Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 8 நவம்பர், 2012

ரேஸ் கார் தயாரிப்பில் தமிழக மாணவர்கள் சாதனை!


ரேஸ் கார்கள் தயாரிப்பில் பல வெற்றிகளை குவித்து வந்துள்ளனர் தமிழ்நாட்டின் சேலம் சோனா பொறியியல் கல்லூரியை சேர்ந்த பி.இ., மெக்கானிகல் இஞ்சினீர் மாணவர்கள்.

ரேஸ் வேகத்தில் அவர்கள் நம்மிடம் பேசியது.... இதோ

'எங்க டீம்ல 17 பேரு... பிரவீன் தான் எங்க கேப்டன், ஆகாசும், சரணும் தான் ரேஸ் கார் டிரைவர்ஸ்.... 'டெராசிவின்' தான் எங்க டீம் பேரு. டெல்லில நொய்டால 'சுப்ரா எஸ்.எ.இ இந்தியா' காம்பிடேசன் நடந்தது அகில இந்திய அளவுல நடந்த போட்டி. வழக்கமா கார் ரேஸ் நடக்கும்  புத் இண்டர்நேசனல் சர்கியோ ல தான் நடந்தது.

அதாவது ரேஸ் கார் தயாரிப்பது தான் இந்த போட்டி. தயாரிச்ச கார்களில் வளம் வரணும். இதுல நாடு முழுக்க 125 கல்லூரி கலந்துகொண்டு 63 செலெக்ட் ஆகி, பின் இறுதியாக 25 கல்லூரி அணிகள் தேர்வானது. அதில் எங்க அணியும் ஒன்று. 'சி.எ.இ என்கிற அவார்ட் எங்களுக்கு கிடைத்தது. எங்க கார் மாருதி 800 இஞ்சின். வேலாக்ஸ் 1.0 என்பது எங்க மாடல். மணிக்கு 110 கி.மீ வேகம் போறது. எங்க ரேஸ் கார் ஓட்டும்  டிரைவர் உயிருக்கு பாதுகாப்பு தர்றது. அந்தளவு நாங்க குறைந்த விலையில் தரமான பாதுகாப்பான கார் பிரேம் தயாரிச்சோம் ரேசில் விபத்து நடந்தால் கூட அந்த அதிர்வை சமமா கார் பிரேம் உள் வாங்கி கொள்ளும்... அதனால் விபத்தின் வேகம் குறைந்து ஓட்டுபவருக்கு ஆபத்தை தராது... இதை பார்த்து தான் எங்களுக்கு விருது வழங்கினர் .கார் ஸ்டியரிங் உட்பட்ட உபகரணங்கள் நாங்களே எங்கள் கல்லூரியில் தயாரித்தது... எங்க சேர்மன் தீரஜ்லால் சார் தான் எல்லா உதவியையும் செஞ்சு தந்தது.. எங்க H.O.D வெங்கடேசன் சார் நிறைய ஆலோசனைகள் வழங்கினார்  . இதனால் தான் நாங்கள் வெற்றி பெற்றோம்.. அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
 
அடுத்து உலகளவில் அமெரிக்காவின் லிங்கன் என்ற பகுதியில் பார்முலா எஸ்.ஐ என்ற ரேஸ் கார் தயாரிப்பு போட்டி நடக்கின்றது , 600 c.c திறன் கொண்ட கார் ரேஸ் போட்டி அது.
 
இந்தியாவில் இருந்து மூனே மூணு அணி தான் தேர்வு ஆகி இருக்கு... அதுல தமிழ்நாட்டில் எங்க அணி ஒன்று.... சந்தோசமா இருக்கு அங்கயும் வெற்றி பெற்று வருவோம்' என்ற மாணவர்கள் நம் முன் அவர்கள் தயாரித்த ரேஸ் காரில் வேகமாய் பயணம் செய்து காட்டி அசத்தினர்.
 
உலக அரங்கு போட்டியில் கால் பதிக்கும் தமிழக மாணவர்களை பெருமையோடு வாழ்த்தி விடை பெற்றோம்.

தெலுங்கானா போராட்டம் மீண்டும் தீவிரமடைகிறது


ஆந்திர மாநிலம் அதிலாபாத் மாவட்டம் குசலாப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தாஷ்குமார். இவர் ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் ஆவார். இவர் தனி தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி உஸ்மானியா பல்கலைக்கழகம் எதிரே உள்ள ஒரு மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விரைந்து வந்து சந்தோஷ்குமாரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். சந்தோஷ் குமார் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில் மத்திய அரசு தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க காலம் கடத்துவதால் தூக்கு போட்டு தற்கொலை செய்கிறேன் என்று எழுதப்பட்டு இருந்தது.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு செகந்திராபாத்தில் தனி தெலுங்கானாவுக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களின் நினைவு சின்னம் அருகே அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அங்கு மாணவர்கள் உள்பட ஏராளமானவர்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் சந்தோஷ்குமாரின் உடலை அவரது தந்தை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றார். இந்த நிலையில் தனி தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டு வீசியும் கலைத்தனர். இதனால் தெலுங்கானா பகுதிகளில் பதட்டம் நிலவியது. நேற்று இரவு ஐதராபாத் ராமாந்தயூர் பகுதியில் 2 அரசு பஸ்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.

மாணவர்கள் மீது தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து தெலுங்கானா தனி மாநில கோரிக்கைக்காக ஏற்படுத்தப்பட்ட அரசியல் கூட்டு நடவடிக்கை குழு தலைவர் கோதண்டராம் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து இன்று தெலுங்கானா பகுதியை சேர்ந்த 10 மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க அனைத்து இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

எந்த நேரத்திலும் ஈரானை தாக்குவோம்: இஸ்ரேல் பிரதமர் கொக்கரிப்பு


 இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் கூறியதாவது :-

நான் பிரதமராக இருக்கும் வரை ஈரானை அணுகுண்டு தயாரிக்க விடமாட்டேன். இதையும் மீறி ஈரான் அணு குண்டை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. எனவே எந்த நேரத்திலும் நாங்கள் ஈரான் மீது போர் தொடுப்போம்.

பொருளாதார தடைகளையும் மீறி ஈரான் அத்து மீறி செயல்படுகிறது. இதற்கான பலனை அது சந்திக்க நேரிடும். இவ்வளவு நாளும் நாங்கள் ஈரானை தாக்காமல் இருப்பதற்கு அமெரிக்காவே காரணம். அவர்கள் தான் எங்களை தடுத்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் இது நீடிக்குமா? இல்லையா? என்பது ஈரான் கையில் தான் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கிரிக்கெட் விளையாட அசாருதீனுக்கு விதிக்கப்பட்ட ஆயுட்கால தடை சட்டவிரோதம்: ஆந்திர ஐகோர்ட்


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ,இந்நாள் மொராதாபாத் தொகுதியின் நாடுமன்ர உறுப்பினருமான  அசாருதீன் மீதான ஆயுட்கால தடை சட்டவிரோதம் என ஆந்திர ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனுக்கு ஆயுட்கால தடை விதித்து, இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த 2000-மாவது ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஐதராபாத்தில் உள்ள சிவில் கோர்ட்டில் அசாருதீன் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த கீழ் கோர்ட், தடையை உறுதி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், ஆந்திர ஐகோர்ட்டில் அசாருதீன் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கு விசாரணையின் போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்திய கிரிக்கெட் வாரியம் அசாருதீனுக்கு தண்டனை வழங்கி விட்டதாக வாதிட்டனர். இந்நிலையில், இவ்வழக்கில் தீர்ப்பளித்த ஆந்திர ஐகோர்ட், அசாருதீன் மீதான ஆயுட்கால தடை சட்டவிரோதம் என கூறியுள்ளது. இது அசாருதீனுக்கு மிகப்பெரிய நிம்மதியை கொடுத்துள்ளது.

49 வயதான அசாருதீன், காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு தற்போது மொராதாபாத் எம்.பி.,யாக உள்ளார். மிகச்சிறந்த கேப்டனாக வலம் வந்த அசாருதீன், இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6215 ரன்களும், 334 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9378 ரன்களும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 7 நவம்பர், 2012

அமெரிக்க தேர்தலில் வெற்றிபெற்ற இந்தியர்


அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட இந்தியரான அமிபேரா, பிரதிநிதிகள் சபை உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அதிபர் தேர்தலில் வெற்றியடைந்த 3வது இந்தியர் என்ற சிறப்பிடத்தை அவர் அடைந்துள்ளார்.

1950-ம் ஆண்டு தலிப்சிங் சவுண்ட் என்ற இந்தியர் முதன் முறையாக அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இடம்பெற்ற முதல் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

அதன் பிறகு 2008-ம் ஆண்டு, ஜிண்டால் இரும்பு ஆலை அதிபரும் அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்திய வம்சா வழியினருமான பாபி ஜிண்டால் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது லூசியானா கவர்னராக அவர் பதவி வகிக்கின்றார்.

தற்போது நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் 6 இந்தியர்கள் போட்டியிட்டனர். இதில் 5 பேர் குடியரசு கட்சி சார்பிலும், ஒருவர் ஜனநாயக கட்சி சார்பிலும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர்.

இவர்களில் 3 பேர் அமெரிக்காவில் டாக்டர்களாக பணியாற்றி வருகின்றனர். இன்று வெளியான தேர்தல் முடிவுகளின்படி, கலிபோர்னியா மாகாணத்தின் 7-வது மாவட்டத்தில் போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளரான டாக்டர் அமிபேரா வெற்றி பெற்றுள்ளார்.

அமிபேரா, 88,406 ஓட்டுகளையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட டேன்லுங்ரன் 88,222 ஓட்டுகளையும் பெற்றனர். 184 ஓட்டு வித்தியாசத்தில் இவர் வெற்றிக் கனியை பறித்தார்.

ரிக்கி கில், டாக்டர் சையத் தாஜ், டாக்டர் மனன் திரிவேதி, உபேந்திரா சிவுக்குலா, ஜேக், உப்பால் ஆகிய 5 இந்திய வம்சாவழி வேட்பாளர்களும் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.

வன்முறைக்கு மாற்று மருந்து கல்விதான்- ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி


பெருகி வரும் வன்முறை, ஏற்றத்தாழ்வுகளை கல்வியினால் மட்டுமே முறியடிக்க இயலும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம், நாரண்பூர் மாவட்டத்தில் பழங்குடியின மாணவர்களுக்கான 2 தங்கும் விடுதிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

அமைதி, சகிப்புத்தன்மை, மனித நேயம் வளர கல்வி இன்றியமையாதது. கல்வியின் மூலம் சமூகமும் பொருளாதாரமும் வளர்ச்சி பெறும். வன்முறை, ஏற்றத்தாழ்வு போன்றவற்றை நீக்கும் மாற்று மருந்தாக கல்வி விளங்குகின்றது. செயல்படுவதற்கான நேரம் இதுதான்.

உங்கள் பாதையில் வரும் வாய்ப்புகளை நீங்கள் தவற விட்டுவிடக் கூடாது. நாடு வளர்ச்சியடைந்து வருகின்றது. கிராமங்களில் ஆஸ்பத்திரிகளும், கட்டிடங்களும் உள்ளன. ஆனால், டாக்டர் இல்லை. 70 சதவீதம் மக்கள் கிராமங்களில் தான் வாழ்கின்றனர்.

நாடெங்கிலும் 6 லட்சத்திற்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் பணியாற்ற வேண்டும் என்ற உள்ளுணர்வு வரும் வரை யாரும் கிராமங்களுக்கு சென்று சேவையாற்ற முன் வருவதில்லை.

இவ்வாறு அவர் பேசினார்

மத்தியபிரதேச பிஜேபி அரசுக்கு எதிராக மேதாபட்கர் போராட்டம் தொடர்கிறது


மத்திய பிரதேச மாநிலத்தில் மின்திட்டங்களுக்காக விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தியதைக் கண்டித்து, சமூக சேவகியும், நர்மதா பாதுகாப்பு குழு தலைவருமான மேதா பட்கர் தலைமையில் கடந்த 4-ம் தேதி சிந்த்வாராவில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக மேதா பட்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டு சிந்த்வாரா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து தன் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற்று, நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மேதா பட்கர் சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். விடுதலை செய்யும் வரை உண்ணாவிரதத்தை தொடர்வதாகவும் அவர் எச்சரித்தார்.

மேதா பட்கர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, டெல்லியில் உள்ள மத்திய பிரதேச பவன் அருகில் போராட்டம் நடத்தினார். அப்போது மேதா பட்கரை கைது செய்திருப்பது ஜனநாயக படுகொலை என்று அவர் கடுமையாக சாடினார்.

மேதா பட்கர் கைது செய்யப்பட்டு 2 நாட்கள் ஆகியும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தாததைக் கண்டித்து, ஜன் சங்கர்ஸ் மோர்ச்சா உறுப்பினர் அனுராக் மோடி, ஐகோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், கோர்ட் உத்தரவையடுத்து மேதா பட்கர் மற்றும் 19 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.