Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 10 ஜூன், 2013

மனித உரிமைகள் தொடர்பான படிப்பு

மனித உரிமைகள் என்பது வேகமாக வளர்ந்து வரும் கல்விப் பிரிவாகவும் மாறியுள்ளது. இப்பிரிவு படிப்புகளை முடிப்பவர் நல்ல பணி வாய்ப்புகளைப் பெற முடிகிறது. வெறும் தகுதிகளைத் தாண்டி சிறப்பான தகவல் தொடர்புத் திறன் மற்றும் மேம்பட்ட பொது அறிவைப் பெற்றிருப்போர் இத் துறையில் சிறப்பான சம்பளத்தையும் எதிர்காலத்தையும் பெறுகிறார்கள்.

எனவே மனித உரிமைகள் தொடர்பான படிப்புகளுக்கு பெரிய வரவேற்பு இருப்பதில் சந்தேகமில்லை. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹியூமன் ரைட்ஸ் என்னும் சிறப்பு நிறுவனம் தொலைதூரக் கல்வி முறையில் இப் பிரிவில் 2 ஆண்டுபட்ட மேற்படிப்பைத் தருகிறது. பட்டப்படிப்பு தகுதி பெற்றிருக்கும் எவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய பிற விபரங்களை அறிய இணைய தள முகவரி: http://www.rightsedu.net. இப்படிப்புக்கான தேர்வுகள் தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே நடத்தப்படும். நமக்கு அண்மையில் பெங்களூரு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலும் இது நடத்தப்படும்.

விண்ணப்பம் பெறும் முகவரி
Indian Institute of Human Rights,
A16, Paryavaran Complex, (HT), SaketMaidangarhi Marg,
New Delhi – 110 030.

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலார் அணை நீர்மட்டம் உயர்வு

பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் சுமார் 5 அடியும், சேர்வலார் அணையின் நீர்மட்டம் சுமார் 16 அடியும் அதிகரித்துள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 53.35 அடியாக இருந்தது.

இந்நிலையில் காரையார் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இதனால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் சுமார் 5 அடி அதிகரித்து நேற்று காலை நிலவரப்படி 58.80 அடியானது. அணைக்கு விநாடிக்கு 3609.60 கனஅடிநீர் வந்து கொண்டிருந்தது. அணைப்பகுதியில் 27 மி.மீ. கீழணையில் 11 மி.மீ. அளவிலும், சேர்வலாரில் 9 மி.மீ, அம்பையில் 13.2 மி.மீ, சேரை., 6 மி.மீ. அளவில் மழையின் அளவு பதிவாகியுள்ளது.

நேற்று முன்தினம் 65.12 அடியாக இருந்த சேர்வலார் அணையின் நீர்மட்டம் நேற்று சுமார் 16 அடி அதிகரித்து 81.04 அடியானது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 72.04 அடியானது. இந்நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்துறை வாய்ப்புகளுக்கான மேம்பட்ட படிப்புகள்

எதிர்கால உலகில், பெரியளவில் வளர்ச்சியடையக்கூடிய சில துறைகளைப் பற்றி அறிந்துகொள்வது அவசியம். அதன்மூலம் நமது வருங்கால வாய்ப்புகளை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

கோஸ்டல் இன்ஜினியரிங் படிப்பு
அரசு ஏஜென்சிகள், உள்ளூர் அத்தாரிட்டிகள் மற்றும் பொறியியல் கன்சல்டன்டுகள் ஆகியோரிடம், கோஸ்டல் இன்ஜினியரிங் பணியை மேற்கொள்ள விரும்பும் பொறியாளர்கள் அல்லது பிசிகல் சயின்டிஸ்டுகள் ஆகியோருக்காக இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது.

சமூக மற்றும் பொருளாதார நலன்களை முன்னிட்டு, உலகின் கடற்கரைகளை பாதுகாத்தல் மற்றும் மேலாண்மை செய்தல் போன்ற செயல்பாடுகளுடன் சம்பந்தப்பட்டது இந்த கோஸ்டல் இன்ஜினியரிங். இதுதொடர்பாக செயல்படும் நிறுவனங்களில் பணிவாய்ப்பு மற்றும் பணி உயர்வை எதிர்பார்க்கும் பட்டதாரி விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கென்று, கோஸ்டல் இன்ஜினியரிங் துறையில் வழங்கப்படும் முதுநிலை படிப்புகள் துணைபுரிகின்றன.

அந்தப் பாடத்திட்டமானது, Wave theory, Coastal processes and modern techniques in coastal data collection, analysis such as GIS and remote sensing, numerical modelling techniques, issues of environmental law and the applications of current coastal defence guidelines போன்ற அம்சங்களை உள்ளடக்கியது.

வேளாண் அறிவியல்கள்
வேளாண்மை என்பது மனிதனின் உயிர்வாழ் அடிப்படையான உணவு உற்பத்தி தொடர்பானது மட்டுமின்றி, அவனது ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றையும் உள்ளடக்கியது. எனவே, இதைக் கையாள, முறையான அறிவியல் அடிப்படைகளைக் கையாள வேண்டியுள்ளது.

சுற்றுச்சூழலில் மேற்கொள்ளப்படும் வேளாண் முறைகளின் தாக்கம் பற்றிய பொதுமக்களின் கவலை மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு உள்ளிட்ட சில அம்சங்கள், முக்கிய ஆராய்ச்சி கருத்தாக்கங்களாக உள்ளன.

இவைதவிர, Animal nutrition, plant stress tolerance, nutrient and soil management, composting, crop protection, invertebrate ecology and the health, welfare of livestock போன்றவையும் ஆராய்ச்சிக்கு ஏற்றவையாக உள்ளன.

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் தொழில்
இந்த 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய தொழில் துறைகளாக, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகள் வளர்ந்து வருகின்றன. ஒட்டுமொத்த உலக வேலைவாய்ப்பில், 10%க்கும் மேல், இத்துறையில் உள்ளது. இத்துறைகளில், ஒருவரை, மேலாளர் நிலைக்கு உயர்த்தக்கூடிய பொருத்தமான படிப்புகள், இன்றைய நிலையில் பரவலாக வழங்கப்படுகின்றன.

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில், தங்களின் மேலாண்மை திறன்களை வளர்த்துக் கொள்ளும் அதேவேளையில், வியூக நிலையை மேம்படுத்திக் கொள்ள விரும்பும் நபர்களுக்கு இந்தப் படிப்புகள் பேருதவி புரியும்.

துணைநிலை மீன் உயிரியல்
உலகளாவிய மீன்வள சேமிப்பு குறைந்து வருதல், சுற்றுச்சூழல் மாறுபாட்டால், பல அரிய கடல்வாழ் உயிரினங்கள் அழிந்துபோதல், கடலில் ரசாயனம் உள்ளிட்ட பொருட்கள் கலப்பதால் ஏற்படும் மீன்களின் அழிவு போன்றவை, உலகளவில் கவலை தரத்தக்க விஷயங்களாக உள்ளன.

உலகளாவிய மீன்வளம் குறைந்து வரும் அதேநேரத்தில், மீன் உணவிற்கான தேவையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே, இந்த நூற்றாண்டில், வளர்ப்பு மீன் பெருக்க நடவடிக்கையானது, முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, இத்துறையில் பயிற்சிபெற்ற நிபுணர்களின் தேவை அதிகளவில் உள்ளது.

மீன்கள் சிறப்பாக வளர்வதற்கான செயற்கை உணவுகளை கண்டுபிடித்தல், மீன்களை தாக்கும் நோய்கள் குறித்து பரிசோதித்தல் மற்றும் அவற்றுக்கான மருந்துகளை கண்டுபிடித்தல் போன்றவை முக்கியமான அம்சங்கள்.

இத்துறை போன்றே பெரிதாக வளர்ந்துவரும் இன்னொரு முக்கிய துறை எதுவெனில், அழகு மீன்கள் மற்றும் நீர்த்தாவர வணிகம். எனவே, இதுதொடர்பான உணவளித்தல், பராமரித்தல், மீன் அருங்காட்சியக மேலாண்மை மற்றும் புதிய தொழில்நுட்ப தாக்கம் போன்றவை முக்கியத்துவம் பெறுகின்றன. Fish toxicology என்பதும், இப்படிப்பின் மிக முக்கியமானதொரு அம்சமாக திகழ்கிறது.

தியரடிகல் மற்றும் கம்ப்யூடேஷனல் நியூரோசயின்ஸ்
இந்த பல்அம்ச படிப்புகள், மூளை இயக்கம் பற்றிய கோட்பாடுகள், மூளை நரம்பு செயல்பாட்டின் கணித மற்றும் கம்ப்யூடேஷனல் மாடலிங், நியூரோசயின்ஸ் டேட்டா அனலிசிஸ் தொடர்பான புள்ளியியல் நுட்பங்கள் உள்ளிட்ட பலவிதமான அம்சங்களைப் பற்றிய விரிவான அறிவை இப்படிப்பு வழங்குகிறது.

நியூரோ சயின்ஸ் என்பது, 21ம் நூற்றாண்டின், மிக வேகமாக வளர்ந்துவரும் ஒரு முக்கிய படிப்பாகும். நடைமுறை ரீதியிலான அணுகுமுறை மற்றும் நுட்பங்கள் இதில் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, மூளை நடவடிக்கையை பதிவுசெய்யும் மற்றும் இமேஜிங் செய்யும் செயல்பாடானது, மூளை இயக்கத்தின் வெவ்வேறு அம்சங்களைப் பற்றிய விரிவான தரவுகளைத்(datas) தருகிறது.

செல்லுலர், சர்க்யூட் மற்றும் சிஸ்டம் நிலையில், ஒரு மூளையின் நுண்ணிய செயல்பாடுகளைப் பற்றிய பலவிதமான நுணுக்கங்களை கற்றுக்கொள்ள வழியேற்படுத்துகிறது.

ஞாயிறு, 9 ஜூன், 2013

மாணவர்களிடம் வரவேற்பு இல்லாததால் பாலிடெக்னிக்கில் 25 படிப்புகள் நிறுத்தம்

தமிழகத்தில், 50 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளும், 450 சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளும் செயல்படுகின்றன. இதில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இக்கல்லூரிகளில், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ஸ், வேதியியல், தோல், அச்சு, நெசவு உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட பாடங்களில், டிப்ளமோ, சான்றிதழ், முதுகலை டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன. பாலிடெக்னிக் கல்லூரிகளில், உடனடி வேலை வாய்ப்புளை பெற்று தரும், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேர மட்டுமே, மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தோல், அச்சு, நெசவு உள்ளிட்ட படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை, சொற்ப அளவிலேயே உள்ளது. பல பாலிடெக்னிக் கல்லூரிகளில், அறிவித்துள்ள இடங்களின் எண்ணிக்கைக்கு குறைவாகவே, விண்ணப்பங்கள் வந்துள்ளதாக துறையினர் தெரிவித்துள்ளனர்.

சான்றிதழ் படிப்பு, முதுகலை டிப்ளமோ படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும், ஆண்டுதோறும் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. டிப்ளமோ முடிக்கும் மாணவர்கள், மேற்படிப்பில், பொறியியல் படிப்பை தேர்ந்தெடுப்பதால், முதுகலை டிப்ளமோவில் சேர முன் வருவதில்லை. இப்படிப்பில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை, 1 சதவீதம் கூட இருப்பதில்லை என, கூறுகின்றனர். கடந்த, ஐந்து ஆண்டுகளாக, முதுகலை படிப்பில் சேர, மாணவர்களின் ஆர்வம் குறைந்ததையடுத்து, 22 பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள, வெல்டிங் டெக்னாலஜி, பேக்கரி மற்றும் சாக்லெட் தயாரிப்பு உள்ளிட்ட, 20 முதுகலை டிப்ளமோ பாடங்களை, அரசு நீக்கியுள்ளது. மேலும், இரண்டு டிப்ளமோ படிப்புகள், மூன்று சான்றிதழ் படிப்புகளும் நீக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, கடந்தாண்டு, நகரமைப்பு, பவுண்டரி, அச்சு தயாரித்தல், "டிவி' தொழில்நுட்பம் உள்ளிட்ட, 16 படிப்புகளை அரசு கைவிட்டு உள்ளது.

இதுகுறித்து, துறை பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: பாலிடெக்னிக் கல்லூரிகளில், ஓராண்டு சான்றிதழ் படிப்புகளை படிக்க, மாணவர்கள் முன் வருவதில்லை. அதற்கு பதில், தொழிற்சாலையில் அதிகளவில் வேலைவாய்ப்புகளை அளிக்கும், ஐ.டி.ஐ., படிப்பில் சேரவே, ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், சான்றிதழ் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை, குறைந்து வருகிறது. மூன்றாண்டு டிப்ளமோ முடிக்கும் மாணவர்கள், மேல்படிப்பில், பொறியியல் படிப்பை தேர்ந்தெடுக்கின்றனர். பல மாணவர்கள், தொலைதூர கல்வி வழியாகவும் பொறியியல் படிப்பை தொடருகின்றனர். இதனால், முதுகலை டிப்ளமோவில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை, சொற்ப அளவிலேயே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சேது சமுத்திர திட்டத்தை முடக்க முயற்சி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தி.மு.க. தலைவர் கலைஞரின் 90-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை புரசைவாக்கத்தில் நடந்தது. பகுதி செயலாளர் கோ.ஏகப்பன் தலைமை தாங்கினார்.

வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 1990 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியபோது,’’அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் கலைஞர் கொண்டு வந்த திட்டங்களை முடக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. 150 ஆண்டு கனவு திட்டமான சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

அந்த விழாவில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட்டு செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அப்போதைய செயலாளர் வரதராஜன், இந்திய யூனியன் மூஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன் உள்ளிட்ட தலைவர்களெல்லாம் கலந்து கொண்டு பேசினார்கள்.

ஆனால், இந்த திட்டத்தை நிறுத்த சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று அ.தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது. இதை எதிர்த்து பேசாமல் வைகோ, ராமதாஸ் போன்ற தலைவர்களெல்லாம் மவுனமாக இருப்பது ஏன்?

கடந்த 2 ஆண்டு ஆட்சியில் சட்டமன்றம் முதல்வரின் புகழ்பாடும் அலுவலகமாக செயல்படுகிறது. கேள்வி நேரம் என்பது கேலி பேசும் நேரமாக மாறிவிட்டது. தி.மு.க. ஆட்சியைவிட அ.தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை சம்பவங்கள் குறைந்து இருப்பதாக முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

ஆனால் போலீஸ் இணைய தளத்தில் பார்த்தால் கடந்த ஒரு ஆண்டில் கற்பழிப்பு, கொலை, கொள்ளை சம்பவங்கள் இரு மடங்காக அதிகரித்து இருப்பதாக புள்ளிவிவரம் சொல்கிறது. சமச்சீர் கல்வி தி¢ட்டத்தை தி.மு.க. கொண்டு வந்தது.

இதனால் இந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் அதிகமாக வெற்றி பெற்றுள்ளார்கள். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு நன்மை செய்து வரும் ஓரே இயக்கம் தி.மு.க. தான்’’என்று தெரிவித்தார்.

குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீர்

கொட்டி தீர்த்த தென்மேற்கு பருவ மழையால் குற்றாலம் சீசன் களைகட்ட துவங்கியுள்ளது. அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் நேற்று மெயின் அருவில் 3 மணி நேரம் தடை விதிக்கப்பட்டது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் குற்றாலத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்துவங்கியுள்ளது. கடந்த 3 தினங்களாக அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்பட்டது. விடுமுறை காரணமாக அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து பெய்த மழை காரணமாக நேற்று அதிகாலை முதல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்தது. ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் ஆக்ரோஷமாக தண்ணீர் கொட்டியது.

மெயினருவியில் நேற்று அதிகாலை முதல் தண்ணீர் அதிகமாக வரத்துவங்கிய நிலையில், காலை 7 மணிக்கு தண்ணீர் ஆர்ச்சை தொட்டு விழுந்தது. மழையின் காரணமாக அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததை அடுத்து காலை 8 மணி முதல் 11 மணிவரை மெயினருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு மெயினருவியில் ஆர்ச்சை தொட்டு ஆர்ப்பரித்து தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்த வண்ணம் இருந்தனர்.

மெயினருவி, ஐந்தருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் புலியருவியை நோக்கி படையெடுக்க துவங்கினர். 3 மணி நேரத்திற்கு பின் தடை விலக்கி கொள்ளப்பட்ட நிலையில் சாரலும் சற்று குறைவாக காணப்பட்டது. இருந்தபோதிலும் குளுமையான ‹ழ்நிலையும், மெல்லிய சாரலும், இதமான காற்றும் வீசியது. குற்றால சீசன் தற்போது களைகட்ட துவங்கியுள்ள நிலையில் தொடர்ந்து அருவிகளுக்கு தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருப்பதாலும், இன்று (9ம்தேதி) விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.