும் எதிர்ப்பு

ராஜயசபா தேர்தலுக்கான வேட்பாளரை முடிவு செய்வதில், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களிடையே நேரடி மோதல் வெடித்தது. இதனால், முடிவெடுக்காமல், மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் முடிந்தது.

காலியாகும், ஆறு எம்.பி., பதவிகளில், நான்கு எம்.பி.,க்களை அ.தி.மு.க., எளிதாக தேர்வு செய்துவிடும். ஒரு எம்.பி., பதவியை, கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தேர்வு செய்ய வேண்டும். இந்நிலையில், எம்.பி.,யாக இருந்து பதவி காலம் முடியும், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி.ராஜாவை, மீண்டும் தேர்வு செய்ய வேண்டும் என, அக்கட்சிக்குள் பரவலான கருத்து நிலவுகிறது. ஆனால், கட்சியின் தமிழக செயலர் தா.பாண்டியன் போட்டியிட விரும்பியதால், யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதில், கட்சிக்குள் சிக்கல் ஏற்பட்டது. இதனால், கடந்த வெள்ளிக்கிழமை நடந்த, கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தில், வேட்பாளரை முடிவு செய்யும் பிரச்னை, முக்கிய இடம் பிடித்தது.

அ.தி.மு.க., விரும்பம்: நிர்வாகக் குழுக் கூட்டம் குறித்து, இந்திய கம்யூ., மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கூட்டத்தில், மாநில செயலர் தா.பாண்டியன், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். அதற்கு, சில காரணங்களையும் அவர் கூறினார். தன்னை, நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்ததாகவும், அப்போது, "பார்லிமென்ட் தேர்தலில், தமிழகம் முழுவதும் நான் சுற்றுப் பயணம் செய்ய வேண்டும் என, முதல்வர் ஜெயலலிதா விரும்புகிறார். எனவே, ராஜ்யசபா தேர்தலில் என்னை போட்டியிடுமாறு, பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்தார்' என கூறினார்.

கடும் எதிர்ப்பு: பாண்டியனின் பேச்சுக்கு, கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு, கம்யூனிஸ்ட் கட்சியை, மாநிலக் கட்சியொன்று வழி நடத்த முடியாது என, காட்டத்தோடு கூறினர். கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு, பாண்டியனின் கருத்தை கடுமையாக ஆட்சேபித்தார். "தேசிய செயலரான டி.ராஜா, ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார். அவரது பதவிக்காலம் முடிவதால், அவரை மீண்டும் தேர்வு செய்ய வேண்டும். கட்சியின் வேட்பாளரை, கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். தனிப்பட்டவர்களின் விருப்பு, வெறுப்புகளுக்காக, ஒருவரை வேட்பாளராக நிறுத்த முடியாது' என்றும் நல்லக்கண்ணு தெரிவித்தார். இவ்வாறு, அந்த மூத்த நிர்வாகி கூறினார்.



ஆதரவு கேட்க குழு: நல்லக்கண்ணுவின் கருத்துக்கு, கட்சி நிர்வாகிகள் மத்தியில் வரவேற்பு நிலவியதால், ராஜ்யசபா வேட்பாளரை முடிவு செய்யாமல், இந்திய கம்யூ., மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் முடிந்ததாக, அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், வேட்பாளரை முடிவு செய்யாமல், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, ராஜ்யசபா தேர்தலில் இந்திய கம்யூ., வேட்பாளரை ஆதரிக்குமாறு கேட்க, முடிவு செய்துள்ளனர். முதல்வரை சந்திக்க, கட்சியின் மூத்த நிர்வாகிகள் கொண்ட குழுவை அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே, ஜெயலலிதாவை சந்திக்கும் குழுவில் இடம்பெற, தா.பாண்டியன் மறுத்து விட்டதாக, இந்திய கம்யூ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாநில செயலர் என்ற முறையில், முதல்வரை சந்திக்கும் குழுவில், இடம் பெற வேண்டியது பாண்டியனின் கடமை என, சில மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தியதாகவும் தெரிகிறது. இப்பிரச்னைகளால், இந்திய கம்யூ.,வில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அப்பாவி சிறைவாசிகள் விடுதலை கோரி கர்நாடக முதல்வரை முஸ்லிம் லீக் (IUML ) குழு சந்திப்பு

அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட சிறைவாசிகள் விடுதலை சம்பந்தமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில செயலாளர் சிராஜ் சேட் மற்றும் IUML மலப்புரம் மாவட்ட தலைவர் சாதிக் அலி ஷிஹாப் தங்கள் அடங்கிய குழு கர்நாடக மாநில முதல்வர் சித்தாரமையாவை சந்தித்தனர்.

அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட அப்பாவி சிறைவாசிகள் விடுதலைக்கான நியாயமான ,சட்டப்பூர்வமான கோரிக்கைகளை மிக விளக்கமாக முஸ்லிம் குழு எடுத்துரைத்தது . கோரிக்கையினை கவனமுடன் கேட்ட கர்நாடக முதல்வர் சித்தாராமையா ,மிக விரைவில் கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுத்து , தீர்வு காண்பதாக உறுதி அளித்தார் . முதல்வரை சந்துக்கு முன் முஸ்லிம் லீக் குழு சிறைசாலையில் அப்துல் நாசர் மதானியை சந்தித்து பேசினர் . 

சனி, 1 ஜூன், 2013

கிராம அதிகாரிக்கு மிரட்டல் இந்திய கம்யூனிஸ்டு பிரமுகர் கைது

வறட்சி நிவாரண பணம் கிடைக்காத ஆத்திரத்தில கிராம நிர்வாக அலுவலரை கொலை மிரட்டல் செய்ததாக இந்தி ய கம்யூனிஸ்டு பிரமுகரை, போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பாக்கு வெட்டி தொடக்க கூட்டுறவு வேளான் கடன் வங்கியில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண உதவிப் பணம் வழங்கப்பட்டு வருகிறது. பசும்பொன் காலனியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் போஸ்(60) என்பவர் வறட்சி நிவாரண பணம் வாங்க வந்திருந்தார். ஆனால் பட்டியலில் இவரது பெயர் சேர்க்கப்படவில்லையாம்.    

இதற்கு பசும்பொன்-தவசிக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் முத்து கிருஷ்ணன்தான் காரணம் என்று எண்ணி, போஸ் ஆத்திரம் அடைந்து, வங்கியில் இருந்த முத்துகிருஷ்ணனுடன் தகராறு செய்து, அவரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் செய்தாராம்.

சம்பவம் குறித்து பேரையூர் காவல் நிலையத்தில் முத்து கிருஷ்ணன் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் ஜேசு, சார்பு ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, போஸை கைது செய்தனர்.