Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

தமிழகத்தில் மின் தடையால் பருப்பு ஆலைகள் முடங்கின


மின்தடையால், விருதுநகரில் மட்டும் எண்ணெய், பருப்பு ஆலைகள், தினமும், 13 கோடி ரூபாய் வரை இழப்பை சந்தித்து வருகின்றன. மேலும், 15 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.விருதுநகரில், 140 பருப்பு ஆலைகள் உள்ளன. இங்கு நாள்தோறும், 1,500 டன் அளவிற்கு உளுந்து, துவரை, பாசிப் பருப்பு, மசூர் பருப்பு, பட்டாணி ஆகியவை பதப்படுத்தப்பட்டு வந்தன.

இது, தற்போதைய மின் தடையால், 400 -700 டன்னாக குறைந்துள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு, 2.50 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. நேரடியாகவும், மறைமுக மாகவும், 8 ஆயிரம் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இங்குள்ள, 80 எண்ணெய் உற்பத்தி ஆலைகள், நாள் ஒன்றுக்கு, 50 டன் வரை உற்பத்தி செய்த நிலை மாறி,மின் தடையால், 15 டன் மட்டுமே உற்பத்தி செய்கின்றன.இதில் மட்டும், 4.50 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. 1,000 தொழிலாளர்கள், பணி வாய்ப்பை இழந்து உள்ளனர்.

மல்லியை சுத்தம் செய்யும், 120 ஆலைகளில், தொடர்ந்து, 8 மணி நேரம் மின்சாரம் இருந்தால் மட்டுமே, சுத்தம் செய்யும் பணிகள் நடக்கும்.இங்கு, நாள் ஒன்றுக்கு சுத்தம் செய்யப்படும் மூட்டைகளின் எண்ணிக்கை, 10 ஆயிரத்தில் இருந்து, 4,000மாக குறைந்துள்ளது.இதனால், 2 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. 3,000 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர, தகர டின் தயாரிப்பு உள்ளிட்ட சிறு தொழில்களுக்கு நாள் ஒன்றுக்கு, 4 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. 3,000 தொழி லாளர்களுக்கும் பணி இழப்பு ஏற்பட்டு உள்ளது. மொத்தத்தில் அனைத்து பொருட்களின் உற்பத்தி குறைவால், தினம், 13 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது.
பருப்பு உற்பத்தியாளர் கார்த்திகேயன் கூறும்போது, "மின்தடையால், பருப்பு உற்பத்தி 40 சதவீதமாக குறைந்து விட்டது. ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி செய்யும் போது, உற்பத்தி செலவு மூன்று மடங்கு உயர்கிறது. இந்த நிலை நீடித்தால், பருப்பு ஆலைகள் மூடப்படும் நிலை ஏற்படும்,' என்றார்.எண்ணெய் உற்பத்தியாளர் சாவி நாகராஜ், "எண்ணெய் வித்து உற்பத்தி அடியோடு பாதித்துள்ளது. மின் தடையால் ஏற்கனவே பல எண்ணெய் ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதை நம்பியுள்ள தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக