Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 15 டிசம்பர், 2012

மூளையின் பாதிப்பைக் குறைக்க முடியும்: அப்துல் கலாம்


மாற்றுத்திறன் குழந்தைகளுடன், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்துரையாடும் நிகழ்ச்சி,கோவை கிக்கானி பள்ளி கலையரங்கத்தில் நடந்தது.
"லீட் இந்தியா - 2020" அமைப்பு மற்றும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அமைப்பு சார்பில் நடந்த இந்நிகழ்ச்சியில், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாற்றுத் திறனாளி குழந்தைகள் பங்கேற்றனர். கலாமின் பேச்சை, சைகை மொழி மூலம், ஆசிரியை ஒருவர் குழந்தைகளுக்கு விளக்கினார்.

மாற்றுத்திறன் குழந்தைகள் அனைவரையும் கைகுலுக்கிய பின் மேடையேறிய, அப்துல் கலாம் பேசியதாவது: ஸ்ரீகாந்த் எனும் உங்களைப் போன்ற ஒரு மாற்றுத்திறனாளி, பல்வேறு இடர்களை மன உறுதியுடன் எதிர்கொண்டு, அமெரிக்காவில் எம்.ஐ.டி., கல்வி நிறுவனத்தில், இன்று படிக்கிறார். இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ அறக்கட்டளை, தொழிற்சாலைகள் துவங்கி, ஏற்றுமதி செய்து வருகிறார். தன்னம்பிக்கையால், இதை அவர் சாதித்தார். தன்னம்பிக்கை தான் வெற்றியின் முதல் படி; நீங்கள் ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையுடன் வெற்றி பெற வேண்டும். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து, என் மாணவர் ஆராய்ச்சி நடத்தினார்.

கோடிக்கணக்கான நியூரான்களால் ஆன மனித மூளைக்கு, சவால் மிக்க பணிகளை கொடுத்தால், நியூரான்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்; மூளை நன்கு செயல்படும். அதிகரிக்கும் நியூரான்கள், ஒரு, "நெட்வொர்க்" போல் செயல்பட்டால், மூளைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறையும் என, கண்டுபிடித்துள்ளார்; க்கிய ஆராய்ச்சி இது. இதன் மூலம், மூளை வளர்ச்சியற்ற பல குழந்தைகள் வெற்றி பெற முடியும்.

முறையான பயிற்சி அளித்தால், மாற்றுத் திறனாளிகளால் நிறைய சாதிக்க முடியும். காது கேட்காத குழந்தைகளுக்கு உதவ, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் - டி.ஆர்.டி.ஓ., "காக்ளியர் இம்பிளான்ட்" எனும் புதிய கருவியை உருவாக்கியுள்ளது. இதை பொருத்தினால், பேசும் திறன் உருவாகும்.

இந்தாண்டு இக்கருவி பயன்பாட்டுக்கு வந்துவிடும். 8 லட்ச ரூபாய் மதிப்புள்ள இக்கருவி, ஏழைகளின் நலன் கருதி, 50 ஆயிரம் ரூபாய்க்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறன் குழந்தைகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு, தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு, அப்துல் கலாம் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக