Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

நெல்லை அரவிந்த் கண் ஆஸ்பத்திரியின் 25வது ஆண்டு வெள்ளிவிழா


நெல்லை அரவிந்த் கண் ஆஸ்பத்திரியின் 25வது ஆண்டு வெள்ளிவிழாவை முன்னிட்டு சிறப்பு கண்காட்சி, டாக்டர்களுக்கான கருத்தரங்கம், பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடக்கிறது.

இதுகுறித்து அரவிந்த் கண் ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை கடந்த 88ம் ஆண்டு துவங்கப்பட்டது. அப்போது 6 டாக்டர்கள் இருந்தனர். தற்போது 550 அலுவலர்கள் உள்ளனர். இதில் 60 பேர் டாக்டர்கள். ஆஸ்பத்திரி துவங்கப்பட்ட போது ஆண்டிற்கு 6 ஆயிரம் கண் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. தற்போது ஆண்டிற்கு 45 ஆயிரம் கண் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர் மற்றும் கேரள மாநிலங்களை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 25 ஆண்டுகளாக நெல்லை அரவிந்த் கண் ஆஸ்பத்திரி கண் தானம் குறித்த விழிப்புணர்வு, கண் மருத்துவத்தில் மக்களுக்கு சிறந்த சேவையாற்றி வருகிறது. கண் பார்வை இழப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. நெல்லை அரவிந்த் கண் ஆஸ்பத்திரியின் 25வது ஆண்டு வெள்ளிவிழாவை முன்னிட்டு கடந்த 3ம் தேதி நெல்லை ம.தி.தா.பள்ளியில் சிறப்பு மருத்துவ கண் மருத்துவ முகாம் நடந்தது. இதில் 600க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இன்று கண்காட்சி துவக்கம்:
வெள்ளிவிழாவை முன்னிட்டு "கண்ணே நலமா" மாபெரும் விழிப்புணர்வு கண்காட்சி இன்று (8ம் தேதி) துவங்குகிறது. கண்காட்சியை மேயர் விஜிலா சத்தியானந்த் துவக்கிவைக்கிறார். கண்காட்சியில் பொது அறிவு விஷயங்கள், கண் பாதுகாப்பு, கண் நோய்கள், கண் நோய்களை தடுக்கும் முறைகள், கண் பாதுகாப்பு குறித்த விளக்கவுரை, நவீன பரிசோதனை கருவிகள், பார்வை குறைபாட்டிற்கான நவீன சிகிச்சை முறைகள், கருவிழியில் ஏற்படும் பிரச்னைகள், கண் தானம் மற்றும் கண் வங்கியின் முக்கியத்துவம், கண்ணிற்கும், மூளைக்கும் ஏற்படும் பிரச்னைகள், சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு மற்றும் கிட்டப்பார்வையில் விழித்திரையில் ஏற்படும் மாற்றங்கள், பாதிப்புகள், குழந்தைகள் கண் நலன், கண் அழுத்த நோய் குறித்த அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

40 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கண் தானம், கண் பாதுகாப்பு குறித்த போட்டிகளில் பங்கேற்கின்றனர். பேச்சுப் போட்டி, கட்டுரை, வினாடி-வினா, ஓவியம் போட்டிகள் நடக்கின்றன. போட்டியில் வெற்றி
பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

வரும் 10ம் தேதி அரவிந்த் கண் ஆஸ்பத்திரியில் காலை 9.30 மணிக்கு டாக்டர்களுக்கான கருத்தரங்கம் நடக்கிறது. இதில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர்கள் கலந்து கொள்கின்றனர். 16ம் தேதி வெள்ளிவிழா நிகழ்ச்சி நிறைவு விழா நடக்கிறது. இதில் மதுரை தொழிலதிபர் கருமுத்து கண்ணன், டி.என்.பி.எஸ்.சி., முன்னாள் உறுப்பினர் பெருமாள்சாமி, ஆய்குடி அமர்சேவா சங்கம் சேர்மன் ராமகிருஷ்ணன், வ.உ.சி.கல்லூரி தாளாளர் ஏ.பி.சி.வி.சொக்கலிங்கம், ஐ.எம்.ஏ., தலைவர் டாக்டர் விஜயகுமார், சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் குணசிங் செல்லத்துரை உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

இவ்வாறு அரவிந்த் ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக