Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 23 நவம்பர், 2013

சவூதியில் தத்தளிக்கும் இந்திய மக்களை தாயகம் கொண்டுவர மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் : எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. கோரிக்கை

சவூதி அரேபியா நாட்டில் சட்ட விரோதமாக தங்கி இருப் பதாக கூறி கைது செய்யப் பட்டுள்ள, வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிற இந்தியர்களை மீட்பதற்கு இந் திய அரசு செய்து வரும் முயற்சிகள் என்ன என்பதை எம்.அப் துர் ரஹ்மான் எம்.பி. மத்திய அமைச்சர்களிடம் நேரில் சந்தித்து கேள்வி எழுப்பியுள்ளார். வயலார் ரவியுடன் சந்திப்பு

வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவியை புதுடெல்லியிலுள்ள அவ ரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய எம்.அப்துர் ரஹ்மான் எம்.பி, """"சவூதி அரேபியாவில் நிதா கத் சட்டம் அமலுக்கு வந்த பிறகு அங்கு சட்ட விரோதமாக தங்கி இருப்பவர்களை வெளியேற்ற அந்நாட்டு அரசு தீவிரம் காட்டி வருகிறது. சவூதி அரசினால் வழங் கப்பட்ட காலஅவகாசத்தை பயன்படுத்தி, விசாவை முறைப் படுத்திக் கொண்டவர்களும், முறைப்படுத்த முடியாமல் வெளி யேறியவர்களும் போக இன்னும் பல லட்சம் பேர் அங்கு இச்சட் டத்தால் சிக்கிக் கொண் டுள்ளனர். அவர்களில் ஏராளமா னோர் இந்தியர்கள். அவர்களை மீட்பதற்கு இந்திய தூதரகம் உரிய முயற்சிகளை மேற் கொண்டுள்ளதா? இந்திய அரசு இதுவிஷயத்தில் தீவிர அக் கறை காட்டுகிறதா? என்பதை தெரிந்து கொள்ள முடியாமல் அம்மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே, அவர்களுக்கு உத வுவதற்கு இந்திய அரசு உடன டியாக தலையிட வேண்டும் என வலியுறுத்தினார்.

எம்.அப்துர் ரஹ்மான்,எம்.பி, முன் னிலையில் ரியாத்திலுள்ள இந்திய தூதரிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்ட வயலார் ரவி இதுபற்றி கேட்ட போது, "அப்துர் ரஹ்மான் சொல் வது முற்றிலும் உண்மை.அங்கே நிதாகத் சட்டத்தில் பாதிக்கப் பட்டஇந்தியர்களை மீட்க தீவிரம் காட்டப்படவேண்டும்" என இந்தியத் தூதர் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் இப்பிரச்னையில் தீவிரம் காட்டு மாறு வயலார் ரவியிடம் எம்.அப் துர் ரஹ்மான் எம்.பி. கேட்டுக் கொண்டார்.

துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்துக்கு வாட்டர் சல்யூட் வரவேற்பு ;பயணிகள் உற்சாகம்

துபாயில் இருந்து முதல் முறையாக இன்று காலை மதுரை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்துக்கு, வாட்டர் சல்யூட் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஸ்பைஸ்ஜெட் சேவையால் தென் மாவட்டங்கள் பொருளாதார வளர்ச்சி பெறும் என தொழிலதிபர்களும், பணமும், நேரமும் மிச்சம் ஆவதாக பயணிகளும் உற்சாகத்துடன் கூறினர். 

மதுரையில் இருந்து துபாய்க்கு விமான சேவையை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நேற்று தொடங்கியது. மதுரை விமான நிலையத்தில் நேற்றிரவு 11.35 மணிக்கு குத்து விளக்கேற்றிய பின், முதல் விமானம் துபாய்க்கு புறப்பட்டது. இதில் மதுரை சுங்கத் துறை கமிஷனர் பஹ்கீம் அகமது, இணை கமிஷனர் மீனலோசினி, விமான நிலைய இயக்குனர் சங்கையா பாண்டியன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் ரத்தினவேல், தலைவர் ஜெகதீசன், ஸ்பைஸ் ஜெட் விமான நிலைய சேவை பிரிவு முதுநிலை துணை தலைவர் கமல்கிங் கோரானி, விற்பனை பிரிவு முதுநிலை துணை தலைவர் ராஜா, துணை பொது மேலாளர் ரஞ்சீவ், துணை கமாண்டர் குருசரண் சிங், இமிகிரேஷன் இன்ஸ்பெக்டர் விக்டர், மதுரை டிராவல் கிளப் தலைவர் முஸ்தபா, மதுரை விமான நிலைய ஸ்பைஸ் ஜெட் மேலாளர் பாலாஜி உள்பட பலர் பங்கேற்றனர். ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தூது குழுவை சேர்ந்த 36 பேர் சென்றனர். 

