Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 2 ஜூன், 2013

ஈராண்டில் பல்லாண்டு சாதனை படைத்த ? ஜெயலலிதா ஆட்சியில் இன்று சென்னை அண்ணா சாலையில் ஓட ஓட விரட்டி இளைஞர் வெட்டப்பட்டார்

சென்னை அண்ணா சாலையில் அமெரிக்க தூதரகம் அருகில் இன்று காலையில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ,தன்னை ஒரு கும்பல் ஆட்டோவில் வேகமாக விரட்டி வருவதை பார்த்தார். இதனால்  மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தார். ஆனால், ஆட்டோவில் வந்த 3 பேர்  ஓட ஓட விரட்டிச் சென்றுச் சென்று தப்பி ஓடிய வாலிபரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

இதில் அவருக்கு உடலில் பல இடங்களில் வெட்டு விழுந்து அலறியபடி கீழே விழுந்தார். இதைப் பார்த்து சாலையில் போய்க் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து நின்றனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஆயிரம் விளக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தவேல் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 108 ஆம்புலன்சில் வாலிபரை ஏற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.போலீஸார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் கென்னத் (40) என்பது தெரிய வந்தது.கோயம்பேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்த இவர் அதே பகுதியில் உள்ள ஜெப கூடத்துக்கு பிரார்த்தனைக்கு வந்தபோதுதான் எதிரிகளிடம் மாட்டிக் கொண்டார். ரியல் எஸ்டேட் தொழில் போட்டியில் கென்னத்தை கொலை செய்ய முயற்சி நடந்திருப்பது தெரியவந்தது.இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தா.பாண்டியனை ராஜ்யசபா வேட்பாளராக்க தியாகி நல்லகண்ணு கடும் எதிர்ப்பு

ராஜயசபா தேர்தலுக்கான வேட்பாளரை முடிவு செய்வதில், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களிடையே நேரடி மோதல் வெடித்தது. இதனால், முடிவெடுக்காமல், மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் முடிந்தது.

காலியாகும், ஆறு எம்.பி., பதவிகளில், நான்கு எம்.பி.,க்களை அ.தி.மு.க., எளிதாக தேர்வு செய்துவிடும். ஒரு எம்.பி., பதவியை, கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தேர்வு செய்ய வேண்டும். இந்நிலையில், எம்.பி.,யாக இருந்து பதவி காலம் முடியும், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி.ராஜாவை, மீண்டும் தேர்வு செய்ய வேண்டும் என, அக்கட்சிக்குள் பரவலான கருத்து நிலவுகிறது. ஆனால், கட்சியின் தமிழக செயலர் தா.பாண்டியன் போட்டியிட விரும்பியதால், யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதில், கட்சிக்குள் சிக்கல் ஏற்பட்டது. இதனால், கடந்த வெள்ளிக்கிழமை நடந்த, கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தில், வேட்பாளரை முடிவு செய்யும் பிரச்னை, முக்கிய இடம் பிடித்தது.

அ.தி.மு.க., விரும்பம்: நிர்வாகக் குழுக் கூட்டம் குறித்து, இந்திய கம்யூ., மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கூட்டத்தில், மாநில செயலர் தா.பாண்டியன், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். அதற்கு, சில காரணங்களையும் அவர் கூறினார். தன்னை, நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்ததாகவும், அப்போது, "பார்லிமென்ட் தேர்தலில், தமிழகம் முழுவதும் நான் சுற்றுப் பயணம் செய்ய வேண்டும் என, முதல்வர் ஜெயலலிதா விரும்புகிறார். எனவே, ராஜ்யசபா தேர்தலில் என்னை போட்டியிடுமாறு, பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்தார்' என கூறினார்.

கடும் எதிர்ப்பு: பாண்டியனின் பேச்சுக்கு, கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு, கம்யூனிஸ்ட் கட்சியை, மாநிலக் கட்சியொன்று வழி நடத்த முடியாது என, காட்டத்தோடு கூறினர். கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு, பாண்டியனின் கருத்தை கடுமையாக ஆட்சேபித்தார். "தேசிய செயலரான டி.ராஜா, ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார். அவரது பதவிக்காலம் முடிவதால், அவரை மீண்டும் தேர்வு செய்ய வேண்டும். கட்சியின் வேட்பாளரை, கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். தனிப்பட்டவர்களின் விருப்பு, வெறுப்புகளுக்காக, ஒருவரை வேட்பாளராக நிறுத்த முடியாது' என்றும் நல்லக்கண்ணு தெரிவித்தார். இவ்வாறு, அந்த மூத்த நிர்வாகி கூறினார்.



ஆதரவு கேட்க குழு: நல்லக்கண்ணுவின் கருத்துக்கு, கட்சி நிர்வாகிகள் மத்தியில் வரவேற்பு நிலவியதால், ராஜ்யசபா வேட்பாளரை முடிவு செய்யாமல், இந்திய கம்யூ., மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் முடிந்ததாக, அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், வேட்பாளரை முடிவு செய்யாமல், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, ராஜ்யசபா தேர்தலில் இந்திய கம்யூ., வேட்பாளரை ஆதரிக்குமாறு கேட்க, முடிவு செய்துள்ளனர். முதல்வரை சந்திக்க, கட்சியின் மூத்த நிர்வாகிகள் கொண்ட குழுவை அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே, ஜெயலலிதாவை சந்திக்கும் குழுவில் இடம்பெற, தா.பாண்டியன் மறுத்து விட்டதாக, இந்திய கம்யூ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாநில செயலர் என்ற முறையில், முதல்வரை சந்திக்கும் குழுவில், இடம் பெற வேண்டியது பாண்டியனின் கடமை என, சில மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தியதாகவும் தெரிகிறது. இப்பிரச்னைகளால், இந்திய கம்யூ.,வில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அப்பாவி சிறைவாசிகள் விடுதலை கோரி கர்நாடக முதல்வரை முஸ்லிம் லீக் (IUML ) குழு சந்திப்பு

அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட சிறைவாசிகள் விடுதலை சம்பந்தமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில செயலாளர் சிராஜ் சேட் மற்றும் IUML மலப்புரம் மாவட்ட தலைவர் சாதிக் அலி ஷிஹாப் தங்கள் அடங்கிய குழு கர்நாடக மாநில முதல்வர் சித்தாரமையாவை சந்தித்தனர்.

அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட அப்பாவி சிறைவாசிகள் விடுதலைக்கான நியாயமான ,சட்டப்பூர்வமான கோரிக்கைகளை மிக விளக்கமாக முஸ்லிம் குழு எடுத்துரைத்தது . கோரிக்கையினை கவனமுடன் கேட்ட கர்நாடக முதல்வர் சித்தாராமையா ,மிக விரைவில் கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுத்து , தீர்வு காண்பதாக உறுதி அளித்தார் . முதல்வரை சந்துக்கு முன் முஸ்லிம் லீக் குழு சிறைசாலையில் அப்துல் நாசர் மதானியை சந்தித்து பேசினர் . 

சனி, 1 ஜூன், 2013

கிராம அதிகாரிக்கு மிரட்டல் இந்திய கம்யூனிஸ்டு பிரமுகர் கைது

வறட்சி நிவாரண பணம் கிடைக்காத ஆத்திரத்தில கிராம நிர்வாக அலுவலரை கொலை மிரட்டல் செய்ததாக இந்தி ய கம்யூனிஸ்டு பிரமுகரை, போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பாக்கு வெட்டி தொடக்க கூட்டுறவு வேளான் கடன் வங்கியில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண உதவிப் பணம் வழங்கப்பட்டு வருகிறது. பசும்பொன் காலனியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் போஸ்(60) என்பவர் வறட்சி நிவாரண பணம் வாங்க வந்திருந்தார். ஆனால் பட்டியலில் இவரது பெயர் சேர்க்கப்படவில்லையாம்.    

இதற்கு பசும்பொன்-தவசிக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் முத்து கிருஷ்ணன்தான் காரணம் என்று எண்ணி, போஸ் ஆத்திரம் அடைந்து, வங்கியில் இருந்த முத்துகிருஷ்ணனுடன் தகராறு செய்து, அவரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் செய்தாராம்.

சம்பவம் குறித்து பேரையூர் காவல் நிலையத்தில் முத்து கிருஷ்ணன் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் ஜேசு, சார்பு ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, போஸை கைது செய்தனர்.

தொழில்நுட்பக் கல்லூரிகளில் பகுதிநேர பட்டயப் படிப்பு

தொழில்நுட்பக் கல்லூரிகளில் பகுதிநேர பட்டயப் படிப்புகளுக்கு வரும் ஜூன் 5 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று தொழில்நுட்பக் கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2013-14-ஆம் கல்வியாண்டிற்கு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் முதலாமாண்டு   பட்டயப் படிப்பு பொதுப் பிரிவு, சிறப்பு ஒதுக்கீடு (முன்னாள் படைவீரர், சிறந்த விளையாட்டு வீரர் மற்றம் மாற்றுத்திறனாளிகள்) மற்றும் பகுதிநேர பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் அந்தந்தப் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் 5.06.2013 முதல் 21.6.2013 வரை வழங்கப்படும்.   தொழிற் படிப்பு இடையே புகுத்தப்பட்ட sandwich course பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் அத்தகைய படிப்பு நடத்தப்படும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் மேற்குறிப்பிட்ட நாட்களில் வழங்கப்படும்.

பட்டயப் படிப்புச் சேர்க்கைக்கான கல்வித் தகுதி பத்தாம் வகுப்பில் (SSLC/Matriculation) தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி ஆகும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் அந்தந்த பலவகை  தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு வந்துசேர வேண்டிய கடைசி நாள்:    21.6.2013.

கற்பனை வளம் மிக்க நுண்கலை படிப்பு

அரசு கவின்கலைக் கல்லூரியில் 2013-14ம் ஆண்டிற்கான பட்ட மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. படிப்பில் சேர தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வழங்கப்படும் படிப்பு:

பி.எப்.ஏ., (காட்சித் தொடர்பு வடிவமைப்பு, வண்ணக்கலை, சிற்பக்கலை, சுடுமண் ஆலையக வடிவமைப்பு, துகிலியல், பதிப்போவியம்) ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.

கல்வித்தகுதி: இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையதளப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 23 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் எனில் உச்ச வயது வரம்பு 26 ஆகும்.

முதுகவின் கலைப் பட்டப்படிப்பு, எம்.எப்.ஏ (காட்சித் தொடர்பு வடிவமைப்பு, வண்ணக்கலை, சிற்பக்கலை, சுடுமண் ஆலையக வடிவமைப்பு, துகிலியல், பதிப்போவியம்)

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்ப கட்டண தொகையுடன் ரூ.15க்கான தபால் தலை ஒட்டி, சுய முகவரி எழுதிய கவரை இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பம் பெறலாம். மேலும் சென்னை அல்லது கும்பகோணம் பகுதியில் உள்ள கல்லூரிகளில் விண்ணப்ப கட்டணம் வரைவோலையை செலுத்தி விண்ணப்பம் பெறலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 17ம் தேதிக்குள் வந்து சேரும் படி அனுப்ப வேண்டும்.

 கூடுதல் தகவல்கள் அறிய 044-25610878, 0432-2481371 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

வெள்ளி, 31 மே, 2013

நெல்லையில் பரபரப்பு, இடைநிலை ஆசிரியர்கள் திடீர் தர்ணா போராட்டம், கவுன்சிலிங்கில் காலி பணியிடங்கள் மறைப்பு

தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரிய, ஆசிரியைகளுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் பாளை லயோலா கான்வென்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மாறுதல் கவுன்சிலிங் நடந்தது. மொத்தம் 18 காலியிடங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான இடைநிலை ஆசிரியர்கள் இக்கவுன்சிலிங்கில் பங்கேற்றனர்.
ஆனால் கவுன்சிலிங் ஆரம்பமான போது மாவட்டத்தில் 11 காலியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு அனைத்து தரப்பு ஆசிரிய, ஆசிரியைகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அனைத்து காலி பணியிடங்களும் காட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கவுன்சிலிங்கை ஆசிரியர்கள் புறக்கணித்தனர். தொடர்ந்து வெளியே வந்து திடீர் தர்ணா போராட்டத்தையும் நடத்தினர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் இப்பிரச்னை தொடர்பாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பத்மாவதி, சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து காலை 10.30 மணிக்கு மாவட்டத்தில் 15 காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே காட்டிய காலி பணியிடங்களை விட கூடுதலாக 4 காலி பணியிடங்கள் காட்டப்பட்டன.
தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு ஆசிரிய, ஆசிரியைகள் கவுன்சிலிங்கில் பங்கேற்றனர். போராட்டத்தின் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் கவுன்சிலிங் பணிகள் பாதிக்கப்பட்டன.

இதில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் முருகேன்,ரமேஷ், சுடலைமணி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், ஆரோக்கியராஜ், மருது, ஜான்துரைசாமி, பிரபு கட்டாரி, ரமேஷ், சார்லஸ், மோதிலால், மகேந்திரன்,, அனைத்திந்திய ஆசிரியர் பேரவை பாபு, சீனிவாசன், தமிழக ஆசிரியர் கூட்டணி சாம் மாணிக்கராஜ், தமிழ்நாடு அனைத்து இடைநிலை ஆசிரியர் சங்கம் கிப்சன் உட்பட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து ஆசிரிய சங்கத்தினர் கூறும் போது, ""மாவட்டத்தில் முழுமையாக காலி பணியிடங்கள் காட்டப்படவில்லை. போராட்டம் நடத்தியதை தொடர்ந்து கூடுதலாக சில பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் 5 காலி பணியிடங்களும் கவுன்சிலிங் மூலம் நிரப்பபடவில்லை. களக்காடு, வள்ளியூர், செட்டிகுளம், மதகனேரி, பண்டாரக்குளம் உட்பட பல காலி பணியிடங்கள் காட்டப்படவில்லை.கவுன்சிலிங்கில் அனைத்து காலி பணியிடங்களையும் தெரிவித்து நேர்மையான, நியாயமான முறையில் கவுன்சிலிங் நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்'' என்றனர்.
நேற்று மதியம் ஒன்றியம் விட்டு ஒன்றியம் இடமாறுதல் கவுன்சிலிங் நடந்தது. இன்று (31ம் தேதி) இடைநிலை ஆசிரியர்கள் வெளி மாவட்ட அளவிலான இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது.