Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

போதை ஆசா­மி­களால் பெண்கள் அவதி

சென்னை மயி­லாப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள பகு­திகள் தற்­போது
பார்­க­ளாக மாறி வரு­கின்­றன.சென்னை மயி­லாப்பூர் ரயில் நிலையம் அருகே, ‘டாஸ்மாக்’ கடைகள் உள்­ளன. அவற்றில், ‘பார்’ வச­திகள் இருந்­தாலும், பெரும்­பா­லான ‘குடி­ம­கன்’கள், சாலை­யோ­ரத்­தையே ‘பார்’­க­ளாக மாற்றி விடுகின்­றனர்.


மது­பாட்­டில்­களை வாங்கி வந்து,சாலை­யி­லேயே நின்று, ‘கட்டிங்’
பிரிப்­பதும், அங்­கேயே வைத்து குடிக்கும் செயல்­களும் அன்­றாட நிகழ்­வு­க­ளா­கி­விட்டன. ரயில் நிலையம் செல்வோர்,குறிப்­பாக பெண்கள், இதனால்
பாதிக்­கப்­படும் சூழல் ஏற்­பட்­டுள்­ளது.


இது­த­விர, காலி­யான மது பாட்­டில்­களை போதையில் கண்­ட­படி வீசி உடைப்­பதாலும், சாலை­யோரம் செல்வோர் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். போதை­யே­றிய சில ‘குடி­ம­கன்’கள், பெண்­களை கேலி, கிண்டல் செய்யும் செயல்­களும் நடக்­கின்­றன. போலீ­சாரும் இதை கண்டும், காணாமல் இருந்து வரு­கின்­றனர்.


பொது­மக்­க­ளுக்கு தொல்லை தரும் வகையில், தொடரும் அவர்கள்
அட்­ட­கா­சத்தை போலீசார் வேடிக்கை பார்க்­காமல், கடும் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என, பகு­தி­வா­சிகள்
வேண்­டுகோள் விடுத்­துள்­ளனர்.

சமுதாயத்திற்கு இடர்ப்பாடு ஏற்பட்டபோதெல்லாம் அரும் பாடுபட்ட இ. யூ. முஸ்லிம் லீகிற்கு உலமாக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் :ஜமாத்துல் உலமா சபை கௌரவத்தலைவர் மௌலவி ஏ. முஹம்மது இஸ்மாயில் பாஜீல் பாகவி வேண்டுகோள்

திருமணம் , குடும்பப் பிரச்சினைகள், மணவிலக்கு விவகாரங்களில் தலையிடவோ, சான்று வழங்கவோ காஜிகள் ஙாயிப் காஜிகள் என்ற பள்ளிவாசல் இமாம்கள் கத்தீப்களுக்கு அதிகாரமில்லை என்று அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. திருமதி பதர் சயீத் வழக்கு தொடர்ந்ததை எதிர்த்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிர் மனு தாரராக மனு தாக்கல் செய்து வழக்காடி வருகிறது. 

ஷரீஅத் சட்டத்திற்கு விரோதமாகவும், பொது சிவில் சட்டத்தை கொண்டு வரும் நோக்கிலும் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கின் விபரீதத்தை சமுதாயத்திற்கு உணர்த்தும் வகையிலும், இஸ்லாமிய திருமண, விவாகரத்து சட்டங் களை முஸ்லிம் அல்லாதவர் களும் புரிந்துகொள்ளச்செய்யும் நோக்கோடு மாநிலம் தழுவிய அளவில் இஸ்லாமிய சட்ட விளக்க கருத்தரங்குகளை ஊர்கள் தோறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்தி வருகிறது.

நாகை வடக்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக நீடூரில் இஸ்லாமிய திருமண சட்ட விளக்க கருத் தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு நாகை தெற்கு மாவட்ட தலைவர் டாக்டர் எம்.எம்.சம்சுத்தீன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் அமீர் என்.ஏ.எம்.நூருல்லாஹ் வரவேற்று பேசினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில தலைவரு மான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சாஹிப்,சர்வதேச காயிதே மில்லத் பேரவை ஒருங் கிணைப்பாளர் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி., மாநில செயலாளர் ஆடுதுறை ஏ.எம்.ஷாஜஹான், சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநில பொதுச்செயலாளர் கே.எம். நிஜாமுதீன், மாநில துணை செயலாளர் மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இக்கருத்தரங்கில் நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி முதல் வரும்,மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை கௌரவத் தலைவருமான மார்க்க மாமேதை மௌலானா முப்தி எ .முஹம்மது இஸ்மாயில் பாஜில் பாக்கவி ஹஜரத் கலந்து கொண்டு பேசியதாவது: ஷரியத் என்பது ஒரு பெரிய கடல். குர்ஆன், ஹதீஸ், அடிப்படையில் அமைந்த அதனை சங்கைக்குரிய இமாம்கள் ஆய்வு செய்து தெளிவான சட்டத்தை நமக்கு தொகுத்து அளித்துள்ளார் கள். அதனை யுக முடிவு காலம் வரை யாரும் அசைக்க முடியாது. இந்த சட்டங்களை சரியாக புரிந்து கொள்ளாதவர்கள் தான் ஷரீஅத் விஷயத்தில் இன்று வரை பல குழப்பங்களை செய்து வருகிறார்கள்.

ஆனால் முஸ்லிம் லீக் பேரியக்கம் நாட்டின் விடுதலைக்கு முன்பும் சரி விடு தலைக்கு பின்பும் சரி இந்த சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்து வருகிறது.

இந்த நாட்டில் ஷரியத் திற்கும்,முஸ்லிம்களின் வாழ்வாதார விஷயங்களுக்கும் எப்பொழுதெல்லாம் இடர்பாடு வந்ததோ அப்பொழுதெல்லாம் முஸ்லிம் லீக் பெரும்பாடுபட்டு ஷரியத்தையும், சமுகத்தையும் காப்பாற்றி வந்துள்ளது. வரலாறு இதுவாக இருந்தாலும் இன்றும் கூட சில விஷமிகள் சமுதாயத்திற்கு எதிராக செய்து வரும் சூழ்ச்சி களை முறியடிக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் களம் கண்டு வருகிறார்கள். இந்த உலகிற்காக மட்டு மில்லாமல் மறுமை நன்மையை கருத்தில் கொண்டு உளத்தூய்மையோடு பணியாற்றி வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு சங்கைக்குரிய உலமா பெருமக்கள் உறுதுணை யாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மௌலானா முப்தி ஏ. முஹம்மது இஸ்மாயில் பாஜீல் பாகவி ஹஜரத் குறிப்பிட்டார்.

உலமாபெருமக்கள், முஸ்லிம் லீக் மறு முகங்கள்
நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபி கல்லூரி துணை முதல்வர் மௌலானா அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் உரையாற்றும் போது மஹல்லா ஜமாஅத் கட்டுப்பாட்டை காப்பாற்ற வேண்டும் என்பதையும் மார்க்க விஷயங்களில் உலமாக்களின் வழிகாட்டுதலையே ஏற் வேண்டும் என்பதையும் மிகத் தெளிவாக சொல்லுகின்ற ஒரே சமுதாய இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டுமே. இந்த இயக்கத்தை ஆதரிக்க வேண்டியது உலமாக் களின் கடமை எனக்குறிப் பிட்டார்.

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

உணர்வுமிக்க அரசியல் பாதையா ? உணர்ச்சி மிக்க அரசியல் பாதையா ? --- நம் முன் சென்ற சமுதாயத்தலைவர்கள் காட்டிய வழி என்ன ?

காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சி  தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது , திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று திமுக தலைவர் அண்ணாதுரை தமிழக முதல்வராக பொறுப்பேற்றார் . ஆனால் ,அண்ணாதுரை தன ஆட்சியின் முதலாண்டை பூர்ஹ்தி செய்த நிலையில் மரண முற்றார் . பின்னர் தமிழக முதல்வராக திமுகவின் சார்பில் பதவியேற்றார் கருணாநிதி .

கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் முதன் முறையாக மதுக்கடை திறக்கப்பட்டது .அப்போது திமுக கூட்டணியல் இருந்த ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அனைத்து நிர்வாகிகளும் ,தொண்டர்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர் , திமுக கூட்டணியை விட்டு விலக வேண்டும் என்று தலைவர் காயிதே மில்லத்திற்கு கோரிக்கை வைத்தனர் . சிராஜுல் மில்லத் அ.க .ஆ . அப்துஸ் சமது சாஹிபு , நாவலர் AM .யூசுப் சாஹிப் , எம்.எம்.பீர் முஹம்மது சாஹிப் உள்ளிட்ட முஸ்லிம் லீக்கின் பிரச்சார பீரங்கிகள் மாநிலம் முழுவதும் முஸ்லிம் லீகின் கூட்டங்களில் மதுக்கடையை திறந்த திமுக -வினை எதிர்த்து வீர முழக்கமிட்டனர் .

இந்த நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுக்குழு தலைவர் காயிதே மில்லத் (ரஹ்) அவர்கள் தலைமையில் கூடியது . பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் திமுக கூட்டணியை விட்டு விலக வேண்டும் என்று பேசினார்கள் .இறுதியாக பேசிய தலைவர் காயிதே மில்லத் (ரஹ் ) அவர்கள் , மதுக்கடையை திமுக திறந்ததை நாம் கண்டிக்கிறோம் , மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கோருகிறோம் . அதே நேரத்தில் ,திமுக -வா ? அல்லது எதிர் தரப்பா ? என்று நாம் நோக்கும் போது , முஸ்லிம் சமுதாயத்திற்கு திமுகவை விட எதிர் தரப்பு பாதகமாக உள்ளது ,எனவே ,திமுக உடன் கூட்டணி தொடரும் ,அவர்கள் திருந்த வேண்டும் ,அவர்கள் நம் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் , அவர்கள் தவறுக்கு அல்லா தண்டனை வழங்குவான் என்று கூறி திமுகுடன் கூட்டணி தொடரும் என்ற தீர்மானத்தை முன் மொழிந்தார்கள் ,பொதுக் குழு உறுப்பினர்கள் தலைமைக்கு கட்டுப்பட்டு ஏற்றுக் கொண்டனர் . (தொடரும் ...............)

----------- ஜமிலா மைந்தன்

நேர்மையான அரசியல் தலைமை உருவாக தமிழ் சமுதாயம் உதவும் : டாக்டர் APJ .அப்துல் கலாம்

கோவை, பேரூர் சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரியின் மணிவிழாவை முன்னிட்டு, வளர் தமிழ் இயக்கம் நடத்தும்,தமிழ்பயிற்று மொழி, வழிபாட்டு மொழி மாநாடு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் மாநாட்டுக்கு தலைமை தாங்கினார். சிறுதுளி அமைப்பின் நிர்வாகி வனிதாமோகன், சாந்தி துரைசாமி, பானுமதிவேலுசாமி, ஆர்.கே.உமாதேவி, ருக்குமணி ஓதிச்சாமி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். தஞ்சை தமிழ்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சி.சுப்பிரமணியம் வரவேற்று பேசினார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநாட்டு விழாவில் அவர் பேசும்போது கூறியதாவது:–

ஆட்சிதுறையில் தமிழ், வாழ்வியல் வழிபாட்டில் தமிழ், நீதித்துறையில் தமிழ் என்று பல்வேறு கருத்தரங்குகள் நடத்தப்படுவதுடன், தமிழ்அறிஞர்கள் இதில் கலந்துகொண்டு உரையாற்றுவது தமிழ் வளர்ச்சிக்கு உதவும்.

‘தாய் மொழி அறிவை வளர்க்கும். நாட்டை வளப்படுத்தும்’ என்ற தலைப்பில் இங்கு நான் உரையாற்ற இருக்கிறேன். நான் எனது ஆரம்ப கல்வியை தாய் மொழியான தமிழ்மொழி மூலம்தான் கற்றேன்.

தமிழ்மொழியின் சிறப்பு
தமிழ்மொழியில் படித்ததால் கணிதத்தில் சிறந்த மதிப்பெண் பெறவும், அறிவியலில் ஆழ்ந்து விளங்கி படிக்கவும் உதவியாக இருந்தது. மேல்கல்வியை இணைப்பு மொழியான ஆங்கிலம் மூலம் கற்றாலும், பிற்காலத்தில் ஆராய்ச்சி திறனை அதிகரிக்க எனது ஆரம்ப கல்விதான் உதவியது. என் தாய் மொழி தமிழ் உலக பொதுமறையை உலகிற்கு தந்தது. ஆட்சிக்கும் நீதிக்கும் மக்கள் வாழ்க்கைக்கும் வழி சொன்னது. தாய் மொழி தமிழ் ஆழ்ந்த கல்விக்கு அடித்தளமிட்டது. ஊடக தமிழ் அறிவை விரிவடையச்செய்தது.

ஆட்சியில் தமிழ் மொழி அரசுக்கும் மக்களுக்கும் இணைப்பு பாலமாக அமைந்தது. தாய் மொழி தரமான வளர்ச்சி பாதையில் தொழில் வளர உதவும். தாய் மொழி நீதி நிர்வாகம் சீர்பெற்று விரைவான நீதிக்கு வழிவகுக்கும். வழிபாட்டு தலத்தில் தாய் மொழி மக்களுக்கும் இறைவனுக்கும் உள்ள இடைவெளியை குறைத்து மனதில் அமைதி பிறக்க வைக்கும். எனவே தாய்மொழி அறிவு மக்களுக்கும், பள்ளிகளுக்கும் அரசிற்கும், நீதி நிர்வாகத்திற்கும் ஒரு அடிப்படையாகும்.

ஆரம்ப கல்வி
தரமான கல்வியும், கல்விப்பணியை அறப்பணியாக செய்யும் ஆசிரியர்களும் கல்வியை சிறக்க வைப்பதற்கு அடிப்படையாகும். கல்வி வியாபார பொருள் அல்ல. ஆரம்ப பள்ளி கல்வி, நல்லாசிரியர்களால், நல்ல பாடத்திட்டத்தின்படி மனதில் தங்கும்படி மாறிவிடும். அப்படிப்பட்ட கல்வி சிறப்பானதாக அமையும்.

நம் முன்னோர்கள் வாழ்ந்து காட்டிய வழிமுறைகளை கடைபிடித்து அன்பு, அறிவு, விவேகம், வந்தாரை வாழவைக்கும் தமிழ் கலாசாரம், அயலாரை போற்றும் பண்பு ஆகியவற்றை நாம் தொடர்ந்து பேணி பாதுகாக்க வேண்டும். போரில்லா உலகத்தை படைக்க உலக தமிழர்கள் ஒன்றுபட வேண்டும்.

இனத்தின் அடையாளம்
அறிவு என்பது அழிவு ஏற்படாத கருவியாகும். சமுதாய சக்கரத்தின் அச்சு மொழியாகும். இதுஒரு தகவல் சுரங்கம். ஒரு இனத்தை அடையாளம் காட்டுவது மொழிதான். ஒரு இனம் தனது மொழியை இழந்தால் அடையாளத்தை இழந்துவிடும். நமது எண்ணம் அனைத்தும், தமிழ் வளர்ச்சிக்கு வித்திடும்வகையில் அமைய வேண்டும்.
 

தமிழ்வழிக்கல்வி வாழ்க்கைக்கான கல்வியாக மட்டும் அல்லாமல், வேலைவாய்ப்புக்கான கல்வியாக மாற்றப்பட வேண்டும். அறிவியலில், கணிதத்தில், வேலை வாய்ப்பில், ஆட்சி மொழியில், நீதி நிர்வாகத்தில், மேலாண்மையில், வழிபாட்டில் தமிழ் ஆட்சி செய்ய வேண்டும். ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும், மற்ற மொழிகள் அந்த கலாசாரத்தை பற்றி அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும், வேலை வாய்ப்பிற்கும், அமைதிக்கும், புரிந்துணர்வுக்கும் வழி வகுக்கும். எனவே மொழி மக்களை அறிவார்ந்த சமுதாயத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும்.

நேர்மையான அரசியல்
நமது எண்ணம், செயல் அனைத்தும் தமிழ் வளர்ச்சிக்கும், வித்திடும் வகையில் அமைந்திருக்க வேண்டும். தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் சமுதாய வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும்வகையில் அடித்தளமாக அமைந்தால், இந்தியா 2020–க்குள் வளர்ந்த நாடாக மாறும். ஒரு நேர்மையான அரசியல் அனைத்து மக்களையும், அவர்தம் கலாசாரத்தையும் போற்றும் வகையில் அமையும். நேர்மையான, சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மாற்றும் ஓர் அரசியல் தலைமை இளைஞர் மத்தியில் உருவாகும். அதற்கு தமிழ் சமுதாயம் உறுதுணையாக இருக்கும். அதற்கு இந்த மாநாடு உதவும்.

இவ்வாறு அப்துல்கலாம் கூறினார்.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 4 முஸ்லிம் நீதிபதிகள் நியமிக்க வேண்டும் : பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் கோரிக்கை

மயிலாடுதுறை நீடூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாகை வடக்கு மாவட்டம் சார்பில் இஸ்லாமிய திருமண சட்ட விளக்க விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன், M.அப்துல் ரஹ்மான் எம்.பி. ஆகியோர் பேசினர். மாநில செயலாளர்கள் ஆடுதுறை ஷாஜகான், நிஜாமுதீன், மாவட்ட செயலாளர் அமீர்நூருல்லாஹ், உள்பட பலர் பேசினர். இதை தொடர்ந்து மாநிலத் தலைவர் கே.எம்.காதிர் மொஹிதீன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-

பொதுக்குழு கூட்டம்
வருகிற அக்டோபர் மாதம் 5-ந் தேதி சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அன்று மாலையில் அமைப்பின் மாணவர் அணி மாநில மாநாடு நடக்கிறது. இதில் தேசிய நிர்வாகிகள், கேரள அமைச்சர் குஞ்ஞாலிகுட்டி, முன்னாள் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கல்வியாளர்கள் கலந்துக் கொள்கின்றனர். முன்னாள் வக்பு வாரியத் தலைவரும், மைனாரிட்டி கமிஷன் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பதூர்சையது முஸ்லிம்களுக்கும், எல்லோருக்கும் சேர்ந்து ஒரே விதமான சிவில் சட்டம் வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடுத்துள்ளார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நாங்கள் வழக்கு தொடர்ந்துள்ளோம். அனைவருக்கும் ஒரேவிதமான சிவில் சட்டம் வேண்டும் என்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

4 முஸ்லிம் நீதிபதிகள் நியமிக்க வேண்டும்
சென்னை ஐகோர்ட்டில் 47 நீதிபதிகள் இருந்தபோது முஸ்லிம் சமுதாய நீதிபதிகள் 4 பேர் இருந்தனர். தற்போது நீதிபதிகள் பணியிடங்கள் 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் மட்டும் தான் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த நீதிபதியாக உள்ளார். இவரும் வருகிற நவம்பர் மாதம் ஓய்வு பெறுகிறார். புதிய நீதிபதிகள் 18 பேர் நியமனம் செய்யும்போது சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த 4 பேர் இடம் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தமிழகத்தின் மக்கள் தொகை 7 கோடி 30 லட்சம் பேர் உள்ளனர். இதில் 5½ கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 55 லட்சம் பேர் முஸ்லிம் வாக்காளர்கள் விகிதாச்சாரப்படி சட்டமன்றத்தில் 25 உறுப்பினர்கள், பாராளுமன்றத்தில் 2 உறுப்பினர்கள் முஸ்லிம்களாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து உள்ளோம். ஜனநாயக, சமயசார்பற்ற, சமூக நீதியை நிலை நிறுத்துகிற அரசியல் சக்திகள் வருகிற தேர்தலில் ஒரு அணியில் சேர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.


வெள்ளி, 6 செப்டம்பர், 2013

2014 நாடாளுமன்றத் தேர்தலும் கூட்டணி யூகங்களும் (தமிழகம் )

தமிழகத்தை பொருத்தவரையில் மத்தியில் உள்ள கூட்டணிகளுக்கு தலைமை தாங்கும் எந்த கட்சியும் பிரதான கட்சியாக இல்லை .மாநில கட்சிகளாகிய அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளை பொறுத்தே கூட்டணிகள் அணி சேரும் .

ஆளும் கட்சியான அதிமுக தலைவி ஜெயலலிதா சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனித்து நின்று 40 தொகுதிகளிலும் வெல்லும் என்று பேசினார் .எவ்வாறு இருந்தாலும் ,இறுதியில் ஜெயலலிதா கூட்டணி அமைப்பார் என்று இடதுசாரி கம்யூனிஸ்ட்கள் நம்பிக்கையோடு காத்து இருக்கின்றன .தேர்தல் முடிந்த பின் ,மோடி பிரதமர் வேட்பாளரானால் பிஜேபிக்கு ஜெயலலிதா ஆதரவு கொடுப்பார் என்று பிஜேபி நம்பிக்கையோடு இருக்கின்றது .அதிமுக கூட்டணி அமைத்தால் தேமுதிக ,புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இடம் பெறாது என்பது உறுதியாகிவிட்டது .

எதிர்கட்சியான திமுகவோ மிக பலத்த யோசனையில் உள்ளது .எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் இலங்கை பிரச்சினை எதிரொலிக்குமா ? எதிரொலிக்காதா? என்பதுதான் திமுகவின் முக்கிய யோசனை ஆகிவிட்டது . காங்கிரசை விடுவதற்கு திமுக தலைமைக்கும் ,திமுகவை விட காங்கிரஸ் தலைமைக்கும் மனமில்லை .திமுக தலைமையில் திமுக ,காங்கிரஸ் ,விடுதலை சிறுத்தைகள் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்கும் என்றும் , இந்த கூட்டணியில் தேமுதிகவை சேர்க்க காங்கிரஸ் முயற்சிக்கின்றது என்றும்; எனவே ,திமுக தலைமையில் மெகா கூட்டணி அமையலாம் என்றும் அரசியல் யூகங்கள் அடிபடுகின்றன .

பாஜக தமிழகத்தில் தனது வாக்கு வங்கியை அதிகரிக்க தேமுதிகவை தனது பக்கம் இழுக்க பேரம் பேசிக்கொண்டுள்ளதாகவும் , தேமுதிகவோ தனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பாஜகவுடன் சேருவதற்கு விரும்பவில்லை என்றும் தேமுதிக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது .

இந்த நிலையில் ஆளும் அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்தால் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 சீட்டுகளை ஒதுக்கிவிட்டு மீதி 36 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுவதற்கு ஜெயலலிதா திட்டம் வைத்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன .

திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றால் காங்கிரசுக்கு 9 , தேமுதிக விற்கு 6 , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகளுக்கு தலா 2 , புதிய தமிழகத்திற்கு 1 என்று கொடுத்து விட்டு மீதி 20 தொகுதிகளில் போட்டியிட திமுக திட்டம் போட்டுள்ளதாக திமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது .ஏனென்றால் ,திமுக 20 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட விரும்பவில்லை .

புதன், 4 செப்டம்பர், 2013

200 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடல்

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 200-க்கும் அதிகமான தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

கடந்த 2012-13 ஆம் கல்வியாண்டில் மட்டும் 50-க்கும் அதிகமான தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 30 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 9 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 42 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் உள்ளன. தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டும் 4 ஆண்டுகளில் 670-லிருந்து இப்போது 450 ஆகக் குறைந்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்புகளை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் வழங்குகின்றன.

காத்திருப்போர் எண்ணிக்கை 2.70 லட்சம்: தமிழகத்தில் ஆசிரியர் பட்டயப் படிப்பை முடித்து வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 2.70 லட்சமாக உள்ளது. இவர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மற்றும் மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுகிறது.

ஆனால், பள்ளிக் கல்வித் துறையில் பெரும்பாலான இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுவிட்டதால், மிகக் குறைந்த அளவிலான ஆசிரியர்களே இப்போது அரசுப் பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்படுகின்றனர். இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு கூட 2 ஆயிரம் ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட உள்ளனர்.

அரசு வேலைவாய்ப்பு பிரகாசமாக இல்லாததால், இந்தப் படிப்பில் புதிதாக சேருவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன.

ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (DTERT) (இப்போது மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்- (SCERT) வெளியிட்டிருந்த தகவலின்படி, 2010-11 ஆம் ஆண்டில் தமிழகத்தில் 670-க்கும் அதிகமான தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இருந்தன.

ஆண்டுதோறும் மூடப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களைத் தொடர்ந்து இப்போது தமிழகத்தில் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் எண்ணிக்கை 450 ஆகக் குறைந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அடுத்த 2 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 200-க்கும் கீழே குறையலாம் என ஆசிரியர் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு சேர்க்கை அதிகரிப்பு: கடந்த சில ஆண்டுகளாக ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேரும் மாணவர் எண்ணிக்கை குறைந்து வந்தது. ஆனால், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை சற்று அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மட்டும் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது சுமார் 600 மாணவர்கள் கூடுதலாகச் சேர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை சற்று அதிகரித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு 10 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த ஆண்டில் பணி நியமனம் செய்யப்பட்டனர். அதன்காரணமாக, இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை சற்று அதிகரித்திருக்கலாம் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு மொத்தமாக 8 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பட்டயப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

20 ஆயிரம் இடங்கள் காலி!

தமிழகத்தில் இப்போதுள்ள 450 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மட்டும் தற்போது 20 ஆயிரத்துக்கும் அதிகமான காலியிடங்கள் உள்ளன.

இந்த ஆண்டு ஒற்றைச்சாளர கலந்தாய்வு மற்றும் நிர்வாகப் பிரிவு ஒதுக்கீடுகளின் கீழ் 8 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேர்ந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்.

மொத்தம் 33 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் இருக்கும்போது தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மட்டும் இப்போது சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமான காலியிடங்கள் இருக்கலாம் எனத் தெரிகிறது.