Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 18 மார்ச், 2013

"குடும்ப தகராறு வழக்குகளில் கோர்ட்டுக்கு வெளியே சமரச தீர்வு காணவேண்டும்" சுப்ரீம் கோர்ட்டு கருத்து


மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு பெண் தன் கணவர், அவரது குடும்பத்தினருக்கு எதிராக வழக்கு தொடுத்தார். ஆனால் பின்னர் அவர்கள் சமரசமாகி விட்டனர். அதைத் தொடர்ந்து வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த மாநில ஐகோர்ட்டை அந்தப் பெண் நாடினார். ஐகோர்ட்டு அவரது கோரிக்கையை ஏற்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்தது.இதை எதிர்த்து அந்த பெண், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து, மத்திய பிரதேச ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்தும், அந்த பெண் தன் கணவர் குடும்பத்தினர் மீது தொடுத்த வழக்கை ரத்துசெய்தும் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் கூறி இருப்பதாவது:–

வழக்கை ரத்து செய்யலாம்
சட்டப்படி கோர்ட்டில் போராடிக்கொண்டிருப்பதை விட, சம்மந்தப்பட்ட தரப்பினர் இருவரும் தங்கள் தவறுகளை உணர்ந்து, சமரச தீர்வு கண்டு பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர விரும்பினால், அதை ஊக்குவிக்க வேண்டும். குடும்ப தகராறு வழக்குகளில், நீதியை நிலை நாட்டுவதற்கு இதைச் செய்வதற்கு நீதிமன்றம் பெரிதாக தயங்கக்கூடாது.சம்மந்தப்பட்ட தரப்பினர் சமரசமாகப் போய்விட்டால், அது தொடர்பான வழக்கினை ரத்து செய்வதற்கு குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 482 வழங்கியுள்ள அதிகாரத்தை ஐகோர்ட்டுகள் பயன்படுத்த வேண்டும்.

அனைத்து முயற்சி
சமீப காலமாக இப்படி கோபத்தின் வெளிப்பாடாக குடும்ப தகராறுகள் அதிகரித்து வருகின்றன. திருமணபந்தம் சமூகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே தம்பதியரின் நலனை முன்னிட்டு, அவர்கள் வாழ்க்கையை சுமுகமாக நடத்துவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும்.குடும்ப தகராறுகளில் குறிப்பாக இத்தகைய தகராறுகள் அதிகரித்து வருகிற சூழ்நிலையில், கோர்ட்டுக்கு வெளியே சமரச தீர்வு காண்பதை கோர்ட்டுகள் ஊக்குவிக்க வேண்டும் என்பது எங்கள் கருத்து.

அதிகாரம் உள்ளது
வழக்கின் குற்றம் சமரசம் செய்ய இயலாதது என்றாலும்கூட, அவை குடும்ப தகராறாக இருந்தால், அவர்கள் தங்கள் தகராறை எந்தவொரு நிர்ப்பந்தமும் இல்லாமல் தீர்த்துக்கொண்டனர் என நீதிமன்றம் திருப்தி அடைந்தால், குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 320, வழக்கை, நீதிமன்ற நடவடிக்கையை ரத்து செய்வதற்கு ஒரு தடையாக இருக்க முடியாது.இத்தகைய உத்தரவை (வழக்கை ரத்து செய்வதற்கு) பிறப்பிக்க குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் பிரிவு 482 ஐகோர்ட்டுக்கும், அரசியல் சட்டம் பிரிவு 142 சுப்ரீம் கோர்ட்டுக்கும் அதிகாரம் அளிக்கிறது.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக