Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

சிறுபான்மை மாணவர்களுக்கு கல்விஉதவி தொகை விண்ணப்பிக்கலாம்

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர் புத்த மதம் மற்றும் பார்சி பிரிவை சேர்ந்த தொழில் மற்றும் தொழில் நுட்ப கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவி தொகை திட்டத்தின் கீழ் 2013-14ம் ஆண்டிற்கு கல்வி உதவி தொகை பெறுவதற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை பதிவதற்கு வரும் செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள்ளும், புதுப்பித்தலுக்கு வரும் டிசம்பர் மாதம் 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2,301 மாணவர்களுக்கு புதிய கல்வி உதவி தொகை மத்திய அரசால் வழங்கப்படுகிறது. கல்வி உதவி தொகை பெற மாணவ, மாணவிகள் கடந்த ஆண்டு பொது தேர்வில் குறைந்தபட்சம்50 சதவீத மார்க் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆண்டு வருமானம் 2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்த மாணவர்கள் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து கையொப்பமிட்டு, மார்க் சான்று, வருமான சான்று நகல்களுடன் கல்வி கட்டணம் செலுத்திய ரசீது, இருப்பிட முகவரி, பாங்க் கணக்கு எண் ஆகிய ஆவணங்களை இணைத்து அவர்கள் படிக்கும் கல்வி நிலையங்களில் வரும் அக்டோபர் மாதம்10ம் தேதிக்குள் பதிவு செய்யவும், 20.1.2014க்குள் புதுப்பித்தலுக்கும் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி உதவி தொகை மாணவ, மாணவிகளின் பாங்க் கணக்கில் செலுத்தப்பட உள்ளதால் விண்ணப்பிக்கும் போது பாங்க் கணக்கு விபரங்களை தவறாது சமர்ப்பிக்க வேண்டும்.

மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்ட கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் செலுத்தும் முழு கல்வி கட்டணமும் திரும்ப வழங்கப்படும். பிற கல்வி நிறுவனங்களில் விடுதியில் தங்கி படிப்பதற்கு 30 ஆயிரம் மற்றும் விடுதியில் தங்காமல் படிப்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அதிகபட்சமாக கல்வி உதவி தொகை வழங்கப்படும்.கல்வி நிலையங்கள் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பரிந்துரை செய்ய வேண்டும். ""சிறுபான்மை நல ஆணையர், 81, அண்ணா சாலை, சென்னை - 2 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இதுதொடர்பாக மேலும் விபரங்களுக்கு 044 - 28523544 என்ற டெலிபோனில் தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் சமயமூர்த்தி தெரிவித்தார்.

காலணி வடிவமைப்பு பயிற்சி: விண்ணப்பிக்க ஆகஸ்ட்14 கடைசிநாள்

சென்னை, கிண்டியில், மத்திய அரசின், மத்திய காலணி பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் சார்பில், காலணி வடிவமைப்பு சார்ந்த, நான்கு முதல் 12 வார, குறுகிய கால சான்றிதழ் பயிற்சிகளும், இரண்டு ஆண்டு டிப்ளமோ பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

இதுதவிர, "புட்வேர் டெக்னாலஜி"யில் முதுகலை டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பும் உள்ளது. சான்றிதழ் படிப்பில் சேர, 10ம் வகுப்பு, டிப்ளமோவில் சேர, பிளஸ் 2 படித்திருக்க வேண்டும். முதுகலை டிப்ளமோவில் சேர, ஏதேனும் ஒரு டிப்ளமோவும், முதுகலை பட்டப்படிப்பில் சேர, ஏதேனும் ஒரு பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.

இதுகுறித்து, மத்திய காலணி பயிற்சி மைய இயக்குனர், முரளி வெளியிட்ட அறிவிப்பு: காலணி வடிவமைப்பு பயிற்சி முடிக்கும் மாணவர்களுக்கு, உடனடி வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படுகிறது. இதில் சேர, www.cfti.com என்ற இணையதளத்தில், விண்ணப்பத்தைப் பெற்று, பூர்த்தி செய்து, ஆக.,14ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு, கட்டணம் இலவசம்; விடுதி வசதி உள்ளது. மேலும் விவரங்களுக்கு, "இயக்குனர், மத்திய காலணி பயிற்சி மையம், 65/1, ஜி.எஸ்.டி.சாலை, கிண்டி, சென்னை-32" என்ற முகவரியிலோ, 044-2250 1529, 94430 06257 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பாபநாசம் அணையில் படகு போக்குவரத்து தொடக்கம்: சுற்றுலா பயணிகள்–வியாபாரிகள் உற்சாகம்

புலிகள் சரணாயலயங்களில் சுற்றுலா செல்ல உச்ச நீதிமன்றம் 2012–ம் ஆண்டு ஜூலை 2–ந்தேதி தடை விதித்தது. இதனால் முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள மணிமுத்தாறு, பாபநாசம் அகஸ்தியர் அருவி, காரையார் பாணதீர்த்த அருவி மற்றும் களக்காடு செங்கல்தேரி ஆகிய சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன.

புலிகள் சரணாலயத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. பின்பு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் புதிய நெறி முறைகளை உருவாக்கியது. இதனைத்தொடர்ந்து நிபந்தனைகளுடன் புலிகள் சரணாலயங்களில் சுற்றுலா செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதனைத்தொடர்ந்து உள்ளூர் ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் முதல் கூட்டம் 2012–ம் ஆண்டு டிசம்பர் 4–ந்தேதி நடைபெற்றது. அதில்பாபநாசம் அகஸ்தியர் அருவி மற்றும் மணிமுத்தாறு அருவிகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பாபநாசம் அணையில் படகு போக்குவரத்து தொடங்க அனுமதி வழங்கப்படவில்லை.

அதற்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று படகுகளின் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 2–ந்தேதி நடந்த உள்ளூர் ஆலோசனைக்குழு கூட்டத்தில் பாபநாசம் அணையில் படகு போக்குவரத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து அணையில் படகுகளை இயக்க தங்களை அனுமதிக்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு படகு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பாபநாசம் அணையில் படகு போக்குவரத்து தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதற்கிடையை பாபநாசம் அணையில் படகு உரிமை யாளர்கள் 15 படகுகளை இயக்கலாம் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து பாபநாசம் அணையில் படகு போக்குவரத்து இன்று தொடங்கியது.

பாபநாசம் அணையில் படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால் படகு உரிமையாளர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் அப்பகுதியில் கடை நடத்தி வரும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

அத்வானி தமிழகம் வரும்போதெல்லாம் முஸ்லிம்கள் வீடுகளில் சோதனை: காயல்பட்டினம் பற்றி இராம.கோபாலன் அவதூறு , பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் கடும் கண்டனம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழகத் தலைவர்  பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது- `சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி’ என் றொரு பழமொழி தமிழகத்தில் நீண்ட காலம் காலமாகத் தவழ்ந்து வருகிறது. இந்தப் பழைய மொழிக்கு உண்மையான அருத்தம் என்ன வாக இருக்கும் என்று கருதிக் கொண்டிருப்பவர்களுக்கு, இந்து முன்னணி தலைவர் பெரியவர் இராமகோபாலன் அவர்கள் `அந்த ஆண்டி நான்தான்’ என்று அம்பலப் படுத்தியிருக்கிறார்.

தினமலர் திருநெல்வேலி ஜூலை - 30 இதழில் ``மேலப் பாளையத்தில் கைது செய்யப் பட்டவர்களின் பின்னணி விவரங்களை விசாரிக்க வேண்டும் - இந்து முன்னணி இராம கோபாலன் வலியுறுத் தல்’’ என்னும் தலைப்பில் செய்திப் பிரசுரமாகி யிருக்கிறது.

பாரதீய ஜனதா கட்சியின் ர(த்)தம் யாத்திரை புகழ் திரு. லால்கிருஷ்ண அத்வானி அவர்கள் தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் 3 ஆயிரத் திற்கும் குறையாமல் காவல் துறையினர் பாதுகாப்பு கொடுப்பதும், கோவை, மேலப்பாளையம் போன்ற ஊர்களில் 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒரு வழக்கில் சம்பந்தப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் வீடுகளில் - கடைகளில் சோதனை என்னும் நாடகத்தை நடத்துவதும், அங்குள்ள பட்டாசு மற்றும் மத்தாப்பு குச்சிகளை யெல்லாம் ஜெலட்டின் குச்சிகள் என்றும் கூறி அறிவிப்பு செய்வதும், அதன் மூலம் முஸ்லிம் சமுதாயத்தை அச் சுறுத்தலாம் என்னும் நப்பாசை யால் இந்த தொடர் நாடகங் களை தொடர்வதும் வாடிக்கை யானது; நாட்டில் நடக்கும் வேடிக்கையானது என்று எல்லோரும் தெரிந்திருக்கிறார்கள்.

தினந்தோறும் கொலையும், கொள்ளையும், திருட்டும், பறிப்பும், கன்னக்கோல் வேலை யும் தொடர்ந்து நடந்து கொண்டி ருக்கின்றன. ஒரு வார ஏடு கூறியிருப்பதுபோல கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இத்தகைய சம்பவங்கள் நடந்தி ருக்கின்றன. இவற்றைப் பற்றி பெரியவர் இராமகோபாலன் அவர்கள் வாய் திறப்பதில்லை.

ஆனால், முஸ்லிம்கள் என்றால் அவருக்கு வெறும் வாயில் அவல் கிடைத்தது மாதிரி என்றும் மெல்லுவார் - ஏட்டிக்கு போட்டியாக எதை யாவது சொல்லுவார். ஐயா அவர்களின் இத்தகைய பிதற் றல்களுக்கு இப்போதெல்லாம் பத்திரிகைகளும், ஊடகங்க ளும் முக்கியத்துவம் தருவ தில்லை. ஆனால், தினமலர், அவர் இனப் பத்திரிகை என்ப தால் தனது இனத்தின் பெரு மையை இப்படிப்பட்ட ஏடா கூடங்களான செய்திகளை தருவதன் மூலம் நம்புகிறது போலும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு கீழக்கரை பற்றி என்னவெல் லாம் அவதூறு சொல்ல முடி யுமோ அதையெல்லாம் சொல்லி கொச் சைப் படுத்தியவர் பெரியவர் இராம. கோபாலன் தான் அவர் கள்தான். அவர் தான் இப்போது காயல்பட்டினம் பற்றிய காழ்ப் புணர்ச்சியை கக்கியிருக்கிறார். காயல்பட்டினவாசிகள் உலகம் முழுவதிலுமுள்ள பெரு நகரங்களில் வாணிபத்தில் ஈடுபட்டு இந்தியாவின் அந்நிய செலவாணியை ஈட்டித்தந்து தாயகத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பேருதவி புரிந்து வருகிறார்கள்.

உலகம் முழுவதிலும் சுற்றினாலும் அந்த ஊர்வாசி களுக்கு தங்கள் ஊர் காற்றில் கொஞ்ச நாள் உலா வந்தால் தான் உடலும், உள்ளமும் குளிர்ச்சி பெறும் என்று நம்பக் கூடியவர்கள். ஆண்டில் ஓரிரு முறையாவது ஊருக்கு வந்து போகாவிட்டால் அவர்களுக்கு இருப்புக் கொள்ளாது. அது அந்த ஊருக்கே உரிய தனிக் கலாச்சாரமாகும்.

காயலம்பதியினர் தங்கள் ஊரில் நடக்கும் ஒவ்வொரு நல்லதும், கெட்டதும் அவர் களுக்கு அன்றே தெரிய வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள். இதனால் உலகத்தின் எப்பகுதியில் இருந் தாலும் தங்கள் ஊர்ச்செய்தி களை அன்றாடம் பெறாமல் தூங்க மாட்டார்கள் என்பது உலகுக்கே தெரியும். இதனால், காயல்பட்டினத்தில் பிரௌசிங் சென்டர்கள் பல இருப்பதை பார்க்கலாம். உலகின் பல்வேறு ஊர்களில் உறைந்து வாழும் ஊர்க்காரர்களுக்கு சுடச்சுட செய்திகளை அனுப்புவதற்கு இந்த பிரௌசிங் சென்டர்கள் இரவு நேரங்களில் மிக சுறுசுறுப்போடு காணப்படும். இத்தகைய சுறுசுறுப்பையும், வேலையில் மூழ்கியிருக்கும் இளைஞர்களைப் பார்க்கும் இந்து முன்னணியினருக்கு பயங்கரவாதிகளும், தீவிரவாதி களும் நினைவுக்கு வருகிறார் கள். விளைவு பெரியவர் இராம. கோபாலன் அறிக்கை:

``தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் உள்ள ஒரு பிரௌசிங் சென்டரில் இரவு 10 மணிக்கு மேல் தீவிரவாதம் எண்ணம் கொண்ட முஸ்லிம்கள் சிலர் சந்தித்து பேசுகிறார்கள். அவர்கள் இணைய தளம் மூலம் செய்திகளை அனுப்ப வும், சேகரிக்கவும் செய்கி றார்கள். அவர்கள் ஏதாவது சதிச்செயலில் ஈடுபடுவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை யாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், காயல்பட்டினம், உடன்குடி, சாத்தான்குளம், ஏரல் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் இந்துக்களை முஸ்லிம்க ளாக மதம் மாற்றம் செய்கி றார்கள். மதம் மாறும் இந்துக்களுக்கு ஜமாஅத் மூலம் பண உதவியும் செய்கி றார்கள்.’’

காயல்பட்டினம் இஸ்லாமிய மார்க்கநெறியை உணர்ந்து அதன்படி முழுமையாக நடப்ப தற்கு எல்லா தரப்பினரும் முயலு கின்ற ஊர். அங்கே தீவிர வாதம், பயங்கரவாதம் என்று அவதூறு செய்வது பெரியவர் இராம. கோபாலன் அவர்களின் சிலை வணக்க கற்பனையே. அவதூறுகளின் அடிப்படை யில் தமிழக போலீசார் எதையும் செய்ய மாட்டார்கள் - செய்யக் கூடாது என்றும் சுட்டிக்காட்டு வோம். காயல்பட்டினம் சுற்றிலும் இந்து சகோதர, சகோதரிகள் முஸ்லிம்களாகி வருகிறார்கள் என்றதொரு நற்செய்தியையும் பெரியவர் இராம.கோபாலன் அவர்கள் கூறியிருக்கிறார்கள். அவரது அவதூறு பரப்புரையை கடுமையாக கண்டிப்பது நமது கடமையாகும். நேற்றைக்கு நடிகர் நாகேஷ் அவர்களின் அன்புப் புதல்வர் முஸ்லிமாக மாறியிருப்பதை அவரே எங்களிடம் கூறி பெருமிதம் அடைந்தார். அவரைப் போலவே இஸ்லாத்தை ஏற்பவர் பெருமையாக முஸ்லிம் களிடம் வரும்போது அவர்களை எல்லோரும் வரவேற்க வேண் டும். இஸ்லாத்தை ஏற்றபிறகு உதவி கோரி முஸ்லிம்களி டத்தில் வரும்போது முஸ்லிம் களுக்கு முஸ்லிம்கள் செய்ய வேண்டிய உதவியை தவறாமல் செய்திட வேண்டும். ஊர் மஹல்லா ஜமாஅத்கள் இத்த கைய நற்காரியங்களை செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாக கூறி வருகிறோம். அது இப்போது நடக்கிறது என்பதை பெரியவர் இராம. கோபாலன் அவர்கள் மூலம் அறியும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்ல காரியங்களை நாள்தோறும் செய்யுங்கள் - அவதூறுகளை காற்றில் பறக்க விடுங்கள் - அல் லாஹ்வின் உதவியை எல் லோரும் பெற்று சிறக்க பாடு படுங்கள்.

-இவ்வாறு  பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய், 30 ஜூலை, 2013

60 ஆண்டுகால போராட்டம் முடிவுக்கு வருகிறது : நாட்டின் 29 - ஆவது மாநிலமாக தெலுங்கானா உருவாகிறது


ஆந்திராவை பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், காங்கிரஸ் காரியக் கமிட்டியும் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.இதனால் நாடாளுமன்ற ஒப்புதல் மற்றும் சம்பிரதாய சட்ட நடைமுறைகளுக்கு பின்னர் தெலுங்கானா மாநிலம் உருவாவது உறுதியாகிவிட்டது.

தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க ஒப்புதல் அளிப்பது என்ற முடிவுக்கு காங்கிரஸ் தலைமை முன்னரே வந்துவிட்டது. ஆனால் ஆந்திர முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்களில் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இன்று காலை இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் மூத்த அமைச்சர்களுடன் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.

அப்போது ஏற்கனவே தீர்மானித்தபடி, இன்று மாலை நடைபெற உள்ள காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் இறுதி முடிவெடுப்பது என்றும், அதற்கு முன்னதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கூட்டி, தெலுங்கானா மாநிலத்திற்கு ஒப்புதலை பெறுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒப்புதல் 
அதன்படி அஜித் சிங், சரத் பவார் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பலர் பங்கேற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தெலுங்கானா மாநிலம் அமைக்க ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜித் சிங் இத்தகவலை தெரிவித்தார்.

காங்கிரஸ் காரியக் கமிட்டி ஒப்புதல் 
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் கூடியது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, நிதியமைச்சர் ப.சிதம்பரம், கட்சி பொதுச் செயலாளர் திக்விஜய் சிங், சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் தனித் தெலுங்கானா மாநிலத்திற்கு ஒப்புதல் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 தெலுங்கானா மக்கள் மகிழ்ச்சி 
இதனிடையே தனித் தெலுங்கானா மாநிலத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது குறித்து தெலுங்கானா பகுதி மக்களும்,  தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சித் ( டிஆர்எஸ்) தலைவர் சந்திரசேகர ராவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அப்பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. அதே சமயம் தலைநகர் ஹைதராபாத்தை விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரவை கூட்டம் 
இந்நிலையில் தனித் தெலுங்கானா மாநிலத்திற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், காங்கிரஸ் கட்சியும் ஒப்புதல் அளித்துள்ளதை தொடர்ந்து, மத்திய அமைச்சரவை நாளை கூடி இது தொடர்பாக விவாதிக்க உள்ளது.

ஹைதராபாத்
இக்கூட்டத்தில் தலைநகர் ஹைதராபாத் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. ஹைதராபாத்தை ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டப்படி சில ஆண்டுகளுக்கு இரு மாநிலங்களின் கூட்டுத் தலைநகராக வைத்துக்கொள்வது மற்றும் ஹைதராபாத்தை யூனியன் பிரதேசமாக மாற்றுவது ஆகிய அம்சங்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, 27 ஜூலை, 2013

பொள்ளாச்சியில் கீரை விலையை கேட்டு மக்கள் அதிர்ச்சி

அனைவரும் விரும்பி சாப்பிடும் கீரையின் விலை அதிகரித்துள்ளதால் மக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். கீரைகளில் பல சத்துகள் இருப்பதால் அன்றாட உணவில் இது நிச்சயம் இடம் பிடிக்கிறது. முருங்கை கீரை, வல்லாரை கீரை, சிறு கீரை, பாலாக்கீரை, சுக்கிட்டி கீரை, பொன்னாங்கன்னி கீரை, வெந்தய கீரை, தண்டங்கீரை, அகத்தி கீரை, உள்ளிட்டவை மார்க்கெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பகுதிக்கு உடுமலை, செஞ்சேரிமலை மற்றும் கேரள பகுதிகளில் இருந்து கீரை விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

பொள்ளாச்சி சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கடைகளிலும், ரோடுகளிலும், தள்ளு வண்டிகளிலும் கீரை விற்பனை செய்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன் வெறும் ரூ.3-7 வரை ஒரு கட்டு கீரை விற்பனை செய்யப்பட்டிருந்தது. ஆனால், தற்போது கீரையின் விலை இரு மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு கட்டு கீரை ரூ.10-15 வரை விற்பனை செய்யப்படுகிறது. விலையை கேட்டவுடன் மக்கள் ஓட்டம் பிடிக்கும் நிலையுள்ளது.

இதுகுறித்து வியாபாரி ரவீந்திரன் கூறியதாவது:பொள்ளாச்சி சுற்றுப்புற பகுதிக்கு உடுமலை, கேரளப்பகுதியில் இருந்து கீரை வரத்துள்ளது. கடந்தாண்டை ஒப்பிடும் போது இந்தாண்டு விலை இரு மடங்காக அதிகரித்துள்ளது. சில கீரைகளுக்கு தட்டுப்பாடு இருக்கும் போது ரூ.20க்கும் விற்பனை செய்வதுண்டு.வாடிக்கையாளர்களால் இதை ஏற்று கொள்ள முடியவில்லை. விலையை கேட்டு விட்டு திரும்பி செல்கின்றனர். இதற்கு காரணம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பஸ் கட்டணம் அதிகரிப்பு ஆகும். கொள்முதல் விலை அதிகரித்துள்ளதால் மக்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலையுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

நடப்பாண்டில் 50,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு: ப. சிதம்பரம்

மானாமதுரையில் இந்தியன் வங்கியின் 2110வது கிளையை மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர்,"நாட்டில் 80 லட்சம் சுயஉதவி குழுக்களுக்கு 86 கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் கல்வி கடனாக 50 ஆயிரம் கோடி ரூபாய் 25 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணையின் விலை பேரலுக்கு 108 டாலராக உயர்ந்து விட்டது. 100 டாலருக்குள் இருந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும், கச்சா எண்ணை இறக்குமதியும் 70 சதவிகிதமாக உயர்ந்து விட்டது. 

பொருளாதார வளர்ச்சியில் மற்ற நாடுகள் பின்தங்கியுள்ள நிலையில் இந்தியா சீனாவிற்கு அடுத்தபடியாக தொடர்நது 2வது இடத்தில் உள்ளது. 9 சதவிகிதமாக இருந்த வளர்ச்சி 5 ஆக உள்ளது அடுத்தாண்டிற்குள் 6 சதவிகிதமாக உயரும் என நம்புகிறேன் என்று குறிப்பிட்ட அவர் அதனைத் தொடர்ந்து மிளகானூர் கிராமத்தில் ஓரியண்டல் வங்கியின் 2010 வது கிளையை திறந்து வைத்து..," நடப்பாண்டில் 8,000 வங்கி கிளைகள் துவங்கப்படவுள்ளன. இதனால் 50,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்"  என உறுதிப்படக் கூறினார்.