Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 7 நவம்பர், 2012

அமெரிக்க தேர்தலில் வெற்றிபெற்ற இந்தியர்


அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட இந்தியரான அமிபேரா, பிரதிநிதிகள் சபை உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அதிபர் தேர்தலில் வெற்றியடைந்த 3வது இந்தியர் என்ற சிறப்பிடத்தை அவர் அடைந்துள்ளார்.

1950-ம் ஆண்டு தலிப்சிங் சவுண்ட் என்ற இந்தியர் முதன் முறையாக அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இடம்பெற்ற முதல் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

அதன் பிறகு 2008-ம் ஆண்டு, ஜிண்டால் இரும்பு ஆலை அதிபரும் அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்திய வம்சா வழியினருமான பாபி ஜிண்டால் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது லூசியானா கவர்னராக அவர் பதவி வகிக்கின்றார்.

தற்போது நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் 6 இந்தியர்கள் போட்டியிட்டனர். இதில் 5 பேர் குடியரசு கட்சி சார்பிலும், ஒருவர் ஜனநாயக கட்சி சார்பிலும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர்.

இவர்களில் 3 பேர் அமெரிக்காவில் டாக்டர்களாக பணியாற்றி வருகின்றனர். இன்று வெளியான தேர்தல் முடிவுகளின்படி, கலிபோர்னியா மாகாணத்தின் 7-வது மாவட்டத்தில் போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளரான டாக்டர் அமிபேரா வெற்றி பெற்றுள்ளார்.

அமிபேரா, 88,406 ஓட்டுகளையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட டேன்லுங்ரன் 88,222 ஓட்டுகளையும் பெற்றனர். 184 ஓட்டு வித்தியாசத்தில் இவர் வெற்றிக் கனியை பறித்தார்.

ரிக்கி கில், டாக்டர் சையத் தாஜ், டாக்டர் மனன் திரிவேதி, உபேந்திரா சிவுக்குலா, ஜேக், உப்பால் ஆகிய 5 இந்திய வம்சாவழி வேட்பாளர்களும் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.

வன்முறைக்கு மாற்று மருந்து கல்விதான்- ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி


பெருகி வரும் வன்முறை, ஏற்றத்தாழ்வுகளை கல்வியினால் மட்டுமே முறியடிக்க இயலும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம், நாரண்பூர் மாவட்டத்தில் பழங்குடியின மாணவர்களுக்கான 2 தங்கும் விடுதிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

அமைதி, சகிப்புத்தன்மை, மனித நேயம் வளர கல்வி இன்றியமையாதது. கல்வியின் மூலம் சமூகமும் பொருளாதாரமும் வளர்ச்சி பெறும். வன்முறை, ஏற்றத்தாழ்வு போன்றவற்றை நீக்கும் மாற்று மருந்தாக கல்வி விளங்குகின்றது. செயல்படுவதற்கான நேரம் இதுதான்.

உங்கள் பாதையில் வரும் வாய்ப்புகளை நீங்கள் தவற விட்டுவிடக் கூடாது. நாடு வளர்ச்சியடைந்து வருகின்றது. கிராமங்களில் ஆஸ்பத்திரிகளும், கட்டிடங்களும் உள்ளன. ஆனால், டாக்டர் இல்லை. 70 சதவீதம் மக்கள் கிராமங்களில் தான் வாழ்கின்றனர்.

நாடெங்கிலும் 6 லட்சத்திற்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் பணியாற்ற வேண்டும் என்ற உள்ளுணர்வு வரும் வரை யாரும் கிராமங்களுக்கு சென்று சேவையாற்ற முன் வருவதில்லை.

இவ்வாறு அவர் பேசினார்

மத்தியபிரதேச பிஜேபி அரசுக்கு எதிராக மேதாபட்கர் போராட்டம் தொடர்கிறது


மத்திய பிரதேச மாநிலத்தில் மின்திட்டங்களுக்காக விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தியதைக் கண்டித்து, சமூக சேவகியும், நர்மதா பாதுகாப்பு குழு தலைவருமான மேதா பட்கர் தலைமையில் கடந்த 4-ம் தேதி சிந்த்வாராவில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக மேதா பட்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டு சிந்த்வாரா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து தன் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற்று, நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மேதா பட்கர் சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். விடுதலை செய்யும் வரை உண்ணாவிரதத்தை தொடர்வதாகவும் அவர் எச்சரித்தார்.

மேதா பட்கர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, டெல்லியில் உள்ள மத்திய பிரதேச பவன் அருகில் போராட்டம் நடத்தினார். அப்போது மேதா பட்கரை கைது செய்திருப்பது ஜனநாயக படுகொலை என்று அவர் கடுமையாக சாடினார்.

மேதா பட்கர் கைது செய்யப்பட்டு 2 நாட்கள் ஆகியும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தாததைக் கண்டித்து, ஜன் சங்கர்ஸ் மோர்ச்சா உறுப்பினர் அனுராக் மோடி, ஐகோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், கோர்ட் உத்தரவையடுத்து மேதா பட்கர் மற்றும் 19 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

செவ்வாய், 6 நவம்பர், 2012

பராக் ஒபாமா மீண்டும் அமெரிக்க அதிபராக தேர்வு

அமெரிக்க அதிபர் பதவிக்கான இறுதிகட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. பல கட்டங்களாக நடந்த இந்த தேர்தலில் சுமார் 120 மில்லியன் மக்கள் வாக்களித்தனர். 

அமெரிக்க அதிபரை அந்நாட்டின் 538 தேர்வு குழுவினர் (எலக்டோரல் காலேஜ்) தங்கள் ஓட்டுகளின் மூலம் தேர்வு செய்கின்றனர். இதில் 270 ஓட்டுகளை பெறும் வேட்பாளரே அதிபராக முடியும். 

இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் பராக் ஒபாமாவும், குடியரசு கட்சி வேட்பாளராக மாசாசூசெட்ஸ் மாகாணத்தின் முன்னாள் முதல்வர் மிட் ரோம்னியும் போட்டியிட்டனர். 

அமெரிக்காவில் மொத்தம் உள்ள 84 மாகாணங்களில் இரண்டு கட்சிகளுமே சரி சமமான செல்வாக்குடன் இருப்பதாக முந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. இந்த தேர்தலில் 6 இந்தியர்களும் போட்டியிட்டனர். 

நேற்றைய தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒபாமாவை ஆதரித்து அமெரிக்காவில் வாழும் 75 சதவீத இந்தியர்கள் வாக்களித்தாக வாக்குப்பதிவுக்கு பின்னர் நடந்த கருத்துக்கணிப்பு உறுதிபடுத்தியது. 

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. பென்சில்வேனியா, மாசாசூசெட்ஸ், நியூயார்க், கனெக்ட்கட், மெய்னே, மேரிலேண்ட், இல்லினாய்ஸ், மிச்சிகன், வாஷிங்டன் உள்ளிட்ட பல மாகாணங்களில் ஒபாமா அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார். 

இந்திய நேரப்படி, இன்று காலை 9 மணி நிலவரப்படி ஒபாமா 274 வாக்குகளை பெற்றார். இதன் மூலம் ஒபாமாவின் வெற்றி உறுதியானது.  அவரை எதிர்த்து போட்டியிட்ட மிட் ரோம்னி 203 வாக்குகள் பெற்று பின்தங்கி இருந்தார். 10.30 மணியளவில் ஒபாமா 290 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.    

இதையடுத்து அவர் நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்து சிகாகோ நகரில் உரையாற்றினார். அவர் கூறியதாவது: 

எனக்கு வாக்களித்த அமெரிக்க மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை போட்டி கடுமையாக இருந்தது. ரோம்னி கடும் சவாலாக இருந்தார். இந்த வெற்றி அமெரிக்க மக்களுக்கு கிடைத்த வெற்றி. 

அமெரிக்க குடும்பமான நாம் நாட்டின் வளர்ச்சிக்கு ஒன்றாக பாடுபடுவோம். வேலைக்காக போராடும் சூழல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு பிறகு பொருளாதாரம் மேம்பட்டு வருகிறது. அமெரிக்காவுக்கு சிறப்பான மாற்றம் காத்திருக்கிறது. 

சாதாரண மக்களும் உயர் பதவிக்கு வரலாம். முன்னேற்றப் பாதையை நோக்கி ஒற்றுமையாக செல்வோம். நாட்டின் வளர்ச்சிக்காக  ரோம்னியுடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன். சிரமங்களுக்குப் பிறகே முன்னேற்றம் கிடைக்கும். 

அமெரிக்க மக்கள் கடன் சுமை இல்லாத நிலையை உருவாக்க பாடுபடுவேன். எனது வெற்றிக்காக வலிமையான ஒரு குழு பாடுபட்டது. எனது வெற்றி அமெரிக்க மக்களின் வெற்றி. என்றும் மக்களுக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன்.

புதிய மாருதி கார் விலை ரூ.2 லட்சம்


மாருதி நிறுவனம் புதிய ஆல்ட்டோ 800 காரை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மானேசர் ஆலை பிரச்னையால் புதிய ஆல்ட்டோ 800 காரின் அறிமுகத்தை ஒத்திப்போடுவதாக மாருதி ஏற்கனவே தெரிவித்திருந்தது.

 ஆனால், ஸ்விப்ட், டிசையர் உற்பத்தி தடைபட்டுள்ளதால் அந்த நிறுவனத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த இரு கார்களும் அந்த நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 40 சதவீத பங்களிப்பை அளித்து வருகிறது.புதிய ஆல்ட்டோ 800 காரை ரூ.2 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதால், டாடா நானோ, ஹூண்டாய் இயான் விற்பனையில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆட்டோமொபைல் துறையினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் தேசிய அடையாள அட்டைப்பணி மார்ச்சில் நிறைவு செய்ய உத்தரவு


ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தை, "ஸ்மார்ட் கார்டு' மூலம் கொண்டு வருவதற்கான முன்னேற்பாடுகள், மாவட்டம் வாரியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மார்ச் மாதத்துக்குள் பணியை நிறைவு செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள, 32 மாவட்டங்களில், எட்டு கோடி மக்கள் தொகை உள்ளது. 10 ஆண்டுக்கு, ஒருமுறை எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011ம் ஆண்டு நடத்தப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவங்கள் அனைத்தும், மத்திய அரசின் உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அவை, மாநில வாரியாக, பொதுமக்களின் விவரங்கள், கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழக அரசு, ரேஷன் கார்டு முறையை மாற்றியமைக்க, இரண்டு ஆண்டுகளாக ஆலோசித்து வருகிறது.

தேசிய மக்கள் தொகை பதிவேடு முறையை அடிப்படையாகக் கொண்டு, "ஸ்மார்ட் கார்டு' மூலம் ரேஷன் பொருள் வினியோகத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. தற்போது, தேசிய அடையாள அட்டைக்கான பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிவடைந்தவுடன், அதைக் கொண்டு, "ஸ்மார்ட் கார்டு' தயாரிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு தனியார் நிறுவனம், இந்த பணியை செய்து வருகிறது. ஒவ்வொரு தாலுகாவிலும், போட்டோ, கைரேகை, கருவிழி பதிவு செய்வதற்கான முகாம், வருவாய்த் துறையால் அறிவிக்கப்படும். அந்த நாளில், மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, கணக்கெடுப்பாளர்கள் வழங்கிய ரசீதை எடுத்துச் செல்ல வேண்டும். அந்த ரசீதுடன் சேர்த்து, தேசிய அடையாள அட்டைக்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். ஐந்து வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் செல்ல வேண்டும். பதிவு முடிந்தவுடன், சம்மந்தப்பட்ட படிவம் முத்திரையிடப்பட்டு, தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படும். மார்ச் மாதத்துக்குள், அடையாள அட்டை பதிவு பணியை முடித்து, அரசிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சீத்தாப்பழம் மருத்துவ பயன்கள்


1. சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.

2. சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.

3. இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும்.

4. விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.

5. சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.

6. சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.

7. சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.

8.சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.

9.சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும்.

10 சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் கட்டுப்படும் .