Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

நேர்மையான அரசியல் தலைமை உருவாக தமிழ் சமுதாயம் உதவும் : டாக்டர் APJ .அப்துல் கலாம்

கோவை, பேரூர் சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரியின் மணிவிழாவை முன்னிட்டு, வளர் தமிழ் இயக்கம் நடத்தும்,தமிழ்பயிற்று மொழி, வழிபாட்டு மொழி மாநாடு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் மாநாட்டுக்கு தலைமை தாங்கினார். சிறுதுளி அமைப்பின் நிர்வாகி வனிதாமோகன், சாந்தி துரைசாமி, பானுமதிவேலுசாமி, ஆர்.கே.உமாதேவி, ருக்குமணி ஓதிச்சாமி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். தஞ்சை தமிழ்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சி.சுப்பிரமணியம் வரவேற்று பேசினார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநாட்டு விழாவில் அவர் பேசும்போது கூறியதாவது:–

ஆட்சிதுறையில் தமிழ், வாழ்வியல் வழிபாட்டில் தமிழ், நீதித்துறையில் தமிழ் என்று பல்வேறு கருத்தரங்குகள் நடத்தப்படுவதுடன், தமிழ்அறிஞர்கள் இதில் கலந்துகொண்டு உரையாற்றுவது தமிழ் வளர்ச்சிக்கு உதவும்.

‘தாய் மொழி அறிவை வளர்க்கும். நாட்டை வளப்படுத்தும்’ என்ற தலைப்பில் இங்கு நான் உரையாற்ற இருக்கிறேன். நான் எனது ஆரம்ப கல்வியை தாய் மொழியான தமிழ்மொழி மூலம்தான் கற்றேன்.

தமிழ்மொழியின் சிறப்பு
தமிழ்மொழியில் படித்ததால் கணிதத்தில் சிறந்த மதிப்பெண் பெறவும், அறிவியலில் ஆழ்ந்து விளங்கி படிக்கவும் உதவியாக இருந்தது. மேல்கல்வியை இணைப்பு மொழியான ஆங்கிலம் மூலம் கற்றாலும், பிற்காலத்தில் ஆராய்ச்சி திறனை அதிகரிக்க எனது ஆரம்ப கல்விதான் உதவியது. என் தாய் மொழி தமிழ் உலக பொதுமறையை உலகிற்கு தந்தது. ஆட்சிக்கும் நீதிக்கும் மக்கள் வாழ்க்கைக்கும் வழி சொன்னது. தாய் மொழி தமிழ் ஆழ்ந்த கல்விக்கு அடித்தளமிட்டது. ஊடக தமிழ் அறிவை விரிவடையச்செய்தது.

ஆட்சியில் தமிழ் மொழி அரசுக்கும் மக்களுக்கும் இணைப்பு பாலமாக அமைந்தது. தாய் மொழி தரமான வளர்ச்சி பாதையில் தொழில் வளர உதவும். தாய் மொழி நீதி நிர்வாகம் சீர்பெற்று விரைவான நீதிக்கு வழிவகுக்கும். வழிபாட்டு தலத்தில் தாய் மொழி மக்களுக்கும் இறைவனுக்கும் உள்ள இடைவெளியை குறைத்து மனதில் அமைதி பிறக்க வைக்கும். எனவே தாய்மொழி அறிவு மக்களுக்கும், பள்ளிகளுக்கும் அரசிற்கும், நீதி நிர்வாகத்திற்கும் ஒரு அடிப்படையாகும்.

ஆரம்ப கல்வி
தரமான கல்வியும், கல்விப்பணியை அறப்பணியாக செய்யும் ஆசிரியர்களும் கல்வியை சிறக்க வைப்பதற்கு அடிப்படையாகும். கல்வி வியாபார பொருள் அல்ல. ஆரம்ப பள்ளி கல்வி, நல்லாசிரியர்களால், நல்ல பாடத்திட்டத்தின்படி மனதில் தங்கும்படி மாறிவிடும். அப்படிப்பட்ட கல்வி சிறப்பானதாக அமையும்.

நம் முன்னோர்கள் வாழ்ந்து காட்டிய வழிமுறைகளை கடைபிடித்து அன்பு, அறிவு, விவேகம், வந்தாரை வாழவைக்கும் தமிழ் கலாசாரம், அயலாரை போற்றும் பண்பு ஆகியவற்றை நாம் தொடர்ந்து பேணி பாதுகாக்க வேண்டும். போரில்லா உலகத்தை படைக்க உலக தமிழர்கள் ஒன்றுபட வேண்டும்.

இனத்தின் அடையாளம்
அறிவு என்பது அழிவு ஏற்படாத கருவியாகும். சமுதாய சக்கரத்தின் அச்சு மொழியாகும். இதுஒரு தகவல் சுரங்கம். ஒரு இனத்தை அடையாளம் காட்டுவது மொழிதான். ஒரு இனம் தனது மொழியை இழந்தால் அடையாளத்தை இழந்துவிடும். நமது எண்ணம் அனைத்தும், தமிழ் வளர்ச்சிக்கு வித்திடும்வகையில் அமைய வேண்டும்.
 

தமிழ்வழிக்கல்வி வாழ்க்கைக்கான கல்வியாக மட்டும் அல்லாமல், வேலைவாய்ப்புக்கான கல்வியாக மாற்றப்பட வேண்டும். அறிவியலில், கணிதத்தில், வேலை வாய்ப்பில், ஆட்சி மொழியில், நீதி நிர்வாகத்தில், மேலாண்மையில், வழிபாட்டில் தமிழ் ஆட்சி செய்ய வேண்டும். ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும், மற்ற மொழிகள் அந்த கலாசாரத்தை பற்றி அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும், வேலை வாய்ப்பிற்கும், அமைதிக்கும், புரிந்துணர்வுக்கும் வழி வகுக்கும். எனவே மொழி மக்களை அறிவார்ந்த சமுதாயத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும்.

நேர்மையான அரசியல்
நமது எண்ணம், செயல் அனைத்தும் தமிழ் வளர்ச்சிக்கும், வித்திடும் வகையில் அமைந்திருக்க வேண்டும். தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் சமுதாய வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும்வகையில் அடித்தளமாக அமைந்தால், இந்தியா 2020–க்குள் வளர்ந்த நாடாக மாறும். ஒரு நேர்மையான அரசியல் அனைத்து மக்களையும், அவர்தம் கலாசாரத்தையும் போற்றும் வகையில் அமையும். நேர்மையான, சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மாற்றும் ஓர் அரசியல் தலைமை இளைஞர் மத்தியில் உருவாகும். அதற்கு தமிழ் சமுதாயம் உறுதுணையாக இருக்கும். அதற்கு இந்த மாநாடு உதவும்.

இவ்வாறு அப்துல்கலாம் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக