Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 30 மே, 2013

ராஜ்யசபா தேர்தலால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உட்கட்சி சண்டை?

ஜூலை மாதம் நடக்க உள்ள ராஜ்யசபா தேர்தலால், இந்திய கம்யூ., கட்சியில், உட்கட்சி சண்டை உருவாகியுள்ளது. கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியனின், அணுகுமுறையால், இந்நிலை ஏற்பட்டுள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.,க்கள், தி.மு.க., - கனிமொழி, திருச்சி சிவா, அ.தி.மு.க., - இளவரசன், மைத்ரேயன், காங்., - ஞானதேசிகன், இ.கம்யூ., - டி.ராஜா ஆகியோரது பதவிக் காலம், ஜூலை, 24ம் தேதியுடன் முடிகிறது. காலியாகும், 6 ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கான தேர்தலில், அ.தி.மு.க., 4 எம்.பி.,க்களை பெற்று விடும்; கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், 5 வது எம்.பி.,யையும் வென்று விடும்.
கூட்டணிக் கட்சிகள் பலத்துடன் வெற்றி பெறும், எம்.பி., பதவியை, இந்திய கம்யூ., தேசிய செயலர் டி.ராஜாவுக்கு அளித்து, அவரை மீண்டும் எம்.பி., ஆக்க வேண்டும் என்பது, அக்கட்சியில், பரவலாக உள்ள கருத்து. ஆனால், தனக்கு, எம்.பி., பதவி வேண்டும் என, மாநில செயலர் தா.பாண்டியன் விரும்புவதாக, அக்கட்சி நிர்வாகிகள் சிலர் கூறுகின்றனர்.

கைவிடப்பட்ட ஜெ., சந்திப்பு: ராஜ்யசபா எம்.பி., ஒருவரை தேர்வு செய்ய, 34 எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுக்கள் தேவை. இந்திய கம்யூ., கட்சிக்கு, 8 எம்.எல்.ஏ.,க்கள் தான் உள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியின், 10 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை திரட்டினாலும், மேலும், 16 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவை. இதற்கு, அ.தி.மு.க.,வின் ஆதரவு அவசியம். எனவே, அ.தி.மு.க., பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதாவை, இம்மாதம், 20ம் தேதி சந்திக்க, இந்திய கம்யூ., பொதுச் செயலர் பரதன் திட்டமிட்டிருந்தார். இதற்காக, ஜெயலலிதாவைச் சந்திக்க, நேரம் வாங்கித் தர, நேரம் கேட்டிருந்தார். ஆனால், தா.பாண்டியன், வெளிநாடு சென்று விட்டதால், ஜெயலலிதாவை சந்திக்கும் முயற்சியை, பரதன் கைவிட்டார்.

மாநிலக்குழு கூட்டம்: இந்திய கம்யூ., கட்சியின், தமிழ் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம், நாளை, சென்னையில் நடக்கிறது. இக்கூட்டத்தில், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை முடிவு செய்து, மத்திய தலைமைக்கு பரிந்துரைக்க உள்ளதாக, கட்சியின் மூத்த மாநில நிர்வாகி ஒருவர் கூறினார்.
கட்சியின், மத்திய நிர்வாகக் குழுக் கூட்டம், ஜூன், 2 ல், டில்லியில் நடக்கிறது. இதில், தமிழ் மாநில நிர்வாகக் குழு பரிந்துரைக்கும் வேட்பாளரை ஏற்று, இறுதி அறிவிப்பு வெளியாகும் என, தெரிகிறது.

புதன், 29 மே, 2013

திருநெல்வேலியில் பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் விரைவில் துவக்கம் குப்பை கிடங்கில் கலெக்டர் ஆய்வு

பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் விரைவில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் துவக்கப்படுகிறது.

