Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 3 ஏப்ரல், 2013

மியான்மர் முஸ்லிம்களுக்காக ஏப்.14 ஜித்தாவில் கூடும் உலக முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பு இலங்கை முஸ்லிம்களின் நிலை பற்றியும் பரிசீலிக்க வேண்டும் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக்


முப்பெரும் கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாட் டில் அனைத்து மாவட்ட தலைநகர் களிலும் ஏப்ரல் 2 செவ்வாயன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை பேரணிகளையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியது.

சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட் டத்தை தொடங்கி வைத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலா ளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவரு மான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.

அப்போது அவர் கூறியதா வது-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாற்றுப் பெருமை பெற்ற பேரியக்கம். தேசிய ஒருமைப் பாடு, சமய நல்லிணக்கம், சிறுபான்மை மக்களின் கலா சார தனித்தன்மையை பாதுகாத்தல் ஆகிய லட்சியங்களை முன்னி றுத்தி பாடுபடுகிறது.

மத்திய அமைச்சர் இ. அஹமது தலைமையில் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லி லீக் தேசிய கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி சிறையில் வாடிக்கொண்டிருக்கும் அப்பாவிகளை விடுவிக்க முயற்சி மேற்கொண்டோம்.

அதனைத் தொடர்ந்து மத்திய அரசு மாநில அரசுக ளுக்கு ஒரு தாக்கீதை அனுப்பி யது. விசாரணைக் கைதிகளாக சிறையில் இருப்பவர்களை மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைத்து பரிசீலித்து விடுதலை செய்ய வேண்டும் என்று, ஆனால் அது அமல் படுத்தப்படவில்லை. பத்து ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்தோரை பேரறிஞர் அண்ணா அவர்கள் கருணை அடிப்படையில் விடு தலை செய்து தொடங்கி வைத் தார். ஜெயலலிதாகூட கருணை அடிப்படையில் விடுதலை செய்ய உத்தரவிட்டி ருக்கிறார். ஆனால், இப்போது விடுவிக்க மறுக்கிறார். எனவே, கருணை அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

2004-ல் ஐக்கிய முற் போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் முஸ்லிம் லீக் வைத்த கோரிக்கையை யடுத்து நீதியரசர் ராஜேந்திர சச்சார் கமிஷன், நீதியரசர் ரெங்கநாத் மிஸ்ரா கமிஷன் ஆகியவை அமைக்கப்பட்டன.

இந்தியாவில் வாழ்கின்ற சிறுபான்மை சமூகத்தில் பெரும் பான்மையாக முஸ்லிம்கள் வாழ்கின்றனர். ஆனால், அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை விட கல்வியறிவு இல்லாமல் அன்றாடங் காய்ச்சி களாக கூலித் தொழிலாளிக ளாக, ரிக்ஷா இழுப்பவர்களாக இருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கு கல்வி, பொருளாதார அடிப்படையில் அந்த மக்களை முன்னேற்ற வேண்டுமானால் தனியாக 10 சதவீத இடஒதுக் கீடு வழங்க வேண்டும். அதை உடனடியாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மிஸ்ரா குழு பரிந் துரை செய்தது.

ஆனால், சிறுபான்மையின ருக்கு 4.5 சதவீத இடஒதுக் கீட்டை மத்திய அரசு அறி வித்தது. நீதிமன்றத்தில் அதுவும் தடை விதிக்கப்பட்டு விட்டது.

மத்திய அரசு உடனடியாக 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல் படுத்த வேண்டும் என்று இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் முதல் கோரிக்கையாக எடுத்தி ருக்கிறோம். மத்திய அரசு முஸ்லிம்களுக்கு நியாயம் செய்வதாக கூறியது. ஆனால், கானல் நீராக பொய்த்து போய் உள்ளது.

அதேபோன்று தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு வழங்கிய 3.5 சத வீத இடஒதுக்கீட்டை தமழக அரசு உயர்த்தி தர வேண்டும்.

மத்திய - மாநில அரசுகள் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்.

இப்போது இளைய தலை முறையினர் மதுப் பழக்கத்துக்கு ஆளாகி வருகிறார்கள். ஆட்டை கடித்து மாட்டை கடித்து... என்று மனிதனையே கடித்துக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு மதுப் பழக்கம் ஆழமாக இளைஞர்கள் - மாணவர்கள் மத்தியில் பதிந்து வருகிறது. மது மனிதனை மிருகமாக்குகிறது. மதுவால் கொலை, கொள்ளை, பாலியல் பலாத் காரம் போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். நாங்கள் மதுக்கடைக ளுக்கு பூட்டு போடும் வேலையை செய்ய மாட்டோம். மனிதர்களின் மதுகுடிக்கும் மனக் கதவை இழுத்துப் பூட்டும் வேலையை செய்வோம். அதற் கான முயற்சி எடுப்போம். மது விலக்கால் ஏற்படும் தீமைகளை - கொடுமைகளை மக்களிடத் திலே பிரச்சாரம் வாயிலாக எடுத்துச் சொல்வோம். எங்க ளுடைய இந்த கோரிக்கைக ளுக்கெல்லாம் தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பையும், ஆதர வையும் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பின்னர் செய்தியாளர் களுக்கு பேட்டியளித்த பேராசி ரியர் கே.எம். காதர் மொகிதீன் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியதோடு, மியான்மரில் புத்த மத வெறியர்களால் ரோஹிங்ய முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு வருவது தொடர் பாக பரிசீலனை செய்ய சவூதி அரேபியா ஜித்தாவில் ஏப்ரல்

14-ம் தேதி உலக முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பு கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் இலங்கை முஸ்லிம்களின் நிலை குறித்தும், அங்கு ஹலால் பிரச்சினை தொடர்பாக முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி குறித்தும் பரிசீலிக்க வேண்டும்.இதுபற்றி அந்த நாடுகளின் கவனத்துக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொண்டு செல்லும். இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கூறினார் .

டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை


மஹிந்திரா ஆல் இந்தியா டேலன்ட் ஸ்காலர்ஷிப்      

 பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 தேர்ச்சி பெற்று பாலிடெக்னிக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ள மாணவ, மாணவியருக்கு மும்பை, கே.சி., மஹிந்திரா எஜுகேஷன் டிரஸ்டு நிறுவனம் உதவித்தொகை அறிவித்துள்ளது.

ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கு, உடல் ஊனமுற்றக் குழந்தைகளுக்கு, ராணுவத்தில் பணி செய்பவர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது.

 Scholarship : டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை
 Course         : டிப்ளோமா
 Provider Address : ஆர். வெங்கடராமன் ரீஜினல் மேனேஜர் - எஸ்எஸ்பியு       மஹிந்திரா மற்றும் மஹிந்திரா லிமிடெட் மஹிந்திரா டவர்ஸ்,
பட்டுல்லாஸ் ரோடு, சென்னை - 600 002. www.mahindra.com

நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரத்தில் புதிய தொழிற்பேட்டைகள்


நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரம் மாவட்டங்களில், நான்கு புதிய தொழிற்பேட்டைகள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.சட்டசபையில், நேற்று தாக்கல் செய்யப்பட்ட, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கையில் இடம் பெற்றுள்ளவை:கடந்த, 2012-13ம் ஆண்டில், தஞ்சை பாளையப்பட்டி, வேலூர் வாணியம்பாடி, புதுக்கோட்டை மாத்தூர், விருதுநகர் ஆகிய பகுதிகளில், 10 கோடி ரூபாய் மதிப்பில், புதிய தொழிற் பேட்டைகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள், தொடர்ந்து நடந்து வருகிறது.இந்நிலையில், நடப்பு நிதியாண்டான, 2013-14ம் ஆண்டில், நான்கு புதிய தொழிற்பேட்டைகள் அமைக்க, அரசு திட்டமிட்டுள்ளது. தூத்துக்குடி பிடாநேரி, தேனி மரிக்குண்டு, நெல்லை குருக்கல்பட்டி, விழுப்புரம் பட்டணம் ஆகிய இடங்களில், 20 கோடி ரூபாய் மதிப்பில், புதிய தொழில் பேட்டைகள் அமைக்கப்படுகின்றன.தகவல் தொழில்நுட்ப வசதிமாவட்ட தொழில் மையங்களில் உள்ள தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள், 4 கோடி ரூபாய் செலவில் மேம்படுகிறது.

இதன் மூலம், தொழில் முனைவோருக்கு உதவும் கூடுதல் கணினிகள், வலைதள வசதிகள் மற்றும் மென்பொருள் உருவாக்கம் ஆகியன மேற்கொள்ளப்படும். மாவட்டங்களில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் புள்ளி விவர தொகுப்புகள் மேம்படுத்தப்படும்.மேலும், மாவட்ட தொழில் மைய அலுவலகங்களை, தொழில் வணிக ஆணையரகத்துடன் ஒருங்கிணைத்து, பல்வேறு இணையதள வாயிலான சேவைகள், தொழில் முனைவோருக்கு வழங்கப்படும்.மேம்பாட்டு திட்டம்படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளித்தல், புதிய தொழில் துவங்க திட்டங்கள் தயாரித்தல், ஆகிய உதவிகளை அளிக்க, புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக, 2013-14ம் ஆண்டு, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செயயப்பட்டுள்ளது.இவ்வாறு, மானிய கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் மோடி ஆட்சியில் ஊழல் மற்றும் முறைகேடுகளால் அரசுக்கு ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு

மத்திய தணிக்கை துறை (சி.ஏ.ஜி.) கடந்த 2009-10 மற்றும் 2010-11 ஆகிய ஆண்டுகளில் மாநில முதல் மந்திரி நரேந்திர மோடியின் தலைமையிலான அரசின் ஊழல் மற்றும் முறைகேடான செயல்பாடுகள் ஆகியவற்றால் மாநிலத்திற்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று தனது அறிக்கையில் கூறியுள்ளது.

மாநிலத்தில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்திய இத்தகைய நடவடிக்கைகளை தடுக்க மோடி அரசு தவறி விட்டது.  இதனால் அரசு கருவூலத்திற்கு ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அண்ணா பல்கலையில் பொறியியல் படிக்க வாய்ப்பு


அண்ணா பல்கலைக்கழகத்தில், வெளிநாட்டில் வேலை செய்யும் இந்திய மாணவர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ், பொறியியல் படிப்புகளில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வரும் கல்வியாண்டில் பி.இ, பி.டெக், பி.ஆர்க், எம்.பி, எம்.டெக், எம்.பி.ஏ, எம்.எஸ்சி ஆகிய படிப்புகளுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஒதுக்கீட்டின் படி மாணவர் சேர்க்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவங்களை பல்கலைக்கழக வளாகத்தில் பெற்று கொள்ளலாம் அல்லது பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் (யூஎஸ் $200)விண்ணப்பக் கட்டணமாக வரைவோலை எடுத்து Director, Centre for International Affairs. Anna University. Chennai என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இளநிலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 15ம் தேதி கடைசி நாளாகும். முதுகலை மற்றும் அயல்நாட்டு மாணவர்கள் இளநிலை, முதுகலை பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விரிவான தகவல்களுக்கு http://www.annauniv.edu/cia/advertisement%20%28cnf%29.pdf என்ற இணையதளத்தை அணுகலாம்.

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

ஆசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு முற்றிலும் புறக்கணிப்பு: கி.வீரமணி


ஆசிரியர்களின் தகுதித் தேர்விலும் பணி நியமனத்திலும் இடஒதுக்கீடு அறவே புறக்கணிக்கப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் இதில் தலையிட்டு சமூகநீதி முடிவுகள் அறவே புறக்கணிக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை ரத்து செய்து, வகுப்புவாரியான தனித்தனி தகுதி மதிப்பெண்களை நிர்ணயித்து, புதிய தேர்வு முடிவுகளை வெளியிடுவதோடு, தமிழ்நாட்டில் சட்டப்படி நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டின் விகிதாச்சாரப்படி மறு பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழக ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஆசிரியர்களுக்கான இரு தகுதித் தேர்வுகளிலும்,  ஆசிரியர்களுக்கான பணி நியமனங்களிலும் NCTE வகுத்துள்ள சமூகநீதி தொடர்பான வழிகாட்டுதலும் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவிகித இடஒதுக்கீடு முறையும் அறவே புறக்கணிக்கப்பட்டுள்ளன.

இதுபற்றிய விவரங்கள் வருமாறு:

1) தமிழகத்தில் நடைபெற்ற இரண்டு “ஆசிரியர் தகுதித் தேர்வுகளிலும், (2012 ஜூலை 12 மற்றும் அக்டோபர் 14) சமூக நீதி அறவே பின்பற்றப்படவில்லை.

2) 2895 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் 27-7-2012 அன்று வெளியிடப்பட்டது. இதில் பொதுப்போட்டியில் வெற்றி பெற்ற ‘இட ஒதுக்கீட்டுப் பிரிவினரை பொதுப் போட்டிக்கான இடங்களில் நிரப்பாமல், அவரவர் சார்ந்த இடஒதுக்கீட்டு இடங்களில் நிரப்பி, பொதுப்போட்டி இடங்கள் என்பது முற்றிலும் முன்னேறிய சமூகத்தினருக்கான இடங்களாக ஆக்கப்பட்டிருந்தது.

3) இதனை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தீர்ப்பு அளித்த நீதியரசர் நாகமுத்து, ஆசிரியர் தேர்வு ஆணையத்தின் பட்டியலை முற்றிலுமாக ரத்து செய்ததோடு, தனது கடுமையான கண்டனத்தையும் பதிவு செய்தார். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் திரு.சுர்ஜித் சவுத்ரி நீதிமன்றத்தில் அளித்த விளக்கத்தை அடுத்து, அது முற்றிலும் தவறு எனக் கூறிய நீதியரசர், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அனைத்துப் பட்டியல்களையும் திரும்பப்பெறவும் உத்தரவிட்டார். (WP 21170 of  2012 dt:: 1.10.2012).   அரசு சார்பில் ஆஜரான அடிஷனல் அட்வகேட் ஜெனரல், இனி இதுபோல் நடைபெறாது என நீதிமன்றத்தில் உறுதி அளித்தார்.

01.10.2012 அன்று வெளிவந்த இந்த தீர்ப்பின்படி, கடந்த 24-08-2012 அன்று வெளியிடப்பட்ட, ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் பட்டியலும் நீதிமன்ற ஆணையால் செல்லாததாக்கப்பட்டுவிட்டது.

தகுதி மதிப்பெண்கள் எங்கே?

4) தேசிய ஆசிரியர் கல்விக்கழகம் (NCTE)) வகுத்துள்ள சட்ட திட்டங்களின்படி, “ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும். அதன்படி, பொதுவாக 60ரூ-ற்கு (அதாவது மொத்த மதிப்பெண்கள் 150-க்கு 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள்) ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள். பள்ளி நிர்வாகங்கள் (அரசு உள்ளாட்சி, அரசு உதவி பெறும், அரசு உதவி பெறாத) அவரவர் பின்பற்றும் இடஒதுக்கீட்டுக் கொள்கைகளுக்கேற்ப எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி, மாற்றுத் திறனாளிகள் போன்ற அனைத்து வகையான இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் தகுதி மதிப்பெண்களில் தளர்வுகளை வழங்கிக் கொள்ளலாம்.

5) இத்தேர்வில் வெற்றி பெற்றவர்தான், ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். (தனியார் பள்ளிகள் உட்பட)

6) தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கவும் இத்தகுதிச் சான்றிதழ் அவசியம். தற்போது நடைபெற்ற தேர்வில் 19,000 மட்டுமே தேர்வு என்று அறிவிக்கப்பட்டதால், மீதமுள்ளோர் எந்த பள்ளியிலும் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தக் குளறுபடியான தகுதித் தேர்வு முறையினால் ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆறரை லட்சம் பேர்கள் (தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கிராமப்புரத்தைச் சேர்ந்தோர்) தனியார் பள்ளிகளில் கூட ஆசிரியர் பணியில் சேர முடியாத பெருந்தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

7) தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் (NCTE) வகுத்துள்ள சட்ட திட்டங்களின்படி, பிற மாநிலங்கள் இட ஒதுக்கீட்டுப் பிரிவினர்க்கு தனி மதிப்பெண்களை நிர்ணயம் செய்து தேர்வு நடத்தியுள்ளன.

எடுத்துக்காட்டாக,

ஆந்திரா  OC 60%, OBC 50%, SC/PH 40%,
அஸ்ஸாம்  OC 60%, Others 55%, (OBC, SC/ST/PH)
பீகார்  OC 60%, Others 55%,
ஒரிசா  OC 60%, Others 50%,

8) ஆனால் தமிழ்நாட்டில் பொதுப்போட்டிக்கு நிர்ணயம் செய்யப்பட்ட 60  விழுக்காடு மதிப்பெண்களை,  அனைத்துப் பிரிவினரும், மாற்றுத் திறனாளிகள் உட்பட பெறவேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டது.  தமிழக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட இரண்டு “ஆசிரியர் தகுதித் தேர்வுகளிலும்”, (TNTET) சமூகநீதி முறை அடிப்படையிலான தனித்த தகுதி மதிப்பெண்கள் முறை பின்பற்றப்படவில்லை.

9) தகுதித் தேர்வு அடிப்படையில் நேரடியாக பணி நியமனம் செய்ய முடியாது. ஆனால், அதன் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டு, சட்டப்படி அறிவிக்கப்பட வேண்டிய வகுப்புவாரியான காலிப் பணியிடங்கள் பற்றிய விவரங்கள் கொண்ட அறிவிக்கையை வெளியிடாமலேயே மூன்றே நாட்களில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, 19000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

10) ஆனால், பட்டியலின் முழு விவரம் அதாவது பொதுப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வெற்றி பெற்றவர்கள் என எந்தவொரு பட்டியலும் வெளியிடப்படாமல் இந்த பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது.

பணி நியமன இடஒதுக்கீட்டில், BC, MBC, SC, ST தவிர்த்து BC Muslim, SC  அருந்ததியர் மற்றும் அனைத்துப் பிரிவினரிலும் மகளிருக்கு இடஒதுக்கீடு உண்டு.

கைம்பெண்கள், மாற்றுத் திறனாளிகள், தமிழ் வழியில் பயின்றோர் ஆகியோருக்கும் இடஒதுக்கீடு உண்டு. இவை எல்லாம் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

11) இந்த நியமனப் பட்டியலில் பொதுப் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள உயர்ஜாதியினரைக் காட்டிலும் அதிக மதிப்பெண்களும், பதிவு அடிப்படையில் மூப்பும் பெற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினர், பொதுப்போட்டியில் இடம் பெறாமல், இடஒதுக்கீட்டு இடங்களில் நிரப்பப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, பல இடஒதுக்கீட்டுப் பிரிவினர் தங்கள் வாய்ப்பை இழந்துள்ளனர்.

12) பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு கணிதம், விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட முடிவுகளில் முதல் மதிப்பெண் 142 பெற்ற சித்ரா என்பவர் பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். 107 மதிப்பெண் பெற்ற சுந்தரி என்பவர் முன்னேறிய சமூகத்தவர், பொதுப் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுபோல் 130 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற பலரும், இடஒதுக்கீட்டு இடங்களுக்குத் தள்ளப்பட்டிருக்க, வெறும் 90 மதிப்பெண்கள் பெற்ற பலரும் பொதுப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதே போன்ற மோசடி, பதிவுமூப்பு அடிப்படையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் பணிநியமனத்திலும் நடைபெற்றிருக்கிறது. சான்றாக, மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படும் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில், 13.11.2002-இல் பதிவு செய்தவர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும், 15.2.2010-இல் பதிவு செய்த முன்னேறிய வகுப்பினர் பொதுப்பட்டியலிலும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை, அதிர்ச்சிகரமான விதத்தில் மதிப்பெண்கள் குறிப்பிடப்படாமலேயே, தகுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்புக்குப் பிறகும்கூட

13) இவை அனைத்தும், முதுநிலைப் பட்டதாரிகள் பணி நியமனம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் நாகமுத்து அவர்களின் கடுமையான தீர்ப்புக்குப் பிறகும்கூட துணிந்து செய்யப்பட்ட மோசடிகள்! மேலும் நீதியரசர் நாகமுத்து அவர்கள் தனது தீர்ப்பில், ஆசிரியர் தேர்வுக் கழகம் எவ்வாறு இடஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என விரிவாக  எடுத்துக்காட்டி உத்தரவிட்டதற்கு மாறாக இந்த 19000 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்  நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.

முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஏற்கெனவே வெளியிட்ட பட்டியலை முழுவதுமாக ரத்து செய்ததோடு, புதிய பட்டியல், இடஒதுக்கீட்டு கொள்கை அடிப்படையில் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் புதிய பட்டியலை ஆசிரியர் தேர்வு ஆணைய இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் கூறப்பட்டது. வேறுவழியின்றி முறையான கட்-ஆப் மதிப்பெண்களை மட்டும் வெளியிட்ட தேர்வு வாரியம், அதன்படி திருத்தப்பட்ட தேர்வுப் பட்டியலை வெளியிடவில்லை.

கட்-ஆப் மதிப்பெண்களை வெளியிட்ட பின்னும் நீதிமன்ற உத்தரவுக்கு விரோதமாக பணி நியமனப் பட்டியலில் பொதுப் போட்டியில்  இடம் பெற வேண்டிய தகுதி வாய்ந்த தாழ்த்தப்பட்டோர், இடஒதுக்கீட்டுப் பிரிவிலேயே  (SC) சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆய்வு செய்யப்பட வேண்டும்

நிகழ்ந்திருக்கக்கூடிய நிகழ்வுகளையும், ஆதாரங்களையும் வரிசைப்படுத்திப் பார்க்கிறபோது, தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியத் தலைவர் திரு.சுர்ஜித் சவுத்ரியின் திட்டமிட்ட, இந்த மோசடிகளை வெளிக் கொணர வேண்டுமானால், திரு.சுர்ஜித் சவுத்ரி இல்லாத நேர்மையான அதிகாரிகளைக் கொண்ட குழுவை நியமித்து, இதுவரை நடைபெற்றுள்ள அனைத்துப் பணி நியமனங்களையும் ஆய்வு செய்ய முதலமைச்சர் உத்தரவிடவேண்டும்.

தேவை புதுப்பட்டியல்

14) அதனுடன், உடனடியாக NCTE விதிப்படி இடஒதுக்கீட்டுப் பிரிவினர் அனைவருக்கும் உரிய தகுதி மதிப்பெண்களை தமிழக அரசு அறிவித்து, அதன்படி முன்பு நடந்த இரு தகுதித் தேர்வுகளுக்குமான புதிய மதிப்பெண் பட்டியலை வெளியிட வேண்டும்.

15) கடந்த ஆண்டு செய்யப்பட்ட இந்த 21,000 பணி நியமனங்களையும் (முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் உள்பட) நிறுத்தி வைத்து, ஆசிரியர் பணி நியனமங்கள் தொடர்பான வகுப்புவாரியான காலிப் பணியிட விவரங்களைக் கொண்ட முறையான அறிவிக்கையை வெளியிட்டு, உயர்நீதிமன்றத் தீர்ப்பில் (01.10.2012) அறிவுறுத்தப்பட்டபடி முறையான இடஒதுக்கீட்டின்அடிப்படையில் வகுப்புவாரியான கட்ஆப் மதிப்பெண்களை அறிவித்து, பணி நியமனத்திற்குரிய கலந்தாய்வு நடத்தப்படவேண்டும். கட்-ஆப் மதிப்பெண்களும், கட் ஆப் தேதியும் தான் இடஒதுக்கீட்டை, முழுமையாகவும் முறையாகவும் பின்பற்றுவதற்குரிய மிகச்சரியான நடைமுறையாகும்! இப்படித்தான் டி.என்.பி.எ°.சி உள்பட மற்ற எல்லாத் துறைகளிலும் நடந்துவருகிறது. ஆனால், நீதிபதி நாகமுத்து அவர்களின் உத்தரவைப் பார்க்கும்பொழுது திரு.சுர்ஜித் சவுத்ரி இதுவரை கட்-ஆப் மதிப்பெண்களையே வெளியிடாமல் பணியிடங்களை நிரப்பி, மோசடியான முறையில் கடந்த காலத்தில் பல்வேறு பணிநியமனங்களையும் மேற்கொண்டுள்ளார்.

16) 69 சதவிகித இடஒதுக்கீட்டை எதிர்த்து 10 மாணவர், மாணவிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு சார்பில் தெளிவான திட்டவட்டமான கருத்துகள், தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் 87 விழுக்காடு உள்ளனர் என்றும் 1921 முதல் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு தொடர்பான பெரிய வரலாறு இருக்கிறது என்றும், வளர்ந்து வரும் மக்களின் தேவைக்கு ஏற்ப இந்த 69 விழுக்காடு இடஒதுக்கீடு மிகவும் அவசியம் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அத்தகைய தமிழ்நாடு அரசின் அண்மைக்கால ஆசிரியர் பணி நியமனம் இடஒதுக்கீடுக்கு விரோதமாக நடைபெற்று இருப்பது அதிர்ச்சியை அளிக்கக் கூடியதாக உள்ளது என்பதையும் தமிழ்நாடு அரசு முதல் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.

முதல் அமைச்சர் தலையிட வேண்டும்

17)  திரு.சுர்ஜித் சவுத்ரி உள்பட தவறு செய்த அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தந்தை பெரியார் பிறந்த  சமூகநீதி மண்ணில்  இவ்வளவு பெரிய சமூக அநீதி நடைபெற்றுள்ளது. முதல் அமைச்சர் அவர்கள் உடனடியாக இதில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். 69 சதவிகித இடஒதுக்கீடு சட்ட ரீதியாக உறுதி செய்யப்பட அந்தக் கால கட்டத்தில் முதல் அமைச்சராகவிருந்த ஜெயலலிதா அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையையும் (1993-1994) இந்த நேரத்தில் நினைவூட்டி, அவசர கதியில் இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.


தமிழகம் முழுவதும் இன்று (02/04/2013) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை பேரணி ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது

அகில இந்திய அளவில்  முஸ்லிம்களுக்கு 10 % இட ஒதுக்கீடு ! தமிழகத்தில் இட ஒதுக்கீடு உயர்வு !
பூரண மது விலக்கு! விசாரணை கைதிகளாக பல்லாண்டுகளாக உள்ள அப்பாவி சிறைவாசிகள் விடுதலை !
ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று (02/04/2013) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை பேரணி ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது .

திருநெல்வேலியில் ரயில்வே சந்திப்பு முன் திருநெல்வேலி மாவட்டத் தலைவர் எம்.எஸ்.துராப்ஷா தலைமையில் நடந்தேறியது .ஆர்ப்பாட்டத்தின்  இறுதியில்  நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு ,போக்குவரத்து பாதிக்கப்பட்டது .

தஞ்சாவூரில் கோரிக்கை பேரணி மாநில செயலாளர்  தளபதி ,ஆடுதுறை ஏ.எம்.ஷாஜஹான்  தலைமையில்  நடந்தது .பேரணியின் இறுதியில்  தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது .
சுமார் 2500 க்கும் அதிகமானோர் எழுச்சியுடன் கலந்துகொண்டனர் .

கடலூரில்  கோரிக்கை பேரணி மாநில துணைத்தலைவர்   தளபதி ,ஷபிகுர்ரகுமான் மன்பஈ   தலைமையில்  நடந்தது .பேரணியின் இறுதியில்  தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது .

விழுப்புரத்தில்   கோரிக்கை பேரணி மாநில செயலாளர்    காயல் மஹபூப்    தலைமையில்  நடந்தது .பேரணியின் இறுதியில்  விழுப்புரம்  மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது .சுமார் ஆயிரக்கணக்கானோர்  எழுச்சியுடன் கலந்துகொண்டனர் .

நாகப்பட்டினத்தில்   கோரிக்கை ஆர்ப்பாட்டம்  மாநில செயலாளர்   திருப்பூர் சத்தார்   தலைமையில்  நடந்தது .பேரணியின் இறுதியில்  நாகை  மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது .சமுதயா மக்கள்  எழுச்சியுடன் கலந்துகொண்டனர் .


திருச்சியில் இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை பேரணி மாநில துணை செயலாளர் ஜி.எம்.காசிம் தலைமையில் நடந்தது .பேரணியின் இறுதியில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது .சமுதாய மக்கள் எழுச்சியுடன் கலந்துகொண்டனர் .
கன்னியாகுமரியில்  இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை பேரணி மாநில துணை செயலாளர் இபுராஹிம் மக்கி  தலைமையில் நடந்தது .பேரணியின் இறுதியில்  மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது .