Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 27 நவம்பர், 2012

தமிழக அரசு உத்தரவு :ஐகோர்ட் ரத்து


சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் உள்ள இடத்தை, மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு, தமிழக அரசு உத்தரவிட்டதை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. அந்த இடத்தில் இருப்பவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, ஆட்சேபணைகளை பெற்று, புதிய உத்தரவு பிறப்பிக்குமாறு, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில், புகாரி ஓட்டல் மற்றும் கட்டடங்கள் அடங்கிய நிலம் உள்ளது. இந்த இடத்தை, ராஜா சர் ராமசாமி முதலியார் அறக்கட்டளைக்கு, 1888ம் ஆண்டு, தமிழக அரசு வழங்கியது. பின், அறக்கட்டளையை முறையாக நிர்வகிக்க, சொத்தாட்சியர் (அபிஷியல் டிரஸ்டி) வசம், சொத்துக்கள் கொண்டு வரப்பட்டது.அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்பட்ட இடத்தை, திரும்பப் பெறவும், அந்த இடத்தை, மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ஒப்படைக்கவும், கடந்த, மே மாதம், வருவாய் துறை உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, ஒரு மாதத்துக்குள் இடத்தை காலி செய்து ஒப்படைக்கும்படி, சொத்தாட்சியருக்கு, தாசில்தார் நோட்டீஸ் அனுப்பினார்.

இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், இஸ்மாயில், புகாரி சன்ஸ், ராம்பிரசாத் உள்ளிட்டோர், மனுக்கள் தாக்கல் செய்தனர். கட்டடங்களில் வாடகைக்கு, குத்தகைக்கு இருப்பவர்கள், இந்த மனுக்களை தாக்கல் செய்தனர்.மனுக்களை விசாரித்த, நீதிபதி என்.பால்வசந்தகுமார் பிறப்பித்த உத்தரவு:நிபந்தனைகளை மீறியதாக கூறி, இடத்தை திரும்பப் பெறுவதாக, காரணம் கூறப்பட்டுள்ளது. இந்தக் காரணம் தவறானது. நிலத்தில் கட்டடம் கட்டுவதற்கு, அரசும் அனுமதி வழங்கியுள்ளது. பொது காரியத்துக்காக, இடம் தேவைப்படுகிறது என்பதில் நியாயம் இருக்கலாம்.இடத்தை திரும்பப் பெறுவது என்றால், அதில், சட்டப்பூர்வமாக வாடகைக்கு இருப்பவர்கள் உள்ளிட்டவர்கள், மெட்ரோ ரயில் திட்டத்தில் கூறியுள்ளபடி, நஷ்டஈடு பெற உரிமையுள்ளது. அந்த இடத்தில் இருந்து வெளியேறவும், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு முன், அவர்கள் தரப்பு கருத்தை கேட்கவில்லை.நஷ்டஈட்டை நிர்ணயிக்க, அவர்களை வெளியேற்றுவதற்கு முன், அவர்கள் தரப்பை கேட்க வேண்டும். எனவே, அரசு உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இடம், கட்டடங்களில் இருக்கும் மனுதாரர்கள், சொத்தாட்சியர், இணை அறங்காவலர், மெட்ரோ ரயில் நிறுவனம் ஆகியவற்றுக்கு, அரசு, நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
அவர்களின் ஆட்சேபணைகளை பரிசீலித்து, அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கி, புதிய உத்தரவுகளை, அரசு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக