Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 17 மார்ச், 2013

நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை, குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு


குற்றாலம் பகுதிகளில் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர்.

பலத்த மழை
நெல்லை மாவட்டம் அம்பை, கடையநல்லூர், புளியங்குடி, செங்கோட்டை, தென்காசி, குற்றாலம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் அடித்தது. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கசிந்தது. கடுமையான வெயிலால் இந்த பகுதிகளில் அதிக வெப்பம் இருந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு 9.45 மணிக்கு லேசான மழை பெய்ய தொடங்கியது. அதன் பிறகு 11 மணிக்கு மேல் நேற்று காலை வரை அவ்வப்போது பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று காலையிலும் சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தது.

அருவிகளில் வெள்ளம்:
குற்றாலம் மலைப் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் நேற்று காலை மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலிஅருவி மற்றும் குளிக்க தடை செய்யப்பட்ட செண்பகா தேவி அருவி, தேனருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் கொட்டியது. ஐந்தருவியில் பழுப்பு நிறத்தில் வெள்ளம் கொட்டியது. பழைய குற்றாலம் அருவி பகுதியில் நடந்து செல்லும் படிக்கட்டு வரை தண்ணீர் சென்றது.

வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்த சுற்றுலா பயணிகள் ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவிக்கு சென்று குளித்தனர். இந்த மழையால் தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக