Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 19 ஜனவரி, 2013

கல்லறைப் பூக்கள் !


கல்லறை தோட்டத்து பூக்கள் அனைத்தும்
என்ன பேசிடும் என்னென்ன பேசிடும்

வாடினாலும்
வருத்தப்பட யாருமில்லை !

வயது வந்த பின்
மாலைகட்ட மணமக்கள் இல்லை !

தென்றல் மட்டுமே சத்தமிடும்
வெள்ளை கொடி கட்டி !

புறாக்களுக்கு இங்கு அனுமதியில்லை
அமைதி கெடாமல் இருக்க !

அவசரமாய் கடந்து செல்வோரின்
ஆழ்நிலை தூக்கம் இங்கேதான் !

பொருளாதாரம்
இங்கே பொருட்படுத்த படுவதேயில்லை !

நில அபகரிப்பு வழக்கு தொடர
கல்லறைச் சட்டத்தில் அனுமதியில்லை !

தார் சாலைகள் அமைக்க மனு பெற்ற
அமைச்சரின் இறுதி ஊர்வலத்திற்கு சாலை அமைக்கப்பட்டது !

நிலவின் துணை கொண்டு
மின்னொளிக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது !

பேச்சாளன் இங்கே
மௌனத்தின் தூதுவனாக நியமிக்கப் பட்டிருக்கின்றான் !

புத்தாண்டில் புதிய ஆணை எடுக்க
யாரும் இங்கே கிடந்த பின் எழுவதில்லை !

நமது சுவாச வெளியிடு மட்டும்தான் சிதைவு பெறாமல்
இங்கே சிம்போனி இசைத்து கொண்டிருக்கின்றது !

சதைவெறி கொண்டவனும்
சட்டத்தின் துளைகளுக்குள் சாலைகள் அமைத்தவனும்
இங்கே புதையுண்டு புத்தனாகி போனார்கள் !

”போதி” மரம் கேட்கவில்லை
போதிய மரம் மட்டும் வேண்டிய சமூக ஆர்வலரின்
மகன் நட்ட பூச்செடி நாங்கள்..!

எங்கு நட்டாலும்
புன்னகையே அறிவிக்கப்படாத எங்களது தேசிய மொழி..!


----இளம் கவிஞன் ,ஆய்குடி மணி 

1 கருத்து: