Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 23 மே, 2013

என்.சி.டி.இ. அதிகாரம் வழங்கியும் கேரளமாநிலத்தில் பின்பற்றுவது போன்று ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடை பின்பற்ற முடியாது : ஜெயலலிதா அரசு அறிவிப்பு

டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற, குறைந்தபட்சம், 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என, என்.சி.டி.இ., அளவு நிர்ணயித்துள்ளது. எனினும், மாநில அரசுகள் விரும்பினால், இந்த மதிப்பெண்கள் அளவை, ஓரளவு குறைத்துக் கொள்ளலாம் எனவும், என்.சி.டி.இ., தெரிவித்துள்ளது.

அதன்படி, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில், ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான தகுதி மதிப்பெண்கள் அளவு, 5 சதவீதம் முதல், 10 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

இதைப் பின்பற்றி, தமிழக அரசும், எஸ்.சி., - எஸ்.டி., - எம்.பி.சி., மற்றும் பி.சி., ஆகிய பிரிவினருக்கு, தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும் என, பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரம், சமீபத்தில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலும் எதிரொலித்தது.

கடந்த, 10ம் தேதி, சட்டசபையில், பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில், பல எம்.எல்.ஏ.,க்கள், டி.இ.டி., தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும் என, வலியுறுத்தினர்.

60 சதவீத மதிப்பெண்கள் என்ற அளவால், சமுதாயத்தில் பின் தங்கிய தேர்வர்களால் தேர்வு பெற முடியாத நிலை உள்ளது என்றும், குறிப்பாக, 55 சதவீதம், 58, 59 சதவீதம் மதிப்பெண்கள் எடுக்கும் தேர்வர்கள் கூட, தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளது என்றும், எம்.எல்.ஏ.,க்கள் சுட்டிக் காட்டினர்.

அப்போது, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் பதிலளிக்கையில், "இந்த கோரிக்கை, அரசின் பரிசீலனையில் உள்ளது" என தெரிவித்தார். இதனால், தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்படும் என, அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், நேற்று வெளியான, டி.இ.டி., தேர்வு அறிவிப்பில், தகுதி மதிப்பெண்கள் குறைப்பு செய்யப்படவில்லை.

வழக்கம் போல், தகுதி மதிப்பெண்களாக, 60 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு, அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது, தேர்வர்கள் மத்தியில், ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக