Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 24 ஏப்ரல், 2013

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.,யில் ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகளில் சேர்க்கை நிறுத்தம்


நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.,யில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பல்கலை.,யில் பல்வேறு பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

ஐந்தாண்டு படிப்பு
கடந்த சில ஆண்டுகளுக்கு நெல்லை பல்கலை.,யில் எம்.டெக்., இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்எஸ்சி., கணிதம் மற்றும் உளவியல் ஆகிய ஒருங்கிணைந்த படிப்புகள் துவக்கப்பட்டன. ஐந்தாண்டு பட்டப்படிப்பான இதில் பிளஸ் 2 படித்த மாணவ, மாணவிகள் நேரடியாக சேர்க்கப்பட்டனர். நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

திடீர் நிறுத்தம்
இந்நிலையில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பட்டப்படிப்புகளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து வரும் கல்வியாண்டு முதல் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பாடங்களான எம்டெக்., இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்எஸ்சி., கணிதம், உளவியல் ஆகிய பாடங்களில் மாணவர்கள் சேர்க்கையை நிறுத்திக் கொள்வது என பல்கலை., முடிவு செய்துள்ளது.

ஒருங்கிணைந்த ஐந்தாண்டு படிப்புகள் நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு வரப்பிரதாசமாக அமைந்திருந்ததாகவும், இந்த பாடங்களை நிறுத்துவதால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

எம்.டெக்., இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பு படிக்க பிற கல்வி நிறுவனங்களில் நிறைய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நெல்லை பல்கலை.,யில் இந்த படிப்புக்கு கட்டணம் மிகவும் குறைவாகும். நெல்லை சுற்றுப்பகுதியில் பெரும்பாலாலும் நடுத்தர வகுப்பு மக்களே வசிக்கின்றனர்.

இவர்களது குழந்தைகளுக்கு ஐந்தாண்டு எம்.டெக்., படிப்பு ஒரு வரப்பிரதாசமாக இருந்தது. இந்த படிப்பை நிறுத்துவதால் பெரும்பாலான மாணவ, மாணவிகள் கல்வியறிவு பெற முடியாமல் போய்விடும். எனவே நெல்லை பல்கலை.,யில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு படிப்புகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு குழப்பங்கள்
ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கையை நிறுத்துவதற்கு பல்வேறு காரணங்களை பல்கலை., தெரிவிக்கிறது.
பல்கலைக்கழகம் பட்டமேற்படிப்புகளை கற்றுக் கொடுக்கும் கல்வி நிறுவனமாகும்.

பிளஸ் 2 படித்து விட்டு, பல்கலை.,க்கு நேரடியாக மாணவர்கள் வருவதால் அவர்களுக்கு போதிய முதிர்வுத்தன்மை இல்லை. பிளஸ் 2 முடித்து விட்டு நேரடியாக வரும் மாணவ, மாணவிகள் பல்கலை.,யில் பக்குவம் இல்லாமல் நடந்து கொள்கின்றனர். இதனால் மாணவர்கள், பேராசிரியர்கள் இடையே இடைவெளி ஏற்படுகிறது. மாணவர்களை கட்டுப்படுத்தவதும் கடினமாக உள்ளது.

ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்புகளில் சேரும் மாணவர்கள் பெரும்பாலானோர் பிஎட்., படிக்க வேண்டும் என விரும்புகின்றனர். உதாரணமாக நெல்லை பல்கலை.,யில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு கணிதம் படிக்கும் மாணவர்களுக்கு எம்எஸ்சி., பட்டம் மட்டுமே வழங்கப்படும்.

இந்த பட்டத்தை வைத்துக் கொண்டு, மாணவர்களால் பிஎட்., படிக்க முடியாது. பிஎஸ்சி., பட்டம் இருந்தால் மட்டுமே பிஎட்., படிப்பில் சேர முடியும். இது போன்ற பிரச்னைகள் ஏற்படும்போது மாணவர்கள் பல்கலை., நிர்வாகத்தை குறை கூறுகின்றனர்.

ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டம் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதிலும் பல்வேறு சிக்கல் ஏற்படுகிறது. இந்த படிப்பு ஆராய்ச்சி மாணவர்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.

எனவே நெல்லை பல்கலை.,யில் வரும் கல்வியாண்டு முதல் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கையை நிறுத்தி கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக பல்கலை., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக