Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

நேர்மையான அரசியல் தலைமை உருவாக தமிழ் சமுதாயம் உதவும் : டாக்டர் APJ .அப்துல் கலாம்

கோவை, பேரூர் சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரியின் மணிவிழாவை முன்னிட்டு, வளர் தமிழ் இயக்கம் நடத்தும்,தமிழ்பயிற்று மொழி, வழிபாட்டு மொழி மாநாடு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் மாநாட்டுக்கு தலைமை தாங்கினார். சிறுதுளி அமைப்பின் நிர்வாகி வனிதாமோகன், சாந்தி துரைசாமி, பானுமதிவேலுசாமி, ஆர்.கே.உமாதேவி, ருக்குமணி ஓதிச்சாமி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். தஞ்சை தமிழ்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சி.சுப்பிரமணியம் வரவேற்று பேசினார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநாட்டு விழாவில் அவர் பேசும்போது கூறியதாவது:–

ஆட்சிதுறையில் தமிழ், வாழ்வியல் வழிபாட்டில் தமிழ், நீதித்துறையில் தமிழ் என்று பல்வேறு கருத்தரங்குகள் நடத்தப்படுவதுடன், தமிழ்அறிஞர்கள் இதில் கலந்துகொண்டு உரையாற்றுவது தமிழ் வளர்ச்சிக்கு உதவும்.

‘தாய் மொழி அறிவை வளர்க்கும். நாட்டை வளப்படுத்தும்’ என்ற தலைப்பில் இங்கு நான் உரையாற்ற இருக்கிறேன். நான் எனது ஆரம்ப கல்வியை தாய் மொழியான தமிழ்மொழி மூலம்தான் கற்றேன்.

தமிழ்மொழியின் சிறப்பு
தமிழ்மொழியில் படித்ததால் கணிதத்தில் சிறந்த மதிப்பெண் பெறவும், அறிவியலில் ஆழ்ந்து விளங்கி படிக்கவும் உதவியாக இருந்தது. மேல்கல்வியை இணைப்பு மொழியான ஆங்கிலம் மூலம் கற்றாலும், பிற்காலத்தில் ஆராய்ச்சி திறனை அதிகரிக்க எனது ஆரம்ப கல்விதான் உதவியது. என் தாய் மொழி தமிழ் உலக பொதுமறையை உலகிற்கு தந்தது. ஆட்சிக்கும் நீதிக்கும் மக்கள் வாழ்க்கைக்கும் வழி சொன்னது. தாய் மொழி தமிழ் ஆழ்ந்த கல்விக்கு அடித்தளமிட்டது. ஊடக தமிழ் அறிவை விரிவடையச்செய்தது.

ஆட்சியில் தமிழ் மொழி அரசுக்கும் மக்களுக்கும் இணைப்பு பாலமாக அமைந்தது. தாய் மொழி தரமான வளர்ச்சி பாதையில் தொழில் வளர உதவும். தாய் மொழி நீதி நிர்வாகம் சீர்பெற்று விரைவான நீதிக்கு வழிவகுக்கும். வழிபாட்டு தலத்தில் தாய் மொழி மக்களுக்கும் இறைவனுக்கும் உள்ள இடைவெளியை குறைத்து மனதில் அமைதி பிறக்க வைக்கும். எனவே தாய்மொழி அறிவு மக்களுக்கும், பள்ளிகளுக்கும் அரசிற்கும், நீதி நிர்வாகத்திற்கும் ஒரு அடிப்படையாகும்.

ஆரம்ப கல்வி
தரமான கல்வியும், கல்விப்பணியை அறப்பணியாக செய்யும் ஆசிரியர்களும் கல்வியை சிறக்க வைப்பதற்கு அடிப்படையாகும். கல்வி வியாபார பொருள் அல்ல. ஆரம்ப பள்ளி கல்வி, நல்லாசிரியர்களால், நல்ல பாடத்திட்டத்தின்படி மனதில் தங்கும்படி மாறிவிடும். அப்படிப்பட்ட கல்வி சிறப்பானதாக அமையும்.

நம் முன்னோர்கள் வாழ்ந்து காட்டிய வழிமுறைகளை கடைபிடித்து அன்பு, அறிவு, விவேகம், வந்தாரை வாழவைக்கும் தமிழ் கலாசாரம், அயலாரை போற்றும் பண்பு ஆகியவற்றை நாம் தொடர்ந்து பேணி பாதுகாக்க வேண்டும். போரில்லா உலகத்தை படைக்க உலக தமிழர்கள் ஒன்றுபட வேண்டும்.

இனத்தின் அடையாளம்
அறிவு என்பது அழிவு ஏற்படாத கருவியாகும். சமுதாய சக்கரத்தின் அச்சு மொழியாகும். இதுஒரு தகவல் சுரங்கம். ஒரு இனத்தை அடையாளம் காட்டுவது மொழிதான். ஒரு இனம் தனது மொழியை இழந்தால் அடையாளத்தை இழந்துவிடும். நமது எண்ணம் அனைத்தும், தமிழ் வளர்ச்சிக்கு வித்திடும்வகையில் அமைய வேண்டும்.
 

தமிழ்வழிக்கல்வி வாழ்க்கைக்கான கல்வியாக மட்டும் அல்லாமல், வேலைவாய்ப்புக்கான கல்வியாக மாற்றப்பட வேண்டும். அறிவியலில், கணிதத்தில், வேலை வாய்ப்பில், ஆட்சி மொழியில், நீதி நிர்வாகத்தில், மேலாண்மையில், வழிபாட்டில் தமிழ் ஆட்சி செய்ய வேண்டும். ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும், மற்ற மொழிகள் அந்த கலாசாரத்தை பற்றி அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும், வேலை வாய்ப்பிற்கும், அமைதிக்கும், புரிந்துணர்வுக்கும் வழி வகுக்கும். எனவே மொழி மக்களை அறிவார்ந்த சமுதாயத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும்.

நேர்மையான அரசியல்
நமது எண்ணம், செயல் அனைத்தும் தமிழ் வளர்ச்சிக்கும், வித்திடும் வகையில் அமைந்திருக்க வேண்டும். தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் சமுதாய வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும்வகையில் அடித்தளமாக அமைந்தால், இந்தியா 2020–க்குள் வளர்ந்த நாடாக மாறும். ஒரு நேர்மையான அரசியல் அனைத்து மக்களையும், அவர்தம் கலாசாரத்தையும் போற்றும் வகையில் அமையும். நேர்மையான, சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மாற்றும் ஓர் அரசியல் தலைமை இளைஞர் மத்தியில் உருவாகும். அதற்கு தமிழ் சமுதாயம் உறுதுணையாக இருக்கும். அதற்கு இந்த மாநாடு உதவும்.

இவ்வாறு அப்துல்கலாம் கூறினார்.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 4 முஸ்லிம் நீதிபதிகள் நியமிக்க வேண்டும் : பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் கோரிக்கை

மயிலாடுதுறை நீடூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாகை வடக்கு மாவட்டம் சார்பில் இஸ்லாமிய திருமண சட்ட விளக்க விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன், M.அப்துல் ரஹ்மான் எம்.பி. ஆகியோர் பேசினர். மாநில செயலாளர்கள் ஆடுதுறை ஷாஜகான், நிஜாமுதீன், மாவட்ட செயலாளர் அமீர்நூருல்லாஹ், உள்பட பலர் பேசினர். இதை தொடர்ந்து மாநிலத் தலைவர் கே.எம்.காதிர் மொஹிதீன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-

பொதுக்குழு கூட்டம்
வருகிற அக்டோபர் மாதம் 5-ந் தேதி சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அன்று மாலையில் அமைப்பின் மாணவர் அணி மாநில மாநாடு நடக்கிறது. இதில் தேசிய நிர்வாகிகள், கேரள அமைச்சர் குஞ்ஞாலிகுட்டி, முன்னாள் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கல்வியாளர்கள் கலந்துக் கொள்கின்றனர். முன்னாள் வக்பு வாரியத் தலைவரும், மைனாரிட்டி கமிஷன் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பதூர்சையது முஸ்லிம்களுக்கும், எல்லோருக்கும் சேர்ந்து ஒரே விதமான சிவில் சட்டம் வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடுத்துள்ளார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நாங்கள் வழக்கு தொடர்ந்துள்ளோம். அனைவருக்கும் ஒரேவிதமான சிவில் சட்டம் வேண்டும் என்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

4 முஸ்லிம் நீதிபதிகள் நியமிக்க வேண்டும்
சென்னை ஐகோர்ட்டில் 47 நீதிபதிகள் இருந்தபோது முஸ்லிம் சமுதாய நீதிபதிகள் 4 பேர் இருந்தனர். தற்போது நீதிபதிகள் பணியிடங்கள் 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் மட்டும் தான் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த நீதிபதியாக உள்ளார். இவரும் வருகிற நவம்பர் மாதம் ஓய்வு பெறுகிறார். புதிய நீதிபதிகள் 18 பேர் நியமனம் செய்யும்போது சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த 4 பேர் இடம் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தமிழகத்தின் மக்கள் தொகை 7 கோடி 30 லட்சம் பேர் உள்ளனர். இதில் 5½ கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 55 லட்சம் பேர் முஸ்லிம் வாக்காளர்கள் விகிதாச்சாரப்படி சட்டமன்றத்தில் 25 உறுப்பினர்கள், பாராளுமன்றத்தில் 2 உறுப்பினர்கள் முஸ்லிம்களாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து உள்ளோம். ஜனநாயக, சமயசார்பற்ற, சமூக நீதியை நிலை நிறுத்துகிற அரசியல் சக்திகள் வருகிற தேர்தலில் ஒரு அணியில் சேர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.


வெள்ளி, 6 செப்டம்பர், 2013

2014 நாடாளுமன்றத் தேர்தலும் கூட்டணி யூகங்களும் (தமிழகம் )

தமிழகத்தை பொருத்தவரையில் மத்தியில் உள்ள கூட்டணிகளுக்கு தலைமை தாங்கும் எந்த கட்சியும் பிரதான கட்சியாக இல்லை .மாநில கட்சிகளாகிய அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளை பொறுத்தே கூட்டணிகள் அணி சேரும் .

ஆளும் கட்சியான அதிமுக தலைவி ஜெயலலிதா சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனித்து நின்று 40 தொகுதிகளிலும் வெல்லும் என்று பேசினார் .எவ்வாறு இருந்தாலும் ,இறுதியில் ஜெயலலிதா கூட்டணி அமைப்பார் என்று இடதுசாரி கம்யூனிஸ்ட்கள் நம்பிக்கையோடு காத்து இருக்கின்றன .தேர்தல் முடிந்த பின் ,மோடி பிரதமர் வேட்பாளரானால் பிஜேபிக்கு ஜெயலலிதா ஆதரவு கொடுப்பார் என்று பிஜேபி நம்பிக்கையோடு இருக்கின்றது .அதிமுக கூட்டணி அமைத்தால் தேமுதிக ,புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இடம் பெறாது என்பது உறுதியாகிவிட்டது .

எதிர்கட்சியான திமுகவோ மிக பலத்த யோசனையில் உள்ளது .எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் இலங்கை பிரச்சினை எதிரொலிக்குமா ? எதிரொலிக்காதா? என்பதுதான் திமுகவின் முக்கிய யோசனை ஆகிவிட்டது . காங்கிரசை விடுவதற்கு திமுக தலைமைக்கும் ,திமுகவை விட காங்கிரஸ் தலைமைக்கும் மனமில்லை .திமுக தலைமையில் திமுக ,காங்கிரஸ் ,விடுதலை சிறுத்தைகள் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்கும் என்றும் , இந்த கூட்டணியில் தேமுதிகவை சேர்க்க காங்கிரஸ் முயற்சிக்கின்றது என்றும்; எனவே ,திமுக தலைமையில் மெகா கூட்டணி அமையலாம் என்றும் அரசியல் யூகங்கள் அடிபடுகின்றன .

பாஜக தமிழகத்தில் தனது வாக்கு வங்கியை அதிகரிக்க தேமுதிகவை தனது பக்கம் இழுக்க பேரம் பேசிக்கொண்டுள்ளதாகவும் , தேமுதிகவோ தனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பாஜகவுடன் சேருவதற்கு விரும்பவில்லை என்றும் தேமுதிக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது .

இந்த நிலையில் ஆளும் அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்தால் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 சீட்டுகளை ஒதுக்கிவிட்டு மீதி 36 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுவதற்கு ஜெயலலிதா திட்டம் வைத்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன .

திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றால் காங்கிரசுக்கு 9 , தேமுதிக விற்கு 6 , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகளுக்கு தலா 2 , புதிய தமிழகத்திற்கு 1 என்று கொடுத்து விட்டு மீதி 20 தொகுதிகளில் போட்டியிட திமுக திட்டம் போட்டுள்ளதாக திமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது .ஏனென்றால் ,திமுக 20 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட விரும்பவில்லை .

புதன், 4 செப்டம்பர், 2013

200 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடல்

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 200-க்கும் அதிகமான தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

கடந்த 2012-13 ஆம் கல்வியாண்டில் மட்டும் 50-க்கும் அதிகமான தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 30 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 9 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 42 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் உள்ளன. தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டும் 4 ஆண்டுகளில் 670-லிருந்து இப்போது 450 ஆகக் குறைந்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்புகளை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் வழங்குகின்றன.

காத்திருப்போர் எண்ணிக்கை 2.70 லட்சம்: தமிழகத்தில் ஆசிரியர் பட்டயப் படிப்பை முடித்து வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 2.70 லட்சமாக உள்ளது. இவர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மற்றும் மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுகிறது.

ஆனால், பள்ளிக் கல்வித் துறையில் பெரும்பாலான இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுவிட்டதால், மிகக் குறைந்த அளவிலான ஆசிரியர்களே இப்போது அரசுப் பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்படுகின்றனர். இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு கூட 2 ஆயிரம் ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட உள்ளனர்.

அரசு வேலைவாய்ப்பு பிரகாசமாக இல்லாததால், இந்தப் படிப்பில் புதிதாக சேருவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன.

ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (DTERT) (இப்போது மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்- (SCERT) வெளியிட்டிருந்த தகவலின்படி, 2010-11 ஆம் ஆண்டில் தமிழகத்தில் 670-க்கும் அதிகமான தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இருந்தன.

ஆண்டுதோறும் மூடப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களைத் தொடர்ந்து இப்போது தமிழகத்தில் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் எண்ணிக்கை 450 ஆகக் குறைந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அடுத்த 2 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 200-க்கும் கீழே குறையலாம் என ஆசிரியர் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு சேர்க்கை அதிகரிப்பு: கடந்த சில ஆண்டுகளாக ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேரும் மாணவர் எண்ணிக்கை குறைந்து வந்தது. ஆனால், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை சற்று அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மட்டும் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது சுமார் 600 மாணவர்கள் கூடுதலாகச் சேர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை சற்று அதிகரித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு 10 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த ஆண்டில் பணி நியமனம் செய்யப்பட்டனர். அதன்காரணமாக, இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை சற்று அதிகரித்திருக்கலாம் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு மொத்தமாக 8 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பட்டயப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

20 ஆயிரம் இடங்கள் காலி!

தமிழகத்தில் இப்போதுள்ள 450 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மட்டும் தற்போது 20 ஆயிரத்துக்கும் அதிகமான காலியிடங்கள் உள்ளன.

இந்த ஆண்டு ஒற்றைச்சாளர கலந்தாய்வு மற்றும் நிர்வாகப் பிரிவு ஒதுக்கீடுகளின் கீழ் 8 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேர்ந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்.

மொத்தம் 33 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் இருக்கும்போது தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மட்டும் இப்போது சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமான காலியிடங்கள் இருக்கலாம் எனத் தெரிகிறது.

திங்கள், 2 செப்டம்பர், 2013

டெல்லி செங்கோட்டையில் சமயச்சார்பற்ற ஜனநாயக சமூகநீதிக் கொடிதான் பறக்கும் --- பேராசிரியர் கே. எம். கே.

இந்திய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி பாரதீய ஜனதா கட்சி. ஆளும் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி. முற்போக்குக் கூட்டணி, நாடாளுமன்றத்தை நடத்த நினைத்த போதெல்லாம் பா.ஜ.க., அதைத் தடுத்து நிறுத்துவதிலேயே தனது காலம் முழுவதையும் கடத்திவிட்டது.

முற்போக்குக் கூட்டணியின் கொள்கைகளை விமர்சித்து வந்துள்ள பா.ஜ.க. எப்போதாவது, அந்தக் கொள்கைகளுக்கு மாற்றுக் கொள்கை எதையும் முன்வைத்துள்ளதா என்றால், அதை அது எப்போதும் செய்ததில்லை.

நாடாளுமன்றம் நடந்தால் தான், நாட்டுக்குத் தேவைப்பட்ட நல்ல திட்டங்களை நிறைவேற்ற முடியும்-சீர்திருத்தம் செய்வதற்குச் சட்டங்களைக் கொண்டுவர முடியும். இதில் எதுவும் நடக்கக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக பா.ஜ.க., இன்று வரை இருந்து வந்திருக்கிறது.

இன்றைக்கு இந்திய ரூபாயின் மதிப்பு, டாலருக்குரிய மதிப்புடன் மிகவும் சரிந்த நிலையை எட்டி இருக்கிறது. இதன் மூலம் நாட்டின் பொருளாதார வாழ்க்கையில் மெத்தனம், குந்தகம், பாதகம் என்று ஏற்பட்டு, பலவித உள்நாட்டுச் சிக்கல்களும், வெளிநாட்டுப் பிரச்சினைகளும் தோன்றிவிடும் என்னும் அச்சம் இப்போது ஏற்பட்டிருக்கிறது.

இப்படிப்பட்ட அச்ச நிலையிலும் வருங்காலம் பற்றிய நம்பகத் தன்மையில் குறைவுள்ள நிலையிலும் நாட்டுப் பொருளாதாரத்தைக் கொண்டுவந்து நிறுத்தியதற்கு மிக முக்கிய காரணம், பா.ஜ.க., வின் எதிர் மறை அரசியல் தான் என்று நன்கு அறிந்திருக்கிறார்கள். இவ்வளவு நெருக்கடியிலும், நாடாளுமன்றத்திற்கான தேர்தலை டாக்டர் மன்மோகன் சிங் அரசு, முன்கூட்டியே நடத்திட முன் வரும் என்று எதிர்பார்த்து, எதிர்பார்த்து பா.ஜ.க., இன்று ஏமாந்து நிற்கிறது.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 2013 ல் நிச்சயமாக இல்லை. அடுத்த ஆண்டு 2014 மே திங்களில்தான் தேர்தல் நடக்கும் என்று இப்போது நிச்சயமாகிவிட்டது.

தேர்தலில் எப்படியாவது, வெற்றிக் கனியைப்பறித்திடலாம்-நாடாளுமன்றத்தில் 272 பிளஸ் இடங்களைப்பிடித்திடலாம் -ஆட்சி அமைந்திடலாம்- இந்தியாவை இந்து ராஸ்ட்ரம் ஆக்கிடலாம்- பாரத தேசம் முழுவதிலும் முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மையினருக்கென்று உள்ள தனியார் சட்டங்களை எல்லாம் அழித்துவிட்டு எல்லா மதத்தவருக்கும் பொதுமான சிவில் சட்டத்தை அமுலாக்கலாம்- பாபரி மஸ்ஜிது வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தீர்க்கப்பட்டாலும் தீர்க்கப்படாவிட்டாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பாபரி மஸ்ஜிது இருந்த இடத்தில் ராமர் கோயிலை எழுப்பி விடலாம், அதன் மூலம் இந்தியாவில் ஏகத்துவக் கொள்கைக்கு இடம் கிடையாது- சிலை வணகத்துக்கும்- பலதெய்வக் கொள்கைக்கு மட்டுமே இந்த தேசம் உள்ளது என்று உலகத்திற்குப் பறை சாற்றலாம்- இப்படிப்பட்ட கற்பனைகளில் மிதந்துக் கொண்டிருக்கும் பாரதீய ஜனதா கட்சியினர் இப்பொழுது நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்திலும் வியூகத்தில் முனைந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழகத்தின் நெஞ்சத்தாமரையாம் திருச்சியில் செப்டம்பர் 26 தேதியில் நரேந்திர மோடி அவர்களின் பிரச்சாரம் நடக்கப்போகிறது எனவும், தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவில் பா.ஜ.க., ஆட்சியை விரும்புகிறார்கள் என்பதற்குக் கட்டியம் கூறும் வகையில் சமுத்திரம் போல் ஜனங்கள் திரளவேண்டும் என்று கூறி, அதற்கான ஆயத்தங்களைச் செய்து வருகிறார்கள்.

பா.ஜ.க., வின் பிரச்சார பீரங்கியாக மோடி அவர்கள் முழுங்கி வருகிறார். அவருக்கு இணையாக, தேசிய காங்கிரஸ் கட்சியில் யாரும் தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை.

தமிழ் நாட்டில் உள்ள பத்திரிகை உலகிலும் ஊடகத் துறையிலும் ஒரு மறைமுக பிரச்சாரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்த டெல்லி ஆட்சி பா.ஜ.க., கையில் தான் என்னும் கருத்தோட்டத்தை - எழுத்திலும் எண்ணத்திலும் பத்திரிகை உலகம் பிரதிபலிப்பதை அங்கங்கே காணமுடிகிறது. தமிழகத்தை பொறுத்தமட்டிலும் பா.ஜ.க., உடன் மக்கள் ஜனநாயக கட்சி இருக்கிறது என்றுஅதன் நிறுவனர் பாரிவேந்தர் கூறி வருகிறார். தமிழகத்தில் பா.ஜ.க., வுக்கு ஆதரவாக மறுமலர்ச்சி திமுக,தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் போன்றவை அணி சேரும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக காந்தீய மக்கள் கழகத்தின் நிறுவனர் தமிழருவி மணியன் கூறி வருகிறார் என வார இதழ்களில் செய்திகள் வந்த வண்ணமுள்ளன. இல்லை, இல்லை தமிழகத்தில் திமுக தலைமையில் மீண்டும் காங்கிரஸ் வருகிறது. அதற்கு தேமுதிக ஆதரவு தருகிறது. இந்தக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்கின்றன. இப்படிப்பட்ட மெகா கூட்டணி புதுச்சேரி உள்ளிட்ட நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் ஊடுருவிச் செல்லும் வாக்குகளை வெல்லும் என்றும் பேசப்பட்டு வருகிறது.

இதற்கு மாறாக தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் தேமுதிக சேரப்போகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அணி அ.இ.அ.தி.மு.க., அணி, திமுக அணி, தேமுதிக அணி, காங்கிரஸ் அணி, பா.ம.க., அணி என்று ஐந்து அணிகள் வலம் வரப்போகின்றன. தமிழக வாக்காளர்கள் திணறப்போகிறார்கள் என்றும் சில அரசியல் நோக்கர்கள் எழுதிக் கொண்டிருக் கிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தல் பற்றி, எதையும் தெளிவாக சொல்ல முடியாமல், மூடு மந்திரம் நிறைந்ததாக நிலைமை சென்று கொண்டிருக்கிறது. வழுக்குப் பாறையில் ஏறுவது போல தேர்தல் கூட்டணி கணிப்புகள் அமைந்திருக்கின்றன.

எதுவெல்லாம் நடக்குமோ, அதுவெல்லாம் நடக்கும், அதே சமயத்தில், இந்திய தலைநகர் டெல்லி செங்கோட்டையில் ஜனநாயக சமயச் சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகளில் ஊறித் திளைத்தவர்கள்தாம் சுதந்திரக் கொடியை ஏற்றுவார்கள் என்பதில் நமக்குக் கிஞ்சிற்றும் ஐயமில்லை. உங்களுக்கு எதிலும் சந்தேகமிருந்தால் அதைத் தூக்கி எறிந்திடுங்கள்.

செங்கோட்டையில் ஜனநாயக சமயச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையின் கொடிதான் உயர்ந்து பறக்கும் என்பதில் உறுதியாக இருங்கள்.

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

தி ஹிந்துவின் பார்வையில்...தமிழ்நாடு முஸ்லிம் அரசியலின் மாறிவரும் முகம் ----காயல் மகபூப்.

பேரா. எம்.எச். ஜவாஹிருல்லாஹ் பதிலுக்குப் பதில் :
முஸ்லிம்களின் பிரச்சனைகளை தீர்வு காணும் இயக்கமாக இந்திய யூனியன்முஸ்லிம் லீக் இல்லாத காரணத்தால்தான் த.மு.மு.க தோன்றியதாககூறுகிறார்.

த.மு.மு.க தோன்றிய பின்சமூகத்தில் தீர்த்துக் வைக்கப்பட்டபிரச்சனை தான் என்ன?அந்த அமைப்புஉருவானதற்குபின் தமிழ்நாட்டில் 50அமைப்புகள் உருவாயின.

பள்ளிவாசல் விவாகரங்கள்காவல்நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டன.

தொழுகையும், நோன்பும் விவகாரமாக்கப்பட்டன,
மூன்று, நான்கு நாட்கள் பெருநாள்களாக கொண்டாடப்பட்டன.

அப்பாவி இளைஞர்கள் சிறைவாசம்அனுபவித்தார்கள்.

தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு பெறுவதற்கு அடித்தளம்அமைத்தது இந்திய யூனியன் முஸ்லிம்லீக்.1999 ல் இதற்காக ஒற்றை கோரிக்கை மாநாடு நடத்தப்பட்டதும், அதில் கலந்துகொண்ட அன்றைய முதல்வர் கலைஞர் வாக்குறுதி வழங்கியதும் வரலாற்றுப்பதிவுகள்.

‘‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக்அடுத்தக் கட்சியின் சின்னத்தில் தான்போட்டியிடுகிறது. த.மு.மு.க வின்அரசியல் அங்கமான ம.ம.க தன் சொந்த சின்னத்தில் நின்று வெற்றிபெற்றுள்ளது. மற்ற சமுதாய மக்களும் எங்களை தான் ஆதரிக்கிறார்கள்’’என பேராசிரியர் ஜவாஹிருல்லா குறிப்பிடுவது வரலாற்றை இருட்டடிப்புசெய்யும் முயற்சி.

2009 நாடாளுமன்ற தேர்தலில் நான்குதொகுதிகளில் போட்டியிட்ட ம.ம.கபெற்ற ஒட்டுக்கள் 68 ஆயிரத்து 346 இதில் மயிலாடுதுறையில் போட்டியிட்ட பேராசிரியர் ஜவாஹிருல்லா 19 ஆயிரத்தி814 ஒட்டுக்கள் மட்டுமே பெற்றார்.மத்திய சென்னையில் ஹைதர் அலி13 ஆயிரத்து 160 ம், இராமநாதபுரத்தில் சலீமுல்லாகான் 21 ஆயிரத்து 430ஒட்டுகளும் பெற்றனர்.

ஆனால், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் 1991லேயே 5 மக்களவை தொகுதிகளிலும், 18 சட்டமன்றதொகுதிகளிலும் ‘‘ஏணி சின்னத்தில்’’தனித்து போட்டியிட்டது மக்களவை தொகுதிகளில் மட்டும் 1 லட்சத்து 29ஆயிரத்து 048 வாக்குளை பெற்றது.

அதே மயிலாடுதுறையில் ஏ.கே.எ.அப்துஸ்ஸமது 37 ஆயிரத்து 677வாக்குகளும், இராமநாதபுரத்தில்எ.எ.அப்துல் ரசாக் 49 ஆயிரத்து442 வாக்குகளும், வேலூரில்முஹம்மதுஇஸ்ஹாக் 31 ஆயிரத்து381 வாக்குகளும் பெற்றது வரலாற்றுச்சாதனை.

ராஜீவ்காந்தி படுகொலைசெய்யப்பட்டு அனுதாப அலை வீசியஅந்த நேரத்தில் எந்த பெரிய கட்சியின் துணையுமில்லாமல் இந்திய யூனியன்முஸ்லிம் லீக் இந்த சாதனையைபடைத்தது. வன்னியர் சங்கம் அப்போதுதான் பட்டாளி மக்கள் கட்சியாகஅரசியலில் பிரசவித்தது. முஸ்லிம்லீக் போட்டியிட்ட இடங்களில் அதற்குபலமும் இல்லை அதற்கு களமும் இல்லை.

அந்த காலகட்டங்களில் ‘அரசியல்ஹாரம், ஒட்டுப்போடுவதும், ஜனநாயகமும் இஸ்லாத்திற்கு விரோதமானது’ எனபரப்புரை செய்தவர்களுக்கு இந்தவரலாற்று பதிவுகள் தெரிந்திருக்க நியாயமில்லை.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியஒருமைப்பாட்டை வலியுறுத்துகிறது;சமூக நல்லிணக்கத்திற்கு பாடுபடுகிறது; முஸ்லிம்களின் காலச்சாரதனித்தன்மைகளை காப்பாற்றபோராடுகிறது; தீவிரவாதமும் &வன்முறையும் கூடாது என போதிக்கிறது.அதனால் முஸ்லிம் சமுதாயம் இந்த இயக்கத்தை நேசிக்கிறது.

‘இந்திய யூனியன் முஸ்லிம் லீகின்பழைய நல்ல நாட்கள் அரசியலில்மீண்டும் வராதா’ என்ற சமுதாயஎதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும்.

தமிழகத்தில் அலிகர் முஸ்லிம் பல்கலைகழக கிளை மற்றும் "காயிதெ மில்லத் பல்கலைக் கழகம் " - முஸ்லிம் மாணவர் பேரவை

திருச்சிக்கு வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ,முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநில அமைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது-

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாணவர் அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய அளவில் அங்கீகரிக்கப் பட்ட நான்கு அமைப்புகளில் ஒன்றாகும். மற்ற மூன்றும் முஸ்லிம் யூத் லீக், சுதந்திர தொழிலாளர் யூனியன், முஸ்லிம் மகளிர் அணி ஆகியவைகளாகும்.

முஸ்லிம் மாணவர் பேரவை யின் மாநில மாநாடு ஏற்கனவே நெல்லை மாவட்டம் குற்றா லத்தில் நடைபெற்றுள்ளது. தற்போது எதிர்வரும் அக்டோபர் 5- ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.

பல்லாயிரக்கணக்கான சீருடையணிந்த மாணவர்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில், கல்வி சம்பந்தமான பிரச்சினைகள் குறித்தும், கல்விக்கடன் துரிதமாக கிடைக்கவும் -அதற்கான வட்டியை ரத்து செய்யவும் மத்திய - மாநில அரசுகளை கேட்டுக் கொண்டும், சிறு பான்மை மாணவர்களுக்கு மாவட்டத் தலைநகரங்களில் விடுதிகள் அமைக்க கோரியும்,

அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் கிளையை தமிழ் நாட்டில் அமைக்க கோரியும், சிறுபான்மையினருக்கென மத்திய அரசு அமைக்கும் 5 பல்கலைக்கழகங்களில் ஒன்றை தமிழ்நாட்டில் அமைக்க வலியுறுத்தியும், காயிதெ மில்லத் பெயரில் ஒரு பல்கலைக் கழகத்தை உருவாக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

மாணவச் சமுதாயம் சாதி, மத, கல்லூரி அடிப்படையிலும் மோதிக் கொள்ளாமலும், ஒழுக்க மாண்புகளுக்கு உட் பட்டு தலைசிறந்த எதிர்கால பிரஜைகளாக உருவாக்கப்படும் முயற்சியாக செயல் திட்டங் கள்அறிவிக்கப்பட உள்ளன. வன்முறை, தீவிரவாதம், போதை மற்றும் குற்றப் பழக்க வழக்கங்கள் பக்கம் தலை காட்டாமல் மாணவச் சமுதாயம் தற்காத்து கொள்ளும் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

இம் மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசி யப் பொருளாளரும், கேரள அமைச்சருமான பி.கே. குஞ்ஞாலிகுட்டி, தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.