Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 30 நவம்பர், 2012

நெல்லையில் காய்கறிகளின் விலைகள் குறைவு!


நெல்லை டவுன் நயினார் குளம் மார்க்கெட்டில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மொத்த கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு ஆந்திரா, கர்நாடகா, விருதுநகர், சிவகாசி, ஒட்டன்சத்திரம், பொள்ளாச்சி, தேனி, கம்பம், ஓசூர் போன்ற வெளியூர்களில் இருந்து தக்காளி, கத்திரிக்காய், கோஸ், உருளைக் கிழங்கு, பல்லாரி, பீட்ரூட் போன்ற காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. இதுபோல் ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டை, திருப்பணி கரிசல்குளம், திடியூர், செங்குளம், மானூர், ரஸ்தா போன்ற உள்ளூர் கிராமங்களில் இருந்து கத்தரி, பொடி உள்ளி, தக்காளி போன்ற காய்கறி வகைகளும் விற்பனைக்கு வருகின்றன. இந்த மார்க்கெட்டில் இருந்து தான் மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் பருவமழை பொய்த்துவிட்டதால், தண்ணீர் இல்லாமல் விவசாயம் கடும் வறட்சியை சந்தித்துள்ளன. இதன் காரணமாக விளைச்சல் இல்லாமல் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

உள்ளூர் காய்கறிகளின் வரத்துகள் அதிகம் இல்லாததால் நெல்லை மார்க்கெட்டில் காய்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் ஏற்றமும், இறக்கமும் கண்டுவருகின்றன.

நெல்லை டவுன் மார்க்கெட்டில் நேற்றைய நிலவரப்படி, உருளைக் கிழங்கு கிலோ ரூ.24க்கும், தக்காளி ரூ.15க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கத்தரிக்காய் 15, வெண்டைக்காய் 18, கோஸ் 10, பீன்ஸ் 25, முருங்கைக்காய் 40, கேரட் 20, மிளகாய் 15, பல்லாரி 20, சேனைக்கிழங்கு 15, பொடி உள்ளி 15, பூசணி 8, பீட்ரூட் 12, புடலங்காய் 15, பாகற்காய் 15, அவரைக்காய் 30, கருணை கிழங்கு 18, எழுமிச்சை 40க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாக கார்த்திகை மாதங்களில் காய்கறிகளின் விலைகள் அதிகரிப்பது வழக்கம். வழக்கத்திற்கு மாறாக நேற்று பெரும்பாலான காய்கறிகளின் விலைகள் வெகுவாக குறைந்துள்ளன.உள்ளூர்களில் இருந்து மொத்த கடைக்கு வரும் காய்கறிகளின் வரத்துகள் குறைந்த போதிலும், வெளியூர்களில் இருந்து காய்கறிகளின் வரத்துகள் அதிகமாக வந்துகொண்டிருக்கின்றன. இதனால் காய்கறிகளின் விலைகள் குறைந்துள்ளன. இன்னும் ஓரிரு நாட்கள் இதே நிலை நீடிக்கும் என மார்க்கெட் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக