Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 5 டிசம்பர், 2012

இலவச லேப்டாப் திட்டம்: தமிழக பள்ளி கல்வித்துறை பாரபட்சம்?


தமிழக அரசு லேப்டாப் வழங்குவதில்  பாரபட்சத்தோடு நடந்துகொள்வது ஏற்புடைதல்ல என பாதிக்கப்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு மாவட்டங்களிலுள்ள அரசு பள்ளிகளில், மாணவர்களின் நலனுக்காக சுயநிதி வகுப்புகள் செயல்படுகின்றன. அரசு ஒப்புதலின் பேரில் துவங்கப்படும் இப்பிரிவுகளுக்கு, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும்.

இந்தப் பிரிவு ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குதல், மாணவர்களுக்கு தேவைப்படும் வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் கிராம கல்விக்குழு உதவியுடன் தலைமை ஆசிரியர்களே பொறுப்பேற்க வேண்டும்.

கடந்த கல்வியாண்டில் (2011-12) 9.16 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என கல்வித்துறை பட்டியல் வெளியிட்டது. இதற்காக 319 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இப்பணிகள் மிகுந்த தாமதத்திற்கு பிறகு தொடங்கியது. நடப்பு கல்வியாண்டில் லேப்டாப் வினியோகிக்கப்பட்டு, பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

இப்பணிகளை தொடர்ந்து, நடப்பு கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கை அனைத்து மாவட்டங்களிலும் சேகரிக்கப்பட்டு பள்ளி கல்வி இயக்குநரகத்திற்கு கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் அரசு பள்ளி சுயநிதி பிரிவு மாணவர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை.

கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் 65 அரசு பள்ளிகளில் 9,363 மாணவர்களும், அரசு உதவி பெறும் 30 பள்ளிகளில் 5,810 மாணவர்களும், நலப்பள்ளி ஒன்றுக்கு 40 மாணவர்களும், 4 நகர மைய பள்ளிகளுக்கு 1,117 மாணவர்களும், 16 மாநகராட்சி பள்ளிகளுக்கு 2,587 மாணவர்களும் என மொத்தம், 18,917 மாணவர்கள் பட்டியலில் இடம் பெற்று இருந்தனர்.

கடந்த ஆண்டு ஒரு சில மாவட்டங்களில் சுயநிதி பிரிவு பள்ளி மாணவர்கள் பெயர் சேர்க்கப்பட்டும் , ஒரு சில மாவட்டங்களில் நிராகரிக்கப்பட்டும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இம்மாணவர்களுக்கு அரசின் பிற நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் நிலையில், லேப்டாப் மட்டும் மறுக்கப்படுவது கேள்விக்குரியது.

இதுகுறித்து, கோவை மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், "நடப்பாண்டில் லேப்டாப் தேவைப்படும் மாணவர்களின் எண்ணிக்கை பட்டியலில், சுயநிதி பரிவு மாணவர்களின் பெயர்கள் சேர்க்கவேண்டாம் என, பள்ளி கல்வித்துறை தெரிவித்ததால் நாங்கள் சேர்க்கவில்லை. இந்த மாணவர்களும் பின்தங்கிய, நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான். இவர்களுக்கும் கிடைத்தால் பயனடைவார்கள்,  என்றனர்.

இதுகுறித்து அரசு பள்ளி மாணவர்கள் பாரதி, லதா மற்றும் சரவணன் கூறுகையில், "கடந்த ஆண்டு எங்கள் பிரிவில், படித்த சீனியர் மாணவர்களுக்கு லேப்டாப் கிடைத்தது. ஆனால் எங்களின் பெயர்கள் தற்போது பட்டியலில் இடம் பெறவில்லை. நாங்களும் அரசு பள்ளியை சேர்ந்தவர்கள் தான். 'எங்களை மட்டும் ஒதுக்குவது ஏன் என்று புரியவில்லை' என்றனர்.

நாய்குட்டிக்கு பால் கொடுக்கும் ஆடு


வள்ளியூர் யாதவர் தெருவை சேர்ந்தவர் கோபால் (49). இவர் சுமார் நூறு ஆடுகள் வைத்து மேய்த்து வருகிறார். அப்பகுதியில் உள்ள வயல்களுக்கு உரத்திற்காக ஆட்டுகிடை வைத்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் அனாதையாக நின்ற நாய்குட்டியை எடுத்து "சிங்கம்' என்று பெயரிட்டு ஆட்டுகிடையில் வைத்து பராமரித்து வளர்த்து வந்தார்.

அங்கு குட்டியை இழந்து தவித்த ஆடு ஒன்று நாய்குட்டி மீது பரிதாபபட்டு பால் கொடுத்தது. மேலும் ஆடு எங்கெல்லாம் செல்கிறவள்ளியூரில் நாய்குட்டிக்கு பால் கொடுக்கும் அதிசய ஆட்டை பொதுமக்கள் பார்த்து ரசித்து சென்றனர்.
வள்ளியூர் யாதவர் தெருவை சேர்ந்தவர் கோபால் (49). இவர் சுமார் நூறு ஆடுகள் வைத்து மேய்த்து வருகிறார். அப்பகுதியில் உள்ள வயல்களுக்கு உரத்திற்காக ஆட்டுகிடை வைத்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் அனாதையாக நின்ற நாய்குட்டியை எடுத்து "சிங்கம்' என்று பெயரிட்டு ஆட்டுகிடையில் வைத்து பராமரித்து வளர்த்து வந்தார்.

அங்கு குட்டியை இழந்து தவித்த ஆடு ஒன்று நாய்குட்டி மீது பரிதாபபட்டு பால் கொடுத்தது. மேலும் ஆடு எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லம் நாய்குட்டியும் பிரியாமல் சென்று வந்தது. இக்காட்சியை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வினோதமாகவும், அதிசயமாகவும் பார்த்து ரசித்து வியந்து சென்றனர்.

செவ்வாய், 4 டிசம்பர், 2012

இந்தியாவில் முதலீடு செய்ய அன்னிய நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்


அடுத்த ஐந்து ஆண்டுகளில், உள்நாட்டில், துறைமுகங்கள், விமான நிலையங்கள், நெடுஞ்சாலை போன்றவற்றை உள்ளடக்கிய, அடிப்படை கட்டுமான துறையின் மேம்பாட்டிற்கு, 1 லட்சம் கோடி டாலர் முதலீடு தேவை என, மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இலக்கை எட்டுவதற்கு, உள்நாட்டு நிறுவனங்களுடன், அன்னிய நிறுவனங்களின் முதலீடும் அவசியம் என்று கணிக்கப்பட்டுள்ளது.இத்துடன், சில்லரை வர்த்தகம், காப்பீடு, விமானச் சேவை உள்ளிட்ட துறைகளிலும், அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

வருவாய்க்கு வழி:இதன் விளைவாக, அயல்நாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு களை மேற்கொள்ள அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றன. மேலும், முதலீட்டின் மீது சிறந்த வருவாய் தரும் நாடாக இந்தியா கருதப்படுகிறது.

வர்த்தக அமைச்சகம்:இதனால், நடப்பாண்டு, செப்டம்பர் மாதத்தில், இந்தியாவில், அன்னிய நிறுவனங்கள் மேற்கொண்ட நேரடி முதலீடு, இரண்டு மடங்கு உயர்ந்து, 467 கோடி டாலர் (25,685 கோடி ரூபாய்) என்ற அளவில் அதிகரித்துள்ளது.இது, சென்ற ஆண்டின், இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட முதலீட்டை (176 கோடி டாலர்/ 9,680 கோடி ரூபாய்) விட, 62 சதவீதம் அதிகமாகும் என, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சென்ற ஆகஸ்ட் மாதத்தில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 20 சதவீதம் குறைந்து, 226 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது. இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், இதுவரையில், செப்டம்பர் மாதத்தில் தான், அன்னிய நேரடி முதலீடு அதிக அளவில், மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சேவை துறை:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான, முதல் ஆறு மாத காலத்தில், நாட்டின் அன்னிய நேரடி முதலீடு, 1,284 கோடி டாலராக (70,620 கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில் மேற்கொள்ளப் பட்ட முதலீட்டை (1,913 கோடி டாலர்/ 1.05 லட்சம் கோடி ரூபாய்) விட, 33 சதவீதம் குறைவாகும்.

மதிப்பீட்டு காலத்தில், சேவை துறையில், மிகவும் அதிகமான அளவில், அதாவது, 300 கோடி டாலர் (16,500 கோடி ரூபாய்) முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதையடுத்து, உலோகம் (68.50 கோடி டாலர்/ 3,767 கோடி ரூபாய்), கட்டுமானம் (64 கோடி டாலர்/3,520 கோடி ரூபாய்), மோட்டார் வாகனம் (63.50 கோடி டாலர்/3,465 கோடி ரூபாய்) ஆகிய துறைகள் அதிக அளவில் அன்னிய முதலீடுகளை ஈர்த்துள்ளன.

மொரீஷியஸ்:கணக்கீட்டு காலத்தில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய முதலீடுகளில், மொரீஷியஸ் நாட்டின் பங்களிப்பு அதிக அளவில் உள்ளது. இந்நாடு, 625 கோடி டாலரை இந்தியாவில் முதலீடு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஜப்பான் (132 கோடி டாலர்), சிங்கப்பூர் (112 கோடி டாலர்), நெதர்லாந்து (97 கோடி டாலர்), இங்கிலாந்து (59 கோடி டாலர்) ஆகிய நாடுகள் உள்ளன.இந்தியாவில், மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, கடந்த 2011-12, 2010-11 மற்றும் 2009-10 நிதியாண்டுகளில் முறையே, 3,650 கோடி டாலர், 1,942 கோடி டாலர் மற்றும் 2,583 கோடி டாலர் என்ற அளவில் இருந்தன.

நாடு முழுவதும் 5 ஆண்டுகளில் 191 போலி என்கவுண்டர்கள்


கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 191 போலி என்கவுன்டர்கள் நடத்தப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்‌ட்டில் தேசிய மனித உரிமைகள் கழகம் தெரிவித்துள்ளது. குஜராத்தில் நடைபெற்ற போலி என்கவுன்டரில் சொராபுதீன்  கொலை செய்யப்பட்ட வழக்கில் போலி என்கவுன்டர் குறித்த அறிக்கையை மனித உரிமைகள் கழகம் தாக்கல் செய்துள்ளது.

அதிர்ச்சி அளித்த அறிக்கை:
அதிகளவில் போலி என்கவுன்டர் நடைபெற்ற மாநிலங்களில் மணிப்பூர் முதலிடத்தில் உள்ளது.
மணிப்பூர் அரசு சார்பில் கடந்த 30 ஆண்டுகளில் நடத்தப்பட்ட என்கவுன்டர்களில் இதுவரை சுமார் 1500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கழகம் அளித்த அறிக்கை தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. நீதிபதி அஃதப் அலம் மற்றும் ரஞ்சனா பி தேசாய் அடங்கிய நீதிபதிகள் பெஞ்ச் கடந்த முறை விசாரணையின் போது, மோதலின் போது இச்சம்பவம் நடைபெற்றதா எனவும், என்கவுன்டரில் கொல்லப்பட்ட இருவரும் ஒருவரை கொன்றதற்கு பதில் நடவடிக்கையாக அம்மாநில அரசு இது போன்று செய்ததா எனவும் இது தான் அரசின் நிலைப்பாடா எனவும் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் மனித உரிமைகள் கழகம் தாக்கல் அறிக்கை தாக்கல் செய்தது. மணிப்பூரை தொடர்ந்து குஜராத்தில் போலி என்கவுன்டர்கள் நடத்தப்பட்டுள்ளது.

 மனித உரிமைகள் கழக அறிக்கையின்படி 2007ம் ஆண்டு முதல் 2012 ம் ஆண்டு வரை ஏராளமான சட்டத்திற்கு புறம்பான கொலைகளையும் அரசே செய்துள்ளதாகவும், இது போன்ற போலி என்கவுன்டர்கள் தொடர்பாக இதுவரை 1671 புகார்கள் அல்லது தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற 191 என்கவுன்டர் வழக்குகளுக்கும் ரூ.10.51 கோடி நஷ்டஈடாக வழங்கப்பட்டுள்ளது. போலி என்கவுன்டர் என நிரூபிக்கப்பட்ட வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை நஷ்டஈடாக வழங்கப்பட்டுள்ளது. 

குஜராத் போலி என்கவுன்டர்:

குஜராத் போலி என்கவுன்டர் உட்பட அனைத்து வழக்குகளிலும் உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளதற்கு அம்மாநில அரசுகளின் பங்கு பெருமளவில் உள்ளதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. மேலும் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை, தடயவியல் அறிக்கை உள்ளிட்ட அனைத்தும் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாமதங்களை அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்தி உள்ளது. இந்த கொலைகள் சரியான என்கவுன்டரா அல்லது போலி என்கவுன்டரா என்பது குறித்த முடிவான அறிக்கையை அரசு சார்பில் தாக்கல் செய்யப்படவில்லை.

வழக்கு விபரங்கள் :
மணிப்பூரில் நடத்தப்பட்ட 71 போலி என்கவுன்டர் வழக்குகளில் இதுவரை 3 மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு வழக்கில் மட்டும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. 2007 ல் 5 போலி என்கவுன்டர்களும், 2008ல் 17ம், 2009ல் 19ம் நடைபெற்றுள்ளதாக மனித உரிமைகள் கழகம் தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் கழகத்தின் இந்த அறிக்கைக்கு முக்கியத்துவம் அளித்து அனைத்து மாநிலங்களுக்கும் கடுமையான எச்சரிக்கை விதிக்க வேண்டும் எனவும், அரசு சார்ந்த வழக்குகளை தாமதமின்றி 3 மாதங்களுக்குள் விசாரித்து அறிக்கை அளிக்கவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட வேண்டும் எனவும் மனித உரிமைகள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

திங்கள், 3 டிசம்பர், 2012

தமிழகத்தில் திறக்கபடாமல் முடங்கிக்கிடக்கும் ஐ.டி.பார்க் !


தமிழகத்தில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஐ.டி.,நிறுவனங்கள் தொழில் துவங்க, அரசின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. ஒரு லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு முடங்கியுள்ளது.

தமிழகத்தில், 48 சிறப்பு பொருளாதார மண்டலங்களில், ஐ.டி.,க்கான சிறப்பு பொருளாதார மண்டலங்கள் 17. இவற்றில் தொழில் துவங்க, சர்வதேச நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் துவங்கவில்லை. இன்டெல், விப்ரோ போன்ற நிறுவனங்களுக்கு சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இடம் ஒதுக்கி, 4 ஆண்டுகள் ஆகி, கட்டடம் கட்டி ஓராண்டாகி விட்டது. ஆனால் தொழில் துவங்காமல், முடங்கி கிடக்கின்றன.

இதற்கு அரசு துறைகளில், அனுமதியை பெறுவதில் உள்ள முறையே காரணம். ஐ.டி., நிறுவனங்கள் செயல்படுவதற்கான அனுமதி, தொழில் துறை மூலம் வழங்கப்படுகிறது. இங்கு காலதாமதம் ஆவதால், "எல்காட்' மூலம் வழங்க வேண்டும் என, ஐ.டி., கூட்டமைப்பினர் கோரி வருகின்றனர்.

ஐ.டி.,நிறுவனம் தொழில் துவங்க, உள்ளாட்சி, சுற்றுச்சூழல் உட்பட பல்வேறு அரசுத்துறைகளில், 40 அனுமதி பெற வேண்டியுள்ளது. பிற மாநிலங்களில் இல்லாத (10 சதவீத இடத்தை திறந்தவெளியாக ஒதுக்க வலியுறுத்தும்) நடைமுறையை தமிழகத்தில் பின்பற்ற வேண்டாம் என மத்திய வர்த்தகத்துறை செயலர், தலைமைச்செயலருக்கு கடிதம் எழுதினார். இதற்கு ஒப்புதல் வழங்கியும், வீட்டுவசதித்துறையின் ஒரு அதிகாரியால் இதற்கான அரசாணை வெளியிடப்படவில்லை.

தொழில் சட்டத்தில் சில திருத்தங்களை செய்தாலே, ஐ.டி.,நிறுவனங்களுக்கான அனுமதியை ஒற்றைச்சாளர முறையில் பெறலாம். மதுரை ஐ.டி.,பார்க் கட்டி முடிக்கப்பட்டு, ஓராண்டிற்கு மேலாகியும் செயல்படவில்லை. இங்கு மின்வாரியத்திற்கு மட்டும் மாதம் ரூ.17 லட்சம் கட்ட வேண்டியுள்ளது.

நெல்லை ஐ.டி.,பார்க் பராமரிப்பின்றி உள்ளது. தொழில் துறையில் முன்னேற "விஷன் 2023' என முதல்வர் அறிவிக்கிறார். ஆனால் அதிகாரிகளின் செயல்பாடுகளால், நிறுவனங்களை துவக்க இயலாமல், ஒரு லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு முடங்கி கிடக்கிறது.

சிறுபான்மையோர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சிக்கல் !


பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய அரசாணையால், தமிழகத்தில் உள்ள, சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத, அரசு உதவிபெறும் பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில், 2011 நவ., 15ம் தேதி, புதிய அரசாணை வெளியிடப்பட்டது. அதில், "தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்.சி.டி.இ.,), ஆசிரியர் நியமனத்துக்கு உரிய கல்வி தகுதியுடன், ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெறவேண்டும் என்பதும், குறைந்தபட்ச தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

இதனால், 2010 ஆக., 23க்கு பின், சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற உதவிபெறும் பள்ளிகளுக்கு, தகுதியுடைய பணியிடங்களை நிரப்ப அனுமதி அளிக்கும் போது, இதர பிற நிபந்தனைகளோடு, "ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப் பெற்றவரே நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி அளிக்கலாம்" என, கூறப்பட்டு உள்ளது.

இது, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசாணையின் நகல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

மேலும், அனைத்து அரசு உதவிபெறும் சிறுபான்மை, சிறுபான்மையற்ற மற்றும் சுயநிதி பள்ளிகளுக்கு அரசாணை நகலை அனுப்பி, ஒப்புதல் பெற்று, கோப்பில் வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த அரசாணை மூலம், தமிழகத்தில் உள்ள, சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத, அரசு உதவிபெறும் பள்ளிகளில், புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த அரசாணையினால் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையினால், தமிழகத்தில் உள்ள, "சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத, அரசு உதவிபெறும் பணி நியமனம் பெறுபவர்கள், ஐந்தாண்டுகளுக்குள் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்" என்ற தமிழக அரசின் முந்தைய அரசாணையின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.

அரசாணை தெரிவித்துள்ளபடி, 2010 ஆக., 23க்கு பின் என, குறிப்பிடப்பட்டு உள்ளதால், ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிக்கப்பட்டதே, தற்போதைய, அ.தி.மு.க., அரசில் தான். தேர்வு நடத்தப்பட்டதோ, 2012 அக்., 14ம் தேதி தான். இதற்கிடையே, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட துவக்கக் கல்வி அலுவலரின் ஒப்புதல் பெற்று, தமிழகம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 2,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஏராளமானோர் பணியில் உள்ளனர். இவர்களுக்கு, மாதந்தோறும் அரசு சம்பளம் வழங்கி வரும் நிலையில், புது அரசாணையால், இனிமேல் அவர்களுக்கு சம்பளம் வழங்கபடுமா? என்ற குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

வியாபாரம் ஆகும் கல்வி : ப.சிதம்பரம் வேதனை


நாட்டில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் வெறும் கல்வி கடைகளாகவே உள்ளதாக குற்றம்சாட்டி உள்ள மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், மாணவர்கள் இந்தியாவை முன்னேற்ற பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.மொகாலியில் இந்திய தொழில் பள்ளியின் துவக்க விழாவில் கலந்து கொண்ட சிதம்பரம் இவ்வாறு தெரிவித்துள்ளார். பல்கலைகழகங்களின் தரமும், உள்கட்டுமான வசதிகளும், பழமை பேசும் பாட திட்டங்களைக் கொண்டதாகவும் இருப்பதாக சிதம்பரம் தெரிவித்துள்ளார். கல்வி நிறுவனங்கள் குறித்து சிதம்பரம் விமர்சித்துள்ளது கல்வியாளர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

சிதம்பரம் பேச்சு:
பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் தரம் குறைவான உள்கட்டமைக்கள், மோசமான அறிவியல் மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் மற்றும் போதிய பயிற்சி இல்லாத ஆசிரியர்கள் ஆகியவற்றை கொண்டதாக உள்ளது என சிதம்பரம் தெரிவித்து உள்ளார். பஞ்சாப்பில் 8 பல்கலைக்கழகங்கள் மற்றும் 17 கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 18 பல்கலைக்கழகங்களுக்கு பதிலாக 8 பல்கலைக்கழகங்களே உள்ளன எனவும், வரும் காலங்களில் அவற்றின் கல்வி கட்டமைப்புக்களை உயர்த்துவது அத்தியாவசியமாகிறது எனவும் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு வேண்டுகோள்:
மாணவர்கள் தங்களின் படிப்பபை முடித்த பிறகு வளர்ந்த நாடுகளில் பணிபுரிய ஆர்வம் கொள்ள வேண்டும்; அது போன்ற வெளிநாட்டு வாய்ப்புக்களை பெற மாணவர்கள் முயற்சி மேற்‌கொள்ள வேண்டும்; மாணவர்களின் தங்களின் வேலை திறனை வளர்த்து கொள்ள வேண்டும்; குடும்பத்தை முன்னேற்ற வேண்டும்; பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற வேண்டும் ; அதற்கு பிறகு இந்தியாவிற்கு திரும்பி வந்து இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். இவ்வாறு சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் கல்வி தரம் குறித்த பேச்சை தொடர்ந்து விழாவில் பேசிய பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பண்டல், நேஷனல் ஃபுட் பயோ-டெக்னாலஜி மற்றும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் நேனோ டெக்னாலஜி ஆகிய இரு கல்வி நிறுவனங்களும் ஐஎஸ்பி வளாகத்தில் விரைவில் துவங்க உள்ளதாக அறிவித்தார்.