Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 12 ஜனவரி, 2013

மதுரை ரயில்வே கோட்டத்தில் காலியிடங்கள் நிரப்பப்படுமா?


மதுரை ரயில்வே கோட்டத்தில் காலியான ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப, நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோட்டத்தில் டிராக்மேன், டிக்கெட் செக்கிங், இன்ஜின் டிரைவர், ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்கள் 1,200 வரை காலியாகவுள்ளன. இதனால் ரயில்களில் கூடுதல் நேரம் பணிபுரிய நிர்பந்திக்கப்படுவதாக இன்ஜின் டிரைவர்கள் புலம்புகின்றனர். அவசர தேவைகளுக்கு கூட விடுப்பு எடுக்க முடியாத நிலையுள்ளது. டிராக்மேன், ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட பாதுகாப்பு பிரிவுகளிலும் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன.

தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் கோட்ட செயலாளர் ஜெ.எம்.ரபீக் கூறுகையில், ""இன்ஜின் டிரைவர், கார்டுகள் போன்ற பாதுகாப்பு பிரிவிலுள்ள காலியிடங்களை நிரப்ப பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது. டிக்கட் கவுன்டர்களில் ஊழியர் பற்றாக்குறையால், பயணிகள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அங்கு ஊழியர்களுக்கும், பயணிகளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. இக்கோட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 10 ஆயிரத்து 43 பணியிடங்களில் 8 ஆயிரம் பேர் மட்டும் பணியில் உள்ளனர். தேவையான ஊழியர்களை நியமிக்க வலியுறுத்தி, மஸ்தூர் யூனியன் சார்பில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ஜூன் 31ம் தேதிக்குள் கோரிக்கை நிறைவேற்றாதபட்சத்தில் ரயில் நிறுத்த போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.

கோட்ட ஊழியர் நல அதிகாரி ஒருவர் கூறுகையில், ""ஓய்வு, இறப்பு காரணங்களால் காலியிடங்கள் ஏற்படுகிறது. இருப்பினும் ஊழியர்கள் ரயில்வே தேர்வாணையம் சார்பில் நியமிக்கப்படுகின்றனர். இக்கோட்டத்திலுள்ள காலியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும். இருக்கும் ஊழியர்களை கொண்டு, பயணிகள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக