Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 8 ஜூன், 2013

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் திடீர் நில அதிர்வு

திருநெல்வேலி கடையநல்லூர் அருகே உள்ள வடகரை, அச்சன்புதூர் டவுன் பஞ்., பகுதியில் உள்ள தெருக்களில் கடந்த சில மாதங்களுக்கு முன் நில அதிர்வு ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த சில வீடுகள் மற்றும் தரைப்பகுதிகளில் விரிசல் காணப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 7.20 மணிக்கு திடீரென நிலஅதிர்வு ஏற்பட்டது.

வடகரை ஜாகீர் உசேன் நகர் 1வது மற்றும் 2வது தெருக்களில் உள்ள வீடுகளில் பொருட்கள் தரையில் விழுந்து விழுந்ததாகவும், கட்டில், டி.வி. போன்றவை அதிர்ந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். வாவாநகரம் பகுதியிலும் இதே போன்ற அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். பெண்கள் தங்களின் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ரோட்டில் அதிர்ச்சியுடன் நின்றனர்.

அச்சன்புதூர் போலீஸ் ஸ்டேஷன் பகுதியிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதனிடையில் நில அதிர்வு பகுதியினை வடகரை டவுன் பஞ்.,தலைவர் முகம்து ஷெரீப், அச்சன்புதூர் டவுன் பஞ்.,தலைவர் சுசீகரன் மற்றும் வருவாய்த்துறையினர் பார்வையிட்டனர். ரகுமானியாபுரத்தை சேர்ந்த அப்துல்ரசீப் மற்றும் மணிகண்டன் வீடுகளில் நில அதிர்வினால் விரிசல் ஏற்பட்டது.

கடந்த சுமார் 5 மாதங்களுக்கு முன் கடையநல்லூர் பகுதியில் இதுபோன்ற நில அதிர்வு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். வடகரையை ஒட்டியுள்ள அடவிநயினார் அணைக்கட்டு 132 அடி கொள்ளளவு கொண்ட அணைக்கட்டு பகுதியில் நில அதிர்வினால் பாதிப்பு ஏற்படாத வகையில் உடனடியாக அணை பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டுமென்ற கோரிக்கை விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து இப்பகுதியில் நில அதிர்வு உணரப்படுவதால் புவியியல் ஆராய்ச்சியாளர் மூலமாக இதற்கான ஆய்வினை காலதாமதமின்றி நடத்தவேண்டுமென வடகரை, வாவாநகரம், அச்சன்புதூர் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக