Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ஈரான் தலைவர்களுடன் பேசுகிறார் பிரதமர்


இந்தியா, பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட 120 நாடுகள் உறுப்பினராக உள்ள அணிசேரா நாடுகளின் 16-வது மாநாடு வருகிற வியாழக்கிழமை ஈரான் தலைநகர் டெக்ரானில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன்சிங் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று ஈரான் நாட்டிற்கு புறப்பட்டு செல்கிறார்.

 அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள், அந்த நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்து உள்ளன. அந்த நாட்டிற்கு வழங்கப்பட்டு வந்த பல சலுகைகளை மேற்கு நாடுகள் நிறுத்தி விட்டன. மேலும், அந்த நாட்டில் இருந்து அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியா உள்ளிட்ட நாடுகளை, ஈரானுடன் உள்ள வாணிப தொடர்புகளை குறைத்துக் கொள்ளுமாறு அமெரிக்கா கேட்டுக் கொண்டது.

இருப்பினும், அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், இந்த சுற்றுப்பயணத்தின்போது, ஈரான் நாட்டின் அதிபர் அகமதினிஜாத் மற்றும் மத தலைவர் அயதுல்லா அலி கோமேனி உள்ளிட்ட தலைவர்களை பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.

இதுகுறித்து, டெல்லியில் நேற்று வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய் கூறுகையில், 'இந்த பேச்சுவார்த்தையானது, ஒட்டுமொத்த ஆசிய மற்றும் அரபு பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பு பற்றியும், குறிப்பாக இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம், எண்ணெய் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும் இருக்கும். மற்ற நாடுகளின் அக்கறைகளுக்கு முன்னுரிமை அளிக்காமல், நம்முடைய சொந்த அக்கறைகளை கருத்தில் கொண்டே இந்த பேச்சுவார்த்தை அமையும்' என்று தெரிவித்தார்.

மேலும், இந்த மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோரையும் பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்து பேச உள்ளார். அதேபோன்று, கடந்த 1979-ம் ஆண்டில் ஏற்பட்ட புரட்சிக்கு பின்னர் ஈரானுக்கு வருகை தரும் எகிப்து நாட்டின் முதல் அதிபரான முகமது மோர்சியுடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். இந்த மாநாட்டை ஈரானில் நடத்துவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அந்த மாநாட்டை நடத்துவதை மிகப்பெரிய ராஜதந்திர சாதனையாக ஈரான் பார்க்கிறது. இதில், அமெரிக்காவின் வேண்டுகோளை புறக்கணித்துவிட்டு ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கிமூனும் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாட்டில்,  ஈரான் அணு திட்டம், சிரியா கலவரம் மற்றும் பிராந்திய விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்தியாவில் 'கிரெடிட் கார்டு' மூலம் செலவழிப்பில் புதிய சாதனை

நடப்பு 2012-13ம் நிதியாண்டின், ஏப்.,-ஜூன் வரையிலான முதல் காலாண்டில், கிரெடிட் கார்டு வாயிலாக, 28,465 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என, ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, புதிய சாதனையாகும்.மதிப்பீட்டு காலத்தில், கிரெடிட் கார்டு மூலம் செலவிடுவது, முந்தைய நான்கு காலாண்டு களில் இல்லாத அளவில், 9.9 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த 2003-04 மற்றும் 2004-05ம் நிதியாண்டுகளை விட, நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், கிரெடிட் கார்டு வாயிலாக செலவிடுவது அதிகரித்துள்ளது என, வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பண பரிவர்த்தனை:ஆக்சிஸ் பேங்க்-ன் மூத்த துணை தலைவர் மற்றும் நுகர்வோர் செலவழிப்பு மற்றும் பணப் பரிவர்த்தனை பிரிவின் தலைவர் ஜெய்ராம் ஸ்ரீதரன் கூறும்போது, "தற்போது, வங்கிகள், வாடிக்கையாளர் பெற்றுள்ள கடன் குறித்த முழு விவரங்களையும் அறியும் வசதி உள்ளதால், அந்த விவரங்களின் அடிப்படையிலேயே கிரெடிட் கார்டு வழங்கப்படுகிறது. இதனால், கடனை திரும்பச் செலுத்த தவறுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது' என்று தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி:மேலும், 2008-09ம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடியால், சந்தையில் காணாமல் போன கிரெடிட் கார்டு சலுகைகள், தற்போது மீண்டும் சந்தையை கலக்கி வருகின்றன.கிரெடிட் கார்டு நிறுவனங்களும், வர்த்தக நிறுவனங்களும் இணைந்து, கிரெடிட் கார்டு பயன்பாட்டை அதிகரிப்பதற்கான புதிய திட்டங்களை யோசித்து செயல்படுத்துகின்றன. இதன் காரணமாகவும், கிரெடிட் கார்டு வாயிலான செலவழிப்பு உயர்ந்துள்ளது என, ஸ்ரீதரன் மேலும் கூறினார்.
கிரெடிட் கார்டு வாயிலான செலவழிப்பு தொகைக்கு, குறிப்பிட்ட காலம் வரை வட்டி தள்ளுபடி வழங்கப்படுவதும், அதன் பயன்பாடு உயர வழிவகுத்துள்ளது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள், வட்டி தள்ளுபடி காலத்திற்கு உள்ளாகவே கடன் தொகையை செலுத்தி விடுவதாக, வங்கியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து எஸ்.பீ.ஐ., கார்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கடம்பி நரஹரி கூறுகையில், "இந்திய நுகர்வோர்கள், வட்டி தள்ளுபடி காலத்தை பயன்படுத்திக் கொள்வதற்காகவும், மிகப் பெரிய சில்லரை நிறுவனங்கள் அளிக்கும் சலுகைகளை பெறவும், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர்' என்றார்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும், ஜி.இ. கேப்பிடல் நிறுவனமும் இணைந்து, எஸ்.பீ.ஐ. கார்ட்ஸ் நிறுவனத்தை உருவாக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.கிரெடிட் கார்டுதாரர்களில் பெரும்பாலோர், சில்லரை விற்பனையகங்களில் பலதரப்பட்ட பொருட்கள் வாங்கவும், பயணச் செலவினங்களுக்காகவும், கிரெடிட் கார்டை பயன்படுத்துகின்றனர். மேலும், பலர், காப்பீட்டு பிரிமியம் மற்றும் அலைபேசி பயன்பாட்டு கட்டணங்களை செலுத்தவும் கிரெடிட் கார்டை பயன்படுத்துகின்றனர்.

மின் கட்டணம்:கிரெடிட் கார்டு வாயிலான செலவழிப்பு, ஆரோக்கியமான முறையில் வளர்ச்சி கண்டு வருகிறது. தற்போது, இவ்வகை கடன் அட்டைகளை பயன்படுத்த பல்வேறு வாய்ப்புக்களும், வசதிகளும் உள்ளன. மின் கட்டணம்,சொத்து வரி, தொலைபேசி, அலைபேசி கட்டணம் போன்ற பலவற்றுக்கு கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவது அதிகரித்துள்ளது.
இது போன்ற வசதிகள், சலுகைகள் ஆகியவை கிரெடிட் கார்டு வாயிலாக செலவிடுவதை ஊக்குவிக்கின்றன' என, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியின், சில்லரை வர்த்தக பிரிவு பொதுமேலாளர் ஷியாமல் சக்சேனா தெரிவித்தார்.உதாரணமாக, சில நிறுவனங்கள், கிரெடிட் கார்டு மூலம் திரைப்படத்திற்கான டிக்கெட்டை வாங்கினால், ஒரு டிக்கெட்டை இலவசமாக வழங்குகின்றன. இது போன்ற சலுகைகளால், கிரெடிட் கார்டு வாயிலாக செலவழிப்பது அதிகரித்து வருகிறது என, ஷியாமல் சக்சேனா மேலும் கூறினார்.இந்தியாவில், சென்ற ஜூன் மாத நிலவரப்படி, 1.80 கோடி கிரெடிட் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொலைபேசி பயன்படுத்தும் சந்தாதாரர்கள் 96.55 கோடி

சென்ற ஜூன் மாத முடிவில், மொபைல் சேவை நிறுவனங்கள் 47 லட்சத்து 30 ஆயிரம் புதிய மொபைல் சந்தாதாரர்களை இணைத்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் தொலைபேசி பயன்படுத்துவோர் எண்ணிக்கை 96 கோடியே 55 லட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது.இதில் மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 93 கோடியே 40 லட்சத்து 9 ஆயிரம் ஆகும். தரைவழி இணைப்பு பெற்ற தொலைபேசிகளின் எண்ணிக்கை 3 கோடியே 14 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். இந்தியாவில் 100க்கு 77 பேர் தொலைபேசி பயன்படுத்துபவர்களாக உயர்ந்துள்ளனர். இந்த தகவல்களை ட்ராய் அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ளது. 

ஜூனில் பாரதி ஏர்டெல் நிறுவனம் 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களைப் புதிய சந்தாதாரர்களாக இணைத்துக் கொண்டுள்ளது. ஜூன் முடிவில், இந்நிறுவனத்தின் மொத்த சந்தாதாரர் எண்ணிக்கை 18 கோடியே 73 லட்சமாகும். இரண்டாவது இடத்தில் வோடபோன் நிறுவனம் 12 லட்சத்து 20 ஆயிரம் பேரை புதிதாய் இணைத்துள்ளது. இந்நிறுவனத்தில் ஜூன் மாத இறுதியில் உள்ள சந்தாதாரர் எண்ணிக்கை 15 கோடியே 37 லட்சம்.

இந்த நிறுவனங்களை அடுத்து டாட்டா டெலி சர்வீசஸ் மற்றும் ஐடியா செல்லுலர் நிறுவனங்கள் உள்ளன. உரிமத்தை இழந்த பின்னரும், யூனிநார் நிறுவனம் 5 லட்சம் பேரை புதிய சந்தாதாரர்களாகப் பெற்றுள்ளது. ஜூன் மாதத்தில் 41 லட்சத்து 60 ஆயிரம் பேர், எண்ணை மாற்றாமல் சேவை நிறுவனத்தை மாற்ற விண்ணப்பித்தனர்.

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச அந்தஸ்து

மதுரை விமான நிலையத்தில் ரூ.130 கோடியில் சர்வதேச தரத்துடன் புதிய டெர்மினல் கட்டப்பட்டது. விமான நிலைய ஓடுதளமும் விமானங்கள் வந்து செல்லும் வகையில் 7,500 அடியாக நீட்டிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மதுரை,கொழும்பு இடையே விமான சேவைக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இமிகிரேஷன் சோதனை மையம் செயல்படவும் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்தது. இதற்கிடையே மலேசியாவிலிருந்து 23 சுற்றுலா பயணிகளுடன் இரண்டு சிறிய ரக தனியார் விமானங்கள் நேற்று மதியம் மதுரை விமான நிலையத்தில் இறங்கியது. இமிகிரேஷன் சோதனையை எம்பி மாணிக்கம் தாகூர் துவக்கி வைத்தார். விரைவில் பன்னாட்டு பயணிகள் விமானங்கள் மதுரைக்கு இயக்கப்பட உள்ளன. இலங்கைக்கு செப்.8ம் தேதி முதல் மிகின் லங்கா நிறுவனம் விமானம் இயக்கப்பட இருந்தது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஸ்பைஸ் ஜெட் விமானம் செப்டம்பர் 20ம் தேதி முதல் இலங்கைக்கு விமான சேவையை துவக்குகிறது என்றார்.

வங்கிகளில் கடன் வாங்குவது தவறில்லை: ப.சிதம்பரம்


மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி கிளையையும், ஏ.டி.எம்.மையத்தையும் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம்  திறந்து வைத்து பேசியதாவது:-

பாங்க் ஆப் மகாராஷ்டிரா மிகப்பெரிய வங்கியாகும். இந்தியா முழுவதும் ஆயிரத்து 624 கிளைகள் உள்ளது. தமிழ் நாட்டில் மட்டும், தற்போது திறந்து வைத்த கிளையை சேர்த்து 30-வது கிளையாகும். மகராஷ்டிரா மாநிலத்திலேயே இது ஒரு முன்னோடி வங்கியாகும். நான் இத்தொகுதியில் 39 மாதங்களில் 66 முறை சுற்றுபயணம் செய்துள்ளேன். இந்தியாவிலேயே சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் 72 மத்திய கிளை வங்கிகள் பொதுமக்கள் சேவைக்காக திறக்கப்பட்டுள்ளது.

வங்கியில் கணக்கு வைத்திருப்பது நமது தனிமனித உரிமை ஆகும். வங்கியில் தொழில் தொடங்குவதற்கோ, கல்வி கற்பதற்கோ, வீடு கட்டுவதற்கோ, கண்டிப்பாக கடன் கேட்க வேண்டும். கடன் வாங்குவது தவறு கிடையாது. மத்திய அரசு கிராம புறங்களில் வங்கி சேவை கண்டிப்பாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 129 மாவட்டங்களில் ஆயிரத்து 23 வங்கி கிளைகளை திறந்துள்ளது. இதன் மூலம் விவசாயிகள், மகளிர் குழுவினர், மாணவ-மாணவிகள் பயன் பெறவேண்டும்.

நான் 2010-ல் இங்கு வரும் போது, மத்திய வங்கி இங்கு ஏதும் இல்லை என கோரிக்கை வைத்தனர். மகாராஷ்டிரா வங்கியை ராஜகம்பீரத்திற்கு கொண்டு வந்ததன் மூலம், அந்த கோரிக்கை நிறைவேற்றப் பட்டுவிட்டது. இப்போது, இந்த கிளை மூலம் 2 கோடி கடன் வழங்கப்பட உள்ளது. இதில் ரூ.15 லட்சம் கல்விகடனாக வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. வங்கிசேவையை கிராம மக்கள் நன்கு பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடையநல்லூரில் வசிக்கும் 101 வயது ஓய்வு பெற்ற ஆசிரியர்


நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மாரியம்மன் கோவில் மேலத்தெருவை சேர்ந்த அவரது பெயர் சுப்பையாநாயுடு. 15-8-1912 ந்தேதி பிறந்த இவர் இந்த மாதம் 100 வயதை கடந்து 101வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார்.
 
காசிதர்மம் ஜில்லா போர்டு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்த இவர் 1971-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். கடந்த 40 ஆண்டுகளாக பென்சன் பெற்று வருகிறார். யாருடைய துணையும் இல்லாமல் தனது தேவைகளை தானே செய்து வருகிறார். தினமும் தனது தோட்டத்திற்கு சென்று விவசாய பணிகளை கவனித்து வருகிறார்.
 
பேரன், பேத்திகளோடு இன்பமாக வாழ்க்கை நடத்தி வரும் அவர் கூறியதாவது:-
 
திடகாத்திரமாய் இருக்கும் எனக்கு எந்தவித கெட்ட பழக்கமும் கிடையாது. 101 வயதின் துவக்கத்தை எண்ணி இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். தினமும் நடைபயிற்சியை தவறாமல் கடைபிடித்து வருகிறேன் என்றார். 

சனி, 25 ஆகஸ்ட், 2012

அரசுத்துறைகளில் 2 கோடி பணியிடங்கள் காலியாக உள்ளன


சென்னையில் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தெற்கு மண்டலம் சார்பில், ஆங்கில மொழி மற்றும் அதனை புரிந்துகொள்ளுதல் தொடர்பான வினா வங்கி கருத்தரங்கம் நடைபெற்றது. 
 
நிகழ்ச்சியை மத்திய இணையமைச்சர் நாராயணசாமி துவக்கி வைத்து பேசியதாவது:-
 
நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசுத்துறை நிறுவனங்களில் 2 கோடிக்கும் அதிகமாக காலிப் பணியிடங்கள் உள்ளன. அவை விரைவில் நிரப்பப்படும். மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் 55 சதவீதம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்கின்றனர். இதனை முற்றிலும் ஆன்லைன் ஆக்குவதற்கு படிப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் வெப்சைட்டில் விடைகளை வெளியிடவும் ஏற்பாடு செய்து வருகிறோம்.
 
தற்போது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வினாத்தாள் உள்ளது. இதனை பிராந்திய மொழிகளிலும் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் நாடு முழுவதிலும் உள்ள கிராமப்புறங்களில் உள்ள திறமையான பணியாளர்களை பெற முடியும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் சில பேப்பர்களை பிராந்திய மொழிகளில் எழுத அனுமதிக்கிறோம். இங்கு மட்டும் ஏன் பெறக்கூடாது? கொள்கை அளவில் இதனை ஒப்புக்கொண்டுள்ளோம். இதன்மூலம் கிராமப்புற விண்ணப்பதாரர்களுக்கு நன்மை ஏற்படும்.
 
அடுத்த ஆண்டில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள் மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும்.
 
இவ்வாறு அவர் பேசினார்.