Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 5 மார்ச், 2013

சூரிய சக்தியில் இயங்கும் "பம்ப்"


டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு, சூரிய சக்தியில் இயங்கும், "பம்ப்'களை, தமிழக அரசு வழங்க உள்ளது. இதற்காக, 530, "சோலார் பி.வி., பம்ப்'களை கொள்முதல் செய்ய, தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை, ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைகள் பொய்த்ததாலும், காவிரியில் உரிய நீர் கிடைக்காததாலும், நிலத்தடி நீரை நம்பியே, தமிழக விவசாயிகள் உள்ளனர். ஆனால், தொடரும் மின்வெட்டால், பல மாவட்டங்களில், மின் மோட்டார்களை இயக்க முடியாததால், குடிநீர்த் தேவையைக் கூட நிறைவேற்ற முடியாத நெருக்கடி நிலவுகிறது. தமிழக அரசு மின்வெட்டை சீர்செய்ய, பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, உடனடி நிவாரணமாக, சூரிய சக்தியில் இயங்கும், பம்ப்களை, டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு வழங்க, தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, டெல்டா மாவட்டங்களில், தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு, சோலார் பி.வி., பம்புகள் வழங்கப்பட உள்ளன.

திங்கள், 4 மார்ச், 2013

இன்டர்நெட் மூலம் உடனடி மணி ஆர்டர் சேவை தபால் துறையில் துவக்கம்


தபால் துறையில் இன்டர்நெட் மூலம் உடனடி மணி ஆர்டர் சேவை துவங்கப்பட்டுள்ளது. இதன்படி, குறைந்த செலவில், 50 ஆயிரம் ரூபாய் வரை அனுப்பி, ஒரு சில நிமிடங்களில் பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

தபால் துறையில் மணி ஆர்டர் அனுப்பி நான்கு, ஐந்து நாட்களுக்கு பின், பணம் பெற்றுக் கொள்ளும் நிலை இருந்தது. பின், இ.எம்.ஒ., என்னும் எலக்ட்ரானிக் மணி ஆர்டர் மூலம் அனுப்பப்படும் பணம், மறுநாள் கிடைக்கும் வகையில் இருந்தது. தற்போது, கம்ப்யூட்டர் வசதி உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும், 1,000 முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை அனுப்ப முடியும். பணம் அனுப்பும் போது, 16 இலக்க எண் வழங்கப்படும்; இந்த எண்ணை, பணத்தை பெறும் நபருக்கு போனில் தகவல் தெரிவித்து விட வேண்டும்.
பணம் பெறும் நபர், தன் அடையாள அட்டையின் நகலுடன் 16 இலக்க ரகசிய எண்ணை தபால் அலுவலகத்தில் தெரிவித்து, பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

 ஏ.டி.எம்.,களில் கூட ஒரு நாளைக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே எடுக்கும் வசதி உள்ளது. ஆனால், இந்த சேவையில் ஒருவர், எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் அனுப்ப முடியும்.

ராமநாதபுரம் மாவட்ட தபால் துறை கண்காணிப்பாளர் குமாரகிருஷ்ணன் கூறியதாவது:ஆயிரம் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரைக்கு 100ம், 10 ஆயிரத்து ஒன்று முதல், 30 ஆயிரம் ரூபாய் வரை 110ம், 30 ஆயிரத்து ஒன்று முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை 120 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பணம் அனுப்பிய ஒரு சில நிமிடத்தில் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

பள்ளி, கல்லூரி விடுதிக்கான சிலிண்டர் விலை சரிவு


வீடுகளுக்கு வினியோகிக்கப்படும், மானியம் இல்லாத சிலிண்டரை, பள்ளி, கல்லூரி விடுதிகளுக்கு வழங்க, எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளன. இந்த உத்தரவு காரணமாக, இனி, பள்ளிக் கல்லூரி விடுதிகளுக்கு, மானியம் இல்லாத சிலிண்டர், 932.50 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் விடுதிகளுக்கு, சிலிண்டர் ஒன்றுக்கு, 328 ரூபாய் வரை சலுகை கிடைக்கிறது.

இந்தியாவில் காஸ் சிலிண்டர் வினியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று ஆயில் நிறுவனங்களே காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்து வருகின்றன.

வீடுகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் கூடிய வீட்டு உபயோக சிலிண்டர், வர்த்தக சிலிண்டர், பள்ளிக் கல்லூரிகளின் விடுதிகளுக்கான சிலிண்டர், மானியம் இல்லாத சிலிண்டர் என, நான்கு வகையான சிலிண்டர்களை விலை மாற்றங்களுடன் வினியோகம் செய்து வந்தன.

இதில், வீடுகளுக்கு மானிய சிலிண்டர், 401 ரூபாய்க்கும், பள்ளிக் கல்லூரி விடுதிகளுக்கான சிலிண்டர் கடந்த மாதம் வரை, 1,260.50 ரூபாய்க்கும், வர்த்தக சிலிண்டர், 1,676 ரூபாய்க்கும், மானியம் இல்லாத சிலிண்டர், 932.50 ரூபாய்க்கும் வழங்கப்பட்டு வந்தது.

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்வதாலும், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைவதாலும், உள்நாட்டில் பெட்ரோலிய பொருட்கள் மீதான விலையை ஆயில் நிறுவனங்கள் தொடர்ந்து அதிகரிப்பு செய்து வருகின்றன. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலையில் மாதம் தோறும் ஒரு விலை ஏற்றம் அரங்கேறி வருகிறது.

ஆயில் நிறுவனங்கள், பள்ளிக் கல்லூரிகளின் விடுதிகளுக்கு வழங்கி வந்த சிலிண்டர் வினியோகத்தில் மாற்றம் செய்துள்ளது. கடந்த மாதம் வரை, பள்ளிக் கல்லூரி விடுதிகளுக்கு பிரத்தியோக சிலிண்டர்களை, 1,260.50 ரூபாய்க்கு வழங்கி வந்தது.

ஆனால், நடப்பு மாதம் முதல் பள்ளி, கல்லூரிகளுக்கான பிரத்தியோக சிலிண்டர்களை ரத்து செய்து விட்டு, வீடுகளுக்கு வழங்கப்படும், மத்திய, மாநில அரசுகளின் மானியம் இல்லாத சிலிண்டர்களை வினியோகிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

முந்திரி பருப்பு ஏற்றுமதி வீழ்ச்சி


நடப்பு நிதி ஆண்டில், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாதங்களில் மதிப்பு மற்றும் அளவின் அடிப்படையில் முந்திரி பருப்பு ஏற்றுமதி சரிவடைந்துள்ளது. இறக்குமதியாகும் கச்சா முந்திரிக் கொட்டைகளின் விலை அதிகமாக உள்ள நிலையில், சர்வதேச சந்தையில் முந்திரி பருப்பு விலை குறைந்துள்ளதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.

76,000 டன் ஏற்றுமதி
ஏப்ரல்–ஜனவரி மாத காலத்தில் ரூ.3,089 கோடி மதிப்பிற்கு சுமார் 76,000 டன் முந்திரி பருப்பு ஏற்றுமதியாகி உள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் ரூ.4,390 கோடிக்கு 1.32 லட்சம் டன் முந்திரி பருப்பு ஏற்றுமதியாகி இருந்தது. ஆக, அளவின் அடிப்படையில் 16 சதவீதமும், மதிப்பின் அடிப்படையில் 17 சதவீதமும் ஏற்றுமதி குறைந்துள்ளது.

முந்திரி பருப்பு நுகர்வு அதிகமாக உள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தேவைப்பாடு குறைந்ததால் ஏற்றுமதி சரிவடைந்துள்ளதாக முன்னணி ஏற்றுமதியாளர் அனு கேஷ்யூஸ் நிறுவனத்தின் அனு எஸ்.பிள்ளை தெரிவித்தார். ஏற்றுமதியாகும் முந்திரி பருப்புக்கு குறைவான விலை கிடைத்து வரும் நிலையில், இறக்குமதி செய்யப்படும் கச்சா முந்திரியின் விலை அதிகமாக உள்ளது. இதுவும் ஏற்றுமதியாளர்களுக்கு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

நமது ஏற்றுமதியாளர்களுக்கு ஆண்டுக்கு மொத்தம் 14 லட்சம் டன் கச்சா முந்திரி தேவைப்படுகிறது. இதில் 60 சதவீதம் இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைக் காலம் வரை தான்சானியாவில் இருந்து இறக்குமதி செய்து வந்த இந்திய நிறுவனங்கள், தற்போது மேற்கு ஆப்பிரிக்காவில் மகசூல் பருவம் தொடங்கியுள்ளதால் அங்கிருந்து கச்சா முந்திரியை வாங்க தொடங்கியுள்ளனர்.

தற்போது ஒரு பவுண்டு (சுமார் அரை கிலோ) முந்திரி பருப்புக்கான ஏற்றுமதி விலை 3.30 முதல் 3.50 டாலர் வரை உள்ளது. இறக்குமதி செலவினத்தை ஈடு செய்ய வேண்டுமானால் 3.60 டாலருக்கு அதிகமான விலை கிடைக்க வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், முந்திரி சாகுபடியில் முன்னிலை வகிக்கும் ஐவரி கோஸ்ட் மற்றும் கானா ஆகிய நாடுகளில் சீசன் தொடங்கி விட்டதால் கச்சா முந்திரி விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் 71,610 டன் கச்சா முந்திரி இறக்குமதியாகி உள்ளது. இது, 2011 ஜனவரி மாதத்தை விட ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகமாகும்.

வியட்நாம், பிரேசில்
நம் நாட்டில், கடந்த சில ஆண்டுகளில், கச்சா முந்திரியை இறக்குமதி செய்து பதப்படுத்துவோருக்கும், முந்திரி பருப்பு ஏற்றுமதி செய்வோருக்கும் வர்த்தகம் செழிப்பாக இருந்தது. ஆனால் அண்மைக் காலமாக வியட்நாம், பிரேசில் ஆகிய நாடுகள் இந்தியாவில் மலிவு விலையில் முந்திரி பருப்பை விற்பனை செய்வதால் உள்நாட்டில் இத்துறையில் ஈடுபட்டுள்ளோருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஞாயிறு, 3 மார்ச், 2013

பாபநாசம் அணையில் விரைவில் படகுபோக்குவரத்து மீண்டும் துவங்க முடிவு


திருநெல்வேலி மாவட்டம்  காரையார் பாபநாசம் அணையில் கடந்த சுமார் 6 மாதங்களுக்கு முன் பல்வேறு காரணங்களால் படகுபோக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் படகு தொழிலை நம்பியிருந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து படகு உரிமையாளர்கள் அரசாங்கம் மற்றும் வனத்துறையினரிடம் பாபநாசம் அணையில் படகு இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று தொடர்ந்துகோரிக்கை வைத்தனர். இந்நிலையில்நேற்று இது தொடர்பான இரண்டாவது உள்ளூர் ஆலோசனைக்குழு கூட்டம் முண்டந்துறை வனச்சரக அலுவலகத்தில் நடந்தது.

புலிகள் காப்பகம் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மல்கானி தலைமை வகித்தார். கூட்டத்தில் அம்பை எம்.எல்.ஏ., சுப்பையா, மாவட்ட டிஆர்ஓ உமாமகேஸ்வரி, கன்னியாகுமரி கலெக்டர் நாகராஜன், நெல்லை மாவட்ட புலிகள் காப்பக கள இயக்குநர் சுப்ரதமகாபத்ரா, மாவட்ட வன அலுவலர் பத்மா, கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் ரிட்டோதிரியாஸ்,சேரன்மகாதேவி சப்-கலெக்டர்ரோகிணி, அம்பை தாசில்தார் சரஸ்வதி, உதவி வனப்பாதுகாவலர் ஆனந்த்குமார், அம்பை புலிகள் காப்பகம் துணை இயக்குநர் குருசாமி, களக்காடு புலிகள் காப்பகம் துணை இயக்குநர்சேகர், ஆலங்குளம் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், வி.கே.புரம் நகராட்சி தலைவி மனோன்மணி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் நலத்துறை முகம்மது ஹைதர்அலி, மணிமுத்தாறு பஞ்.,தலைவர் சிவன்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் படகு உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலன்கருதி பாபநாசம் அணையில் படகு இயக்குவது என்றும், படகை இயக்கும்போது அணைப்பகுதி தண்ணீரில் டீசல் கசிவு கூடாது, படகில் சைலன்சரை பொருத்தி இயக்கவேண்டும், மண்ணெண்ணெய் ஊற்றி படகு இயக்க கூடாது, படகு அணையில் ஓட இருப்பதால் தண்ணீருக்குள் கழிவு ஏதும் கலக்காமல் இருக்கவேண்டும் உட்பட பல்வேறு நிபந்தனைகளுடன் பாபநாசம் அணையில் படகுபோக்குவரத்து இன்னும் சில நாட்களில் தொடரலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் குதிரைவெட்டி வரை சுற்றுலா பயணிகளை அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மல்கானி , மாவட்ட டிஆர்ஓ உமாமகேஸ்வரி நிருபர்களிடம் கூறியதாவது:- நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி நதி உற்பத்தியாகி மக்களுக்கு பயன்பட்டுக் கொண்டிருப்பது கடவுள் கொடுத்த வரப்பிரசாதம். அதேநேரத்தில் தண்ணீரும் மிகவும் மதிப்பு மிக்கது. இப்பகுதியில் வாழும் மக்களின் பிரச்னைகளையும் முக்கியமாக கருத்தில் கொண்டு பாபநாசம் அணையில் படகுபோக்குவரத்து துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இங்கு வாழும் மலை வாழ் மக்களுக்கும் அணையில் படகு இயக்க நியாயமான வாய்ப்பு கொடுக்கவேண்டும். மொத்தம் 24 படகுகள் ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கின்றன. இன்னும் சுமார் 3 நாட்களில் அணையில் படகுபோக்குவரத்து துவங்கப்படும். அப்போது படகு உரிமையாளர்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அவர்கள் பின்பற்றி நடக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கூட்ட முடிவில் காரையார் காணிக்குடியிருப்பு பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள் அம்பை எம்.எல்.ஏ.,சுப்பையாவை முற்றுகையிட்டு பாபநாசம் அணையில் இயக்கப்படும் படகுகளில் எங்களுக்கும் உரிமைவேண்டும். இதுகுறித்து நீங்கள் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கூறினர். இதனை தொடர்ந்து ஏற்கனவே அணையில் படகுபோக்குவரத்து நடத்தும் உரிமையாளர்களுக்கும், பழங்குடி காணியின மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டம் எம்.எல்.ஏ., சுப்பையா தலைமையில் நடந்தது.

அப்போது இரு தரப்பினரும் ஒருவருக்குகொருவர்பேசி நல்ல முடிவு எடுக்கவேண்டுமென்று எம்.எல்.ஏ., சுப்பையாகேட்டுக் கொண்டார். இந்நிலையில் பழங்குடியின மக்களுக்கு படகு ஓட்டுவதற்கு உரிமை கிடைக்கவில்லை என்றால் நாங்கள் அணையில் படகை ஓட்டவிமாட்டோம் என்றும் காணியின மக்கள் தெரிவித்தனர்.

இந்திய நாட்டின் மிகப்பெரிய "ஷாப்பிங் மால்" கொச்சியில் 25 லட்சம் சதுரடியில் ரெடி


நாட்டின், மிகப் பெரிய வணிக வளாகம், 25 லட்சம் சதுரடி பரப்பளவில், கொச்சியில் தயாராகி விட்டது. இந்த வளாகம், வரும், 10ம் தேதி திறக்கப்படுகிறது. கேரளாவின் வர்த்தக தலைநகரான, கொச்சி, எடப்பள்ளி பகுதியில், "லூலு மால்" என்ற பெயரில், வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் செயல்படும், மிகப் பெரிய வணிக நிறுவனமான, "லூலு' சென்டர்களின், நிர்வாக இயக்குனர், யூசுப் அலிதான், இந்த வணிகவளாகத்தை கட்டியுள்ளார். மொத்தம், 17 ஏக்கர் நிலத்தில், 25 லட்சம் சதுரடியில், 1,600 கோடி முதலீட்டில், மூன்று தளங்களுடன் இந்த வணிக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, நகைகள், துணிகள், மின்னணு சாதனங்கள், காலணிகள், வங்கி கிளைகள், ஏ.டி.எம்., மையங்கள், ஒன்பது தியேட்டர்கள், 27 உணவகங்கள், குழந்தைகள் விளையாட, 55 ஆயிரம் சதுரடியில் கம்ப்யூட்டர் விளையாட்டுக்கள் உட்பட பல வகையான, பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.

சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த வணிக வளாகத்தில், மாநிலத்திலேயே அதிகளவி லான, ஒன்பது தியேட்டர்களை, பி.வி.ஆர். நிறுவனம் அமைத்துள்ளது. தினமும் ஒரு லட்சம் பார்வையாளர்கள் இங்கு வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. பிரமாண்டமான இந்த வணிக வளாகம், வரும், 10ம் தேதி திறக்கப்படுகிறது.

ஆசிரியர்களுக்கான பயிற்சி ரத்து: மத்திய அரசின் திட்ட நிதியை வீணாக்கும் தமிழக அரசு


அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட இருந்த பயிற்சிகள் ரத்து செய்யப்பட்டதால், அதற்கான நிதி வீணாகும் நிலை உருவாகியுள்ளது.

தமிழகத்தில் மத்திய அரசின் நிதியுதவியுடன், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, அனைவருக்கும் கல்வி இயக்ககமும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இதில் ஆசிரியர்களுக்கு பயிற்சி, கட்டமைப்பு வசதி, கல்வி முறையில் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

கடந்த ஜனவரி கடைசி வாரத்தில் துவங்கி, ஃபிப்ரவரி மூன்றாம் வாரம் வரை, ஒன்பது, பத்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பாடவாரியாகவும், நடுநிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகளும் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது.

அரசு பள்ளிகளில், ஒன்பது, பத்தாம் வகுப்புக்கு செய்முறை தேர்வும், பொதுத்தேர்வும் நடத்தப்பட உள்ள நிலையில், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி கல்வித்திறனை பாதிக்கும் என்பது குறித்து காலைக்கதிரில் செய்தி வெளியானது.இதனால் தமிழக அரசு அனைத்து பயிற்சிகளையும் ரத்து செய்து உத்தரவிடப்பட்டது.

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில், 40 கோடி ரூபாய்க்கும் அதிக அளவில் ஆசிரியர் பயிற்சிக்கென நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை மார்ச் 31ம் தேதிக்குள் பயன்படுத்தாவிட்டால், மீண்டும் மத்திய அரசுக்கு திரும்ப வழங்க வேண்டியிருக்கும்.

அரசு பள்ளியில், எட்டாம் வகுப்பு வரை, உள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சியை ரத்து செய்திருக்க வேண்டியதில்லை எனவும், அதனால், அதற்கான நிதி விரயமாவதாகவும் கல்வி அலுவலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கல்வித்துறை அலுவலர் கூறியதாவது:திட்ட நிதியை பொறுத்தவரை, அந்த நிதியாண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மார்ச், 31ம் தேதிக்குள் செலவழிக்காவிட்டால், அவற்றை மீண்டும் பயன்படுத்த முடியாது. இதை கருத்தில் கொண்டு, ஆசிரியர்களுக்கான பயிற்சியை ஜூன் மாதம் முதல், டிசம்பர் மாதத்துக்குள் வழங்காமல், தேர்வு நேரத்தில் நடத்த திட்டமிடுவதும், அதை ரத்து செய்வதும் என, அதற்கான நிதியை பயன்படுத்தவே முடியாத நிலை ஏற்படுகிறது.

அடுத்த ஆண்டிலாவது முன்கூட்டியே பயிற்சியை நடத்தி, நிதி வீணாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.