Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 23 அக்டோபர், 2012

வேலைக்காக மும்பைக்கு அழைத்து செல்லப்பட்ட 17 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

கடலூர் மாவட்டத்திலிருந்து வேலைக்கு அழைத்து செல்லப்பட்ட 17 பழங்குடி இன சிறுவர், சிறுமியர்கள் மும்பையில் மீட்கப்பட்டனர்.பழங்குடி இருளர் மக்கள் கடலூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.

திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த மரியநாதன், சின்னத்தம்பி, கோவிந்தன், ராஜா ஆகியோர் கடலூர் சங்கொலிக்குப்பம் பகுதியில் இருளர் மக்களிடம் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினர்.மும்பையில் கவரிங் நகை செய்யும் வேலை. பிள்ளைகளை அனுப்புங்கள். மாத சம்பளம் 4,500 உங்கள் பெயருக்கு அனுப்பி விடுகிறோம். முன் பணமாக 5 ஆயிரம் தருகிறோம் என்றனர். ஆசை வார்த்தையை நம்பிய இருளர் மக்கள் தங்கள் 17 பிள்ளைகளை கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் மும்பைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் மும்பை மலாடு என்ற பகுதியில் வாடகை வீடு ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கவரிங் நகைகள் செய்யும் வேலையில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 3 மாதங்கள் கழிந்த நிலையில் சம்பளம் வரவில் லை, பிள்ளைகளுடனும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்திருந்த நிலையில் டி.எஸ்.பேட்டையை சேர்ந்த கண்ணப்பன், சுப்பிரமணியம், ஆகியோருக்கு மும்பை ஏஜன்டுகள் போன் மூலம் தொடர்பு கொண்டு உங்கள் பிள்ளைகளை காணவில்லை எனக்கூறி தொடர்பை துண்டித்துவிட்டனர்.

இதைத் தொடர்ந்து சர்ப்பம் இருளர் தொழிலாளர் சங்கம் மூலம் கடந்த 17ம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூவை சந்தித்து குழந்தைகளை மீட்டு தருமாறு மனு அளித்தனர். குழந்தைகளை மீட்க வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் அடங்கிய தனிக்குழு அமைக்கப்பட்டது. அப்போது மும்பையில் காணவில்லை எனக்கூறப்பட்ட 3 சிறுவர்களும் டி.எஸ்.பேட்டைக்கு வந்தனர். அவர்களிடமிருந்து போன் நம்பர்களை பெற்ற தனிக்குழுவினர் மும்பையில் சிறுவர்கள் வேலை செய்து வந்த கம்பெனிகளை தொடர்பு கொண்டனர். உடனே அனைவரையும் சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள். இல்லை என்றால் சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். அதைத் தொடர்ந்து அங்கிருந்த 14 சிறுவர், சிறுமிகள் கடந்த 20ம் தேதி ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு அவர்கள் அனைவரும் 21ம் தேதி வேலூர் காட்பாடி வந்து அங்கிருந்து நேற்று காலை கடலூர் வந்து சேர்ந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக