Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 24 செப்டம்பர், 2012

‘மணிச்சுடர்’ வெள்ளிவிழாவை உலகம் வியக்க நடத்திக் காட்டுவோம்! - பேராசிரியர் கே.எம்.கே



`மணிச்சுடர்’ தமிழ்கூறும் நல்லுலக முஸ்லிம்களின் தனிச் சுடர்! தமிழ் மொழியில் இஸ்லாமிய சுடர் பரப்பும் சன்மார்க்கச் சுடர்! தமிழக முஸ்லிம்களின் இதயங்களில் ஏற்படும் ஒளியை - குரலைப் பிரதிபலிக்கும் சமுதாயச்சுடர்!

இந்த ஏடு, 1-6-1987-ல் ரமளான் திங்களில் தலைவர் சிராஜுல் மில்லத் அல்ஹாஜ் ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்களும், அவர்களின் அருமைப்புதல்வர் ஏ. அப்துல் ஹக்கீம் அவர்களும் இணைந்து உருவாக்கிய மெட்ராஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் மூலம் துவக்கப்பட்டது.

``சென்னை பீட்டர்ஸ் சாலையில் அய்யம்பேட்டையைச் சேர்ந்த புரவலர் அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்களின் கட்டடமாம் தாருல் ஸமத் மாளிகையில் பிறப்பெடுத்த மணிச்சுடர், தமிழகமெங்கும் பரவி, தமிழ் பேசும் நாடுகளில் எல்லாம் விரவிச் சென்று தமிழக முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி, சன்மார்க்க, அரசியல் நிலைமைகளை விளக்கும் நாளிதழாக வலம் வந்தது.

பின்னர், சென்னை நுங்கம்பாக்கம் வாலஸ் தோட்டம் `பொன் மனம்’ மாளிகை - சகோதரர் திருநாவுக்கரசர் எக்ஸ் எம்.பி. அவர்களின் கட்டடம், மணிச்சுடர் அலுவலகமாக மாறியது. இக் காலத்தில் சவூதி அரேபியா மற்றும் அரபு நாடுகளில் வாழும் தமிழக முஸ்லிம்களின் காலக் கண்ணாடியாக `மணிச்சுடர்’ திகழ்ந்தது.

அதன்பின்னர், இப்பொழுது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகம் காயிதெ மில்லத் மன்ஸில், மணிச்சுடர் அலுவலக மாக மாறியிருக்கிறது.

முஸ்லிம் லீகின் தலைமையகத்தில் இருந்து வெளிவரும் மணிச்சுடர், இன்றைக்கு இ.யூ. முஸ்லிம் லீகின் அதிகாரப்பூர்வ ஏடாக பரிணமித்திருக்கிறது.

இதற்கு முன்பும், மணிச்சுடர்தான், முஸ்லிம் லீகின் பிரச்சார ஏடாக விளங்கி வந்தது.

இன்றைக்கு மணிச்சுடர் நாளிதழ் - இ-பேப்பர் ஆகியிருக்கிறது. சென்னையில் மணிச்சுடர் அச்சாகி நமது கரங்களுக்கு வருமுன்னரே, உலகின் எல்லாப் பாகங்களிலும் மணிச்சுடர் இ-பேப்பரை வாசித்து, அதன் செய்திகள் பற்றிய சாதக - பாதக விமர்சனங்களும் வந்து விடுகின்றன! என்னே காலத்தின் மாற்றம்!

ஆரம்பம் முதல் இன்றைக்கு வரைக்கும் இ.யூ. முஸ்லிம் லீகின் குரலாக - கொள்கை முரசாக - அதன் வரலாற்று விளக்காகத் திகிழும் மணிச்சுடர் இருபத்து ஐந்து ஆண்டுப் பயணத்தை நிறைவு செய்து இப்பொழுது 26-வது ஆண்டில் பயணித்துக் கொண்டிருக் கிறது. கடந்து வந்த இருபத்தைந்து ஆண்டு காலத்தில் இ.யூ. முஸ்லிம் லீக் நடந்து வந்த பாதையை - அதன் பயணத்தில் நிகழ்ந்த பாடங்களை - காலச்சுவடுகளாகத் தொகுத்து மணிச்சுடர் வெள்ளிவிழா மலர் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சிறப்பு மலர் வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 4-ம் தேதி வியாழக்கிழமை 5 மணிக்கு சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெறுகிறது.

மலரை வெளியிட்டு தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் நிறைவுரை நல்குகிறார்!

இ.யூ. முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ.அஹமது, முந்நாள் தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணியார், இந்திய தேசிய காங்கிரஸ் முன்னணித் தலைவர் திரு. பீட்டர் அல்போன்ஸ்  மற்றும் இ.யூ. முஸ்லிம் லீகின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகி கள், மணிச்சுடர் நிர்வாகிகள், இயக்குநர்கள், முந்நாள் இந்நாள் ஆசிரியர் குழுவினர், இதழுக்கு ஆதரவளித்து வரும் புரவலர்கள், மணிச்சுடர் முகவர்கள், நிருபர்கள், அலுவலர்கள், சர்வதேச காயிதெ மில்லத் பேரவை நிர்வாகிகள், முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை நிர்வாகிகள், அறங்காவலர்கள் மற்றும் வாசக நேசகர்கள் எல்லோரும் பங்கேற்கிறார்கள். இது வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு, என்றென்றும் நினைவில் நிற்கும் நிகழ்ச்சியாகும்!

இந்த விழா, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் விழாவாகும்! இ.யூ. முஸ்லிம் லீகை வளர்த்து வரும் மணிச்சுடர், இ.யூ. முஸ்லிம் லீகினரால் வளர்ந்து வரும் ஏடாகும்!

இந்த விழாவில் பங்கேற்பது, இ.யூ. முஸ்லிம் லீகின் 25 ஆண்டு கால வரலாற்றை ஒரே இடத்தில் ஒரு சேரக் காண்பதற்கு ஒப்பாகும்! தமிழகம் முழுவதிலும் இருந்து ஒவ்வொரு முஸ்லிம் லீகரும் பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டிய விழா என்பதை எல்லாரிடத்தி லும் எடுத்துச் சொல்லுங்கள்!

அக்டோபர் 4 - தலைவர் சிராஜுல் மில்லத் ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமத் சாஹிப் - சமூக நல்லிணக்கம் பேணிய சந்தனத் தமிழ் மேதை - சன்மார்க்க அறிஞர் -சமுதாயப் போராளி - பிறந்த நாள் என்பதையும் நினைவிற் கொள்ளுங்கள்!

சிராஜுல் மில்லத் பிறந்த நாளில் மணிச்சுடருக்கு வெள்ளி விழாவை உலகம் வியக்க நடத்திக் காட்டி, அதன் பொன்விழாவை பூலோகமே அதிசயிக்கும் வகையில் நடத்துவோம் என்பதைச் சூளுரையாகக் கொள்ள வாருங்கள்!

சென்னையில் 4-10-2012 வியாழக்கிழமை மாலை 5 மணிக்குச் சேருவோம்! எல்லோரும் ஒரே குரலில் மணிச்சுடர் வாழ்க! மணிச்சுடர் வெல்க! முஸ்லிம் லீக் ஜிந்தாபாத்! என்று கூறுவோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக