Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 19 ஜூன், 2012

நெல்லை அல்வா விலை கடும் உயர்வு

                                                          
நெல்லை என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது, அல்வா. தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் பெரும்பாலும் நெல்லை வழியாக தங்களது பயணத்தை அமைத்துக் கொள்கின்றனர்.
 
எதற்கு என்றால்? நெல்லையில் சுவையான அல்வாவை வாங்கிச் செல்வதற்குத்தான். நெல்லையில் உள்ள மிட்டாய் கடைகளில் அல்வா வியாபாரம் தினமும் களை கட்டி இருக்கும். வெளியூருக்கு செல்லும் ரெயில் பயணிகள், பஸ் பயணிகள் மாலை நேரத்தில் மிட்டாய் கடைகளில் நீண்ட வரிசையில் காத்து நின்று அல்வா வாங்கி செல்கின்றனர்.
 
இந்த அல்வாவை கண்ணாடி போன்ற பிளாஸ்டிக் பையில் போட்டு, அதற்கு மேல் கடை விளம்பரத்துடன் கூடிய மற்றொரு பிளாஸ்டிக் பையில் பார்சல் கட்டி வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பார்கள்.
 
இந்த நிலையில் நெல்லை மாநகரில் பிளாஸ்டிக் பைகளுக்கு கடந்த 1-ந் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.   இதனால் அல்வா மற்றும் ஈரப்பதம் கொண்ட இனிப்பு வகைகளை மிட்டாய் கடைக்காரர்கள் தற்போது வாழை இலையில் வைத்து, காகிதத்தால் கட்டி கொடுக்கின்றனர்.
 
வெளியூர் பயணிகளுக்கு பட்டர் பேக் எனப்படும் ஒரு வகை பையில் போட்டு கொடுக்கின்றனர். இதனால் மிட்டாய் கடைக்காரர்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதாகக் கூறுகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு நெல்லையில் ஒருசில மிட்டாய்க் கடைக்காரர்கள் விலையை கடுமையாக உயர்த்தி உள்ளனர்.
 
நெல்லையில் இதுவரை அல்வா மற்றும் கார வகைகள் கிலோவுக்கு ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் முதல் அல்வா மற்றும் கார வகைகள் விலை கிலோ ரூ.150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
 
இதனால் வாடிக்கையாளர்கள் மற்றும் அல்வா பிரியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதே போல் ரூ.150-க்கு விற்பனை ஆன மஸ்கோத் அல்வா உள்ளிட்ட பிற பொருட்கள் ரூ.200-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  
 
இதுபற்றி மிட்டாய் கடைக்காரர் ஒருவர் கூறுகையில்,
 
பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து இருப்பதால் ஒவ்வொரு பொட்டலத்துக்கும் கூடுதலாக ரூ.2-க்கு மேல் செலவு ஆகிறது. அது மட்டுமல்லாமல் மூலப்பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்து விட்டது. ஏற்கனவே விலையை உயர்த்தும் எண்ணத்தில் இருந்தோம். இந்த நிலையில் திடீரென்று பிளாஸ்டிக் பைகளுக்கான தடை மேலும் செலவை அதிகரித்து இருப்பதால் விலை உயர்த்தப்பட்டு உள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக