Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 12 ஜனவரி, 2013

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி கடனுதவி


விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ், புது தொழில் முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டு திட்டம் போன்ற திட்டங்களுக்கான மாவட்ட அளவிலான கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் வா.சம்பத் தலைமை வகித்து பேசியது:

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கும் அரசால் 2010ம் ஆண்டு முதல் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதன் மூலம் வியாபாரத்துக்கு ரூ. 1லட்சம், சேவை தொழிலுக்கு ரூ.3 லட்சம், உற்பத்தி சேவை தொழிலுக்கு ரூ. 3 லட்சம், உற்பத்தி தொழிலுக்கு ரூ. 5 லட்சம் வங்கிகள் மூலம் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில் தமிழக அரசு 15 சதவீதம் மானியம் வழங்குகிறது. அதிகபட்சமாக ரூ. 75,000 வழங்கப்படுகிறது.

குறைந்தபட்ச கல்வித்தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 18 முதல் 35 வரையும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், மகளிர் ஆகியோர் 45 வயது வரை இருக்கலாம்.

ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.  சுயதொழில் ஊக்குவித்து அதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்க, வருவாய் அதிகரிக்க புதுத் தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டம், அக்டோபர் 2012 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி ஐ.டி.ஐ. படித்து முதல் தலைமுறை தொழில் முனைவோர்களாகவும் இருக்க வேண்டும். வயது வரம்பு பொது பிரிவினருக்கு 21 முதல் 35க்குள்ளும், சிறப்பு பிரிவைச் சேர்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள், மகளிர் ஆகியோருக்கு 45 வயது வரை இருக்கலாம்.

இதில் சேவைத்தொழில் மற்றும் உற்பத்தி தொழிலுக்கு திட்ட மதிப்பீடு அதிகபட்சமாக ரூ.1 கோடி வரை இருக்கலாம். தமிழக அரசு மானியமாக 25 சதவிதம் வீதம் ரூ. 25 லட்சம் வரை வழங்கப்படுகிறது. ஆட்சியர் தலைமையில் செயல்படும் தேர்வுக்கமிட்டி மூலம் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டு, கடன் ஓப்புதல் பெற்ற பின்னர், தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தின் மூலம் 1மாதம் பயிற்சியளிக்கப்பட்டு, தொழில் தொடங்க உதவப்படுகிறது. என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக