Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 3 செப்டம்பர், 2012

சாதாரண வாழைப்பழம் இல்லை ,சத்தான வாழைப்பழம்


வாழைப்பழம் எல்லா நேரத்திலும் (வருடம் முழுவதும்) கிடைக்கக்கூடிய பழமாகும். இது பல நோய்களைக் குணமாக்கக்கூடிய தன்மையுடையது. இப்பழம் எல்லா மனிதர்களாலும் சுலபமாக வாங்கக்கூடியது மற்றும் அதிகளவில் கிடைக்கக்கூடியது.

அனைத்துவகை வாழைப்பழங்களும் ஏதோ ஒரு வகையில் பலனளிக்கக்கூடியவைகளாகும். வாழைப்பழம் போதுமான சக்தியினை அளிக்கின்றது. இதில் அதிக நார்ச்த்து மற்றும் சுக்ரோஸ், ப்ரக்டோஸ், குளுக்கோஸ் போன்று இயற்கை சர்க்கரைப்பொருட்கள் உள்ளது.

வாழைப்பழம் சில உடல்நலக்கோடுகள் ஏற்படுவதை தடுக்கிறது அல்லது அவற்றை மேற்கொள்ள உதவுகிறது. மனஅழுத்தம் - வாழைப்பழத்தில் ஒருவகை புரதம் உள்ளது. நம் உடல் இப்புரதத்தினை செரடோனன் எனும் வேதிப்பொருளாக மாற்றுகிறது. இப்பொருள் மனதை தளர்வாகவும் சந்தோஷமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. ப்ரிமென்ஸ்ட்ரூவல் சின்ட்ரோம் - (மாதவிடாய் முன் அளிகுறிகள்) வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரிப்படுத்துகிறது.

இது ஒருவரின் மனநிலையினை மாற்றச் செயல்படுகிறது. இரத்த சோகை - வாழைப்பழத்தில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளது. இது, இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின்  உற்பத்தியை அதிகரிக்கிறது. இது இரத்தசோகை நோயை மேற்கொள்ள உதவியாக இருக்கிறது இரத்த அழுத்தம் - வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் தாதுப் பொருளும் அதே வேளையில் குறைந்த உப்பும் உள்ளது.

எனவே இரத்த அழுத்தத்தை குறைக்க இது தகுந்த உணவாகும். மூளைத்திறன் - பொட்டாசியம் அதிகமுள்ள பழங்கள் மக்கள் சுதாரிப்பாக இருக்கச் செய்து, அதிகளவில் கற்றுக்கொள்ள உதவுகிறது  என ஆய்வுகள் தெரிவிக்கின்றன மலச்சிக்கல் - வாழைப்பழத்தில் உள்ள அதிக நார் சத்தானது மலச்சிக்கல் பிரச்சினையை மேற்கொள்ள உதவுகிறது மற்றும் சாதாரணமாக எவ்வித கஷ்டமுமின்றி மலம் கழிக்க உதவுகிறது. 

 வாழைப்பழத்தில் இயற்கையாகவே நம் உடலில் உள்ள அமிலத்தை சமமாக்கும் தன்மை உள்ளது. இது நெஞ்செரிச்சலிலிருந்து நல்ல நிவாரணம் தர உதவுகிறது.

 அல்சர் எனப்படும் வயிற்று மற்றும் குடல்புண் :- வாழைப்பழம் மென்மையாகவும் வழுவழுப்பாகவும் இருப்பதால், இது குடலில் ஏற்படும் கோளாறு உள்ளவர்களுக்கும், நல்ல உணவாக பயன்படுகிறது. வாழைப்பழம் அதிக அமிலத்தன்மையைச் சரிசெய்வதோடு, புண் ஏற்பட்ட இடத்தில்  ஒரு பாதுகாப்பு சுவரை ஏற்படுத்துகிறது. ஸ்ட்ரோக் - வாழைப்பழத்தினை உணவில் ஒருபகுதியாக தவறாமல் எடுத்துக்கொள்வதினால் அதிகளவு (40 சதம்) ஸ்ட்ரோக் ஏற்படும் ஆபத்தினை தவிர்க்கிறது.

நிராயுதபாணியாய் நிலைகுலைந்து நிற்கும் நம் சொந்தங்கள் நாதியற்றவர்கள் அல்ல:எம்.அப்துல் ரகுமான் எம்.பி


பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு!
எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக!

அகண்ட பாரதத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் சிறு மாநிலங்களில் ஒன்று அஸ்ஸாம். பிரம்மபுத்திரா எனும் பிரம்மாண்ட ஆற்றின் கம்பீரத் தோற்றம் இம்மாநிலத்தின் பூகோள அழகு என்றால் மிகையாகாது. இந்த ஆற்றின் அகலமே நான்கு கிலோமீட்டர் என்கிறார்கள். சுமார் 3 கோடி மக்களே வாழும் இம்மாநிலத்தில் போடோ எனும் மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி கோக்ரஜார் மாவட்டம்.

இந்த மாவட்டத்தில்தான் சென்ற 20.07.2012 வெள்ளியன்று போடோ இன இளைஞர்கள் நான்குபேர் அடையாளம் தெரியாத சில விஷமிகளால் தாக்கப்பட்டு மாண்டனர். இதற்கு கோக்ரஜாரில் வசிக்கும் சில முஸ்லிம்கள்தான் காரணம் என்று வதந்தி பரவ, ஆயுதங்கள் தாங்கிய போடோ இன வெறியர்கள் அப்பாவி முஸ்லிம்களைத் தாக்கத் தொடங்கினர். எண்ணிக்கையில் மிக, மிகச் சிறுபான்மையினராக அந்தப் பகுதியில் வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்கள் செய்வதறியாது உயிர் தப்பினால் போதும் என்று பதை பதைத்தவர்களாக, குழந்தைகளையும், வயோதிகர்களையும் தங்களின் மேல் சுமந்தவர்களாக தங்கள் இருப்பிடங்களைத் துறந்து ஓட ஆரம்பித்தார்கள். ஓட, ஓட விரட்டி அப்பாவி முஸ்லிம்களை ஆயுதங்களால் தாக்கியும், துப்பாக்கியால் சுட்டும் பல உயிர்களை வேட்டையாடினார்கள் போடோ இன வெறியர்கள். ஏழை முஸ்லிம்களின் உடமைகள் சூறையாடப்பட்டன; குடிசைகள் தீ வைக்கப்பட்டன; மஸ்ஜித்கள் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டன; முஸ்லிம்கள் வாழ்ந்த பகுதிகள் அனைத்தும் அடையாளமே தெரியாத அளவுக்கு திறந்தவெளி மைதானமாக ஆக்கப்பட்டன. இத்தனைக்கும் அஸ்ஸாம் மாநிலத்தின் ஜனத் தொகையில் 5 சதவிகிதமே போடோ இன மலைவாழ் மக்கள். முஸ்லிம்களின் ஜனத்தொகை 33 சதவிகிதம். ஆனாலும், அஸ்ஸாம் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் பங்களாதேஷ் எல்லை பகுதியை ஒருபுறமாகவும், மேற்கு வங்காளம் மற்றும் மேகாலயா மாநிலங்களின் எல்லைப் பகுதிகளை மறுபுறமாகவும் கொண்ட கோக்ரஜார் மாவட்டத்தில்தான் இந்த 5 சதவிகித போடோ இன மலைவாழ் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களைவிட 6 அல்லது 7 மடங்கு அதிகம் வாழும் முஸ்லிம்கள் அம்மாநிலத்தில் எல்லா பகுதிகளிலும் பரவலாக வசிக்கிறார்கள். பெரும்பாலும் கல்வியறிவு அற்றவர்களாக, நாகரீகம் தெரியாதவர்களாக, கடும் உடல் உழைப்பையே நம்பியவர்களாக வாழும் இவர்கள்தான் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் கோக்ரஜார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து வெளியேறி சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தூப்ரி மாவட்டத்தில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்.


ஏறத்தாழ புனித ரமலான் தொடக்கத்திலிருந்தே பெரும் துயரத்திற்கும், கடும் சோகத்திற்கும் உள்ளான இம்மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பலியாகியிருக்கிறார்கள் என்பதும் பெரும் வேதனைக்குரிய செய்தி. கோக்ரஜார் பகுதியில் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தி பெரும் கலவரத்தை உருவாக்கியதையறிந்து அரசு காவல்துறையின் பறக்கும் படையினரும், மத்திய அரசின் பாதுகாப்புப் படையினரும் இப்பகுதிக்கு விரைந்து வந்து கலவரத்தைக் கட்டுப்படுத்தியுள்ளனர். அவ்வப்போது கலவரத்தின் போக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் திடீர் திடீரென ஆயுதம் தாங்கிய போடோ இன வெறியர்களின் அத்துமீறல்கள் தலைதூக்கிக் கொண்டுதான் இருக்கின்றன.இத்தகைய அத்துமீறல்களால் போடோ இன மக்களின் சில பிரிவினரேகூட பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். அவர்களும் ஒருவகையில் அப்பாவிகள்தான். என்ன செய்வது? தீவிரவாதம் தலைதூக்குகிறபோது யார் என்கிற அடையாளமே தெரியாமல் வெறிச் செயல்கள் மாத்திரமே பிரதிபலிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

பாதிப்புக்குள்ளாகி உடமைகளையும் உயிர்களையும் இழந்து வந்தவர்களில் பெரும்பாலானோர் துப்ரியிலேயே பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக் கிறார்கள். இவர்களின் உணவுக்கும், தங்குமிடத்திற்கும் மாநில அரசு உதவிகள் செய்தாலும் அவர்களின் துயர் துடைக்கும் பணிகளை முழுமையாக்கிவிட முடியாது என்பது நாம் யாவரும் அறிந்ததுதான். இருந்தாலும் சென்ற ரமலான் மாதம் பிறை 12 (01.08.2012) அன்று தலைநகர் டில்லியில் கூடிய முஸ்லிம் லீகின் தேசிய நிர்வாகக்குழுவில் அஸ்ஸாம் கலவரம் பற்றிய தகவல்கள் மிகுந்த கவலையுணர்வோடு விவாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட நிலையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி மக்களுக்கு நிவாரணம் வழங்கும் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு அதற்கான குழுவும் நியமிக்கப்பட்டது. அஸ்ஸாம் கலவர நிவாரண நிதி திரட்டிட தனியே ஒரு வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டு நிதி சேர்க்க முஸ்லிம் லீகர்கள் போர்க்கால அடிப்படையில் பணியாற்றிடப் பணிக்கப்பட்டனர். மிகச் சிறப்பாகச் செயல்பட்டு குறிப்பாக கேரளா, தமிழ்நாடு மாநிலங்களில் கணிசமான அளவுக்கு நிதி திரட்டப்பட்டு வருகிற தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

இதற்கிடையே சென்ற 23.08.2012 அன்று முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் மாண்புமிகு மத்திய அமைச்சர் இ. அஹமது அவர்களின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற அளவில் நானும், ஜனாப் ஈ.டி. முகம்மது பசீர் அவர்களும், முன்னாள் எம்.பி. ஜனாப் அப்துல் வஹாப் அவர்களும், தேசிய செயலாளர் ஜனாப் குர்ரம் அனீஸ் அவர்களும் மற்றும் தேசிய நிர்வாகிகளும் அடங்கிய எட்டு பேர் கொண்ட நிவாரண குழு அஸ்ஸாம் சென்று பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களிலேயே நேரில் சென்று சந்தித்து அவர்களின் தேவைகளைக் கண்டறிவது என திட்டமிட்டு அஸ்ஸாம் தலைநகர் கவுஹாத்தி சென்றோம். அங்கிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள துப்ரிக்குச் சென்று முகாம்களைக் கண்காணித்து வரும் அரசு அதிகாரிகளைச் சந்தித்து விளக்கம் கேட்டோம். பிறகு நேரில் சென்று முகாம்களில் மக்களைச் சந்திக்கச் சென்றோம்.


முகாம்களில் நுழைந்ததுதான் தாமதம்; எங்களைப் பார்த்து ஓடி வந்து கதறி அழுதவர்களாய்; இல்லை, இல்லை, கதறி ஓலமிட்டவர்களாயும், சொல்லுவதற்கே முடியாமல் உடல் நடுங்கி திணறியவர்களாயும், தங்களின் பிள்ளைச் செல்வங்களை பலி கொடுத்தவர்களாயும், கணவனை இழந்து மனைவி, பெற்றோர்களை இழந்து பிள்ளைகள், சொந்த பந்தங்களை இழந்து அநாதைகள் என கைவிடப்பட்டவர்க ளாயும், எல்லாவற்றையும் இழந்தவர்களாயும் பரிதவித்துப் பதைக்கப் பதைக்கத் தங்கள் மார்புகளில் அடித்துக் கொண்டு அலறினார்களே! யாஅல்லாஹ் இவர் களுக்கு சபுர் எனும் பொறுமையை வழங்குவாயாக! என்ற துஆவை மட்டுமே உடனடி ஆறுதலாகத் தரமுடிந்தது. பரிதவித்து நின்ற அந்த மக்கள் பாவம்; படிப்பற்றவர்கள்; நாகரீக வாழ்வு தெரியாதவர்கள்; எப்படி பேசுவதென்றே புரியாதவர்கள்; சுகவாழ்வு என்றால் என்னவென்றே அறியாதவர்கள்; இருக்கும் ஆடைகளையே இரண்டாய், மூன்றாய் கிழித்து தங்களின் உடல்களையும், பிள்ளைகளின் உடல்களையும் மறைத்துக் கொண்டு முகாம்களில் அடங்கிக் கிடந்தார்கள்.

பிறைநெஞ்சே! அவர்கள் கொண்ட கோலங்களைக் கண்ட என் கண்கள் என் உடலைத் துடிதுடிக்கச் செய்தன. அழுது கொண்டே என்னைச் சுற்றி வளைத்த பிள்ளைகளையும், தாய்மார்களையும், வயோதிகர்களையும் கட்டி அணைத்துக் கொண்டு ஆறுதல் சொல்லி என் முகத்தை மறுபுறம் திருப்பினேன்; 6 அல்லது 7 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகள் கோவணம் கட்டிக் கொண்ட நிலையில் தங்களின் நோயாளித் தந்தையின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு அழுதவாறே என்னை நோக்கி வந்தனர்; அவர்களை அள்ளி அணைத்தவாறே என்ன? என்று கேட்டேன். இந்த பெண் பிள்ளைகளின் மானத்தை மறைக்க என்னிடத்தில் ஆடை இல்லை; எனது தோளில் போட்டிருந்த டவளை நீளவாட்டில் இரண்டாகக் கிழித்து இந்தப் பிள்ளைகளுக்குக் கோவணமாகக் கட்டிவிட்டுள்ளேன் என்றார் அந்த நோயாளித் தந்தை. உடைந்தே போனேன். நிற்க வலுவில்லாத உடம்பாய் என்னை உணர்ந்தேன். தரையில் அமர்ந்தேன்; என் இரு மடிகளிலும் உட்கார்ந்த அவ்விரண்டு பிள்ளைகளின் தேகங்கள் எனக்குப் பதராய் இருந்தன; காரணம் பசியாய் இருக்கும் இந்த பிள்ளைகளின் வயிற்றில் உணவில்லை; வெறும் காற்றுத்தான் நிரம்பி இருந்திருக்கும். இதுபோன்று நிலைகுலையச் செய்திடும் சம்பவங்களை நெஞ்சில் சுமந்தவனாய், ஏன்; குழுவினர் அனைவருமே சோகத்தில் மூழ்கியவர்களாய் அதே 400 கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து கவுஹாத்தி வந்தடைந்தோம்.

துப்ரியில் மட்டும் 133 முகாம்களில் 1 லட்சத்து 46 ஆயிரம் மக்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள். வேதனையின் ஆழத்தில் மூழ்கியிருந்த நாங்கள் மறுநாள் அஸ்ஸாம் மாநில முதல் அமைச்சர் மாண்புமிகு தருண் கோகாய் அவர்களைச் சந்தித்து நிவாரணப் பணிகளைத் துரிதமாக்க ஆவண செய்தோம். அதைத் தொடர்ந்து கல்கத்தாவிலிருந்து சேலைகளும், கைலிகளும், குழந்தைகளுக்கு ஆடைகளும் வாங்கி டிரக்குகளில் நிரப்பி அனுப்ப ஏற்பாடுகளை மேற்கொண்டோம்; அவைகளை முறையாக விநியோகம் செய்திட தேசிய செயலாளர் குர்ரம் அனீஸ் அவர்களின் தலைமையில் குழுவை அமைத்து அங்கேயே தங்கி இருக்கச் செய்திருக்கிறோம்; நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முஸ்லிம் லீகின் தலைமை கேட்டுக் கொண்டதற்கிணங்க ��முஸ்லிம் லீக் நிவாரண நிதி�� என்ற வங்கிக் கணக்கில் நல்லுள்ளம் கொண்டோர் நிதியளித்து வருகிறார்கள். மாநிலம் முழுவதும் தாய்ச்சபை முஸ்லிம் லீக் நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உணவுப் பொருட்களும், ஆடை வகைகளும், போர்வைகளும் மொத்தமாக வாங்கப்பட்டு தொடர்ந்து முகாம் களுக்கு அனுப்பப்படுகின்றன.


பிறைநெஞ்சே! தங்களின் உடமைகளை இழந்து வீடுகளை இழந்து, உயிர்களையும் பலி கொடுத்து நிராயுதபாணியாய் நிலைகுலைந்து நிற்கும் நம் சொந்தங்கள் அஸ்ஸாமில் நாதியற்றவர்கள் அல்ல; இதோ உங்களின் உணர்வுப் பதாகைகளாய் நாங்கள் இருக்கிறோம் என உரைத்திடும் உன் உணர்ச்சிப் பாசறையை உன் உழைப்பால் காட்டு;

ஆயுதம் ஏந்தி ஆட்கொள்ளிகளாய் அலையும் ஆவேசக்காரர்கள் போடோ வெறியர்களின் ஈனப்பசி பொசுங்கிப்போவது நிச்சயம்; நீதி நிலைத்திடும்;

நிதியை சேர்த்தாவது நிவாரணம் தர நில்லாமல் உழைத்திடு நிறைந்திருக்கும் நல்ல உள்ளங்களைத் தேடி; வல்ல அல்லாஹ்வின் பேரருளை நாடி.

இன்ஷா அல்லாஹ்.



ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

நெல்லையில் கண்ட உண்மை இந்தியா முழுவதும் என்று காண்போம் .....?


பாளையங்கோட்டை வி.எம்.சந்திரம் ஹசீன் நகரில் தனியாருக்கு சொந்தமான அபார்ட்மென்ட் உள்ளது. இதன் கட்டுமான பணி முடிந்து விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதில் உள்ள வீடுகளுக்கு உரிமை கோருதல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பாக பாளை மகாராஜாநகர் தொழில் அதிபர் சாகுல்அமீது என்பவருக்கும், சென்னை ஆலந்தூரையை சேர்ந்த பால சுப்பிரமணியன் என்பவருக்கும் இடையே பிரச்சினை இருந்தது.

இந்த நிலையில் நெல்லை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் வந்தது. போனில் மேலப்பாளையம் குறிச்சியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் பேசினார். அவர் ஹசீன் நகரில் உள்ள அபார்ட் மெட்டில் சிலர் வெடிகுண்டு பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து பெருமாள்புரம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், தலைமையில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அபார்ட்மென்ட் அருகே ஓடைபாலத்தில் நாட்டு வெடிகுண்டு, வெடி பொருட்கள், வாள் போன்றவை இருப்பது கண்டுப் பிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.


இதையடுத்து அபார்ட்மென்ட் வீடுகளில் வெடிகுண்டு பதுக்கப்பட்டு உள்ளதா என்று சோதனை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக மகாராஜ நகர் சாகுல்அமீது, மேலப்பாளையத்தை சேர்ந்த சாகுல் அமீது காவலாளி மைதீன், உதுமான் ஆகிய 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினார். போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் கொடுத்த கிருஷ்ணனிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. போலீசுக்கு தகவல் கொடுத்தவரே வெடிகுண்டுகளை பதுக்கி வைத்து விட்டு நாடகம் ஆடியது கண்டு பிடிக்கப்பட்டது. குறிச்சியை சேர்ந்த கிருஷ்ணன் கொடுக்கல் வாங்கல் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அந்த அபார்ட்மென்ட்டில் கிருஷ்ணன் 2 வீடுகள் வாங்கியுள்ளார். அதை கூடுதல் விலைக்கு விற்க கிருஷ்ணன் திட்டமிட்டார். இதற்கு மகாராஜநகர் சாகுல் அமீது தடையாக இருந்துள்ளார். இதனால் சாகுல் அமீதை போலீசில் சிக்க வைக்கும் நோக்கில் ஓடை பாலம் அருகே வெடிகுண்டு மற்றும் பொருட்களை கிருஷ்ணனே வைத்துள்ளார். பின்பு அவரே போலீசுக்கு போனில் தகவல் கொடுத்துள்ளார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

மதரஸா கல்வி மேம்பாடு தேசிய ஆலோசனைக்குழு : உறுப்பினராக கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்


இந்தியாவின் அனைத்து மதரஸாக்களிலும் கல்வி தரத்தை உயர்த்தும் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது இதற்காக ஆலோசனை வழங்க தேசிய அளவில் மத்திய மனித வளமேம்பாட்டுதுறை அமைச்சர், இணை அமைச்சர் மற்றும் 31 உறுப்பினர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் தலைவராக மத்திய மனித வள மேம்பா ட்டுத்துறை அமைச்சர் கபில் சிபில் துணைத் தலைவராக இணை அமைச்சர் இ.அஹமது ஆகியோர் உள்ளனர்.

இக்குழுவின் உறுப்பினராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம் மது அபூபக்கர் இடம் பெற்று ள்ளார்.

பள்ளிக்கல்விச் செயலாளர், இணைச்செயலாளர், நோயிடா, நியாஸ் சேர்மேன் டாக்டர் எஸ் எஸ். சனா, உத்திர பிரதேச மாநில சிறுபான்மை நலத்துறை, மத்திய பிரதேச பொதுக் கல்வி துறை செயலாளர் , பீகார் கல்வித்துறை செயலாளர் கேரள கல்வி துறை இயக்குனர் மத்திய பிரதேச மதரஸா வாரியத் தலைவர் ராஜஸ் தான்,மதரஸா வாரியத் தலைவர், பீகார் மதரஸா வாரியத் தலைவர் தனியார் சட்ட வாரிய மௌலானா வலி ரஹ்மான், மும்பை ஹபீன் பக்கீம்.

புதுடெல்லி முப்தீ, இஜாஸ், அர்ஷத் காசிமி, டாக்டர் காலித் அன்வர், டாக்டர் சையதா முபீன் ஷஹரா, மத்திய பிரதேச மத்திய மானியம் மற்றும் உதவிக்குழு உறுப்பினர் பேராசிரியர் ஹலீம் கான்,

உத்திரபிரதேச மதரஸா நவீனத்துவ ஆசிரியர் சங்க தலைவர் ஐஜாஸ் அஹமது, அகில இந்திய மதரஸா அதுனி க்கரன் சிக்ஷாக் சங்க் தலைவர் முஸ்லிம் ரசாக் கான், ஒடிசா மதரஸா அசோஷேசியன் பொது ச்செயலாளர் முனவ்வர் அஹ மது, அஸ்ஸாம் மதரஸா ஆசிரியர் சங்கத் தலைவர் பசலுதீன் பஸ்ஸானி, உத்தர் காண்ட் ஐமாஸ் பொதுச்செய லாளர் ஜியா வுதீன், பீகார் மதரஸா சையன்ஸ் டீச்சர்ஸ் அசோஷேசன் செயலாளர் எஹ்தாசம் சத்ரி, உத்திர பிரதேசம் அகில இந்திய மதரஸா நவீனத்துவ சங்கத் தலைவர் சமியுல்லாகான், துணைத் தலைவர் முஹம்மது அஹமது,

மத்திய பிரதேச மதரஸா டீச்சர்ஸ் சோஷேசன் முஹம்மது சுஹப் குரைஷி, புதுடெல்லி ஜாமிய மில்லியா இஸ்லாமியா பேரசிரியர் எம்.எச்.குரைஷி,

கேரள பதிப்பிறையம் உஸ் மான் மதனி, கோழிக்கோடு பி.எம். கோயா மாஸ்டர், கன்னூர் எஸ்.கே. ஹம்சா ஹாஜி, தமிழ் நாடு கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், உத்திர பிரதேசம் மவ்லானா கவ்சர் ஹயாத்கான் ஆகியோர் உறுப்பினராக இடம் பெற்றுள்ளனர். இக்குழுவின் உறுப்பினர் செயலாளர் மற்றும் அமைப் பாளராக மனித வள மேம் பாட்டுத்துறை துணைச் செயலாளர் வீரேந்திர சிங் இருப் பார் எனவும்;ஆண்டுக்கு இருமுறை இக்கூட்டங்கள் நடைபெற்று ஒவ்வொரு மாநிலத்திற்கும் மதரஸா கல்வி மேம்பாட்டிற் கான தேவையான ஆலோ சனைகள் பெறப்பட்டு அமுல் படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என மத்திய மனதவளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழக்கரையில் ஜப்பான்மாணவர்கள் ஆய்வு


ஜப்பான் சீக பெர்பெக்சர் யுனிவர்சிட்டியில் பயிலும் ஜப்பானிய ஆராய்ச்சி மாணவர் சுக்ராய்(23),மாணவி சின்யா யூ வேனிஸ்(23) ஆகியோர் சுற்றுலா மற்றும் பழங்கால கட்டிட கலை ஆராய்ச்சிக்காக ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை பகுதிக்கு வந்தனர். வெளிநாட்டிநர் ஆராய்ச்சிக்காக இங்கு வரும் போது உள்ளூர் காவல்துறையிடம் அனுமதி பெறுவது உள்ளிட்ட விதிமுறைகளை இவர்கள் பின்பற்றததால் போலீசார் இப்பகுதியில் சுற்றுவதற்கு அனுமதி மறுத்தனர்.இதனால் இவர்கள் ஹோட்டலில் முடங்கும் சூழல் ஏற்பட்டது. இதனை அறிந்த தொல்பொருள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் கீழக்கரை இளைஞர் அபுசாலிஹ் இவர்கள் முறையான அனுமதி பெறுவதற்கான உதவிகளை செய்து தந்து அறிவுரைகளும் வழங்கினார்.

இது குறித்து ஜப்பானிய மாணவிகள் கூறியதாவது, நாங்கள் ஏற்கெனவே கட்டிட கலை ஆராய்ச்சிக்காக இந்தியா வந்துள்ளோம் 2 மாதத்திற்கு மேல் தங்கியிருந்து ராமேஸ்வரம்,கீழக்கரை பகுதியில் பழங்கால் கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்தோம்.இங்குள்ள பழங்கால‌ க‌ட்டிட‌ங்க‌ள் எங்க‌ளை பிர‌மிக்க‌ வைத்த‌து. என‌வே த‌ற்போது எங்க‌ள் ப‌டிப்பிற்கான‌ ஆராய்ச்சியை நிறைவு செய்வ‌த‌ற்காக‌ மீண்டும் வ‌ந்தோம்.இப்ப‌குதிக்கு வ‌ந்த‌ நாங்கள் இம்முறை த‌னியாக‌ வ‌ந்த‌தாலும்,மொழி தெரிய‌த‌தாலும் அர‌சு முறை ச‌ம்பிராத‌ய‌ங்க‌ளை நிறைவு செய்ய‌ முடிய‌வில்லை.இத‌னால் ஹோட்ட‌லை விட்டு வெளியே வ‌ர‌ முடியாத‌ சூழ‌ல் ஏற்ப‌ட்ட‌து.என்ன‌ செய்வ‌தென்று தெரியாம‌ல் திகைத்த‌ நாங்க‌ள் சென்ற‌ முறை அறிமுக‌மான‌ ந‌ண்ப‌ர் அபுசாலிஹை தொட‌ர்பு கொண்டோம்.அத‌ன் பேரில் அவ‌ர் எங்க‌ளுக்கு உத‌வினார்.த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் விருந்தோம்ப‌லுக்கு சிற‌ந்த‌வ‌ர்க‌ள் என்று அறிந்திருந்தோம் த‌ற்போது நேரில் க‌ண்டுகொண்டோம் என்ற‌ன‌ர்.

இது குறித்து அபுசாலிஹ் கூறிய‌தாவ‌து,
இவ‌ர்க‌ள் சென்ற‌ முறை என‌க்கு அறிமுக‌மானார்க‌ள்.த‌ற்போது மீண்டும் தொட‌ர்பு கொண்டும் உத‌வ‌ வேண்டும் என்று கேட்டார்க‌ள் அத‌ன‌டிப்ப‌டையில் ‌ அர‌சின் முறையான அனும‌தியை பெறுவ‌த‌ற்கு உரிய‌ வ‌ழிமுறைக‌ளை அமைத்து தந்தேன்.மேலும் கீழ‌க்க‌ரை வ‌ர‌லாற்று சிற‌ப்புமிக்க‌ இட‌மாக‌ இருப்ப‌தால் சுற்றுலாத்துறை கீழ‌க்க‌ரையில் த‌க‌வ‌ல் சிறப்பு மைய‌ம் ஒன்றை ஏற்ப‌டுத்தி இதுபோன்று வ‌ரும் சுற்றுலா ப‌ய‌ணிக‌ளுக்கு உத‌வ‌ வேண்டும் என்றார்.

நன்றி :கீழக்கரை டைம்ஸ்

சனி, 1 செப்டம்பர், 2012

தென்காசி பகுதியில் ஆப்பிள், மாதுளை விற்பனை அதிகரிப்பு

தென்காசி பகுதியில் ஆப்பிள், மாதுளை பழங்களின் விற்பனை அமோகமாக உள்ளது.குற்றால சீசனை முன்னிட்டு தென்காசி பகுதியில் மலைப் பகுதியில் விளையும் பழ வகைகள் விற்பனைக்கு அதிகளவில் குவிக்கப்பட்டன. சீசன் டல் அடித்ததால் பழ வகைகளின் விற்பனையும் சரிந்தது. ஆனால் ஆப்பிள், மாதுளை போன்ற பழ வகைகளின் விற்பனை சீராக இருந்தது. ஆப்பிள் கிலோவிற்கு 120 ரூபாய் வரையிலும், மாதுளை கிலோவிற்கு 180 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டன.

தற்போது ஆப்பிள், மாதுளை பழங்களின் அறுவடை சீசன் என்பதால் அவற்றின் வரவு அதிகமாக உள்ளது. பழக்கடைகளில் மட்டும் அல்லாமல் சாலையோரங்களிலும் அதிகளவில் இப்பழங்கள் குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மாதுளை கிலோவிற்கு 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரையிலும், ஆப்பிள் கிலோவிற்கு 70 ரூபாய் முதல் 90 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.காஷ்மீர் மாநிலத்திலிருந்து ஆப்பிள் பழங்களும், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களிலிருந்து மாதுளை பழங்களும் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன. இதனால்தான் இவற்றின் விலை குறைந்துள்ளது. விலை குறைந்ததால் இப்பழங்களை பொதுமக்கள் ஆர்வத்தோடு வாங்கி சென்றனர்.

சிட்டுக்குருவி ஆராய்ச்சி மையம்


தமிழ்நாட்டில் 40 சதவீதம் சிட்டுக்குருவிகள் அழிந்து விட்டதாக,'' சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி முதல்வர் பாஸ்கரன் கூறினார்.

இதன் கல்லூரியில், "சிட்டுக்குருவி ஆராய்ச்சி மையம்' அமைப்பு சார்பில், நடந்த "இன்றைய சூழலில் சிட்டுக்குருவியின் நிலை' பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கை, துவக்கி வைத்து அவர் பேசியபோது,
‘’ விவசாயம் மனிதனுக்கும், பறவைகளுக்கும் வாழ்க்கை சக்கரமாக உள்ளது. காலத்திற்கு ஏற்ப விவசாயம் நடக்காததால், சிட்டு குருவிகளுக்கு உணவு தட்டுப்பாடு நிலவுகிறது.

சிட்டுகுருவி வாழ்விடம் அமைப்பதற்கான புல் கிடைக்கவில்லை. மற்ற பறவைகளின் இறகுகள் இல்லாத நிலையில், சிட்டுக்குருவியால் வாழ்விடம் அமைக்க முடியவில்லை. இதன் அழிவுக்கு இதுவும் முக்கிய காரணம்.
தமிழ்நாட்டில் 1979 முதல் 2006 வரை 40 சதவீதமும், கடந்த 35 ஆண்டுகளில் உலக அளவில் 70 சதவீதம் அளவு சிட்டுக்குருவி குறைந்து விட்டது.

பிரிட்டனில் 15 ஆண்டுகளில் 70 முதல் 90 சதவீதம், லண்டனில் 1994 முதல் 2005 வரை 65 சதவீதம் சிட்டுக்குருவிகள் அழிந்து வருகிகின்றன. அழிந்து வரும் இனத்தை பாதுகாக்க, சிட்டுக்குருவிக்கு வீடுகளில் தானியம், தண்ணீர் வைக்க வேண்டும். மண்பானை, மரத்தலான கூடுகளை கட்டி வையுங்கள்’’ என்றார்.