Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 29 ஜூன், 2012

அரசு உதவிபெறாத சிறுபான்மை கல்விநிறுவனங்கள்:உயர் நீதிமன்றம் உத்தரவு


இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் சில பிரிவுகள், அரசு உதவி பெறாத சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் விருத்தாசலம் முடப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த எஸ்.ஞானவேல் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், இலவச  கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் நலிந்த பிரிவு மாணவர்களுக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும்.

அதனடிப்படையில் நெய்வேலியில் உள்ள செயிண்ட் ஜோசப் குளுனி மெட்ரிக் பள்ளியில் எனது மகளுக்கு எல்.கே.ஜி.யில் இடம் கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால் அதற்கு பள்ளி நிர்வாகம் மறுப்பு தெரிவித்து விட்டது. எனவே மகளுக்கு இடம் தர பள்ளிக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி கே. சந்துரு விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் 13(1)(சி) மற்றும் 18(3) ஆகிய பிரிவுகள் (25 சதவீத இடத்தை ஒதுக்கும் பிரிவுகள்), அரசு உதவி பெறாத சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைப் பறிக்கும் விதத்தில் உள்ளன என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யபட்டது.

அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, அரசு உதவி பெறாத சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமைகளை பாதிக்கும் வகையில் அந்தப் பிரிவுகள் அமைந்துள்ளன என்றும், எனவே அந்த பிரிவுகள் அதுபோன்ற கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி பார்த்தால், மனுதாரரின் கோரிக்கைகளை ஏற்க முடியாது. எனவே அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக