Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 4 டிசம்பர், 2012

இந்தியாவில் முதலீடு செய்ய அன்னிய நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்


அடுத்த ஐந்து ஆண்டுகளில், உள்நாட்டில், துறைமுகங்கள், விமான நிலையங்கள், நெடுஞ்சாலை போன்றவற்றை உள்ளடக்கிய, அடிப்படை கட்டுமான துறையின் மேம்பாட்டிற்கு, 1 லட்சம் கோடி டாலர் முதலீடு தேவை என, மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இலக்கை எட்டுவதற்கு, உள்நாட்டு நிறுவனங்களுடன், அன்னிய நிறுவனங்களின் முதலீடும் அவசியம் என்று கணிக்கப்பட்டுள்ளது.இத்துடன், சில்லரை வர்த்தகம், காப்பீடு, விமானச் சேவை உள்ளிட்ட துறைகளிலும், அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

வருவாய்க்கு வழி:இதன் விளைவாக, அயல்நாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு களை மேற்கொள்ள அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றன. மேலும், முதலீட்டின் மீது சிறந்த வருவாய் தரும் நாடாக இந்தியா கருதப்படுகிறது.

வர்த்தக அமைச்சகம்:இதனால், நடப்பாண்டு, செப்டம்பர் மாதத்தில், இந்தியாவில், அன்னிய நிறுவனங்கள் மேற்கொண்ட நேரடி முதலீடு, இரண்டு மடங்கு உயர்ந்து, 467 கோடி டாலர் (25,685 கோடி ரூபாய்) என்ற அளவில் அதிகரித்துள்ளது.இது, சென்ற ஆண்டின், இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட முதலீட்டை (176 கோடி டாலர்/ 9,680 கோடி ரூபாய்) விட, 62 சதவீதம் அதிகமாகும் என, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சென்ற ஆகஸ்ட் மாதத்தில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 20 சதவீதம் குறைந்து, 226 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது. இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், இதுவரையில், செப்டம்பர் மாதத்தில் தான், அன்னிய நேரடி முதலீடு அதிக அளவில், மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சேவை துறை:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான, முதல் ஆறு மாத காலத்தில், நாட்டின் அன்னிய நேரடி முதலீடு, 1,284 கோடி டாலராக (70,620 கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில் மேற்கொள்ளப் பட்ட முதலீட்டை (1,913 கோடி டாலர்/ 1.05 லட்சம் கோடி ரூபாய்) விட, 33 சதவீதம் குறைவாகும்.

மதிப்பீட்டு காலத்தில், சேவை துறையில், மிகவும் அதிகமான அளவில், அதாவது, 300 கோடி டாலர் (16,500 கோடி ரூபாய்) முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதையடுத்து, உலோகம் (68.50 கோடி டாலர்/ 3,767 கோடி ரூபாய்), கட்டுமானம் (64 கோடி டாலர்/3,520 கோடி ரூபாய்), மோட்டார் வாகனம் (63.50 கோடி டாலர்/3,465 கோடி ரூபாய்) ஆகிய துறைகள் அதிக அளவில் அன்னிய முதலீடுகளை ஈர்த்துள்ளன.

மொரீஷியஸ்:கணக்கீட்டு காலத்தில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய முதலீடுகளில், மொரீஷியஸ் நாட்டின் பங்களிப்பு அதிக அளவில் உள்ளது. இந்நாடு, 625 கோடி டாலரை இந்தியாவில் முதலீடு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஜப்பான் (132 கோடி டாலர்), சிங்கப்பூர் (112 கோடி டாலர்), நெதர்லாந்து (97 கோடி டாலர்), இங்கிலாந்து (59 கோடி டாலர்) ஆகிய நாடுகள் உள்ளன.இந்தியாவில், மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, கடந்த 2011-12, 2010-11 மற்றும் 2009-10 நிதியாண்டுகளில் முறையே, 3,650 கோடி டாலர், 1,942 கோடி டாலர் மற்றும் 2,583 கோடி டாலர் என்ற அளவில் இருந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக