Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 30 ஜூலை, 2013

60 ஆண்டுகால போராட்டம் முடிவுக்கு வருகிறது : நாட்டின் 29 - ஆவது மாநிலமாக தெலுங்கானா உருவாகிறது


ஆந்திராவை பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், காங்கிரஸ் காரியக் கமிட்டியும் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.இதனால் நாடாளுமன்ற ஒப்புதல் மற்றும் சம்பிரதாய சட்ட நடைமுறைகளுக்கு பின்னர் தெலுங்கானா மாநிலம் உருவாவது உறுதியாகிவிட்டது.

தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க ஒப்புதல் அளிப்பது என்ற முடிவுக்கு காங்கிரஸ் தலைமை முன்னரே வந்துவிட்டது. ஆனால் ஆந்திர முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்களில் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இன்று காலை இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் மூத்த அமைச்சர்களுடன் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.

அப்போது ஏற்கனவே தீர்மானித்தபடி, இன்று மாலை நடைபெற உள்ள காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் இறுதி முடிவெடுப்பது என்றும், அதற்கு முன்னதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கூட்டி, தெலுங்கானா மாநிலத்திற்கு ஒப்புதலை பெறுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒப்புதல் 
அதன்படி அஜித் சிங், சரத் பவார் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பலர் பங்கேற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தெலுங்கானா மாநிலம் அமைக்க ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜித் சிங் இத்தகவலை தெரிவித்தார்.

காங்கிரஸ் காரியக் கமிட்டி ஒப்புதல் 
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் கூடியது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, நிதியமைச்சர் ப.சிதம்பரம், கட்சி பொதுச் செயலாளர் திக்விஜய் சிங், சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் தனித் தெலுங்கானா மாநிலத்திற்கு ஒப்புதல் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 தெலுங்கானா மக்கள் மகிழ்ச்சி 
இதனிடையே தனித் தெலுங்கானா மாநிலத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது குறித்து தெலுங்கானா பகுதி மக்களும்,  தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சித் ( டிஆர்எஸ்) தலைவர் சந்திரசேகர ராவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அப்பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. அதே சமயம் தலைநகர் ஹைதராபாத்தை விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரவை கூட்டம் 
இந்நிலையில் தனித் தெலுங்கானா மாநிலத்திற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், காங்கிரஸ் கட்சியும் ஒப்புதல் அளித்துள்ளதை தொடர்ந்து, மத்திய அமைச்சரவை நாளை கூடி இது தொடர்பாக விவாதிக்க உள்ளது.

ஹைதராபாத்
இக்கூட்டத்தில் தலைநகர் ஹைதராபாத் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. ஹைதராபாத்தை ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டப்படி சில ஆண்டுகளுக்கு இரு மாநிலங்களின் கூட்டுத் தலைநகராக வைத்துக்கொள்வது மற்றும் ஹைதராபாத்தை யூனியன் பிரதேசமாக மாற்றுவது ஆகிய அம்சங்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, 27 ஜூலை, 2013

பொள்ளாச்சியில் கீரை விலையை கேட்டு மக்கள் அதிர்ச்சி

அனைவரும் விரும்பி சாப்பிடும் கீரையின் விலை அதிகரித்துள்ளதால் மக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். கீரைகளில் பல சத்துகள் இருப்பதால் அன்றாட உணவில் இது நிச்சயம் இடம் பிடிக்கிறது. முருங்கை கீரை, வல்லாரை கீரை, சிறு கீரை, பாலாக்கீரை, சுக்கிட்டி கீரை, பொன்னாங்கன்னி கீரை, வெந்தய கீரை, தண்டங்கீரை, அகத்தி கீரை, உள்ளிட்டவை மார்க்கெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பகுதிக்கு உடுமலை, செஞ்சேரிமலை மற்றும் கேரள பகுதிகளில் இருந்து கீரை விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

பொள்ளாச்சி சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கடைகளிலும், ரோடுகளிலும், தள்ளு வண்டிகளிலும் கீரை விற்பனை செய்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன் வெறும் ரூ.3-7 வரை ஒரு கட்டு கீரை விற்பனை செய்யப்பட்டிருந்தது. ஆனால், தற்போது கீரையின் விலை இரு மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு கட்டு கீரை ரூ.10-15 வரை விற்பனை செய்யப்படுகிறது. விலையை கேட்டவுடன் மக்கள் ஓட்டம் பிடிக்கும் நிலையுள்ளது.

இதுகுறித்து வியாபாரி ரவீந்திரன் கூறியதாவது:பொள்ளாச்சி சுற்றுப்புற பகுதிக்கு உடுமலை, கேரளப்பகுதியில் இருந்து கீரை வரத்துள்ளது. கடந்தாண்டை ஒப்பிடும் போது இந்தாண்டு விலை இரு மடங்காக அதிகரித்துள்ளது. சில கீரைகளுக்கு தட்டுப்பாடு இருக்கும் போது ரூ.20க்கும் விற்பனை செய்வதுண்டு.வாடிக்கையாளர்களால் இதை ஏற்று கொள்ள முடியவில்லை. விலையை கேட்டு விட்டு திரும்பி செல்கின்றனர். இதற்கு காரணம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பஸ் கட்டணம் அதிகரிப்பு ஆகும். கொள்முதல் விலை அதிகரித்துள்ளதால் மக்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலையுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

நடப்பாண்டில் 50,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு: ப. சிதம்பரம்

மானாமதுரையில் இந்தியன் வங்கியின் 2110வது கிளையை மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர்,"நாட்டில் 80 லட்சம் சுயஉதவி குழுக்களுக்கு 86 கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் கல்வி கடனாக 50 ஆயிரம் கோடி ரூபாய் 25 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணையின் விலை பேரலுக்கு 108 டாலராக உயர்ந்து விட்டது. 100 டாலருக்குள் இருந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும், கச்சா எண்ணை இறக்குமதியும் 70 சதவிகிதமாக உயர்ந்து விட்டது. 

பொருளாதார வளர்ச்சியில் மற்ற நாடுகள் பின்தங்கியுள்ள நிலையில் இந்தியா சீனாவிற்கு அடுத்தபடியாக தொடர்நது 2வது இடத்தில் உள்ளது. 9 சதவிகிதமாக இருந்த வளர்ச்சி 5 ஆக உள்ளது அடுத்தாண்டிற்குள் 6 சதவிகிதமாக உயரும் என நம்புகிறேன் என்று குறிப்பிட்ட அவர் அதனைத் தொடர்ந்து மிளகானூர் கிராமத்தில் ஓரியண்டல் வங்கியின் 2010 வது கிளையை திறந்து வைத்து..," நடப்பாண்டில் 8,000 வங்கி கிளைகள் துவங்கப்படவுள்ளன. இதனால் 50,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்"  என உறுதிப்படக் கூறினார்.

வெள்ளி, 26 ஜூலை, 2013

குண்டு தயாரிக்கும் ஆர்.எஸ்.எஸ். : திக்விஜய் சிங்

மத்திய பிரதேச சட்டசபைக்கு, விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில், அங்கு முகாமிட்டுள்ள திக்விஜய் சிங், நேற்று, பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு, வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி அளிக்கிறது. இதை நான் யூகத்தின் அடிப்படையில் சொல்லவில்லை,
உண்மையாகவே கூறுகிறேன். 


1992ம் ஆண்டு, இந்த மாநிலத்தில், பா.ஜ., ஆட்சி நடந்து கொண்டிருந்த போது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், சேவா பாரதி இல்லத்தில், குண்டு வெடித்தது. அதில் ஒருவர் இறந்தார்.அந்த வழக்கை, பா.ஜ., மூடிவிட்டது. 1993ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், குண்டுவெடிப்பு தொடர்பாக,சங் பரிவார் அமைப்பை சேர்ந்த ஒருவர், கைது செய்யப்பட்டார். அது போல், 2004ல், மோவா என்ற இடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டவர், தனக்கு, ஆர்.எஸ்.எஸ்., சில் குண்டு தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட்டதாக கூறினார். இவ்வாறு, திக்விஜய் சிங் கூறினார்.

