Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 20 ஏப்ரல், 2013

ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்கில் பி.டெக் படிப்பு


இந்திய அரசின் விண்வெளி துறையின் கீழ் இயங்கும் திருவனந்தபுரத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜியில் பி.டெக்., படிப்பிற்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பி.டெக்., ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், ஏவியனிக்ஸ், பிசிகல் சயின்ஸ் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.

கல்வித்தகுதி: இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். +2வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜெஇஇ தேர்வில் தகுதி பெற்ற பின் ஜெஇஇ(மெயின்) 2013 தேர்வு நடத்தப்பட்டு அதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: +2வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும், ஜெஇஇ மெயின் தேர்வில்  60 சதவீத மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: www.iist.ac.in என்ற இணையதளத்தில் இருந்து ஆன்லைன் வழியாக மே 17ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்கள் அறிய கல்வி நிறுவன இணையதளத்தை அணுகலாம்.

இளநிலை ஹோமியோபதி படிப்பு


கொல்கத்தாவில் உள்ள தேசிய ஹோமியோபதி கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டப் படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்நிறுவனத்தில் இளநிலை பட்டப் படிப்பான பி.எச்.எம்.எஸ் வழங்கப்படுகிறது. இதன் கால அளவு ஐந்தரை ஆண்டு ஆகும். அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

பி.எச்.எம்.எஸ் படிப்புக்கு12ம் வகுப்பில் (இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம்) ஆகிய பாடப் பிரிவை எடுத்து படித்திருக்க வேண்டும். மேலும் பொதுப்பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 17 வயது நிரம்பியராகவும், 26 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் அவசியம்.

விண்ணப்பங்களை கல்வி நிறுவன இணையதளத்திலிருந்து பதிவிறக்கம்  செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பொதுப்பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் இலவசம்.

மே 10 விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெற உள்ளது.

மேலும் விரிவான தகவல்களுக்கு www.nih.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

இந்திய ரிசர்வ் வங்கி - ன் இளம் மாணவர்கள் பரிசுத்திட்டம்


இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ., ) இந்திய வங்கித்துறை மற்றும் ஆர்.பி.ஐ.,  மீதான ஆர்வத்தையும் , விழிப்புணர்வையும் ஏற்படுத்த ஆர்.பி.ஐ., இளம் மாணவர்கள் பரிசுத்திட்டத்தை துவங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஆர்.பி.ஐ.,  நாடெங்கிலுமான  போட்டித் தேர்வு வாயிலாக அதிகபட்சம் இளம் மாணவ மாணவிகளை தெரிவுசெய் தேர்வு செய்து மாணவர் உதவி தொகை வழங்க இருக்கிறது.

தகுதி: 
இந்தியாவில் எந்த அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலும் எந்தப்பாடதிலும் தமது பட்ட படிப்பைத் தொடரும் 18 லிருந்து 23 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகள் அனைவரும் போட்டித் தேர்வை எழுதத் தகுதி பெற்றவர்கள் ஆவர்.

தேர்வு ஆர்.பி.ஐ., மற்றும் இந்திய வங்கிகளின் பங்கு மற்றும் செயல்பாடுகளை மையமாக கொள்ளும். இத்தேர்வு ஆங்கிலத்திலும், பிற முக்கிய பிராந்திய மொழிகளிலும் நடைபெறும்.

தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆர்.பி.ஐ., யின் தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலகங்களில் 2 முதல் 3 மாதங்களுக்கு செயல் திட்டங்களில் பணியாற்ற வேண்டும், அந்த காலத்தில் தொகுப்பு உதவித்தொகையாக ஒவ்வொரு மாதமும் ரூ 7500/- வழங்கப்படும். வெளியூர் நபர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதிக்கு ஆர்.பி.ஐ., உதவும்.

பரிசாளர்களுக்குஆர்.பி.ஐ., யில் பணி நியமனம் கோர எந்தவித உரிமையும் இல்லை . முந்தைய ஆண்டுகள் எதிலும் ஆர்பிஐ இளம் மாணவர்கள் பரிசுத்திட்டத்தின் கீழ் தகுதி பெற்று ஆர்.பி.ஐ., யில் பணிபுரிந்தவர்கள் எவரும் மீண்டும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் அல்ல.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
செயல் திட்ட ஒருங்கிணைப்பாளர்,
ஆர்.பி.ஐ., இளம் மாணவர் பரிசுத் திட்டம்,
செயல் திட்டம் எண் 9277
அஞ்சல் பெட்டி எண் 7639
மலாட்(மேற்கு), மும்பை

ஆர்.பி.ஐ., இளம் மாணவர் பரிசு திட்டம் பற்றிய கூடுதல் விவரங்கள் ஆர்.பி.ஐ., இணைய தளம் www.rbi.org.in , "எம்ப்லாய்மென்ட் நியூஸ்" மற்றும் "ரோஜ்கார் சமாச்சார்" பத்திரிக்கைகளிலும் கிடைக்கிறது.

கம்ப்யூட்டர் ஆபீஸ் ஆட்டோமேஷன் தேர்வு தமிழகத்தில் ஜூன் 22ம் தேதி ஆரம்பம்

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வரும் ஜூன் மாதம் 22ம் தேதி கம்ப்யூட்டர் ஆபீஸ் ஆட்டோமேஷன் தேர்வுகள் ஆரம்பமாகிறது.தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டு தோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் கம்ப்யூட்டர் ஆபீஸ் ஆட்டோமேஷன் சான்றிதழ் தேர்வு நடத்தப்படுகிறது.

 வரும் ஜூன் மாதத்திற்குரிய தேர்வுகள் 22ம் தேதி மற்றும் 23ம் தேதிகளில் நடக்கிறது. ஜூன் மாதம் 22ம் தேதி முதல் தாள் தேர்வு, 23ம் தேதி இரண்டாம் தாள் தேர்வும் தலா 2 மணி நேரம் நடக்கிறது.இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை வரும் மே மாதம் 10ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்ப கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் இளநிலை தமிழ் அல்லது ஆங்கிலம் டைப்ரைட்டிங் தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

அரசு துறைகளில் தட்டச்சர்கள், சுருக்கெழுத்து தட்டச்சர்களாக பணியாற்றுபவர்கள் கண்டிப்பாக கம்ப்யூட்டர் ஆபிஸ் ஆட்டோமேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதால் இத்தேர்வுக்கான பயிற்சி மையங்களில் ஆர்வத்துடன் பயிற்சி பெற்று வருகின்றனர்.இத்தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகிறது. இதில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வரும் ஜூன் மாதத்திற்கான தேர்வில் பங்கேற்கின்றனர்.

வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள்: இணையதளத்தில் தகவல் வெளியிட கவர்னர் உத்தரவு



வெளிநாட்டு கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் குறித்த தகவல்களை, இணையதளத்தில் வெளியிட வேண்டும் என, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்திற்கு, கவர்னர் ரோசய்யா அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக மாணவர்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பு படிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன், ஒப்பந்தங்களை செய்துள்ளன. இந்நிலையில், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களின் நிலையை, அறிய வேண்டிய கட்டாயம் உள்ளது.

குறிப்பிட்ட கல்வி நிறுவனங்கள், அந்த நாட்டு அரசுகளிடம் பெற்றுள்ள அங்கீகாரம் குறித்து, உயர்கல்வி மன்றம் ஆய்வு செய்ய வேண்டும். அதுகுறித்த அறிக்கையை, உயர்கல்வி மன்ற இணையதளத்தில், வெளியிட வேண்டும். மாணவர்களுக்கு வழிகாட்ட, இப்பணியை, செய்ய வேண்டும். இவ்வாறு, கவர்னர் கூறியுள்ளார்.

வியாழன், 18 ஏப்ரல், 2013

மதுரை அரசு மருத்துவமனையில் தாகம் தணிக்க தண்ணீரின்றி நோயாளிகள் தவிப்பு

மதுரை அரசு மருத்துவமனையில் குடிநீர் பற்றாக்குறையால், நோயாளிகளும், உறவினர்களும் தண்ணீரை தேடி அலைகின்றனர். இதன்காரணமாக, தண்ணீர் விற்பனை அதிகரித்துள்ளது.தினமும் பத்தாயிரம் பேர் வந்து செல்லும் மருத்துவமனையில், இரண்டு இடங்களில் தான் குடிநீர் வசதி உள்ளது. அதில், ஒன்று பழுதடைந்துள்ளது. மகப்பேறு இடத்தில் உள்ள குடிநீர் குழாய், உட்பகுதியில் இருப்பதால் பிற வார்டு நோயாளிகளுக்கு தெரிவதில்லை. அடிக்கும் வெயிலில் ஒரு நாளைக்கு கண்டிப்பாக மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒரு சொட்டு தண்ணீருக்கு, நோயாளிகள் வெளியே உள்ள தண்ணீரைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது.இதை பயன்படுத்திக் கொண்ட தனிநபர்கள், டிரைசைக்கிளில் "மினரல் வாட்டர்' என்ற பெயரில், ஒரு லிட்டர் ரூ.3, இரண்டு லிட்டர் ரூ.5க்கு தண்ணீரை விற்கின்றனர். "இது சுத்தமான குடிநீரா' என தெரியவில்லை. சுகாதாரமில்லாத தண்ணீரை குடிப்பதால் வயிற்றுப் போக்கு, டைபாய்டு காய்ச்சல் வரும் அபாயம் உள்ளது. உடல்நலமின்றி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், சுகாதாரமில்லாத தண்ணீரை குடித்தால் நிலைமை என்னவாகும்? அடிப்படை தேவையான தண்ணீர் வசதியை கூட நிறைவேற்றாவிட்டால், சிகிச்சை அளித்து என்ன பயன்? இதுகுறித்து பலமுறை தெரிவித்தும், மருத்துவமனை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தண்ணீரின்றி நோயாளிகள் மயங்கி விழுமுன், நடவடிக்கை எடுக்க வேண்டும் .

மாணவர்கள் சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் படிக்கவேண்டும் : அலாவுதீன் ஐ.ஏ.எஸ்.


பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி ஆண்டு விழா  நடந்தது. கல்லூரி தாளாளர் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி தலைமை தாங்கினார். ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கே.ஏ.மீரான் மைதீன், எம்.கே.எம்.முகமது நாசர், வாவு செய்யது அப்துல் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முகமது சாதிக் வரவேற்று பேசினார்.

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அலாவுதீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கல்லூரி விழா மலரை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

சேவை செய்யும் வாய்ப்பு
நான் ஐ.ஏ.எஸ். பணியை நெல்லையில் உதவி கலெக்டராக இருந்து தொடங்கினேன். ஐ.ஏ.எஸ்.தேர்வில் தேசிய அளவில் 6–வது இடம் பெற்றேன். அலாவுதீன் கையில் இருந்த அற்புத விளக்கு ஐ.ஏ.எஸ். தேர்வு தான். இந்த பணி எனக்கு மக்களுக்கு நேரடியாக சேவை செய்யும் வாய்ப்பை அளித்தது. இந்த கல்லூரி 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை உருவாக்கி உள்ளது.

நான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக டெல்லி சென்ற போது அங்குள்ள அதிகாரிகள், நீங்கள் அற்புத விளக்கை தேய்க்கிறீர்கள், பூதம் வருகிறது, அப்போது என்ன 3 வரம் கேட்பீர்கள்? என்று கேட்டனர். அதற்கு நான் உலக அமைதி, இந்திய முன்னேற்றம், முன்றாவதாக எனக்கு ஐ.ஏ.எஸ். வெற்றி ஆகியவற்றை கேட்பேன் என்று கூறினேன். அப்போது எனது பதிலை கேட்டு என்னை தேர்ந்தெடுத்தனர்.

சாதிக்க முடியும்

பல்கலைக்கழக தேர்வுக்கும், ஐ.ஏ.எஸ். தேர்வுக்கும் வித்தியாசம் உண்டு. பல்கலைக்கழக தேர்வில் 40 சதவீதம் தேர்ச்சி பெற்றால் போதும். ஆனால் ஐ.ஏ.எஸ் தேர்வில் நமக்கு அடுத்து வரும் போட்டியாளரை விட திறமையில் நாம் முன் நிற்க வேண்டும். அப்போது தான் நம்மால் வெற்றி பெற முடியும்.

இன்றைய மாணவ – மாணவிகளிடம் பல ஆற்றல்கள், திறமைகள் மறைந்து கிடக்கின்றன. அவற்றை வெளிக்கொண்டு வந்தால் தான் உங்களால் சாதிக்க முடியும். நூலகத்தை எல்லோரும் நன்றாக பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் பாடத்திற்கு அப்பால் நிறைய படிக்க வேண்டும். சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன் படிக்க வேண்டும். நம் தேசத்தின் வளர்ச்சியே நம் வளர்ச்சி, இதை நாம் உணர வேண்டுமானால் நம் தேசத்தின் வளர்ச்சி பற்றிய சமூக அரசியல், பொருளாதார வரலாறு ஆகியவற்றை நாம் ஆழமாக படிக்க வேண்டும். எல்லோரும் இணைந்து செயல்பட்டால் பெரிய இலக்கையும் நம்மால் அடைய முடியும் என்பதை கோவை செம்மொழி மாநாடு நடத்தியபோது உணர்ந்தேன்.

பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கி ஆட்சிப்பணிக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.இவ்வாறு அலாவுதீன் கூறினார்.