Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

பனிமூட்டத்தால் உறைந்தது ‘ஏழைகளின் ஊட்டி’ ஏற்காடு


குளிர்கால மலர்க்கண்காட்சியை அதிகரிக்க வேண்டும் எனவும், ஏற்காட்டில் இதுபோன்ற ஜில்..ஜில்.. சீசனை அனுபவித்ததில்லை என சென்னையை சேர்ந்த இளம்பெண் தெரிவித்தார்.

படகு சவாரிக்கு அனுமதி இல்லை
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று ஒருநாள் மட்டும் 2–ம் பருவமாக குளிர்கால மலர்க்கண்காட்சி மற்றும் கலைவிழா நடத்தப்பட்டது. சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க செய்யும் வகையில் நடத்தப்பட்ட மலர்க்கண்காட்சிக்கு சென்னையில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

நேற்றைய தினம் ஏற்காடு பனிமூட்டத்தால் திண்டாடியது என்றே கூறலாம். எதிரே 10 அடி தூரத்திற்கு மேல் உள்ள நபர்களை அடையாளம் கண்டு கொள்ளாதபடி பனிமூட்டமும், மேககூட்டமும் ரோட்டில் பரவி இருந்தது. லேக் எனப்படும் ஏரியில் சுற்றுலா பயணிகள் படகுசவாரி செய்ய முடியாத வகையில் ஏரி முழுவதும் பனிமூட்டம் பரவி வியாபித்து இருந்தது. இதனால் படகு சவாரி செய்வதற்கு பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இதுபோல ஏற்காடு பஸ் நிலையம், அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா கார்டன் பகோடா பாயின்ட், சேர்வராயன் கோவில், பொட்டனிக்கல் கார்டன் ஆகிய இடங்களிலும் பனிமூட்டமாக காணப்பட்டது.

வாகனங்கள் முகப்பு விளக்கு
ஏற்காடு அடிவாரத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 15–வது கொண்டை ஊசி வளைவில் இருந்து 20–வது கொண்டை ஊசி வளைவு வரை வாகனங்கள் செல்ல முடியாத வகையில் பனிமூட்டம் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டப்படி சென்றதை காணமுடிந்தது.

குடும்பத்துடன் சுற்றுலா சென்றவர்கள் பனிமூட்டத்தால் வாவ்... என்ன ஒரு சீசன் எனக்கூறி உறைந்து போயினர். சிறுவர், சிறுமிகள் முன் எச்சரிக்கையாக சுவெட்டர் அணிந்து வராததால் அவர்கள் வாய் குளிரில் டக்..டக்கென ‘தந்தி‘ அடிக்க தொடங்கின.

மின்சாரம் இல்லாத வீடுகளில் ஒளியேற்றும் கல்லூரி மாணவர்கள்


"ஊதாரித்தனமாக செலவு செய்பவர்கள்" என, சிலரால் வசைபாடப்படும் கல்லூரி மாணவர்கள், தங்களின், "பாக்கெட் மணி"யை சேமித்து, 4,000 வீடுகளில் வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

மும்பையில் உள்ள, எச்.ஆர்., கல்லூரி மாணவர்கள், ஐந்து பேர், இரண்டாண்டுகளுக்கு முன், சுற்றுலா சென்ற போது, மும்பை புறநகர் பகுதியில் ஒரு கிராமத்தை கண்டனர். தலைநகர் மும்பையில் இருந்து, 150 கி.மீ.,யில் இருந்த அந்த கிராமத்தில், மின் வசதி அறவே கிடையாது. மொபைல் போனை, சார்ஜ் செய்வதற்கு கூட, 10 கி.மீ., சென்று, மின்சாரம் உள்ள இடத்தில், சார்ஜ் செய்ய வேண்டி இருந்தது.

அந்த கிராமத்தில் தங்கி, அந்த மக்கள் படும்பாட்டை அறிந்த மாணவர்கள், மிகுந்த மனவேதனை அடைந்தனர். பகலில் மட்டுமே பள்ளி குழந்தைகளால் படிக்க முடியும்; இரவில் படிக்கவே முடியாது. இதை கண்ட மாணவர்கள், மேலும் வருந்தினர்.
மாணவர்கள் தங்களின், "பாக்கெட் மணி"யை சேர்த்து, அந்த கிராமத்திற்கு, சூரிய ஒளி மின்சாரம் வழங்க முடிவு செய்தனர். இந்த உன்னத முயற்சிக்கு, பிற மாணவர்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக, கொஞ்சம் வித்தியாசமான நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இரவு நேரத்தில், கல்லூரி ஹாஸ்டலில், திடீரென மின்சாரத்தை துண்டித்தனர். மின்சாரம் இல்லாததால், மாணவர்கள் தவித்து, சத்தம் போட்டு ரகளை செய்யவும், மீண்டும் மின்சாரத்தை வழங்கினர். ரகளை செய்தவர்கள் மத்தியில் பேசிய மாணவர் ஒருவர், "10 நிமிட நேரம், மின்சாரம் இல்லாததற்கே இப்படி சத்தம் போடுகிறீர்களே, ஆண்டாண்டு காலமாக மின்சாரம் இல்லாமல் எத்தனையோ கிராமங்கள், அந்த கிராமங்களில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் அவதிப்படுவதை பற்றி ஏன் கவலைப்படுவதில்லை..." என, கேட்டார்.

மனம் வருந்திய மாணவர்கள், ஒவ்வொருவரும், தலா, 10 ரூபாய் கொடுத்து, சேர்ந்த பணத்தை கொண்டு, மற்றொரு கிராமத்திற்கு, சோலார் விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஒரு சோலார் விளக்கிற்கு, 4,000 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை, 106 கிராமங்களில், 4,000 சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா மட்டுமின்றி, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், கர்நாடகா மாநிலங்களிலும், மும்பை, எச்.ஆர்., கல்லூரி மாணவர்கள், சோலார் விளக்குகளை பொருத்தி, புரட்சி ஏற்படுத்தி வருகின்றனர்.

"புராஜெக்ட் சிராக்" என, பெயரிடப்பட்டுள்ள இந்த மாணவர் அமைப்பில், மும்பை நகர கல்லூரிகளின் பெரும்பாலான மாணவர்கள், உறுப்பினர்களாக மாறி வருகின்றனர். நல்ல நோக்கத்திற்காக பாடுபடும் மாணவர்களுக்கு, பல நிறுவனங்களும் பணம் கொடுத்து உதவுகின்றன.

கிடைக்கும் பணத்தை கொண்டு, மின்சார வசதி இல்லாத கிராமங்கள், வீடுகளுக்கு சோலார் மின் விளக்கு வசதிகள் செய்து கொடுக்கின்றனர்.

இளைய தலைமுறையினரை மழுங்கடிக்கும் இணையதளங்கள்


"இணையதள தொழில்நுட்ப வசதி காரணமாக, இன்றைய இளைய தலைமுறையினரின் மூளை, மழுங்கடிக்கப்படுகிறது. எந்த ஒரு விஷயத்தையும், அறிந்து கொள்வதற்கு, அவர்களின் கைகள், "கூகுளை" தான், நாடுகின்றன. இதனால், இன்றைய தலைமுறையினர், சிந்திக்கும் ஆற்றல் அற்றவர்களாக மாறி வருகின்றனர்," என, பிரபல பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர், கூறியுள்ளார்.

பிரபல பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர், டிரேவர் பெய்லீஸ். பேட்டரி, மின்சாரம் இல்லாமல், கைகளால் சுற்றி ரேடியோவை இயக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர். "டெய்லி மெயில்" என்ற ஆங்கில பத்திரிகைக்கு, அவர் அளித்துள்ள பேட்டி:

இன்றைய இளைய தலைமுறையினரின் போக்கு, எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது. எந்த ஒரு விஷயத்தையும், இணையதளம் மூலமாகவே, அறிய முயற்சிக்கின்றனர். "இது எப்படி சாத்தியம்; அது என்ன; இதை எப்படி செய்யலாம்" என்பது போன்ற, பல்வேறு கேள்விகளுக்கு, இன்றைய இளைஞர்கள், உடனடியாக, "கூகுள்" இணையதளத்தை தான், நாடுகின்றனர்.

ஒரு விஷயத்தை எப்படி செய்யலாம் என்பது பற்றி, அவர்கள் சிந்திப்பதும் இல்லை; கற்பனை செய்து பார்ப்பதும் இல்லை. இதனால், அவர்களின் மூளை, மழுங்கடிக்கப்பட்டு வறட்சியாகி வருகிறது. அனுபவ ரீதியாகவோ, செயல்முறை சார்ந்தோ, எந்த விஷயத்தையும் அவர்கள் செய்வது இல்லை.

இணையதளங்களால், தாங்களாக, சொந்தமாக எதையும் செய்ய முடியாதவர்களாக மாறி வருகின்றனர். இது, அபாயகரமான போக்கு. இணையதளங்கள், மொபைல் போன், கம்ப்யூட்டர் ஆகியவற்றின் உதவி இல்லாமல், அவர்களால் எதையும் செய்ய முடிவது இல்லை. முழுக்க முழுக்க, அவர்கள், இவற்றை சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அவற்றுக்கு அடிமையாகி வருகின்றனர்.

எனவே, பள்ளிகளில், குழந்தைகளுக்கான, கற்பித்தல் முறையில் மாற்றம் வேண்டும். குறிப்பாக, செயல்வழி கற்றல் நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும். சில மாதிரி பொருட்களை கொடுத்து, "ஒரு பாலத்தை, எப்படி கட்டுவது; இந்த கட்டடத்தை எப்படி வடிவமைப்பது" என, குழந்தைகளை செய்யும்படி கூற வேண்டும்.

எதிர்கால தலைமுறை, ஆரோக்கியமான, ஆற்றல் உள்ள தலைமுறையாக வளர்வதற்கு, இது தான் சிறந்த தீர்வாக அமையும்.இவ்வாறு, டிரேவர் பெய்லீஸ் கூறினார்.

சனி, 29 டிசம்பர், 2012

நடந்தால் சுறுசுறுப்பு விர்ர் கொழுப்பு போயே போச்சு


பல லட்சம் செலவில் உடற்பயிற்சி சாதனங்கள் எல்லாம் வாங்கத் தேவையில்லை. சிறிது தூரம் நடந்தாலே போதும். ஆரோக்கியமான உடலமைப்பை தந்துவிடும். நடைப்பயிற்சி என்பது இயற்கையானது மட்டுமல்ல, பிற உடற்பயிற்சியை விட எளிதானதும், செலவில்லாததும் ஆகும்.

இதய நாளங்களுக்கு உரிய வேலை கொடுத்து தேவையான உந்து சக்தியை ஏற்படுத்தி இதயத்தில் உள்ள கொழுப்பை வெளியேற்ற நடைப்பயிற்சி உதவுவது எல்லோருக்கும் தெரிந்திருக்காது. நமது உடலில் மிகப்பெரிய தசை காலில்தான் உள்ளது. நடைப்பயிற்சியானது அந்த தசைகளை வலுவுள்ளதாகவும் உறுதியானதாகவும் ஆக்குகிறது.

சாதாரணமான நேரங்களில் கை தசைகளுக்கு வேலை இருக்காது. ஆனால் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது நம்மை அறியாமல் கைகளை அசைப்பதால் கை தசைகளும் முறுக்கேறுகின்றன. உடலில் வீணாக சேர்ந்துள்ள கொழுப்புகளை கரைக்கிறது.

நடைப்பயிற்சி செய்வதால் நுரையீரல் சுறுசுறுப்படைகிறது. ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மூளையின் சக்தியை அதிகரிக்கிறது. நிம்மதியான உறக்கத்தை கொடுக்கிறது. இதயநோயுடன் உயர் ரத்த அழுத்தம், இரண்டாம் தர நீரிழிவு நோய், பித்தகற்கள், ஆஸ்டியோ போரோசிஸ் பாதித்த நோயாளிகளுக்கு நடைப்பயிற்சி மிகவும் நல்லது.

வயதானவர்களுக்கு ஏரோபிக்ஸ், சைக்கிளிங், ஓட்டப்பயிற்சி ஆகியவை உகந்ததல்ல. ஆனால் அனைத்து வயதினருக்கும் நடைப்பயிற்சி ஏற்றது. நடைப்பயிற்சியே மனிதனுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது என்றால் அது பொய்யில்லை.

வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவுக்கு 40 பேர் பலி


வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில், கடும் பனி பொழிவு காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் குளிரை தாங்க முடியாமல் பலியானோர் எண்ணிக்கை, 40 ஆக உயர்ந்துள்ளது.இதில், உ.பி., மாநிலத்தில் கடும் பனி காரணமாக, 30 பேர் பலியாகியுள்ளனர். ஆக்ராவில் தொடர்ந்து அதிக குளிர் நிலவுகிறது. இங்கு, குறைந்த பட்ச வெப்பநிலை, 2.6 டிகிரி செல்சியசுக்கும் கீழே இருந்தது. மாநிலத்தில், பெரும்பாலான பகுதிகளில், அதிக பட்ச வெப்ப நிலை, 8 முதல், 10 டிகிரி செல்சியசுக்கும் கீழ் இருந்தது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், கடும் குளிர் நிலவியது. நேற்று முன்தினம் மாலை, பனிபொழிவு அதிகமாக இருந்தது. அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகளில், கடும் பனி மூட்டம் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த சில நாட்களாக, பனி மூட்டத்தால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்ட, டில்லி, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், நேற்று விமான போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இரண்டு நாட்களாக, நிலவும் மிதமான பனிமூட்டம், விமான சேவையை பாதிக்கவில்லை.நேற்று முன்தினம் இரவு, பனி மூட்டம் இருந்தது. ஆனால், காலையில் விமான சேவையில் பாதிப்பு ஏற்படவில்லை.

பள்ளி வளர்ச்சி திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் தாமதம்


அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில், ஆண்டுதோறும் வளர்ச்சிப் பணிகளாக, கூடுதல் வகுப்பறை கட்டடம், கழிப்பறை வசதி, சுற்றுச்சுவர் கட்டப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில், இத்திட்டத்திற்கு அனுமதி கிடைத்து, அந்த கல்வியாண்டிற்குள் திட்டம் நிறைவேற்றப்படும். கிராமக் கல்விக்குழு, தலைமையாசிரியர் இணைந்து இத்திட்டத்தை நிறைவேற்றுவர்.

இந்த கல்வியாண்டில் திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, பல மாதங்களாகியும், நிதி அனுமதி கிடைக்கவில்லை. இனிமேல், அனுமதி கிடைத்தாலும், இந்த கல்வியாண்டிற்குள் இத்திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை.
கால தாமதத்தால், திட்ட மதிப்பீட்டு தொகை அதிகரிப்பதாலும், திட்டப்பணிகளை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படும். இதனால், மாநிலம் முழுவதும் இத்திட்டம் கிடப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தில் சோதனை

பல்வேறு மாநிலங்களில் இருந்து வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்ட 84 பேரை போலீசார் மீட்டனர். அவர்களில் 64 பேர் மைனர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஜார்கண்ட் போலீசார் நேற்று முன்தினம் டெல் லிக்கு வந்தனர். அங்குள்ள கிராமங்களில் இருந்து சட்டவிரோதமாக சிறுவர், சிறுமிகளை வீட்டு வேலைக்காக டெல்லிக்கு கடத்தி வந்துள்ளதாகவும், அவர் களை மீட்பதற்காக வந்துள்ளதாகவும் டெல்லி போலீசுக்கு தெரிவித்தனர்.

இதையடுத்து டெல்லி மற்றும் ஜார்கண்ட் போலீசார், சக்திவாகிணி தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன், டெல்லியில் உள்ள தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களின் விவரங் களை சேகரித்தனர். அப்போது 24 தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்களின் விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் 7 தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு வேலைக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 84 பேரை மீட்டனர். அவர்களில் 64 பேர் மைனர்கள் என்று தெரியவந்தது. மீட்கப்பட்டவர்களில் 54 பேர் பெண்கள். மீட்கப்பட்ட 84 பேரும், ஜார்கண்ட், மேற்கு வங்கம், சட்டீஸ்கர், ஒடிசா மற்றும் அசாமில் இருந்து வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்டவர்கள். இதுதொடர்பாக 7 பேரை பிடித்து, பல்வேறு மாநிலங்களில் இருந்து எப்படி ஆட்களை வேலைக்கு அழைத்து வருகிறார்கள் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த நடவடிக்கை மற்ற தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்களிலும் தொடர்ந்து நடக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.