வியாழன், 25 ஜூலை, 2013

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பதர் சயீத் தொடர்ந்துள்ள வழக்கு எதிர் மனு தாரராக சேர்க்க கோரும் பேராசிரியர் கே.எம்.கே.மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது

இஸ்லாத்தை சேர்ந்த பெண்களுக்கு விவாகரத்து போன்ற பிரச்சினைகளில் தங்களை பாதுகாக்க சட்டப் பூர்வமான உரிமைகள் இல்லை என்றும், மனைவிக்கு தெரியாம லேயே கணவன் தலாக் கூறி காஜிகளிடம் மணமுறிவுக்கான சான்றிதழ் பெற்றுவிடுகிறார் என்றும் எனவே மணமுறிவு சான்றிதழ் வழங்க காஜி களுக்கு அதிகாரம் இல்லை என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும், முன்னாள் வக்ஃப் வாரிய தலைவருமான பதர் சயீத் ஜுன் 5ம் தேதி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கில் மத்திய அரசு சட்டம் மற்றும் நீதித்துறை செயலாளர், தமிழக அரசு பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நலத்துறை செயலாளர், தமிழக தலைமை காஜி ஆகியோர் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள னர்.

""""பதர் சயீத் தொடர்ந்துள்ள வழக்கு, பள்ளிவாசலை மைய மாகக்கொண்டு செயல்படும் மஹல்லா ஜமாஅத்தை சீர் குலைக்கவும், ஷரீஅத் சட்டத் திற்கு பதிலாக பொது சிவில் சட்டத்தை ஊக்குவிக்கவும் செய்யும் முயற்சி என்றும் எனவே இதனை முறியடிக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீகும் தன்னை ஒரு தரப்பினராக இணைத்து இந்த வழக்கை எதிர் கொள்ளும்"" என பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிவித்திருந்தார்.

அதன்படி இந்த வழக்கில் தன்னையும் எதிர் மனுதாரராக சேர்க்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜுலை 3ம் தேதி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

அதில் அவர் """" மத சிறுபா ன்மையினர் விஷயங்களில் எனக்குள்ள ஈடுபாடு காரண மாக இந்த ரிட் மனுவில் எனக்கு அக்கறை உண்டு. ஷரீஅத் அனைத்து முஸ்லிம் களையும் கட்டுப்படுத்தக் கூடியது. ஷரீஅத் சட்டப்படிதான் காஜிகள், ஙாயிப் காஜிகள், என்ற பள்ளிவாசல் இமாம்கள் திருமணங்களை பதிவு செய் கிறார்கள். தனியார் சட்டங்கள் அத்தியாவசிய தேவை என்பதோடு அவை எல்லா மதிப்புடனும் பாதுகாத்து பேணப்படுகின்றன. பதர் சயீத் வழக்கில் நான் எதிர் மனு தாரராக ஏற்றுக் கொள்ளப் பட்டால் சிறுபான்மை சமுகத்தி னரின் தனியார் சட்டம் குறித்த மிக முக்கியமான -உணர்வு பூர்வமான விஷயங்களை நீதிமன்றத்தில் என்னால் சமர்ப்பிக்க முடியும். எனவே என்னை நான்காவது எதிர் மனு தாரராக இணைக்கக்கோரி நீதியை நிலைநாட்ட விழை கிறேன்.""- எனக்குறிப் பிட்டுள்ளார்.

இந்த வழக்கை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் கே. அசோக்குமார்,கே. கணேசன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள னர். இந்த வழக்கு தொடர்பான அனைத்து பணிகளையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன் கவனித்து வருகிறார்.

இந்த வழக்கு அடுத்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

ஷாபானு வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அன்று அளித்த தீர்ப்பை தொடர்ந்து அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி ஷரீஅத் பாதுகாப்பு சட்ட மசோதா கொண்டு வந்த நிறைவேற இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மறைந்த தலைவர் ஜி.எம்.பனாத் வாலா தாக்கல் செய்த தனி நபர் மசோதாவே காரணம் என்பதும், அவரது வாதத்திற்கு அனைத்து ஆதாரங்களையும் திரட்டிக் கொடுத்தவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் என்பதும், இதற்கு பெரும் துணை புரிந்தவர் ஈரோடு தாவூதிய்யா அரபிக் கல்லூரி பேராசிரியர் மவ்லானா எம்.எஸ். உமர் ஃபாரூக் தாவூதி ஹஸரத் என்பதும் நினைவு கூறத்தக்கது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்ட திட்டங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்!

""முஸ்லிம் லீக்"" -இந்திய அரசியலில் வரலாற்றுப் பேரியக்கம் இயக்கங்கள் எத்தனை தோன்றினாலும் ""தாய்ச்சபை"" என்று முஸ்லிம் சமுதாயம் அரவணைப்பதும், """"சமுதாய பேரியக்கம்"" என மஹல்லா ஜமாஅத்துக்கள் அங்கீகரிப்பதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகை தான்.

சமுதாய அங்கீகாரம்
பள்ளிவாசல்கள் திறப்பு விழாக்களிலும், அரபிக்கல்லூரிகளின் பட்டமளிப்பு விழாக்களிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களையே சமுதாயம் அழைத்து கவுரவப்படுத்துவது இந்த இயக்கத்திற்குக் கிடைத்த தனிப் பெரும் பெருமை.

பிரச்சினைகளின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ன சொல்கிறது? என சமுதாயம் எதிர் பார்ப்பது எந்த இயக்கத்திற்கும் கிடைக்காத ஒன்று.

பள்ளிவாசலை மையமாகக் கொண்ட மஹல்லா ஜமாஅத் பெருமை காப்பாற்ற பட வேண்டும்- அது வலிமை பெற்றதாக -கட்டுப்பாடு மிக்கதாகத் திகழ வேண்டும் என்பதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது தலையாய லட்சியமாகக் கொண்டு செயல்படுகிறது.

எனவே தான் தனி பள்ளிவாசல்- போட்டி ஜமாஅத், இயக்கங்களின் பெயரால் திருமணப் பதிவேடு, தனி கபரஸ்தான், தொழுகைனளில் தனித்த அடையாளங்களை காட்டுவது என்பதை எல்லாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏற்பதில்லை.

மார்க்க விஷயங்களில் சங்கைக்குரிய உலமா பெருமக்களின் வழிகாட்டுதலையே சமுதாயம் பின்பற்ற வேண்டும் என்பதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுதியுடன் சொல்லுகிறது.

அதனால்தான், இந்த இயக்கம் பலம் பெற வேண்டும் என இந்த சமுதாயம் விரும்புகிறது. இந்த இயக்கத்தின் நடவடிக்கைகளும், வருங்கால தலை முறையை வழி நடத்தும் பண்பாடும் எத்தகையது என்பதை பார்த்து அறிந்து தெரிந்த காரணத்தால்தான் தங்கள் பிள்ளைகளும் இந்த இயக்கத்தில் இணைந்து செயல்பட ஆர்வம் காட்டுகிறது.

இவைகள் எல்லாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு சமுதாயம் அளித்த மிகப்பெரும் அங்கீகாரம்.

அரசியல் அங்கீகாரம்
1906 டிசம்பர் 31-ல் உருவாக்கப்பட்ட அகில இந்திய முஸ்லிம் லீக், முஸ்லிம்களின் கலாச்சார தனித்தன்மை, வக்ஃப் சொத்துக்களை பாதுகாத்தது, உருது மொழியை பாதுகாத்து வளர்த்தது, கல்வி-வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தது, இட ஒதுக்கீடு என்ற சொல்லையே இந்தியாவிற்கு அறிமுகப் படுத்தியது-இவை வரலாற்று பதிவுகள்.

இந்திய விடுதலைக்குப்பின் சோதனையான காலகட்டத்தில் முஸ்லிம் லீக் செயல்பாடு-எதிர்காலம் குறித்த வினாக்கள் தொடுக்கப்பட்டு வந்த வேளையில் 1948 மார்ச் 10 புதன் கிழமை சென்னை அரசினர் தோட்டத்திலுள்ள ராஜாஜி ஹாலில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் எம். முஹம்மது இஸ்மாயில் சாகிப், தாய்ச்சபையை """"இந்திய யூனியன் முஸ்லிம் லீக்"" ஆக மலரச்செய்தார்.

தேசிய ஒருமைப்பாடு-சமய நல்லிணக்கம்-சிறுபான்மையினரின் தனித்தன்மைகளை காத்தல் என்பதை பிரதானமான லட்சியமாகக் கொண்டு இந்த இயக்கம் செயல்படும் என்று அறிவித்தார்.

அதன்படி செயல்பட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்திய அரசியல் நிர்ணய சபை நாடாளுமன்ற மக்களவை- மாநிலங்களவை, சட்டமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் இடம் பெற்று சாதனை படைத்தது. மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அமைச்சரவையில் இடம் பெற்றது. கேரளாவில் சி.எச். முஹம்மது கோயா முதல்வராக பொறுப்பேற்று தனி வரலாறு படைத்தார்.

மஹ்பூபெ மில்லத் இப்ராஹிம் சுலைமான் சேட், முஜாஹிதெ மில்லத் குலாம் மஹ்மூது பனாத்வாலா, சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமது, முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உள்ளிட்ட தலைவர்கள் சமுதாய பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பி தனி முத்திரை பதித்தனர்.

இன்று இ.டி.முஹம்மது பஷீர், எம். அப்துல் ரஹ்மான் ஆகியோரின் வாதத்திறமைகள் ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலித்து வருகின்றன.

முதல் பாராளுமன்றத்திலிருந்து இன்று வரை அங்கம் வகிப்பது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என நாடாளுமன்ற 60-வது ஆண்டு விழாவில் தேசிய தலைவர் இ. அஹமது சாகிப் பதிவு செய்தது. நினைவு கூரத்தக்கதாகும்.

சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறையாக மத்தியில் 2004 மே 22-ம் தேதி பதவி ஏற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சராக இ. அஹமது சாகிப் பொறுப்பேற்றார்.

கேரளாவில் 2011 மே மாதம் நடைபெற்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 20 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்ததோடு 5 அமைச்சர்களும் இடம் பெற்றனர்.

அரசியலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு கிடைத்த அங்கீகாரத்தை பயன்படுத்தி நீதியரசர் ராஜேந்திர சச்சார் ஆணையம், நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா குழு, மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் பவுண்டேசன் உள்ளிட்ட எண்ணற்ற நன்மைகளை பெற்று தந்துள்ளது. இந்திய தேர்தல் ஆணைய அங்கீகாரம்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில பெயர்களோடு செயல்பட்டு வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரே பெயரில் இயங்குவது என 2008 செப்டம்பர் 14-ல் புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய செயற்குழு முடிவு எடுத்ததை தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இதனை தொடர்ந்து முஸ்லிம் லீக் கேரள மாநில கமிட்டி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆனது.

இந்திய தேர்தல் ஆணையம் 2012 மார்ச் 3-ம் தேதி புதுடெல்லியில் அசோகா சாலையில் உள்ள நிர்வாச்சன் சதன் அலுவலகத்திலிருந்து வெளியிட்ட உத்தரவு இன்ப அதிர்ச்சியை தந்தது.

"""" முஸ்லிம் லீக் கேரள மாநில கமிட்டி என்னும் பெயரில் இயங்கி வந்த அரசியல் கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீகுடன் இணைக்கப்பட்டுவிட்டது. ஒன்றாகி உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுகிறது. முஸ்லிம் லீக் கேரள மாநில கமிட்டி என்னும் அரசியல் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஏணி சின்னம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஒதுக்கப்படுகிறது.""

இதுதான் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு. இந்த உத்தரவில் இன்னொரு விஷயத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருந்தது.

"""" தமிழ்நாட்டைச் சேர்ந்த தாவூது மியாகான், உத்திர பிரதேசத்தை சேர்ந்த பசீர் அஹமதுகான் (இவரைத்தான் தலைவர் என ஃபாத்திமா முஸப்பர் சொல்லி கொள்கிறார்). ‘தனி நபர்கள் என்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லாத இவர்கள் இக்கட்சி பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது என்ற முற்றுப்புள்ளிதான் அது’.

இந்த உத்தரவில் தேர்தல் ஆணையத்தின் அன்றைய தலைமை ஆணையர் எஸ்.ஒய். குரைஷி, ஆணையர்கள் எச்.எம். பிரம்மா, வி.எஸ்.சம்பத் ஆகிய மூவரும் கைbழுத்திட்டிருந்தனர்.

அதன் பின் 14-03-2012 அன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில்"இந்திய யூனியன் முஸ்லிம் லீக்" அங்கீகரிக்கப்படுவதாகவும், ஏணி சின்னம் ஒதுக்கப்படுவதாகவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைமையகமாக சென்னை-600 001, மரைக்காயர் லெப்பை தெரு 36-ம் இலக்கத்திலுள்ள காயிதே மில்லத் மன்ஸில் செயல்படும் என்றும் இந்த அறிவிப்பை இந்தியாவின் அனைத்து மாநில தேர்தல் ஆணையர்களும் அரசிதழில் வெளியிட்டு அதன் நகலை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அறிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற மக்களவை 2012 ஜுன் 27-ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையில் """"லோக் சபாவில் முஸ்லிம் லீக் கேரள ஸ்டேட் கமிட்டி’ என்ற பெயரில் இயங்கி வந்த கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீகுடன் இணைந்துள்ளது அங்கீகரிக்கப்படுகிறது. இனி அதன் உறுப்பினர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று அறியப்படுவார்கள் என லோக் சபா தலைவர் திருமதி மீராகுமார் 22-06-2012-ல் தனது ஆணையில் தெரிவித்துள்ளார் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இப்போது மகிழ்வின் உச்சகட்டம்
2013 ஜுலை 15-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சட்டதிட்டங்களை (CONSTITUTIONAL OF IUML) அங்கீகரித்து அறிவித்துள்ளது.

இந்தியாவின் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என 34 உள்ளன. இதில் 22 மாநிலங்களில் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன.

நாட்டில் மொத்தமுள்ள 1392 பதிவு செய்யப்பட்ட கட்சிகளில்

1) இந்திய தேசிய காங்கிரஸ், (2) பாரதீய ஜனதா, (3) இந்திய கம்யூனிஸ்ட், (4) மார்க்சிய கம்யூனிஸ்ட், (5) தேசிய வாத காங்கிரஸ், (6) பகுஜன் சமாஜ் பார்டி ஆகிய ஆறு கட்சிகள் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் ஆகும்.

22 மாநிலங்களில் 49 கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாகும்.

தமிழ்நாட்டில் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க.,தே.மு.தி.க., ஆகியவை அங்கீகரிக்கப்பட்டவை.

கேரளாவில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகியவை அங்கீகரிக்கப்பட்டவை.

இந்தியாவிலேயே முஸ்லிம் என்ற பெயரில் இயங்கும் ஒரே கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டுமே.

இதை விட வேறு என்ன பெருமை வேண்டும்.

-காயல்மகபூப்

புதன், 24 ஜூலை, 2013

டிப்ளமோ படித்தவர்களை பொறியியல் படிக்க அழைக்கிறது சிபெட்(CIPET )

மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிலையம் (சிபெட்)பொறியியல் படிப்புகளுக்கு, டிப்ளமோ படித்தவர்களுக்கான லேட்டரல் என்ட்ரி சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்
பி.டெக். (பிளாஸ்டிக் டெக்னாலஜி)
பி.இ. (மேன்யூபேக்சரிங் இன்ஜினியரிங்)

தகுதி
பிளாஸ்டிக் டெக்னாலஜி படிப்புக்கு பிளாஸ்டிக், பாலிமர், பிளாஸ்டிக்ஸ் மோல்ட், கெமிக்கல் டெக்னாலஜி போன்றவற்றில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

மேன்யூபேக்சரிங் இன்ஜினியரிங்  படிப்புக்கு மெக்கானிக்கல், புரொடக்சன் இன்ஜினியரிங், ஆட்டோமொபைல், மெட்டலர்ஜி, மெக்கட்ரானிக்ஸ்  போன்றவற்றில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை 30 ஜூலை 2013குள் அனுப்ப வேண்டும்.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.cipet.gov.in என்ற இணையதளத்தை காணவும்.