Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 10 ஏப்ரல், 2013

உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும்: ஆக்டா


 "உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு உயர்த்த வேண்டும்" என, அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் (ஆக்டா) கேட்டுக்கொண்டுள்ளது. ஆக்டா சார்பில், "இந்திய உயர்கல்வியில் உள்ள சிக்கல்களும், தீர்வுகளும்" என்ற தலைப்பில் ஆறாவது கல்வி மாநாடு நேற்று திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடந்தது. ஆக்டோ மாநில தலைவர் ராஜா தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் சோமசுந்தரம் வரவேற்றார்.

கதர் மற்றும் கிராமத் தொழில்கள் அமைச்சர் பூனாட்சி மாநாட்டை துவக்கி வைத்து பேசுகையில், "ஒரு மனிதன் கற்கும் கல்வியே, அவனை ஆற்றல் மிக்கவனாக மாற்றுகிறது. ஆற்றல் மிக்க ஒருவரால் தான், நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். மனிதனை முழு மனிதனாக மாற்றுவது கல்வியே. கல்வி மூலம் மட்டுமே நாடு வளர்ச்சியை அடைய முடியும் என்பதால், உயர்கல்வி வளர்ச்சியில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்தி திட்டங்களை அறிவித்து வருகிறது," என்றார்.

மாநாட்டில், பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் மீனா பேசியதாவது:
உயர்கல்விக்கு புதிய வலுவான பாதையை அமைக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்தில் ஏற்படும் மாற்றங்கள், எதிர்காலத்தில் ஏற்படப்போகும் மாற்றங்கள் மட்டுமின்றி, மாணவர்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் உயர்கல்வி திகழ வேண்டும்.

தமிழக பல்கலைகள், உலக தரத்திலான கல்வியை வழங்கும் நோக்கத்தோடு, தமிழக அரசு செயல்படுவது பாராட்டுக்குறியது. சர்வதேச தரத்திற்கு இணையாக பாடத்திட்டங்களை வகுக்க, பாரதிதாசன் பல்கலையில் 10 மையங்கள் செயல்படுகிறது.

கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம், பயோ டெக்னாலஜி போன்ற துறைகளில் மட்டுமே மாற்றமும், வளர்ச்சியும் ஏற்படுத்த வேண்டும் என்பது கிடையாது. அனைத்து துறைகளும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தற்காலத்துக்கு ஏற்றவாறு தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொண்டு, சவால்களை சந்திக்கவும், மாணவர்களுக்கு தரமான கல்வியை போதிக்கவும் ஆசிரியர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

கம்ப்யூட்டர் பாடம் சாராத ஆசிரியர்களுக்கு, கம்ப்யூட்டர் பயிற்சி அளிப்பதற்காக, பாரதிதாசன் பல்கலையில் மைக்ரோ சாஃப்ட் பயிற்சி மையத்தை துவங்க தமிழக அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் பொருளாதார வல்லுனர் வெங்கடேஷ் ஆத்ரேயா, ஆக்டோ துணைத் தலைவர் பிரேமா உள்பட பலர் பேசினர். பொருளாளர் காளீஸ்வரன் நன்றி கூறினார். மாநாட்டில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும். உயர்கல்வியின் வளர்ச்சிக்கு தனியார் மயத்தை ஊக்குவிக்கும் போக்கை எதிர்த்து மாணவர்களும், ஆசிரியர்களும் பொதுமக்களுடன் இணைந்து போராட வேண்டும்.

உயர்கல்வியின் வளர்ச்சியை சீர்குலைக்கும் வகையிலான, தனியார் மயம், கட்டண கொள்ளை, வணிக நோக்கம், அரசு உதவி பெறும் கல்லூரிகளை புறக்கணித்தல் போன்றவற்றை எதிர்த்து தமிழகத்திலும், தேசிய அளவிலும் இயக்கங்கள் நடத்த வேண்டும் போன்று பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நெல்லை அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் கலவரம்


நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே இருக்கும் திடியூரில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று உள்ளது. அங்கு படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

அந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு, மோதல் நடந்து வருகிறது. மோதலில் மாணவர்கள் காயம் அடைந்த சம்பவங்கள் நடந்துள்ளது. ஆனால் இது குறித்து யாரும் போலீசில் புகார் கொடுக்கவில்லை. அதனால் மாணவர்கள் பிரச்சனை தொடர் பிரச்சனையாக உள்ளது.

 இந்நிலையில் நேற்று மீண்டும் மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதோடு கல்லூரி மற்றும் விடுதிக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். கல்லூரி கண்ணாடி, ஜன்னல்கள், கதவுகளை அடித்து நொறுக்கினர். மேலும் லேப் மற்றும் அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர்களை உடைத்தனர். இது தவிர கல்லூரிக்கு சொந்தமான 4 கார்களை சேதப்படுத்தினர். இதனால் கல்லூரி போர்க்களம் போன்று காட்சி அளித்தது.

இது குறித்து முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கலவரத்தில் ஈடுபட்ட மாணவர்களை அப்புறப்படுத்தினர். அதன் பிறகு கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த கலவரத்தில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள கல்லூரி பொருட்கள் சேதமடைந்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க கல்லூரியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கலவரத்தில் மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.


