Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 30 நவம்பர், 2012

நெல்லையில் காய்கறிகளின் விலைகள் குறைவு!


நெல்லை டவுன் நயினார் குளம் மார்க்கெட்டில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மொத்த கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு ஆந்திரா, கர்நாடகா, விருதுநகர், சிவகாசி, ஒட்டன்சத்திரம், பொள்ளாச்சி, தேனி, கம்பம், ஓசூர் போன்ற வெளியூர்களில் இருந்து தக்காளி, கத்திரிக்காய், கோஸ், உருளைக் கிழங்கு, பல்லாரி, பீட்ரூட் போன்ற காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. இதுபோல் ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டை, திருப்பணி கரிசல்குளம், திடியூர், செங்குளம், மானூர், ரஸ்தா போன்ற உள்ளூர் கிராமங்களில் இருந்து கத்தரி, பொடி உள்ளி, தக்காளி போன்ற காய்கறி வகைகளும் விற்பனைக்கு வருகின்றன. இந்த மார்க்கெட்டில் இருந்து தான் மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் பருவமழை பொய்த்துவிட்டதால், தண்ணீர் இல்லாமல் விவசாயம் கடும் வறட்சியை சந்தித்துள்ளன. இதன் காரணமாக விளைச்சல் இல்லாமல் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

உள்ளூர் காய்கறிகளின் வரத்துகள் அதிகம் இல்லாததால் நெல்லை மார்க்கெட்டில் காய்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் ஏற்றமும், இறக்கமும் கண்டுவருகின்றன.

நெல்லை டவுன் மார்க்கெட்டில் நேற்றைய நிலவரப்படி, உருளைக் கிழங்கு கிலோ ரூ.24க்கும், தக்காளி ரூ.15க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கத்தரிக்காய் 15, வெண்டைக்காய் 18, கோஸ் 10, பீன்ஸ் 25, முருங்கைக்காய் 40, கேரட் 20, மிளகாய் 15, பல்லாரி 20, சேனைக்கிழங்கு 15, பொடி உள்ளி 15, பூசணி 8, பீட்ரூட் 12, புடலங்காய் 15, பாகற்காய் 15, அவரைக்காய் 30, கருணை கிழங்கு 18, எழுமிச்சை 40க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாக கார்த்திகை மாதங்களில் காய்கறிகளின் விலைகள் அதிகரிப்பது வழக்கம். வழக்கத்திற்கு மாறாக நேற்று பெரும்பாலான காய்கறிகளின் விலைகள் வெகுவாக குறைந்துள்ளன.உள்ளூர்களில் இருந்து மொத்த கடைக்கு வரும் காய்கறிகளின் வரத்துகள் குறைந்த போதிலும், வெளியூர்களில் இருந்து காய்கறிகளின் வரத்துகள் அதிகமாக வந்துகொண்டிருக்கின்றன. இதனால் காய்கறிகளின் விலைகள் குறைந்துள்ளன. இன்னும் ஓரிரு நாட்கள் இதே நிலை நீடிக்கும் என மார்க்கெட் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் 1.21 கோடி மக்கள் ஏழைகள்

2009-10ம் ஆண்டு புள்ளிவிபரத்தின் அடிப்படையில் நாட்டில் உள்ள ஏழைகளின் எண்ணிக்கையை மாநில வாரியாக திட்டக் குழு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் உத்திர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் 7.37 கோடி ஏழை மக்கள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பீகாரில் 5.43 ‌கோடி ஏழைகளும், மகாராஷ்டிராவில் 2.7 கோடி ஏழைகளும் உள்ளனர்.

டெண்டுல்கர் கமிட்டி கொள்கையின்படி அளிக்கப்பட்ட இந்த பட்டியலை திட்டக்குழு நேற்று பார்லிமென்ட்டில் தாக்கல் செய்தது. சுகாதார, கல்வி, உண்ணும் உணவு ஆகியவற்றிற்காக செலவிடப்படும் தொகையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட புள்ளி விபரத்தின்படி மத்திய பிரதேசத்தில் 2.61 கோடி பேரும், மேற்கு வங்கத்தில் 2.4 கோடி பேரும், ஆந்திராவில் 1.76 கோடி பேரும், ராஜஸ்தானில் 1.67 கோடி பேரும், ஒடிசாவில் 1.53 கோடி பேரும், கர்நாடகாவில் 1.42 கோடி பேரும், குஜராத்தில் 1.36 கோடி பேரும், ஜார்க்கண்டில் 1.26 கோடி பேரும், தமிழகம் மற்றும் சட்டீஸ்கரில் 1.21 கோடி பேரும், அசாமில் 1.16 கோடி பேரும் உள்ளனர். மிகவும் குறைந்த அளவாக அரியானாவில் 49.96 லட்சம் ஏழை மக்கள் உள்ளனர். 

155 மாவட்டங்களில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்


கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இல்லாத, 155 மாவட்டங்களில், புதிதாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவக்கப்படும். இந்த பள்ளிகள், தனியார் பங்களிப்புடன் துவக்கப்படாது என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபாவில், கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து, அமைச்சர் ராஜு, நேற்று கூறியதாவது: நடப்பு, 12வது, ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012 - 17), நாடு முழுவதும், 500, கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவக்கப்படும். கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இல்லாத, 155 மாவட்டங்களில், இந்த பள்ளிகள் துவக்கப்படும்.

60 இடங்களில், பள்ளிகளுக்கான கட்டடங்கள் கட்டப்படுகின்றன. கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் கட்டுவதில், தனியாருடன் இணைந்து செயல்படலாம் என, இப்பள்ளி கவர்னர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. எனினும், அந்த முடிவு ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

தனியாருடன் இணைந்து, கே.வி., பள்ளிகள் துவக்கப்பட மாட்டாது. பொதுத் துறை நிறுவனங்களும், உயர் கல்வி நிறுவனங்களும், கே.வி., பள்ளிகளுக்கு, இலவசமாக நிலம் கொடுத்து உதவலாம். இவ்வாறு, அமைச்சர் ராஜு கூறினார்.

யாசர் அரபாத்தின் போராட்டத்திற்கு வெற்றி ,பாலஸ்தீன் இறையாண்மை உள்ள சுதந்திர நாடு :ஐநா அங்கீகாரம்


பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அந்தஸ்து வழங்கும் தீர்மானம் ஐ.நா.வில் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதற்கு இந்தியா உள்பட 138 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.  யாசர் அராபத்தின் கடும் போராட்டத்துக்கு பிறகு பாலஸ்தீனம் தனி நாடானது. எனினும் ஐ.நா.வால் தனி நாடு அந்தஸ்து வழங்கப்படவில்லை. இதையடுத்து தனி நாடு அந்தஸ்து வழங்க கோரி தொடர்ந்து பாலஸ்தீன தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் தீர்மானம் ஐ.நா.வில் நேற்று கொண்டு வரப்பட்டது.

ஐ.நா.வில் மொத்தமுள்ள 193 உறுப்பு நாடுகளில், இந்தியா உள்பட 138 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்தன. அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட 9 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. மற்ற நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் ஒதுங்கி கொண்டன. இதையடுத்து தீர்மானம் வெற்றி பெற்றது. எனினும், உறுப்பு நாடுகள் பட்டியலில் சேராத ஐ.நா. கண்காணிப்பு நாடுகள் வரிசையில் பாலஸ்தீனம் இடம்பெறும். இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறுகையில், வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையாலும், அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட்டதாலும் தீர்மானம் நிறைவேறி உள்ளது, என்றார். ஓட்டெடுப்புக்கு முன்பு பாலஸ்தீன தலைவர் முகமது அப்பாஸ் பேசுகையில், ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேறினால், பாலஸ்தீனத்துக்கு பிறந்த நாள் சர்ட்டிபிகேட் வழங்கியது போல் இருக்கும் என்று தெரிவித்தார்.

ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், இன படுகொலை, போர் குற்றங்கள், மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கும் சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் பாலஸ்தீனம் வழக்கு தொடர்ந்து நீதி பெற முடியும். இதுகுறித்து இங்கிலாந்து கூறுகையில், இஸ்ரேல் தாக்குதல் குறித்து கிரிமினல் கோர்ட்டை பாலஸ்தீன தலைவர்கள் அணுக முடியும் என்று தெரிவித்துள்ளது

புதன், 28 நவம்பர், 2012

இ.எஸ்.ஐ.சி. (ESIC ) - ல் துணை மருத்துவப் பணியிடங்கள்


எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷனின் (ESIC) சென்னை கிளையில் துணை மருத்துவப் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இதன் மூலம் டென்டல் டெக்னீசியன் பிரிவில் 3 இடங்களும், லேபரட்டரி அஸிஸ்டெண்ட் பிரிவில் 11 இடங்களும், ஜூனியர் மெடிக்கல் ரெக்கார்டு டெக்னீசியன் பிரிவில் 2 இடங்களும் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவைகள்: இ.எஸ்.ஐ.சி.,யின் டென்டல் டெக்னீசியன் மற்றும் மெடிக்கல் ரெக்கார்டு டெக்னீசியன் பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகபட்சம் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். லேபரட்டரி அஸிஸ்டண்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மூன்று பிரிவுகளுக்கும் விண்ணப்பிக்க குறைந்த பட்சம் பிளஸ் 2 அளவிலான படிப்பை முடித்திருக்க வேண்டும்.

டென்டல் டெக்னீசியன் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் டென்டல் மெக்கானிக்ஸ் அல்லது டெக்னீசியன் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். ஒரு ஆண்டு கால பணி அனுபவம் இத்துறையில் பெற்றவர்களுக்கு முன்னுரிமை உள்ளது. லேபரடரி அசிஸ்டன்ட் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக எம்.எல்.டி.,யில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

மெடிக்கல் ரெக்கார்டு டெக்னீசியன் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்த பட்சம் 6 மாத கால பயிற்சி வகுப்பை இத்துறையில் முடித்திருப்பதோடு கம்ப்யூட்டர் தொடர்புடைய திறனும் பெற்றிருக்க வேண்டும்.

மற்ற தகவல்கள்: இ.எஸ்.ஐ.சி.,யின் துணை மருத்துவப் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க கிரேடு ஊதிய அடிப்படையில் ரூ.125/ மற்றும் ரூ.225/ என்று இரண்டு விண்ணப்பக் கட்டண தொகைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிகளுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின்னர் கிடைக்கும் பிரிண்ட் அவுட்டை எடுத்து பின்வரும் முகவரிக்கு ஸ்பீடு போஸ்ட் அல்லது ரெஜிஸ்டர்டு போஸ்டில் 11.12.2012க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களை பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.

முகவரி

Medical Superintendent,
ESIC Medical Hospital,
Ashok Pillar Road, K.K. Nagar,
Chennai  600 078.

ஆன்லைனில் பதிவு செய்ய இறுதி நாள்: 04.12.2012
விண்ணப்பங்கள் கிடைக்க இறுதி நாள்: 11.12.2012

இணையதள முகவரி: www.esichennai.org

செவ்வாய், 27 நவம்பர், 2012

தொழில் முனைவோருக்கான புதிய திட்டம் :25 சதவீதம் அரசு மானியத்துடன் அமல்


தமிழகத்தில் 25 அரசு மானியத்துடன் தொழில் முனைவோருக்கு வரும் 1ம் தேதி முதல் புதிய திட்டத்தை அரசு அமல்படுத்த உள்ளது. புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

 வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் செயலாக்கம் பெற உள்ள இத்திட்டத்தின் கீழ் பட்டப் படிப்பு, பட்டய படிப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்து தேர்ச்சி பெற்ற முதல் தலைமுறையை சேர்ந்த இளைஞர்கள், சொந்தமாக தொழில் துவங்கும் வகையில் மானியத்துடன் கூடிய தொழிற் கடன் உதவி வழங்கும் விதத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

வயது வரம்பு: பொது பிரிவினர் 21-35 வயதுக்கு உட்பட்டவர்கள், சிறப்பு பிரிவினர் 45 வயது வரை தகுதியானவர்கள். மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கையர், மாற்றுத் திறனாளிகள் சிறப்பு பிரிவில் அடங்குவர்.

தகுதிகள் :
பட்டப் படிப்பு, பட்டய படிப்பு, ஐ.டி.ஐ, அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழில் பயிற்சி தகுதியானவையாகும்.

விண்ணப்பதாரர் தமிழ்நாட்டில் தொடர்ந்து 3 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

திட்ட மதிப்பீடு: 5 லட்சம் முதல் 100 லட்சமாக இருக்க வேண்டும். திட்ட மதிப்பீட்டில் பொது பிரிவினர் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் முதலீடு செய்ய வேண்டும்.

அரசு மானியம்:
திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதிகபட்சமாக 25 லட்சம் வரை அரசு மானியமாக வழங்கும். கடன் உதவி பெற பாங்கில் இருந்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட விண்ணப்பதாரர் ஒரு மாதம் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி கட்டாயமாக பெற வேண்டும். ஏற்கனவே அரசு துறைகள் மூலம் கடன் பெற்றவர்கள் இத்திட்டத்தில் கடன் பெற இயலாது. ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் முனைவோர் கூட்டாக சேர்ந்து பங்குதாரர் நிறுவனங்களாக அமையும் சூழ்நிலையில் அனைத்து பங்குதாரர்களுக்கும் தனித்தனியாக திட்டத்தில் கடன் பெற தகுதிகள் இருக்க வேண்டும்.

மாவட்ட கலெக்டர் தலைமையில் உள்ள மாவட்ட குழுவில் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். வரும் 1ம் தேதி முதல் இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். இத்திட்டம் குறித்து மேலும் விபரங்களுக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை (டெலிபோன் - 0462 - 2572384) நேரில் தொடர்பு கொள்ள வேண்டும்,என்று திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் செல்வராஜ் தெரிவித்தார்.

தமிழக அரசு உத்தரவு :ஐகோர்ட் ரத்து


சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் உள்ள இடத்தை, மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு, தமிழக அரசு உத்தரவிட்டதை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. அந்த இடத்தில் இருப்பவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, ஆட்சேபணைகளை பெற்று, புதிய உத்தரவு பிறப்பிக்குமாறு, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில், புகாரி ஓட்டல் மற்றும் கட்டடங்கள் அடங்கிய நிலம் உள்ளது. இந்த இடத்தை, ராஜா சர் ராமசாமி முதலியார் அறக்கட்டளைக்கு, 1888ம் ஆண்டு, தமிழக அரசு வழங்கியது. பின், அறக்கட்டளையை முறையாக நிர்வகிக்க, சொத்தாட்சியர் (அபிஷியல் டிரஸ்டி) வசம், சொத்துக்கள் கொண்டு வரப்பட்டது.அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்பட்ட இடத்தை, திரும்பப் பெறவும், அந்த இடத்தை, மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ஒப்படைக்கவும், கடந்த, மே மாதம், வருவாய் துறை உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, ஒரு மாதத்துக்குள் இடத்தை காலி செய்து ஒப்படைக்கும்படி, சொத்தாட்சியருக்கு, தாசில்தார் நோட்டீஸ் அனுப்பினார்.

இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், இஸ்மாயில், புகாரி சன்ஸ், ராம்பிரசாத் உள்ளிட்டோர், மனுக்கள் தாக்கல் செய்தனர். கட்டடங்களில் வாடகைக்கு, குத்தகைக்கு இருப்பவர்கள், இந்த மனுக்களை தாக்கல் செய்தனர்.மனுக்களை விசாரித்த, நீதிபதி என்.பால்வசந்தகுமார் பிறப்பித்த உத்தரவு:நிபந்தனைகளை மீறியதாக கூறி, இடத்தை திரும்பப் பெறுவதாக, காரணம் கூறப்பட்டுள்ளது. இந்தக் காரணம் தவறானது. நிலத்தில் கட்டடம் கட்டுவதற்கு, அரசும் அனுமதி வழங்கியுள்ளது. பொது காரியத்துக்காக, இடம் தேவைப்படுகிறது என்பதில் நியாயம் இருக்கலாம்.இடத்தை திரும்பப் பெறுவது என்றால், அதில், சட்டப்பூர்வமாக வாடகைக்கு இருப்பவர்கள் உள்ளிட்டவர்கள், மெட்ரோ ரயில் திட்டத்தில் கூறியுள்ளபடி, நஷ்டஈடு பெற உரிமையுள்ளது. அந்த இடத்தில் இருந்து வெளியேறவும், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு முன், அவர்கள் தரப்பு கருத்தை கேட்கவில்லை.நஷ்டஈட்டை நிர்ணயிக்க, அவர்களை வெளியேற்றுவதற்கு முன், அவர்கள் தரப்பை கேட்க வேண்டும். எனவே, அரசு உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இடம், கட்டடங்களில் இருக்கும் மனுதாரர்கள், சொத்தாட்சியர், இணை அறங்காவலர், மெட்ரோ ரயில் நிறுவனம் ஆகியவற்றுக்கு, அரசு, நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
அவர்களின் ஆட்சேபணைகளை பரிசீலித்து, அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கி, புதிய உத்தரவுகளை, அரசு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.