Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 29 செப்டம்பர், 2012

இந்தியாவில் ஆண்டு தோறும் 15 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்


இந்தியாவில் ஆண்டு தோறும் சுமார் 15 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று சென்னை அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி கேன்சர் ஆஸ்பத்திரி சீனியர் கன்சல்டன்ட் ரேடியேஷன் ஆன்கோலஜிஸ்ட் டாக்டர் மகாதேவ் கூறினார்.

இதுகுறித்து நெல்லையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 லட்சம் பேருக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக வயிறு, வாய், மார்பகம், கர்ப்பப்பை, கணையம், மூளை, தண்டுவடம் உட்பட பல்வேறு உறுப்புகளை இந்த நோய் தாக்குகிறது. புற்று நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து உரிய சிசிக்சைகளை மேற்கொண்டால் குணப்படுத்தலாம். ஆனால் பெரும்பாலான நோயாளிகள் கடைசி கட்டத்திலேயே கேன்சர் நோய் சிகிச்சைக்கு வருவதால் இதனை குணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. ஒவ்வொரு புற்றுநோய் வகைக்கும் வித்தியாசமான அறிகுறிகள் தென்படும். சில நோய் ஆரம்ப கட்டத்தில் தெரியாது. நோயின் பாதிப்பு தீவிரமடைந்ததும் வெளியே தெரிய வரும். ஆரம்ப காலங்களில் புற்று நோய்க்கு ஆபரேஷன் மட்டுமே சிகிச்சை முறையாக இருந்தது. ஆனால் தற்போது நவீன சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது ரேடியேஷன் சிகிச்சையில் "சைபர் நைப்' என்பது நவீன சிகிச்சை முறையாகும். பாதித்த உறுப்பின் மிகவும் சிறிய இடத்திலும் சரியான முறையில் சிகிச்சை அளிக்க இந்த வசதி பயன்படுத்தப்படுகிறது. ஆபரேஷன் செய்ய முடியாத இடங்களில் இச்சிகிச்சை முறை பயன்படுகிறது. தற்போது நவீன சிகிச்சை முறைகளின் மூலம் 70-80 சதவீதம் நோயாளிகள் இந்நோயில் இருந்து காப்பாற்றப்படுகின்றனர்.

 தமிழகத்தை பொறுத்தவரை சென்னை உட்பட பல்வேறு பெரு நகரங்களில் வயிறு புற்றுநோய் பிரச்னையில் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. புற்று நோய் ஏற்படாமல் தடுக்க பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மருத்துவ கருத்தரங்குகள், தூத்துக்குடியில் விரைவில் இம்மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

விறகு மூலம் மின்சாரம் தயாரிப்பு "யூனிட்' மூடல்


மதுரை மாவட்டம் பேரையூரில் ரூ.7 லட்சத்தில் அமைக்கப்பட்ட, விறகு மூலம் மின்சாரம் தயாரிக்கும் "யூனிட்' மூன்றாண்டுகளாக மூடிக்கிடக்கிறது.பேரையூர் பேரூராட்சிக்கு மின்தேவையை பூர்த்தி செய்ய, சமன்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 லட்சத்தில் 2006ல் இந்த "யூனிட்' அமைக்கப்பட்டது. சீமை கருவேல் மரக் குச்சிகளை காய வைத்து, துண்டுகளாக வெட்டி, அவற்றை எரிப்பதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. பேரூராட்சி அலுவலகம், குடிநீர் வினியோகத்துக்கான மோட்டார் இயக்கம், பஸ் ஸ்டாண்ட்டில் உள்ள விளக்குகள், கடைகளுக்கு தேவையான மின்சாரம், இந்த யூனிட்டில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த யூனிட் துவங்கி சில மாதங்கள் மட்டும் செயல்பட்டது.

இதை இயக்கும் ஆப்பரேட்டர்கள் பற்றாக்குறை காரணமாக காலப்போக்கில் யாரும் இந்த யூனிட்டை கண்டுகொள்ளவில்லை. மூன்றாண்டுகளாக மூடப்பட்டு, தயாரிப்பு இயந்திரங்கள் துருபிடித்து உள்ளன. தற்போது நிலவும் மின்தட்டுப்பாட்டில் இந்த யூனிட்டை செயல்படுத்தினால், பேரூராட்சி பகுதிக்கு குடிநீர் வினியோக மோட்டாருக்கு மின்சாரம் கிடைக்கும். மின் தடையால் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடு வராது. பேரூராட்சி நிர்வாகம் இதை கண்டுகொள்ளவில்லை. ரூ.பல லட்சம் மதிப்புள்ள உபகரணங்கள் வீணடிக்கப்படுகின்றன.
பேரூராட்சி நிர்வாக அலுவலர் கலையரசி கூறுகையில், ""விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நாள் ஒன்றுக்கு எத்தனை மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம் என்ற விவரம் எனக்கு தெரியவில்லை,'' என்றார்.மின் தட்டுபாடு நேரத்தில் இத்தகைய யூனிட்டுகளை பேரூராட்சி நிர்வாகங்கள் இயக்கி, மின் தேவையை பூர்த்தி செய்யலாம்.

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

ஆழ்வார்குறிச்சியில் இல்லம் தோறும் காய்கறி தோட்டம்



ஆழ்வார்குறிச்சியில் பரமகல்யாணி கல்லூரி என்எஸ்எஸ் சார்பில் இல்லம் தோறும் காய்கறி தோட்டம் எனும் புதிய திட்டம் துவக்கப்பட்டது.
ஆழ்வார்குறிச்சியில் வாழும் குடும்பங்களுக்கு பூச்சி மருந்து, செயற்கை உரம் பயன்படுத்தப்படாத புதிய காய்கறிகளை அவர்களாகவே உற்பத்தி செய்து கொள்வதற்காக இல்லம் தோறும் ஒரு காய்கறி தோட்டம் என்ற திட்டத்தின் கீழ் இலவசமாக அன்றாடம் பயன்படுத்தப்படும் காய்கறி விதைகளை வழங்கி வீட்டு தோட்டம் அமைப்பதற்கான சிறப்பு முகாம் நடந்தது.

முகாமிற்கு கல்லூரி முதல்வர் ரஞ்சித்சிங் தலைமை வகித்தார். என்எஸ்எஸ் திட்ட அலுவலர்கள் ஆர்.ரஞ்சித், செல்வக்குமார் முன்னிலை வகித்தனர். இல்லம் தோறும் காய்கறி தோட்டம் எனும் திட்டத்தை அறிமுகம் செய்து தோட்டம் அமைக்கும் ஆலோசனை, செய்முறை பயிற்சி ஆகியவற்றை என்எஸ்எஸ் அலுவலர் ரஞ்சித் எடுத்து கூறினார்.

என்எஸ்எஸ் திட்ட அணிகள் 18, 19, 120, 177, 178 ஆகியன சார்பில் திட்ட அலுவலர்கள் முத்துலட்சுமி, சுதாகரன், ராஜகோகிலா மேற்பார்வையில் மாணவ ஒருங்கிணைப்பாளர்கள் மாரிமுத்து, ராஜசேகர், பாண்டியராஜா, சிதம்பர பிரியதர்ஷினி, மணிமேகலா ஆகிய குழுவினர் வீடு வீடாக சென்று காய்கறி விதைகளை வழங்கினர். சிறப்பு அழைப்பாளராக டவுன் பஞ்., தலைவர் முத்தையா கலந்து கொண்டு திட்டத்தை துவக்கி வைத்து காய்கறி விதைகளை வழங்கினார். சுதாகரன் நன்றி கூறினார்.

வீடுகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் காய்கறி விதைகளை பயன்படுத்தி சிறந்த முறையில் காய்கறி தோட்டம் அமைத்திருக்கும் வீடுகளுக்கு 1 மாதத்திற்கு பின்னர் சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது.


வியாழன், 27 செப்டம்பர், 2012

கேரளாவில் இந்தியாவின் முதல் தனியார் விமான நிலையம்


இந்தியாவின் முதல் தனியார் விமான நிலையம் கேரள மாநிலம் பத்தனம்திட்டை மாவட்டத்தின் ஆரன்முளா பகுதியில் அமைய உள்ளது. தேசிய விமான நிலைய ஆணையத்தின் அனுமதி பெற்றுள்ள இந்த விமான நிலையத்திற்கு கே.ஜி.எஸ். சர்வதேச விமான நிலையம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 
இதுபற்றி பேசிய கே.ஜி.எஸ். நிறுவன இயக்குனர் நந்தகுமார், ‘தேசிய விமான நிலைய ஆணையத்தின் குழு ஒன்று விமான நிலையம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு அதற்கான அனைத்து அனுமதிகளையும் வழங்கியுள்ளது. ரூ.20000 கோடி செலவில் உருவாகும் இந்த விமான நிலையத்தால் ஆரன்முளா பகுதி, பத்தனம்திட்டை மாவட்டம் மட்டுமின்றி கேரளா முழுவதும் வளர்ச்சி அடையும்’ என்றார்.
 
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அருகில் அமைய இருக்கும் இவ்விமான நிலையம், பயன்பாட்டிற்கு வந்தால் சபரிமலை செல்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். வழக்கம்போல் இவ்விவகாரத்திலும், விமான நிலையத்தை அமைக்கக் கூடாது என ஒரு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட போவதாக தகவல்கள் வெளியாயின. எனினும் விமான நிலையத்திற்கு எதிரான போராட்டம் பற்றிய தகவல்கள் வெறும் வதந்திதான் என கே.ஜி.எஸ். நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஒரே பல்கலையின் கீழ் தொலைதூர கல்வி படிப்புகள் ?


பல்வேறு பல்கலைக்கழகங்கள் நடத்தி வரும், தொலைதூர கல்வி படிப்புகளை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் கீழ் கொண்டு வருவது குறித்து, உயர்கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. இதுகுறித்த அறிவிப்பு, வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை; மதுரை காமராஜர்; பாரதியார்; பாரதிதாசன் பல்கலை என, பல பல்கலைக்கழகங்கள், தொலைதூர கல்வி படிப்புகளை வழங்கி வருகின்றன. இதன் மூலம், ஒவ்வொரு பல்கலையிலும், கோடிக்கணக்கில் பணம் புழங்கி வருகிறது. தரமான கல்வி திட்டங்கள் இல்லாதது, நிதியை பயன்படுத்துவதில் முறைகேடு என, பல்வேறு குற்றச்சாட்டுகள் மலிந்து கிடக்கின்றன.

தொலைதூர கல்வி படிப்புகளை நடத்துவதற்கென, முந்தைய அ.தி.மு.க., ஆட்சியின் போது தான், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை துவங்கப்பட்டது. "தொலைதூர கல்வி திட்டத்தில் கிடைக்கும் வருவாயில் தான், பல்கலைகளே இயங்குகின்றன. திடீரென, அத்திட்டத்தை நிறுத்தினால், பல்கலைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்&' என, அப்போதிருந்த துணைவேந்தர்கள், அரசிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து, தொலைதூர கல்வி திட்டங்களை, ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது, இந்தப் பிரச்னையை முறைப்படுத்தும் முயற்சியில், உயர்கல்வித்துறை இறங்கியுள்ளது. இக்கருத்து குறித்து, ஏற்கனவே உயர்மட்ட அளவில் விவாதிக்கப்பட்டுள்ளதாக, துறை வட்டாரம் தெரிவித்தது.

அனைத்து பல்கலைகளில் நடக்கும், தொலைதூர கல்வி திட்டங்களை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின் கீழ் கொண்டு வர, உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மேலும், தொலைதூர கல்வித் திட்டங்களை தரமானதாக வழங்கவும், முடிவு செய்து உள்ளது.

இத்திட்டம் குறித்து, பட்ஜெட்டுக்கு முன், விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்றும், பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, அறிவிப்பாக வெளியாகலாம் என்றும், உயர்கல்வி வட்டாரம் தெரிவித்தது.

அரசின் முயற்சி குறித்து, பல்கலை ஆசிரியர் சங்க பொதுச்செயலர் பிச்சாண்டி கூறியதாவது: இந்த திட்டத்தை முழு மனதுடன் வரவேற்கிறோம். பல்கலைகளுக்கு, தொலைதூர கல்வித் திட்டங்கள், பணம் காய்ச்சி மரங்களாக இருந்து வருகின்றன. எந்த வரைமுறையும் இல்லாமல், காலத்திற்கு ஏற்ற தரத்திற்கு உகந்ததாக இல்லாமல், பெயருக்கு தொலைதூர கல்வி திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

சேர்க்கை மையம் பல்கலைகள், போட்டி போட்டுக்கொண்டு, தெருவிற்கு ஐந்தாறு மாணவர் சேர்க்கை மையங்களை துவங்கி, ஏமாற்றி வருகின்றன. தொலைதூர கல்வி திட்டங்களை முறைப்படுத்தி, அனைத்து பல்கலைகளில் நடக்கும் தொலைதூர கல்வி திட்டங்களையும், ஒரு பல்கலையின் கீழ் கொண்டு வர வேண்டும்.

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில், தற்போது போதிய பணியாளர் கிடையாது. அனைத்து பல்கலைகளில் உள்ள தொலைதூர கல்வி திட்டங்களை எடுத்து, சிறப்பாக செயல்படுத்தும் அளவிற்கு தொழில்நுட்பவசதிகளும் இல்லை.

எனவே, முதலில், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையை, அனைத்து வகைகளிலும் வலுப்படுத்தி, அதன்பின் அதன் கீழ் தொலைதூர கல்வி திட்டங்களை கொண்டு வர வேண்டும். இதுதொடர்பாக, அரசு கொள்கை முடிவு எடுப்பதற்கு முன், அனைத்து பல்கலை ஆசிரியர் சங்க பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டறிய வேண்டும். இவ்வாறு பிச்சாண்டி கூறினார்.

புதன், 26 செப்டம்பர், 2012

நெல்லையில் தகிக்கும் வெப்பம்;தவிக்கும் மக்கள்


திருநெல்வேலியில் கடந்த ஒரு வாரமாகவே வெயில் 100 டிகிரியைவிட அதிகமாக பதிவாகிவருகிறது. செவ்வாய்க்கிழமை தமிழகத்திலுள்ள பிறநகரங்களை காட்டிலும் அதிகமாக 103 டிகிரி வெயில் பாளையங்கோட்டையில் பதிவானது. தகிக்கும் இந்த வெப்பத்தால் மக்கள் அவதியுறுகிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்களில் கோடையிலும் தமிழகத்தின் மற்ற நகரங்களைப்போல் 100 டிகிரியையொட்டி வெப்பம் பதிவாகியிருந்தது. கோடைக்குப்பின்னரும் அதே வெப்பநிலை நீடித்து வருகிறது. தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டதால் காலநிலையில் மிகப்பெரும் அளவுக்கு மாற்றம் ஏற்படவில்லை. கடந்த மாதத்தில் வானில் மேகங்கள் திரள்வதும், சாரல் மழை பெய்வதுமாக ஓரிரு நாள்களில் காலநிலை இருந்தது. ஆனால், கடந்த 2 வாரமாகமே திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் வெயில் சுட்டெரித்தது.
பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த ஒருவாரமாக பதிவாகியுள்ள வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியே இருக்கிறது. கடந்த 18-ம் தேதி 103 டிகிரி வெப்பநிலை இருந்தது.

அதுபோல் செவ்வாய்க்கிழமையும் வெப்பநிலை 103 டிகிரியாக பதிவாகியிருக்கிறது. கடந்த கோடையில்கூட திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டையில் ஒருசில நாள்களை தவிர்த்து மற்ற நாள்களில் 100 டிகிரிக்குள் வெப்பநிலை இருந்தது. ஆனால், தற்போது தொடர்ந்து 100 டிகிரிக்குமேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. வெயில் சுட்டெரிப்பதால் பகல் வேளைகளில் நகரில் மக்கள் நடமாட்டம் குறைந்திருக்கிறது. செவ்வாய்க்கிழமை பகலில் நகரில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகளும் அவதியுற்றனர். வீடுகளிலும் மக்கள் புழுங்கி தவிக்க நேரிட்டது. ஏற்கெனவே மின்தடையால் பகலில் மின்விசிறிகள் இயங்காமல் மக்களை மேலும் அவதிக்கு உள்ளாக்கியுள்ளது.

தமிழகத்திலேயே அதிகம்: பாளையங்கோட்டை பகுதியில் செவ்வாய்க்கிழமை 103 டிகிரி வெப்பம் பதிவாகியிருந்தது. இது தமிழகத்தின் மற்ற நகரங்களைவிட அதிகமாகும். வெயில் நகரம் என்றழைக்கப்படும் வேலூரில் 97 டிகிரி வெயில்தான் பதிவாகியிருந்தது.
கன்னியாகுமரியில் 90 டிகிரி, தூத்துக்குடியில் 93 டிகிரி வெயிலும் பதிவானது.
கோடையை மிஞ்சும் வெயில் சுட்டெரிப்பதால் திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் பிரச்னை தலைதூக்கியிருக்கிறது. பல்வேறு இடங்களில் பொது குடிநீர் குழாய்களில் தண்ணீருக்காக நூற்றுக்கணக்கான குடங்கள் வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. பொதுமக்களும் காலிகுடங்களுடன் வீதியில் இறங்கி போராட தொடங்கியிருக்கிறார்கள்.

கடந்த ஒரு வாரமாக பாளையங்கோட்டையில் பதிவான வெப்பநிலை (பாரன்கீட்):
செப்.18- 103 டிகிரி
செப்.19- 101 டிகிரி
செப்.20- 102 டிகிரி
செப்.21- 101 டிகிரி
செப்.22- 102 டிகிரி
செப்.24- 101 டிகிரி
செப்.25- 103 டிகிரி

திருநெல்வேலி மாவட்ட சிறுபான்மை பள்ளிகளுக்கு நிதி: விண்ணப்பிக்க வலியுறுத்தல்

சிறுபான்மை பள்ளிகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சி நிதி உதவி பெற தகுதியான பள்ளிகள் விண்ணப்பிக்கலாம்.சிறுபான்மை கல்வி நிலையங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சிக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது.இத்திட்டத்தில் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள், கம்ப்யூட்டர் அறைகள், ஆய்வகம், நூலகம், கழிப்பிடம், குடிநீர் வசதி மற்றும் இதர அடிப்படை வசதிகளை மேம்படுத்த மத்திய அரசின் நிதி உதவி பெறுவதற்கு பல்வேறு நிபந்தனைகளை நிறைவு செய்ய வேண்டும்.


மத்திய அரசு திட்டத்தின் கீழ் முஸ்லிம், கிறிஸ்தர், சீக்கியர், பவுத்தர் ஆகிய சிறுபான்மை இனத்தவர்களால் நடத்தப்படும் பள்ளிகள் சார்பாக நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம். மாவட்டத்தில் சிறுபான்மை இனத்தவர் நடத்தப்படுகின்ற பள்ளிகளின் முழு அஞ்சல் முகவரி, அலுவலக டெலிபோன் எண், பள்ளி தாளாளர் செல்போன் என 3 பிரதிகள் அனுப்ப வேண்டும்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்க், சங்கம், டிரஸ்ட் மூலம் நடத்தப்படும் மத்திய, மாநில கல்வி நிறுவனங்கள் நிபந்தனைகளை நிறைவு செய்ததை உறுதி செய்து கருத்துருக்களை அனுப்ப வேண்டும். சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். மேலும் பள்ளிகள் தமிழ்நாடு சிறுபான்மை பள்ளிகள் விதிகள் 1977 விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் லாபத்தை நோக்கமாக கொண்டு செயல்பட கூடாது.
அரசால் மானியம் பெறும் பள்ளிகள் மானியம் சார்பான விபரங்களை ஆடிட்டர் மூலம் தணிக்கை செய்து சான்று பெறப்பட வேண்டும். செலவின மதிப்பீடு ஆடிட்டரால் தயார் செய்யப்பட்டு பொதுப்பணித் துறை நிர்வாக இன்ஜினியரால் மேலோப்பம் செய்யப்பட வேண்டும்.
பதிவு துறையின் கீழ் உள்ள சங்கம் பதிவு சட்டத்தின் கீழ் தன்னார்வ முகமைகள் 6 மற்றும் 7 சமர்ப்பிக்க வேண்டும். சிறுபான்மை நிறுவனங்கள் சிறுபான்மை அந்தஸ்து உறுதி செய்யப்பட்ட அரசாணை இணைத்து அனுப்ப வேண்டும்.

நெல்லை மாவட்டத்தில் சிறுபான்மை கல்வி நிலையங்கள், பள்ளிகள் இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கு கருத்துருக்களை 4 பிரதிகளில் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் மூலமாக சமர்ப்பிக்க சிறுபான்மை பள்ளி தாளாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர் கிரேஸ் சுலோச்சனா ரத்னாவதி தெரிவித்தார்.