Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 15 ஜனவரி, 2013

ஆனைமலை, முதுமலை சரணாலய பகுதிகளுக்கு கடிவாளம்!


ஆனைமலை, முதுமலை வனவிலங்கு சரணாலயங்களை ஒட்டிய 10 கி.மீ., சுற்றளவு பகுதிகள், சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக (இகோ- சென்சிடிவ்) விரைவில் அறிவிக்கப்படுகின்றன. இது குறித்த பரிந்துரைகளை, பிப்., 15ம் தேதிக்குள் தாக்கல் செய்ய, மாநில வனத்துறைக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் உள்ள வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களின் அருகில் உள்ள பகுதிகளில், அபரிமித வளர்ச்சியடைந்து வருகின்றன.
இதனால், காடுகள் அழிப்பு, வனவிலங்கு நடமாட்டத்துக்கு இடையூறு, மனித - வன உயிரின மோதல் என பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
காடு வளம் குறைவதால், மழை குறைந்து பருவநிலை மாற்றம், கடும் வறட்சி, குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில், வளர்ச்சித் திட்டங்களுக்கு கடிவாளமிடும் விதத்தில், முக்கிய தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள் அருகே, 10 கி.மீ., சுற்றளவில் உள்ள பகுதிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக, கடந்த 2011ம் ஆண்டு, ஒவ்வொரு மாநில வனத்துறைக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால், பெரும்பாலான மாநிலங்களில் போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்பதால், தற்போது மீண்டும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.இது தொடர்பாக, முதன்மை வன உயிரின காப்பாளர்களுக்கு, மத்திய வனம் மற்றும் சுற்றுலாத் துறை வன உயிரின பிரிவு டி.ஐ,ஜி., விவேக் சக்சேனா அனுப்பியுள்ள கடிதத்தில், "தேசிய பூங்காக்கள் மற்றும் வன உயிரின காப்பகங்கள் அருகில் உள்ள சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் குறித்த பரிந்துரை அளிக்க இறுதி வாய்ப்பு தரப்படுகிறது. வரும் பிப்., 15ம் தேதிக்குள் பரிந்துரை அளிக்க வேண்டும்' என, "கெடு' விதிக்கப்பட்டுள்ளது.

வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தை பொறுத்தவரை, எட்டு வனவிலங்கு சரணாலயங்கள், ஐந்து தேசிய பூங்காக்கள், மூன்று புலிகள் காப்பகங்கள், நான்கு யானைகள் காப்பகங்கள், 12 பறவை சரணாலயங்கள், மூன்று வன உயிரின மண்டலங்கள் உள்ளன.

சூழல் முக்கியத்துவம் வாய்ந்த தேசிய பூங்காக்கள் மற்றும் வன உயிரின சரணாலயங்கள் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ளன.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை ஆகியவை, வனவிலங்கு சரணாலயம், தேசிய பூங்கா, புலிகள் காப்பகம், யானைகள் காப்பகம் என பல்வேறு பரிமாணங்களை கொண்டுள்ளதால், அதிமுக்கியத்துவம் வாய்ந்த சூழல் பகுதிகளாக உள்ளன.

இப்பகுதிகள் ஏற்கனவே சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக தான் உள்ளன. எனினும், அருகில் உள்ள 10 கி.மீ., சுற்றளவு பகுதிகள் முறைப்படி, "இகோ-சென்சிடிவ்' என, மத்திய வனத்துறையால் அறிவிக்கப்படும்போது, வளர்ச்சித் திட்டங்கள் தடை செய்யப்படும்; சுற்றுலா திட்டங்களும் முறைப்படுத்தப்படும்.குறிப்பாக, கல்குவாரி பணிகள், மர அறுவை மில்கள்,
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் தொழிற்சாலைகள், வணிக ரீதியில் விறகு பயன்பாடு, நீர்-மின் திட்டங்கள், திடக்கழிவுகளை இயற்கை
நீர் ஆதாரங்களில் வெறியேற்றுதல் போன்றவற்றுக்கு முழுமையாக தடை விதிக்கப்படும்.

மரம் வெட்டுதல், ஓட்டல்கள் - விடுதிகள், விவசாயம், ஆழ்குழாய் கிணறு, மின் கம்பம், வேலி அமைத்தல், பிளாஸ்டிக் - பாலித்தீன் பயன்பாடு, சாலை அகலப்படுத்துதல், இரவு நேர வாகன போக்குவரத்து போன்றவை முறைப்படுத்தப்படும்.இவ்வாறு, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக