Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 1 ஜனவரி, 2013

காயிதே ஆஜம் ,முஹம்மது அலி ஜின்னா ஒரு மதச்சார்பற்ற தலைவர் , அத்வானி மீண்டும் ஒப்புதல்


"ராமகிருஷ்ண மடத்தின் முன்னாள் தலைவர், ரங்கநாதானந்தர் கூறியதன் படியே, முகமது அலி ஜின்னாவை, மதச்சார்பற்ற தலைவர் என கூறினேன்,'' என, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில், நேற்று முன்தினம் அத்வானி கூறியதாவது:சிறு வயதில் நான், பாகிஸ்தானின், கராச்சி நகரில் வசித்த போது, அங்குள்ள, ராமகிருஷ்ண மடத்திற்கு செல்வது வழக்கம். அங்கு, சுவாமி ரங்கநாதானந்தரின் சொற்பொழிவுகளை கேட்பது உண்டு.
நாடு பிரிவினை அடைந்து இந்தியா வந்த பின், கோல்கட்டாவில், சுவாமியை சில முறை சந்தித்துள்ளேன். ஒரு முறை சந்திக்கும் போது, பாகிஸ்தான் அரசியல் அமைப்பு சட்ட சபையில், முகமது அலி ஜின்னா பேசியதை, சுவாமி என்னிடம் கூறினார்.

"பாகிஸ்தான் மக்கள், மத வேறுபாடுகளை தவிர்க்க வேண்டும்' என, ஜின்னா பேசியுள்ளதை, சுவாமி மூலம் தான் அறிந்தேன். அதன் படி தான், ஏழு ஆண்டுகளுக்கு முன், பாகிஸ்தான் சென்றிருந்த போது, "ஜின்னாவை மதச் சார்பற்ற தலைவர்' என, கூறினேன்.இவ்வாறு, அத்வானி பேசினார்.

திங்கள், 31 டிசம்பர், 2012

வேலை மற்றும் சம்பளம் வாங்குவதற்காக மட்டும், இளைஞர்கள், கல்வியை பயன்படுத்தாமல், மனித சமூகத்திற்கு சேவை செய்யவும் பயன்படுத்த வேண்டும் :ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

"நல்ல வேலை மற்றும் சம்பளம் வாங்குவதற்காக மட்டும், இளைஞர்கள், கல்வியை பயன்படுத்தாமல், மனித சமூகத்திற்கு சேவை செய்யவும் பயன்படுத்த வேண்டும்,'' என, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி யோசனை தெரிவித்துள்ளார்.

மும்பை பல்கலை கழகத்தில் நிகழ்ந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர் கூறியதாவது: தற்போதெல்லாம், இளைஞர்கள், பாரம்பரிய கலாசாரம் மற்றும் மேற்கத்திய கலாசாரத்திற்கு இடையே சிக்கித் தவிக்கின்றனர். எந்தப் பக்கம் சாய்வது என்ற குழப்பத்தில் உள்ளனர்.

இந்த தருணத்தில், மகாத்மா காந்தி, நமக்கு போதித்த அறிவுரைகள், பல சந்தேகங்களுக்கு தீர்வை தரும். நல்ல வேலையை பெற்று விட வேண்டும் அல்லது நல்ல வருமானத்தை ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டும், கல்வியை பயன்படுத்தாமல், நாட்டிற்கும், மனிதர்களுக்கும் சேவை செய்யவும் பயன்படுத்த வேண்டும். மனிதத் தன்மையுடன் நடந்து கொள்ளும் பண்பை வளர்க்க வேண்டும். மனிதாபிமான உணர்வு, இளைஞர்களிடையே அதிகரித்தால், சமூகத்தில் நிலவும் பல பிரிவினைகள் மற்றும் முரண்பாடுகள் முடிவுக்கு வந்து விடும். இவ்வாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார்.

ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில் மறுஆய்வு தேவை


 நாடு முழுவதும் ஆசிரியர் கல்வி பாடத் திட்டத்தில் மறுஆய்வு தேவை என்று தேசிய திறந்தநிலைப் பள்ளிக் கல்வி நிறுவனத்தின் தலைவர் சிதான்சு எஸ்.ஜெனா கூறினார்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பட்ட மளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. 2010-11 மற்றும் 2011-12ம் கல்வியாண்டுகளில் பயின்ற ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 481 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவுக்குத் தலைமையேற்ற ஆளுநர் கே.ரோசய்யா, சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்குப் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

விழாவில் சிதான்சு எஸ்.ஜெனா ஆற்றிய உரை: மாணவர்களை நல்ல குடிமக்களாக மாற்றுவதற்கு நெறி சார்ந்த கல்வி மிகவும் அவசியம். மனித உரிமைகள், நல்லிணக்கமாக வாழ்வது, அமைதியை விரும்புவது, ஜனநாயக மரபுகள், பிறருக்காக உதவுவது ஆகிய பண்புகளை மாணவர்களிடம் ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும்.

அதற்கேற்ற வகையில், ஆசிரியர் கல்வியில் உரிய மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். இப்போதைய கல்விமுறை தேர்வு, வேலைவாய்ப்பு போன்றவற்றிடம் முழுமையாக சரணடைந்துள்ளது. மனித பண்புகளுக்கோ, மற்றவர்களை மதிப்பதற்கோ கல்வி முறை முக்கியத்துவம் வழங்குவதில்லை.

நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பாக முழுமையான புரிதலையோ, அறிவையோ இன்றைய கல்வி முறை வழங்கவில்லை. மாணவர்களிடம் போட்டி மனப்பான்மையைத்தான் கல்வி நிறுவனங்கள் வளர்க்கின்றன. இணைந்து செயல்படுவது என்ற பண்பு மாணவர்களிடம் மறைந்து வருகிறது.

மாணவர்கள் பல சாதனைகளைப் புரிந்தாலும் அவர்களிடம் மனிதநேயம் குறைந்து வருகிறது. எனவே, மனித மதிப்பீடுகள், நெறிசார்ந்த கல்வியைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது மிகுந்த அவசியமாகிறது. இயற்கையை ரசிக்கவும், மனித உறவுகளை மதிக்கவும், கலைகளைப் படைக்கவும், பிறருக்காக இரங்கும் மனப்பான்மையையும் மாணவர்களிடம் வளர்க்கும் வகையில் ஆசிரியர் கல்வி இருக்க வேண்டும்.

கல்வி சார்ந்த சில குறிப்புகளையோ, ஆய்வுகளையோ மட்டும் ஆசிரியர்களுக்கு பயிற்சியாக வழங்காமல் உலகமயமாக்கல், அமைதி, ஊடகம், கலாசாரம், ஜனநாயகம் குறித்து ஆசிரியர்களுக்கு அவ்வப்போது பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர் ஒவ்வொருவரிடத்திலும் உள்ள தனித்தன்மையை அறிந்து அதனை ஊக்குவிக்க வேண்டும். கற்பித்தலுக்கான புதிய வழிமுறைகளையும், சூழல்களையும் ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் என்றார் சிதான்சு எஸ்.ஜெனா.

நம் சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் பேராபத்துக்களை உணர்ந்து சமுதாயம் ஒன்றுபட வேண்டும்: சமுதாயப் போர்வாள் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி.


இந்திய யூனியன்முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் கூட்ட தீர்மான விளக்க பொதுக் கூட் டம் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற் றது.

இக் கூட்டத்தில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., பேசியதாவது-

இந் நகரில் அவ்வப்போது ஏற்படுகிற சிறுசிறு சிராய்ப்புக் களை சமாளித்து ஒற்றுமைப் படுத்தி முன்மாதிரியான ஊர் காயல்பட்டினம் என்பதை பறைசாற்ற வேண்டும். இந் நகரில் பிளவையும், பிரச்சினை களையும் ஏற்படுத்த எந்த சக்திக்கும் இடமளிக்கக் கூடாது. இந் நகரின் ஐக்கி யத்தை சமுதாய ஒற்றுமையை பலப்படுத்த தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேற் கொள்ளும் முயற்சிகளுக்கு அனைவரும் ஒருமுகமாக ஆதரவு தர வேண்டும்.

DCW  இரசாயன ஆலையால் காயல்பட்டினத்தின் சுற்று வட்டார பகுதிகளில் ஏற்பட்டுள்ள சுற்றுப்புறச் சூழல் மாசுபட்டுள்ளதும் இங்கு ஏராளமானோர் புற்று நோய் உள்ளிட்ட பாதிப்புகளில் அவதிப் படுவதும் அனைத்து தரப்பி னரின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டு இந் நகரின் இளைஞர்கள் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியுள் ளனர். மத்திய அரசின் நேரடி கவனத்திற்கு இப் பிரச்சி னையை கொண்டு சென்று உரிய நடவடிக்கைக்கு முயற்சி மேற்கொண்டுள்ளோம். அந்தப் பணி வெற்றி பெறும் வரை முஸ்லிம் லீகின் இந்த நாடாளு மன்ற உறுப்பினர் ஓய மாட்டான் என்பதை இங்கே உறுதியுடன் அறியத் தருகிறேன்.