இந்தியாவில் உயர் கல்வி தரம்: குடியரசுத் தலைவர் கவலை


உயர் கல்வி நிறுவனங்களில் தரம் என்பது பெரும் சவாலாக உள்ளதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

குருஷேத்ராவில் தேசிய தொழில்நுட்ப கல்வி மையத்தின் 10ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரணாப், "தரம், அணுகுமுறை ஆகியன உயர் கல்விக்கு அவசியமான ஒன்று எனவும், பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சி கழகங்கள் மாணவர்கள் கொந்தளிப்பு அதிகம் நிறைந்த இடமாக உள்ளது எனவும், உலகில் உள்ள முதல் சிறந்த 200 பல்கலைகழகங்கள் பட்டியலில் இந்தியாவின் ஒரு பல்கலைக்கழகம் கூட இடம்பெறவில்லை" எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

பகுதி நேர ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக மாற்றவேண்டும் : ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை

தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்க ஈரோடு மாவட்ட தலைவர் எஸ்.ராதாகிருஷ்ணன் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் கூறி உள்ளதாவது:–உடற்கல்வி, ஓவியம், தையல், கணினி, இசை, வாழ்க்கை கல்வி, தோட்டக்கலை ஆகிய பல துறைகளில் பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக மாற்ற வேண்டும். மே மாதம் சம்பளம் இல்லாமல் பரிதவிக்கும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதமும் சம்பளம் வழங்க வேண்டும். மற்ற ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கலந்தாய்வு மற்றும் இடம் மாறுதல் போல எங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு மற்றும் இடம் மாறுதல் வேண்டும். எங்களுடன் பணியாற்றும் சக ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு கடைப்பிடித்து வரும் பணி பதிவேடு முறையை எங்களுக்கும் பயன்படுத்தவேண்டும்.மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்–அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்தியாவில் புதிய டிசைன் கல்வி நிறுவனம்!


புகழ்பெற்ற டிசைன் கல்வி நிறுவனமான, பார்சன்ஸ் த நியூ ஸ்கூல் ஆப் டிசைன், ஒரு வியூக ரீதியிலான ஒத்துழைப்பின் மூலமாக, மும்பையில், ஒரு டிசைன் கல்வி நிறுவனத்தை தொடங்குகிறது. Indian School of Design and Innovation(ISDI) என்று பெயரிடப்பட்ட அந்த கல்வி நிறுவனம், மும்பையில், பரேல் என்னும் பகுதியில், ஜுலை மாதம் திறக்கப்படவுள்ளது.

டிசைன் மற்றும் புத்தாக்க துறைகளில், பல படிப்புகளை அந்தக் கல்வி நிறுவனங்கள் வழங்கும். பார்சன்ஸ் கல்வி நிறுவனத்தின் சிறந்த பாடத்திட்டம், சிறப்பு வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் உலகளாவிய தொடர்புகள் ஆகியவற்றின் மூலமாக, ISDI பயன்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Visual communication, fashion design, product design, Interaction & user interface design, Motion graphics design, fashion marketing, interior product design, Retail & exhibition and design & management போன்ற துறைகளில், 4 இளநிலை டிப்ளமோ படிப்புகள், 1 வருட பவுண்டேஷன் படிப்பு மற்றும் 3 வருட ஸ்பெஷலைசேஷன் படிப்பு போன்றவை வழங்கப்படும். மேலும், இக்கல்வி நிறுவனத்தில், முதுநிலை டிப்ளமோ படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படும். விரிவான விபரங்களுக்கு www.isdi.in.

அலிகார் பல்கலைக்கழகத்தில பிஎச்.டி. படிப்பதற்கு உதவித் தொகை


அறிவியல் பிஎச்.டி.  படிக்கும் மாணவர்களுக்கு அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

வயது: ஜேஆர்எப்: 28 வயது

கல்வித் தகுதி: முதுகலை பட்டப்படிப்பு அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதி. "நெட" தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித் தொகை எண்ணிக்கை: பொருத்தமான அளவில்

கால அளவு: ஜேஆர்எப் மற்றும் எஸ்ஆர்எப்: 5 ஆண்டுகள்* ஆர்ஏ: 5 ஆண்டுகள்.

விண்ணப்ப நடைமுறைகள்
எம்ப்ளாய்மென்ட் நியூஸ் பத்திரிகையில் யுஜிசி-யால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி. முன்னணி நாளிதழ்களிலும் அறிவிப்பு வெளியிடப்படும்.


Course : அறிவியல் (பி.எச்டி.,)
Provider Address : ALIGARH MUSLIM UNIVERSITY, Dean Student Welfare, DSW Office,   Kennedy House, AMU, Aligarh 202 002, Tel: 0571 2700018, Fax: 0571 2700528 885,
E-mail: dsw_amu@rediffmail.com, www.amu.ac.in

தமிழகத்தில் கோடையின் தாக்கத்தால் கொடைக்கானலில் குவியும் மக்கள் கூட்டம்


தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைப்பதால் ,தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்து வருகிறார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கொடைக்கானல் நகரம் சுற்றுலா பயணிகளின் வருகையால் திணறியது. நகர் முழுவதும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதில் மிகவும் தாமதம் ஏற்பட்டது.

படகு சவாரி
கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்வதற்காக ஏராளமான பேர் நீண்ட கியூவில் காத்து நின்றனர். படகு சவாரி, சைக்கிள் சவாரி செய்வதில் குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் அதிக ஆர்வம் காட்டினார்கள். இதனால் ஏரிச்சாலை மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. பிரையண்ட் பூங்காவில் உள்ள வண்ண, வண்ண பூக்களை பார்ப்பதற்காக பெண்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள். பூங்காவில் உள்ள பூக்களுடன் நின்று குடும்பத்துடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

பசுமைப்பள்ளத்தாக்கு
கொடைக்கானலில் பகல் 1 மணி முதல் 2 மணி வரை சாரல் மழை பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். சாரல் மழையில் நனைந்தவாறு பசுமைப்பள்ளத்தாக்கு பகுதியை பார்வையிட்டனர். கோக்கர்ஸ்வாக், வெள்ளி நீர்வீழ்ச்சியையும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்ததால் தெருவோர கடை வியாபாரிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.