Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

யுனானி மருத்துவ உதவியாளர் தேர்வுக்கு ஐகோர்ட் தடை


சென்னையை சேர்ந்த வக்கீல் பழனிமுத்து ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார்.

 அதில் அவர் கூறி இருந்தாவது:-
 சென்னை அரும்பாக்கத்தில் யுனானி மருத்துவ மையம் உள்ளது. அங்கு தமிழ் வழி கல்வி நடைமுறையில் இல்லை. இந்த நிலையில் 27 யுனானி உதவி மருத்துவ அலுவலர்களுக்கான தேர்வை கடந்த 6-ந்தேதி டி.என்.பி.எஸ்.சி. நடத்தியது. அதில் யுனானி மருத்துவத்தை தமிழ் வழியில் கற்றவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை தரப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

பணி தேர்வில் உருது மொழி தெரியாதவர்கள் இல்லாத பட்சத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவரை கொண்டு பணி இடத்தை நிரப்பலாம் என்று அந்த துறை உத்தரவிட்டுள்ளது. இதை முன் மாதிரியாகக் கொண்டு சுகாதார துறையும் அதே மாதிரி உத்தரவை பிறப்பித்துள்ளது. இது இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிரானது. எனவே யுனானி உதவி மருத்துவ அலுவலர் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. தற்காலிக தலைமை நீதிபதி எலிபி தர்மாராவ், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆகியோர் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. யுனானி உதவி மருத்துவ அலுவலர் தேர்வுக்கு தடைவிதித்து அவர்கள் உத்தரவிட்டனர்.

வரி ஏய்ப்பு : பிஜேபி தலைவர் கட்காரிக்கு வருமானவரித்துறை சம்மன்

வரி ஏய்ப்பு செய்ததாக பா.ஜ. தேசிய தலைவர் நிதின்கட்காரிக்கு வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

பா.ஜ. தேசிய தலைவர் நிதின்கட்காரி, இவருக்கு சொந்தமான பல்வேறு நிறுவனங்களில் கிடைத்த வருமானம் தொடர்பாக வருமானவரி செலுத்தவில்லை என புகார் எழுந்தது. இது தொடர்பாக ஏற்கனவே ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. பல்வேறு அரசியல் பணி காரணமாக வரமுடியவில்லை என கட்காரி தரப்பில் பதில் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் 21-ம் தேதி வருமானவரித்துற‌ை அலுவலகத்திற்கு நேரில் ஆஜராக  ‌கட்காரிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது

மாணவர்கள் அறிவை தேடித்தேடி பெற வேண்டும்: டாக்டர் அப்துல் கலாம்


சேலம், பெரியார் பல்கலையில், ஆற்றல்சார் தனிச்சிறப்பு இயற்பியல் மையம் மற்றும் உயர்நுட்ப ஆய்வகம், அதிநுண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், புவித் தகவலமைப்பு மற்றும் கோளியல் மையம், பாடத்திட்ட மேம்பாட்டுப்பிரிவு, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் திறன் வளர்ச்சிப் பிரிவு ஆகியவற்றின் துவக்க விழா, சிறந்த விஞ்ஞானிகள், நல்லாசிரியர் மற்றும் பல்கலை பணியாளர் குழந்தைகளில், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றோர் ஆகியோருக்கு விருது வழங்கும் விழா, துணைவேந்தர் முத்துச்செழியன் எழுதிய புத்தக வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று நடந்தது.

பெரியார் பல்கலை துணைவேந்தர் முத்துச்செழியன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மையங்களை திறந்து வைத்து, விருது வழங்கி பேசியதாவது:

மாணவர்களது வாழ்க்கையில் மிகப்பெரிய லட்சியம் வேண்டும். சிறு லட்சியம் குற்றமாகவே கருதப்படும். அடுத்து அதற்கான அறிவைத் தேடித்தேடி பெற வேண்டும். லட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். விடாமுயற்சியும் இருக்க வேண்டும்.

அதாவது தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து வெற்றி பெற வேண்டும். இந்த நான்கும் மாணவர்களின் வாழ்க்கையில் வெற்றி பெற அடிப்படையானவை. நேற்று இயற்கை வளங்கள் முக்கியமாக கருதிய நிலை மாறி, இன்று அறிவு முக்கிய சொத்தாக கருதும் நிலை உள்ளது.

தலைமையிடத்தில் உள்ளவர்கள் கட்டளையிடும் நிலை மாறி, கற்றுக்கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. முன்னுரிமை கொடுத்த நிலை மாறி, இன்று தகுதிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்த சூழலில் தற்போது அறிவு சார் சமூகத்துக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

இதில் ஆய்வுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும். இதில் பயோ டெக்னாலஜி, நானோ டெக்னாலஜி, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எகாலஜி ஆகிய நான்கு துறைகள் முக்கியமானதாக கருதப்படுகிறது. இவற்றில் புதுப்புது ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளும் உருவாக்க வேண்டும். குறிப்பாக சோலார் சிஸ்டம், நியூக்ளியர் மின் உற்பத்தி, ஸ்டெம் செல் ஆய்வு, நோய்களுக்கான தடுப்பு மருந்து உள்ளிட்டவைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

சனி, 12 ஜனவரி, 2013

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி கடனுதவி


விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ், புது தொழில் முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டு திட்டம் போன்ற திட்டங்களுக்கான மாவட்ட அளவிலான கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் வா.சம்பத் தலைமை வகித்து பேசியது:

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கும் அரசால் 2010ம் ஆண்டு முதல் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதன் மூலம் வியாபாரத்துக்கு ரூ. 1லட்சம், சேவை தொழிலுக்கு ரூ.3 லட்சம், உற்பத்தி சேவை தொழிலுக்கு ரூ. 3 லட்சம், உற்பத்தி தொழிலுக்கு ரூ. 5 லட்சம் வங்கிகள் மூலம் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில் தமிழக அரசு 15 சதவீதம் மானியம் வழங்குகிறது. அதிகபட்சமாக ரூ. 75,000 வழங்கப்படுகிறது.

குறைந்தபட்ச கல்வித்தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 18 முதல் 35 வரையும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், மகளிர் ஆகியோர் 45 வயது வரை இருக்கலாம்.

ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.  சுயதொழில் ஊக்குவித்து அதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்க, வருவாய் அதிகரிக்க புதுத் தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டம், அக்டோபர் 2012 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி ஐ.டி.ஐ. படித்து முதல் தலைமுறை தொழில் முனைவோர்களாகவும் இருக்க வேண்டும். வயது வரம்பு பொது பிரிவினருக்கு 21 முதல் 35க்குள்ளும், சிறப்பு பிரிவைச் சேர்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள், மகளிர் ஆகியோருக்கு 45 வயது வரை இருக்கலாம்.

இதில் சேவைத்தொழில் மற்றும் உற்பத்தி தொழிலுக்கு திட்ட மதிப்பீடு அதிகபட்சமாக ரூ.1 கோடி வரை இருக்கலாம். தமிழக அரசு மானியமாக 25 சதவிதம் வீதம் ரூ. 25 லட்சம் வரை வழங்கப்படுகிறது. ஆட்சியர் தலைமையில் செயல்படும் தேர்வுக்கமிட்டி மூலம் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டு, கடன் ஓப்புதல் பெற்ற பின்னர், தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தின் மூலம் 1மாதம் பயிற்சியளிக்கப்பட்டு, தொழில் தொடங்க உதவப்படுகிறது. என்றார்.

மதுரை ரயில்வே கோட்டத்தில் காலியிடங்கள் நிரப்பப்படுமா?


மதுரை ரயில்வே கோட்டத்தில் காலியான ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப, நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோட்டத்தில் டிராக்மேன், டிக்கெட் செக்கிங், இன்ஜின் டிரைவர், ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்கள் 1,200 வரை காலியாகவுள்ளன. இதனால் ரயில்களில் கூடுதல் நேரம் பணிபுரிய நிர்பந்திக்கப்படுவதாக இன்ஜின் டிரைவர்கள் புலம்புகின்றனர். அவசர தேவைகளுக்கு கூட விடுப்பு எடுக்க முடியாத நிலையுள்ளது. டிராக்மேன், ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட பாதுகாப்பு பிரிவுகளிலும் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன.

தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் கோட்ட செயலாளர் ஜெ.எம்.ரபீக் கூறுகையில், ""இன்ஜின் டிரைவர், கார்டுகள் போன்ற பாதுகாப்பு பிரிவிலுள்ள காலியிடங்களை நிரப்ப பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது. டிக்கட் கவுன்டர்களில் ஊழியர் பற்றாக்குறையால், பயணிகள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அங்கு ஊழியர்களுக்கும், பயணிகளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. இக்கோட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 10 ஆயிரத்து 43 பணியிடங்களில் 8 ஆயிரம் பேர் மட்டும் பணியில் உள்ளனர். தேவையான ஊழியர்களை நியமிக்க வலியுறுத்தி, மஸ்தூர் யூனியன் சார்பில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ஜூன் 31ம் தேதிக்குள் கோரிக்கை நிறைவேற்றாதபட்சத்தில் ரயில் நிறுத்த போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.

கோட்ட ஊழியர் நல அதிகாரி ஒருவர் கூறுகையில், ""ஓய்வு, இறப்பு காரணங்களால் காலியிடங்கள் ஏற்படுகிறது. இருப்பினும் ஊழியர்கள் ரயில்வே தேர்வாணையம் சார்பில் நியமிக்கப்படுகின்றனர். இக்கோட்டத்திலுள்ள காலியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும். இருக்கும் ஊழியர்களை கொண்டு, பயணிகள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன,'' என்றார்.

கிரிமினல்கள் போட்டியிட 2014 பொதுத் தேர்தலுக்கு முன் தடை


 வரப்போகும் பார்லிமென்ட் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் நிச்சயம் போ்ட்டியிட முடியாதபடி உடனடியாக தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்படும், பொதுத்தேர்தல் நடப்பதற்கு முன்பா‌கவே மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் சம்பத் கூறினார்.

தற்போது மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்கள், மற்றும் பார்லிமென்ட் எம்.பி.க்கள் சிலர் மீது கொலை ,ஆட்கடத்தல், கற்பழிப்பு உள்ளிட்ட கிரிமினல் வழக்குகள் இருப்பதாக புகார் வந்துள்ளன. இவர்களில் சிலர் மீது வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. இனி வருங்காலத்தில் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் தேர்தல்களில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என ‌கோரிக்கை நாடு முழுவதும் எழுந்துள்ளது.இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகலாயா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. இதனை தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் அறிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

15 ஆண்டுகள் கிடப்பில் உள்ள கோரிக்கை
சட்டசபை மற்றும் பார்லிமென்ட் தேர்தல்களில் கிரிமினல் குற்றவாளிகள் போட்டியிட தடைவிதிப்பது குறித்தும் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக கடந்த 1998-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதியில் இருந்தே தலைமை தேர்தல் கமிஷன் மத்திய அரசிடம் எழுத்துமூலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இதன்படி கிரிமினல் குற்றவாளிகள் கோர்ட் மூலம் 5 ஆண்டுகளுக்குமேல் சிறை தண்டனை பெற்றிருந்தால் அவர்கள் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது என சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் காலத்திற்கேற்ப அரசுகள் மாறி வருவதால் அந்த கோரிக்கை கடந்த 15 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு வந்தது.

தற்போது இந்த கோரிக்கை நாடு முழுவதும் வலுத்து வருவதால் , கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் , மாநில சட்டசபை,பார்லிமென்ட் லோக்சபா தேர்தல்களில் போட்டியிட தடைவிதிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை வரப்போகும் 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.எனவே அடுத்த பார்லிமென்ட் பொதுத்தேர்தலில் கற்பழிப்பு உள்ளிட்ட கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்கள் நி்ச்சயம் போட்டியிட முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

வியாழன், 10 ஜனவரி, 2013

கல்வியை விட்டு தொழிற்சாலை பணியை நோக்கி மாணவிகள் .....!


காஞ்சிபுரத்தில் உள்ள அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில், 10ம் வகுப்பு முடிக்கும் மாணவியர், தொழிற்சாலை பணிக்கு சென்று விடுவதால், மேற்படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது.

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது.

அரசின் நோக்கம்
இங்கு 1ம் வகுப்பு முதல் கல்லூரி வரை படிக்கும், ஆதரவற்ற மாணவியர் தங்கி படித்து வருகின்றனர். வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த காப்பகம், கடந்த 2005ம் ஆண்டு, அரசு கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. 300 மாணவியர் தங்கி படிக்க வேண்டிய காப்பகத்தில், 106 மாண வியர் மட்டும் படிக்கின்றனர்.
பெற்றோர், பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகள் காப்பகம் ஏற்படுத்தப்பட்டது. இங்கு படிக்கும் மாணவிக்கு, பாடப் புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடை, உணவு, சோப்பு, போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது.

"காசு' பார்க்கும் மாணவியர்
காஞ்சிபுரம் குழந்தைகள் காப்பகத்தில், திருவண்ணாமலை, சென்னை, சேலம், மாவட்டங்களில் இருந்தும், காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மாணவிகளும் படித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், ஒன்பதாம் வகுப்பு முதல், கல்லூரி வரை, ஆண்டுத் தேர்வை 40 மாணவியர் எழுதுகின்றனர்.
தேர்வு முடிந்த பிறகு, ஒன்றரை மாதம் விடுமுறைக்காக வீடுகளுக்கு செல்கின்றனர். அப்போது அருகில் உள்ள தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களில் வேலைக்கு சென்று, மாதம் 4,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை சம்பளம் பெறுகின்றனர்.அதன்பிறகு படிக்க விரும்புவதில்லை. படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு, பணியை தொடர்கின்றனர்.

காப்பகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், மாணவியரின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தும், அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் முயற்சி தோல்வி அடைகிறது. இதனால், அரசு திட்டம் வீணாகி வருகிறது.
இது குறித்து அரசு காப்பகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கூறுகையில், ""வயது வந்த மாணவியர் குறிப்பிட்ட வகுப்பு வரைதான், காப்பகத்தில் தங்கி படிக்கின்றனர்.

ஆண்டுத் தேர்வின் போது, தொழிற்சாலைகளில் பணிக்கு செல்லும் மாணவியர், மாதம்தோறும் சம்பளம் பெறுவதால், திருமணத்திற்கு தயாராகி விடுகின்றனர். இதை தடுத்து நிறுத்த முடியாத நிலை ஏற்படுகிறது,'' என்றார்.