இந்த மேடையில் இருக்கும் என்னிடம் பார்வையாளர் பகுதியில் இருந்து துண்டுச் சீட்டுகள் எழுதி தரப்பட்டன. அதிலேகூட பாஸ்போர்ட் விண்ணப்பித்தால் காவல் துறையினர் விசாரணை என்ற பெயரால் அலைக் கழிக்கி றார்கள். அதிகம் பணம் கேட்கி றார்கள், பெண்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்து அதிக நேரம் இருக்கச் செய்கி றார்கள் என குறிப்பிட்டிருந் தனர். காவல் துறையினரின் இந்த செயல் ஏற்கத்தக்கதல்ல. இது நிறுத்தப்பட வில்லை எனில் உரிய இடத்தில் உரிய நடவடிக்கைக்கு முயற்சிப் பேன் என எச்சரிக்க கடமைப் பட்டுள்ளேன் .

செந்தூர் விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும் என்றீர்கள். அதற்காக பலமுறை முயற்சி மேற்கொண்டு செய்து கொடுத்ததும், அதன் நேரத்தை மாற்ற வேண்டும் என்பதை மாற்றித் தந்ததும் இந்திய யூனியன்முஸ்லிம் லீக் பேரியக் கம். திருச்செந்தூரிலிருந்து சென்னை வந்து செல்லும் நேரத்தை குறைக்கவும் உரிய நடவடிக்கை எடுப்போம்.

எந்தப் பிரச்சினை என்றாலும் எந்த இடத்தில் எப்போது எப்படி தட்ட வேண்டுமோ அந்த வகையில் முயற்சித்து காரிய மாற்றுபவர்கள் முஸ்லிம் லீகர்கள். சிலரை நடுரோட்டிற்கு அழைத்து வந்து கோஷம் போட வைத்து காலையில் கைதாகி மாலையில் விடுவிக்கப்படும் நாடகங்களை முஸ்லிம் லீக் ஒருபோதும் அரங்கேற்றுவ தில்லை. உணர்ச்சிகளை தூண்டிவிட்டு அதில் குளிர் காய வைக்கும் கலையை முஸ்லிம் லீக் தலைவர்கள் எங்களுக்கு கற்றுத் தரவில்லை.

இந்திய யூனியன்முஸ்லிம் லீக் வலிமை எங்கேயிருக் கிறதோ அங்கே சமுதாய ஒற்றுமை - மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு சிறப்பாக இருக்கும். முஸ்லிம் லீக் வலிமை எங்கேயிருக்கிறதோ அங்கே மதநல்லிணக்கம் தடைபடாமல் இருக்கும். முஸ்லிம் லீக் எங்கே வலிமையுடன் இருக்கிறதோ அங்கே நமது உரிமைகள் நிலை நாட்டப்படும்.

இந்திய யூனியன்முஸ்லிம் லீகின் தேசிய கவுன்சில் கோழிக்கோட்டில் கூடியபோது சிறப்பு வாய்ந்த பல முடிவுகளை அறிவித்தோம். இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள `ஏணி’ சின்னமே இனி முஸ்லிம் லீக் சின்னமாக இருக்கும்.

தேசிய கவுன்சில் தீர்மானம்
தேசிய கவுன்சில் கூட்டம் நிறைவேற்றிய தீர்மானங்களில் ஒன்று பல்லாண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம் களைப் பற்றியது. தமிழ்நாட்டில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விஷயங்களை அரசின் கவனத் திற்கு உரிய முறையில் முஸ்லிம் லீக் கொண்டு செல்கிறது. யாருடைய தூண்டுதல்களால் தாங்கள் இளமை வாழ்வை இழந்தார்களோ அவர்கள் எல்லாம் கைவிட்டு விட்ட நிலையில் அந்த இளைஞர் களின் விடுதலைக்காக பணிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செய்து வருகிறது.

சிறுவனாக சிறைக்கு சென்று இளமையையே தொலைத்து விட்ட அபுதாகிர் கொடி நோயால் தாக்கப்பட்டு சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் என ஒவ்வொன்றாக பாதிக் கப்பட்டு இப்போது கண்களும் பார்வையிழந்து விட்டன. நடை பிணமாகி விட்ட அந்த சகோ தரன் சிகிச்சை பெறுவதற்காக 9 முறை பரோல் விடுப்பு பெற்றுக் கொடுத்தது இந்திய யூனியன் முஸ்லிம் லீக். நம் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் அவர்கள் ஏற்பாட்டில் இது நடைபெற்றது.

இப்போது நடை பிணமாகி விட்ட அந்த சகோதரரை மீண்டும் பரோலில் விடு முறைக்கு விண்ணப்பித்தால் அரசு அதை தர மறுக்கிறது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்திலேயே விண் ணப்பித்து நீதிமன்றமும் ஒரு முறையல்ல, இரண்டு முறை உத்தரவிட்டும் அதை செயல்படுத்த அரசு மறுக்கிறது.

மனரீதியாக பாதிக்கப்பட்ட சமுதாயம்
கோவை மருத்துவமனை யில் உயிருக்குப் போராடும் அபுதாகிரை பார்க்கச் சென்றி ருந்தேன். எலும்புக்கூட்டில் துணியை போட்டு போர்த்தியது போன்று படுக்கையில் கிடத்தப் பட்டிருந்தார். நாங்கள் சென்ற போது வெளியில் இருந்த அவரது உறவினர்கள் மண்ணை தூக்கி வாரி இறைத்து யார் யார் பேச்சையோ நம்பி தன் வாழ் வையே தொலைத்து விட்டானே என பதுவா செய்தனர். பின்னர் அபூதாகிர் விடுதலைக் காக பாடுபடும் எங்களுக்காக மடியேந்தி துஆ கேட்டனர். அந்த அளவிற்கு மனரீதியாக கோவை சிறைவாசிகளின் குடும்பத்தார் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று தமிழகத்தில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்க குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பதவி ஏற்பு விழாவிற்கு முதல்வர் ஜெய லலிதா செல்கிறார். அமெரிக்கா போன்ற நாடுகளால் விசா மறுக்கப்படும் அளவிற்கு சர்வதேச சமூகத்தால் வெறுக் கப்படும் வகையில் அவமான கரமான கலவரத்துக்கு காரண மாக இருந்தவர் நரேந்திரமோடி. அப்படிப்பட்ட மோடியிடம் நட்பு பாராட்டுகிறார்.

குஜராத்தில் முஸ்லிம்களை அழிக்க மோடி துணை போனார் என்றால் ஆந்திராவில் இஸ்லா மிய கலாச்சார சின்னத்தை அழிக்க அம் மாநில அரசு துணை போகிறது. 420 ஆண்டு பாரம்பரியமிக்க ஹைதராபாத் சார்மினாரில் 1642 முதல் 1960 வரை எந்த சிலையுமில்லை. 1960-ல் சிலை வைக்கப்பட்டு அதை காரணம் காட்டி இன்று பெரிய கோவிலாக எழுப்புகி றார்கள். இதை `தி ஹிந்து’ நாளிதழ் படம் பிடித்துக் காட்டி அம்பலப்படுத்தியுள்ளது. அப்படியானால் 1951-ல் உருவாக்கப்பட்ட சட்டம் என்னா யிற்று? இதை நாடாளுமன் றத்தில் கேட்டு முழங்கினோம்.

ஆகவே, இன்று நம் சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் பேராபத்துக்களை உணர்ந்து சமுதாயம் ஒன்றுபட வேண்டும். இவ்வாறு எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. பேசினார்.

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

பனிமூட்டத்தால் உறைந்தது ‘ஏழைகளின் ஊட்டி’ ஏற்காடு


குளிர்கால மலர்க்கண்காட்சியை அதிகரிக்க வேண்டும் எனவும், ஏற்காட்டில் இதுபோன்ற ஜில்..ஜில்.. சீசனை அனுபவித்ததில்லை என சென்னையை சேர்ந்த இளம்பெண் தெரிவித்தார்.

படகு சவாரிக்கு அனுமதி இல்லை
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று ஒருநாள் மட்டும் 2–ம் பருவமாக குளிர்கால மலர்க்கண்காட்சி மற்றும் கலைவிழா நடத்தப்பட்டது. சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க செய்யும் வகையில் நடத்தப்பட்ட மலர்க்கண்காட்சிக்கு சென்னையில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

நேற்றைய தினம் ஏற்காடு பனிமூட்டத்தால் திண்டாடியது என்றே கூறலாம். எதிரே 10 அடி தூரத்திற்கு மேல் உள்ள நபர்களை அடையாளம் கண்டு கொள்ளாதபடி பனிமூட்டமும், மேககூட்டமும் ரோட்டில் பரவி இருந்தது. லேக் எனப்படும் ஏரியில் சுற்றுலா பயணிகள் படகுசவாரி செய்ய முடியாத வகையில் ஏரி முழுவதும் பனிமூட்டம் பரவி வியாபித்து இருந்தது. இதனால் படகு சவாரி செய்வதற்கு பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இதுபோல ஏற்காடு பஸ் நிலையம், அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா கார்டன் பகோடா பாயின்ட், சேர்வராயன் கோவில், பொட்டனிக்கல் கார்டன் ஆகிய இடங்களிலும் பனிமூட்டமாக காணப்பட்டது.

வாகனங்கள் முகப்பு விளக்கு
ஏற்காடு அடிவாரத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 15–வது கொண்டை ஊசி வளைவில் இருந்து 20–வது கொண்டை ஊசி வளைவு வரை வாகனங்கள் செல்ல முடியாத வகையில் பனிமூட்டம் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டப்படி சென்றதை காணமுடிந்தது.

குடும்பத்துடன் சுற்றுலா சென்றவர்கள் பனிமூட்டத்தால் வாவ்... என்ன ஒரு சீசன் எனக்கூறி உறைந்து போயினர். சிறுவர், சிறுமிகள் முன் எச்சரிக்கையாக சுவெட்டர் அணிந்து வராததால் அவர்கள் வாய் குளிரில் டக்..டக்கென ‘தந்தி‘ அடிக்க தொடங்கின.

மின்சாரம் இல்லாத வீடுகளில் ஒளியேற்றும் கல்லூரி மாணவர்கள்


"ஊதாரித்தனமாக செலவு செய்பவர்கள்" என, சிலரால் வசைபாடப்படும் கல்லூரி மாணவர்கள், தங்களின், "பாக்கெட் மணி"யை சேமித்து, 4,000 வீடுகளில் வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

மும்பையில் உள்ள, எச்.ஆர்., கல்லூரி மாணவர்கள், ஐந்து பேர், இரண்டாண்டுகளுக்கு முன், சுற்றுலா சென்ற போது, மும்பை புறநகர் பகுதியில் ஒரு கிராமத்தை கண்டனர். தலைநகர் மும்பையில் இருந்து, 150 கி.மீ.,யில் இருந்த அந்த கிராமத்தில், மின் வசதி அறவே கிடையாது. மொபைல் போனை, சார்ஜ் செய்வதற்கு கூட, 10 கி.மீ., சென்று, மின்சாரம் உள்ள இடத்தில், சார்ஜ் செய்ய வேண்டி இருந்தது.

அந்த கிராமத்தில் தங்கி, அந்த மக்கள் படும்பாட்டை அறிந்த மாணவர்கள், மிகுந்த மனவேதனை அடைந்தனர். பகலில் மட்டுமே பள்ளி குழந்தைகளால் படிக்க முடியும்; இரவில் படிக்கவே முடியாது. இதை கண்ட மாணவர்கள், மேலும் வருந்தினர்.
மாணவர்கள் தங்களின், "பாக்கெட் மணி"யை சேர்த்து, அந்த கிராமத்திற்கு, சூரிய ஒளி மின்சாரம் வழங்க முடிவு செய்தனர். இந்த உன்னத முயற்சிக்கு, பிற மாணவர்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக, கொஞ்சம் வித்தியாசமான நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இரவு நேரத்தில், கல்லூரி ஹாஸ்டலில், திடீரென மின்சாரத்தை துண்டித்தனர். மின்சாரம் இல்லாததால், மாணவர்கள் தவித்து, சத்தம் போட்டு ரகளை செய்யவும், மீண்டும் மின்சாரத்தை வழங்கினர். ரகளை செய்தவர்கள் மத்தியில் பேசிய மாணவர் ஒருவர், "10 நிமிட நேரம், மின்சாரம் இல்லாததற்கே இப்படி சத்தம் போடுகிறீர்களே, ஆண்டாண்டு காலமாக மின்சாரம் இல்லாமல் எத்தனையோ கிராமங்கள், அந்த கிராமங்களில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் அவதிப்படுவதை பற்றி ஏன் கவலைப்படுவதில்லை..." என, கேட்டார்.

மனம் வருந்திய மாணவர்கள், ஒவ்வொருவரும், தலா, 10 ரூபாய் கொடுத்து, சேர்ந்த பணத்தை கொண்டு, மற்றொரு கிராமத்திற்கு, சோலார் விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஒரு சோலார் விளக்கிற்கு, 4,000 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை, 106 கிராமங்களில், 4,000 சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா மட்டுமின்றி, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், கர்நாடகா மாநிலங்களிலும், மும்பை, எச்.ஆர்., கல்லூரி மாணவர்கள், சோலார் விளக்குகளை பொருத்தி, புரட்சி ஏற்படுத்தி வருகின்றனர்.

"புராஜெக்ட் சிராக்" என, பெயரிடப்பட்டுள்ள இந்த மாணவர் அமைப்பில், மும்பை நகர கல்லூரிகளின் பெரும்பாலான மாணவர்கள், உறுப்பினர்களாக மாறி வருகின்றனர். நல்ல நோக்கத்திற்காக பாடுபடும் மாணவர்களுக்கு, பல நிறுவனங்களும் பணம் கொடுத்து உதவுகின்றன.

கிடைக்கும் பணத்தை கொண்டு, மின்சார வசதி இல்லாத கிராமங்கள், வீடுகளுக்கு சோலார் மின் விளக்கு வசதிகள் செய்து கொடுக்கின்றனர்.

இளைய தலைமுறையினரை மழுங்கடிக்கும் இணையதளங்கள்


"இணையதள தொழில்நுட்ப வசதி காரணமாக, இன்றைய இளைய தலைமுறையினரின் மூளை, மழுங்கடிக்கப்படுகிறது. எந்த ஒரு விஷயத்தையும், அறிந்து கொள்வதற்கு, அவர்களின் கைகள், "கூகுளை" தான், நாடுகின்றன. இதனால், இன்றைய தலைமுறையினர், சிந்திக்கும் ஆற்றல் அற்றவர்களாக மாறி வருகின்றனர்," என, பிரபல பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர், கூறியுள்ளார்.

பிரபல பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர், டிரேவர் பெய்லீஸ். பேட்டரி, மின்சாரம் இல்லாமல், கைகளால் சுற்றி ரேடியோவை இயக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர். "டெய்லி மெயில்" என்ற ஆங்கில பத்திரிகைக்கு, அவர் அளித்துள்ள பேட்டி:

இன்றைய இளைய தலைமுறையினரின் போக்கு, எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது. எந்த ஒரு விஷயத்தையும், இணையதளம் மூலமாகவே, அறிய முயற்சிக்கின்றனர். "இது எப்படி சாத்தியம்; அது என்ன; இதை எப்படி செய்யலாம்" என்பது போன்ற, பல்வேறு கேள்விகளுக்கு, இன்றைய இளைஞர்கள், உடனடியாக, "கூகுள்" இணையதளத்தை தான், நாடுகின்றனர்.

ஒரு விஷயத்தை எப்படி செய்யலாம் என்பது பற்றி, அவர்கள் சிந்திப்பதும் இல்லை; கற்பனை செய்து பார்ப்பதும் இல்லை. இதனால், அவர்களின் மூளை, மழுங்கடிக்கப்பட்டு வறட்சியாகி வருகிறது. அனுபவ ரீதியாகவோ, செயல்முறை சார்ந்தோ, எந்த விஷயத்தையும் அவர்கள் செய்வது இல்லை.

இணையதளங்களால், தாங்களாக, சொந்தமாக எதையும் செய்ய முடியாதவர்களாக மாறி வருகின்றனர். இது, அபாயகரமான போக்கு. இணையதளங்கள், மொபைல் போன், கம்ப்யூட்டர் ஆகியவற்றின் உதவி இல்லாமல், அவர்களால் எதையும் செய்ய முடிவது இல்லை. முழுக்க முழுக்க, அவர்கள், இவற்றை சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அவற்றுக்கு அடிமையாகி வருகின்றனர்.

எனவே, பள்ளிகளில், குழந்தைகளுக்கான, கற்பித்தல் முறையில் மாற்றம் வேண்டும். குறிப்பாக, செயல்வழி கற்றல் நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும். சில மாதிரி பொருட்களை கொடுத்து, "ஒரு பாலத்தை, எப்படி கட்டுவது; இந்த கட்டடத்தை எப்படி வடிவமைப்பது" என, குழந்தைகளை செய்யும்படி கூற வேண்டும்.

எதிர்கால தலைமுறை, ஆரோக்கியமான, ஆற்றல் உள்ள தலைமுறையாக வளர்வதற்கு, இது தான் சிறந்த தீர்வாக அமையும்.இவ்வாறு, டிரேவர் பெய்லீஸ் கூறினார்.