நெல்லை மாநகராட்சி ராமையன்பட்டியில் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இங்குள்ள குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக கலெக்டர் சமயமூர்த்தியிடம், புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ராமையன்பட்டி குப்பை கிடங்கை நேற்று நேரில் பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது:
குப்பை கிடங்கில் வருங்காலங்களில் இதுபோன்ற தீ எரிவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குப்பைகள் பகுதி, பகுதிகளாக பிரிக்கப்பட்டு கொட்ட நடவடிக்கை எடுக்கப்படும். குப்பை கொட்டும் பகுதிகளை சுற்றி தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்கள் பதிக்கப்படும். இதன் மூலம் திடீர் தீ விபத்துக்கள் தடுக்கப்படும்.

குப்பைகளில் வரும் கழிவுகள் பிரிக்கப்பட்டு பிளாஸ்டிக் கழிவுகள் தனியாக கொட்டப்படும். மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் உள்ளது. குப்பை கிடங்கில் பணியாற்றும் பணியாளர்கள் கவனத்துடன் பணியாற்றி தீ ஏற்படாத வகையில் தடுக்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இதில் மாநகராட்சி கமிஷனர் (பொறுப்பு) மோகன், பி.ஆர்.ஓ மாரியப்பன், தீயணைப்பு அலுவலர் பத்மகுமார், உதவி தீயணைப்பு அலுவுவலர் குமரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் அணைகளில் தண்ணீர் தட்டுப்பாடால் விவசாயிகள் அவதி

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் அணைகள் அனைத்தும் வறண்டு காணப்பட்டு வரும் நிலையில் கார்சாகுபடி மேற்கொள்வதில் விவசாயிகள் பெரும் தயக்கம் காட்டி வருகின்றனர். பிசான சாகுபடியும் ஏமாற்றிவிட்ட நிலையில் கார் சாகுபடியும் பொய்த்துவிடுமோ என்ற ஏக்கத்தினால் விவசாயிகள் பெரும் ஆதங்கத்துடன் காணப்பட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கோடை மழை பொய்த்துவிட்ட நிலையில் வறட்சி மாவட்டமாக நெல்லை மாவட்டமும் அறிவிக்கப்பட்டது. இதனிடையில் கடையநல்லூர் தொகுதியை பொறுத்தவரை சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பிசான சாகுபடி நிலங்கள் போதுமான பருவமழையின்றி தரிசாக விடப்பட்டன. இத்தொகுதியில் உள்ள கருப்பாநதி, அடவிநயினார், குண்டாறு ஆகிய அணைகளுக்குட்பட்ட பாசன விவசாயிகள் பிசான சாகுபடியை போதுமான முறையில் மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். அணைப்பகுதியை ஒட்டியுள்ள விவசாயிகள் கூட விளைந்த பயிரை அறுவடை செய்ய பெரும்பாடுபட்டனர்.

இதனிடையில் தற்போது இத்தொகுதியில் உள்ள கருப்பாநதி அணை முற்றிலுமாக வறண்டு வரும் ‹ழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அடவிநயினார் அணைக்கட்டின் நீர்மட்டமும் இதே நிலையில் தான் காணப்பட்டு வருகிறது. குண்டாறு அணைக்கட்டை பொறுத்தவரை கார்சாகு போதுமான தண்ணீர் இல்லாத நிலைதான் இருந்து வருகிறது. இதனால் கடையநல்லூர் பகுதியில் கார் சாகுபடி செய்ய விவசாயிகள் பெரும் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனை மேற்கொள்ள முதற்கட்ட பணியாக துவங்கவேண்டிய நாற்றுபாவும் பணிகள் கூட ஒரு சில இடங்களில்தான் காண முடிகிறது.

பருவழையும் கைகொடுக்காத நிலையில், கார் சாகுபடிக்கான மழையும் இல்லாததால் விவசாயிகள் பெரும் ஏக்கத்துடன் இருந்து வருகின்றனர்.

காது கேளாதவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்?

தமிழகத்தில், 1,000 குழந்தைகளில், ஆறு பேருக்கு செவித்திறன் குறைபாடு உள்ளது. இது, தேசிய அளவைவிட, மூன்று மடங்கு அதிகம் என, ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

சென்னை, இ.என்.டி., ஆராய்ச்சி அறக்கட்டளை, 2003 முதல், 2012 வரை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் செவித்திறன் குறைபாடு குறித்த பரிசோதனை முகாமை நடத்தியது. மொத்தம், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் சராசரியாக, 1,000 குழந்தைகளில், ஆறு பேருக்கு, செவித்திறன் குறைபாடு உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. ஆண், பெண் என, இருபாலின குழந்தைகளிலும், இந்த குறைபாடு சரிசமமாகவே உள்ளது. இது, தேசிய சராசரி அளவைவிட, மூன்று மடங்கும், சர்வதேச அளவைவிட, ஆறு மடங்கும் அதிகம் என, தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, அறக்கட்டளை நிர்வாக இயக்குனர், மோகன் காமேஸ்வரன் கூறியதாவது: சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், 120க்கும் மேற்பட்ட, கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில், பரிசோதனை முகாம் நடத்தினோம்.

இதில், செவித்திறன் குறைபாடு கண்டறியப்பட்டோரில், மூன்றில், இரண்டு பங்கு குழந்தைகளின் பெற்றோர், சொந்தத்தில் திருமணம் செய்துக் கொண்டவர்கள் என்பது தெரியவந்தது.

குறைபிரசவம், குழந்தைகளுக்கு வரும் மஞ்சள் காமாலை, கருவில் மற்றும் குழந்தை பிறந்த பின் ஏற்படும் தொற்று போன்றவை, குழந்தைகளின் செவித்திறன் குறைபாடிற்கு காரணங்கள்.இளம் தலைமுறையினர், நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்துக் கொள்வதை தவிர்ப்பது, இக்குறைபாட்டை வரும் முன் தடுக்க, பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவற்றால், காதுகேளாத குழந்தைகள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் மாறுவதை தடுக்கலாம். இவ்வாறு, மோகன் காமேஸ்வரன் கூறினார்.

செவ்வாய், 28 மே, 2013

கலை, அறிவியல் படிப்புகளுக்கும் கல்விக் கடன் கிடைக்கிறது

பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு மட்டுமல்ல, கலை, அறிவியல் படிப்புகளுக்கும் கல்விக் கடன் வழங்க வங்கிகள் தயாராகவே உள்ளன. பி.காம்., பி.எஸ்சி., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகளுக்கும் வங்கிகளில் இப்போது கல்விக் கடன் தாராளமாக வழங்கப்படுகிறது.

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் உள்ள அனைத்து படிப்புகளுக்கும் கடன் வாங்கிக் கொள்ளலாம். சில வங்கிகளில் கலைப் படிப்புகளுக்கு கல்விக் கடன் இல்லை என்று சொல்ல வாய்ப்பு இருக்கிறது. இந்தப் படிப்புகளை முடித்தவர்களுக்கு எளிதாக வேலை கிடைக்காது என்பதால் கடன் கொடுக்க மறுக்கும் நிலை இருக்கிறது. அதனால், இந்த மாணவர்கள் சற்றுப் போராடத்தான் வேண்டியிருக்கும். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு டிப்ளமோ படிப்பவர்களுக்கும் கல்விக் கடன் உண்டு.

எவ்வளவு கடன் கிடைக்கும்?
ரூ.4 லட்சம் வரை உத்தரவாதம் எதுவும் இல்லாமல் கடன் கிடைக்கும். ரூ. 4 லட்சம் முதல் ரூ. 7.5 லட்சம் வரை கடன் பெற, பெற்றோரில் ஒருவர் தனிநபர் உத்தரவாதம் கொடுக்க வேண்டி இருக்கும்.

 ரூ.7.5 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் என்றால் சொத்து ஜாமீன் கொடுக்க வேண்டும். இது உள்நாடு மற்றும் வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களுக்கு என அனைத்துக்கும் பொருந்தும்.

எப்படி வாங்குவது?
பெற்றோருக்கு எந்த வங்கியில் கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கியில் கல்விக் கடன் பெறலாம். சில நகரங்களில் ஏதாவது ஒரு வங்கி, கல்விக் கடன் தருவதற்கென்றே ஒதுக்கப்பட்டிருக்கும். அப்படி இருக்கும்பட்சத்தில் அதில் கணக்கு ஆரம்பித்து, கல்விக் கடன் வாங்கிக் கொள்ள வேண்டும்.

கல்விக் கட்டணம், விடுதி வாடகை மற்றும் சாப்பாட்டுச் செலவு, சீருடை, புத்தகங்கள், கல்விச் சுற்றுலா, மாணவருக்கு இன்சூரன்ஸ் பிரீமியம், கம்ப்யூட்டர் லேப்-டாப் உள்ளிட்டவைகளுக்கு கல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம்.

கல்லூரியில் இருந்து கல்விக் கட்டணம், விடுதி வாடகை, உணவுக் கட்டணம், சீருடைகளுக்கு எனத் தனித்தனியாக எவ்வளவு ஆகும் என்று "போனஃபைட்' சான்றிதழில் குறிப்பிட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். அதன்பிறகு வங்கியை அணுகி விண்ணப்பிக்க வேண்டும். அதற்குரிய காசோலை, கல்லூரி பெயரில் கொடுக்கப்படும். புத்தகங்கள், கம்ப்யூட்டர் போன்றவற்றை வாங்கிவிட்டு அதற்குரிய ரசீதை வங்கியில் கொடுத்தால் அந்த பணம் கிடைத்துவிடும். இது மாணவரின் கடன் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும்.

கடனை திருப்பிச் செலுத்துவது எப்போது?
படிப்பு முடிந்து ஓர் ஆண்டுக்கு பிறகு கடனைத் திருப்பிச் செலுத்த ஆரம்பிக்கலாம். ஆனால், வேலை கிடைத்துவிட்டால் உடனே கடனை செலுத்த ஆரம்பித்துவிட வேண்டும். முன்பு படிக்கிற காலத்தில் கடனுக்கான வட்டி கணக்கிடப்பட்டு, வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், 2009-க்குப் பிறகு கொடுக்கப்படும் கல்விக் கடனுக்கு, பெற்றோரின் ஆண்டு வருமானம் 4.5 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் படிக்கிற காலத்திற்கான வட்டியை மத்திய அரசே வங்கிகளுக்குக் கொடுத்து விடுகிறது.

வெளிநாடுகளில் படிக்கிற மாணவர்களுக்கு இந்தச் சலுகையை வங்கிகள் தருவதில்லை. ஆனால், வெளிநாட்டுப் படிப்புக்கும், உள்நாட்டுப் படிப்புக்கும் ஒரே வட்டி விகிதம்தான்.

விரைவாக கடனைத் திருப்பிச் செலுத்தும் மாணவர்களுக்கு 1 சதவீத வட்டி குறைக்கப்படுகிறது. மாணவிகளுக்கு வட்டியில் சுமார் 0.5 சதவீதம் சலுகை அளிக்கப்படுகிறது. கடனை மாதத் தவணையாகக் கட்ட வேண்டும் என்பதில்லை. மாதத் தவணை காலம்போக எப்போதெல்லாம் பணம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் அந்த தொகையைக் கட்டி கடன் சுமையைக் குறைத்துக் கொள்ளலாம்.

தேவைப்படும் ஆவணங்கள்
கல்லூரி "போனோஃபைட்' சான்றிதழ், கட்டணம் குறித்த தெளிவான தகவல்கள், பெற்றோரின் வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ், 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி என்றால் கவுன்சிலிங் அழைப்புக் கடிதம், சேர்க்கைக் கடிதம் உள்ளிட்டவை தேவைப்படும். வெளிநாட்டு படிப்பு என்றால் கூடுதலாக விசா, எந்த கல்லூரியில் படிக்க இருக்கிறார், கல்லூரி மற்றும் படிப்புக்கான அங்கீகார விவரம் போன்றவற்றையும் கொடுக்க வேண்டும்.

முக்கிய அம்சங்கள்
மாணவர்கள் ஒரு பாடத்தில்கூட தோல்வியடைந்து விடக்கூடாது. ஏதாவது ஒரு பாடத்தில் ஃபெயிலானால்கூட சில வங்கிகள் அடுத்த ஆண்டுக்கு கடன் தருவதை நிறுத்திவிடும் வாய்ப்புள்ளது. அதன்பின் அந்த பாடத்தை மீண்டும்  எழுதி பாஸ் ஆன பிறகுதான் கடன் கிடைக்கும் என்ற விதிமுறை உள்ளது.

ஏதாவது ஒரு காரணத்துக்காக படிப்பை பாதியில் நிறுத்தினாலும் தொடர்ந்து கடன் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. அதுவரையில் வாங்கிய கடனை வட்டியோடு திரும்பச் செலுத்த வேண்டிவரும்.

வரிச் சலுகைகள்
திரும்பச் செலுத்தும் கல்விக் கடனில் 80-இ பிரிவின் கீழ் வட்டிக்கு மட்டுமே வரிச் சலுகை உண்டு. திரும்பச் செலுத்தும் அசலுக்கு வரிச்சலுகை இல்லை. யார் படிப்புக்காக கல்விக் கடன் பெறப்பட்டுள்ளதோ, அவருக்குதான் வரிச் சலுகை உண்டு. கல்விக் கடனைக் திரும்பச் செலுத்த ஆரம்பித்து, எட்டு வருடங்கள் வரை மட்டுமே வருமான வரி விலக்கு கிடைக்கும்.

கடன் தர தயக்கம்
கல்விக் கடன் கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் பொதுவாக அந்தந்த வங்கியின் மேலாளரைப் பொறுத்த விஷயமாக இருக்கிறது என்று பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறைவாக மதிப்பெண் எடுத்திருப்பவர்களுக்கு கடன் வழங்க வங்கிகள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், சட்டப்படி மாணவருக்கு உயர் கல்வி படிக்க கல்லூரியில் அனுமதி கிடைத்துவிட்டாலே அவருக்கு கடன் வழங்க வேண்டும் என்பதுதான் அரசின் விதி. இருப்பினும், இந்த விதியை பெரும்பாலான வங்கிகள் பின்பற்றுவதில்லை.

உதாரணத்துக்கு எம்.பி.ஏ. படிப்பதற்கு ரூ.2 லட்சம் செலவாகிறது என்றால் விதிகளின்படி உத்தரவாதம் இல்லாமல் வங்கிக் கடன் வழங்க வேண்டும்.

அனைத்து மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் : துணைவேந்தர் எம்.ராஜாராம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் எம்.ராஜாராம் (54) திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். தாற்காலிக துணைவேந்தர் காளிராஜ் அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

துணைவேந்தராகப் பொறுப்பேற்ற பிறகு நிருபர்களிடம் அவர் கூறியது:

பொறியியல் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்படும். வேலைவாய்ப்பை உறுதிசெய்தாலே அனைத்துப் பொறியியல் காலிப்பணியிடங்களும் நிரம்பிவிடும்.

அண்ணா பல்கலைக்கழக மண்டல அலுவலகங்களில் உள்ள பேராசிரியர்களின் தரத்தை உயர்த்தும் வகையில், அவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அண்ணா பல்கலைக்கழகத்தை சிறந்த தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என்றார் அவர்.

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பேராசிரியராக இருந்த ராஜாராம், ஒருங்கிணைந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கடந்த வாரம் நியமிக்கப்பட்டார். இந்தப் பொறுப்பில் அவர் 3 ஆண்டுகளுக்கு நீடிப்பார்.

இதற்கு முன்பு திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் அவர் இருந்துள்ளார்.

நெல்லையில் நாளை (29/05/2013) தனியார் வேலைவாய்ப்புசந்தை

நெல்லையில் நாளை (29ம் தேதி) தனியார் வேலைவாய்ப்புசந்தை நிகழ்ச்சி நடக்கிறது.நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்சார்பில் நாளை (29ம் தேதி) தனியார் வேலைவாய்ப்புசந்தை நிகழ்ச்சி நடக்கிறது.

இதில் , பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர் விற்பனை பிரதிநிதி, தையல், ஆசிரிய பயிற்றுனர், செக்யூரிட்டி உட்பட பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.இந்தசந்தையில் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும். தனியார் வேலைவாய்ப்பின் பயனாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என்று கலெக்டர்சமயமூர்த்தி தெரிவித்தார்.