ஸ்பைஸ்ஜெட் சேவை குறித்து சுங்கத் துறை கமிஷனர் பஹ்கீம் அகமது கூறுகையில், மதுரையில் இருந்து கொழும்புக்கு 2012 செப்டம்பர் 20ம் தேதி முதல் விமான சேவையை அளித்ததும் ஸ்பைஸ் ஜெட்தான். தற்போது துபாய்க்கு விமான சேவையை தொடங்கி உள்ளது. இதன் மூலம் மதுரை விமான நிலையம் பன்மடங்கு வளர்ச்சி பெறும். வரும் ஜனவரியில் சிங்கப்பூர், பிப்ரவரியில் மலேசியா நாடுகளுக்கு ஸ்பைஸ்ஜெட் விமான போக்குவரத்து தொடங்கும் என நம்புகிறோம். சரக்கு விமான போக்குவரத்தும் விரைவில் தொடங்க உள்ளது என்றனர். இதற்கிடையே நேற்று நள்ளிரவு துபாயில் இருந்து புறப்பட்ட முதல் ஸ்பைஸ்ஜெட் விமானம், இன்று காலை 9.35 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்திறங்கியது. இந்த விமானத்துக்கு ‘வாட்டர் சல்யூட் எனப்படும் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. 

முதல் விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய அதிகாரிகள், ஸ்பைஸ் ஜெட் ஊழியர்கள் வரவேற்றனர். விமான நேர விவரம் தினசரி மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு இரவு 11.35 மணிக்கு புறப்படும் விமானம் (எண்:எஸ்ஜி 023) மறுநாள் அதிகாலை 2.20 மணிக்கு துபாய் சென்றடையும். அங்கிருந்து தினசரி அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் விமானம் (எண்:எஸ்ஜி 024) சென்னை வழியாக மதுரைக்கு காலை 9.45 மணிக்கு வந்து சேரும்

பின்னலாடை ஏற்றுமதி அதிகரிப்பு:வளர்ச்சி பாதையில் தொழில் துறை

"கடந்த அக்., மாதம் மட்டும், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், 31 சதவீதம் அதிகரித்து, 1,190 மில்லியன் டாலரை எட்டியுள்ளது,'' என ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதிக்கு, அமெரிக்கா, ஐரோப்பா, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம் போன்ற பல்வேறு நாடுகள் சந்தைகளாக உள்ளன. நாட்டின் ஏற்றுமதியை மேம்படுத்த, பாரம்பரிய சந்தைகள் அல்லாத மற்ற நாடுகளிலும், புதிய சந்தை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு, அதற்கு நல்ல பலனும் கிடைத்து வருகிறது. இதனால், இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சியடைய துவங்கியுள்ளது.

ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கை:ஜவுளித்துறைக்கு, மத்திய அரசின் உதவியுடன் புதிய சந்தை வாய்ப்புகள் பெறப்பட்டுள்ளன. பாரம்பரிய சந்தைகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளும் நீங்கியுள்ளன. இதனால், இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சியடையத் துவங்கியுள்ளது.கடந்த அக்., மாதம், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் 1,190 மில்லியன் டாலரை எட்டியுள்ளது; இது, கடந்த நிதியாண்டில், இதே காலத்தை விட, 30.91 சதவீதம் அதிகம். நாட்டின் ஏற்றுமதிக்கு டாலர் மதிப்பு உயர்வும் கைகொடுத்து வருகிறது. கடந்த ஏப்., முதல் அக்., வரையிலான காலத்தில், டாலர் மதிப்பு 15.5 சதவீதம் அளவில் உயர்ந்து, ஏற்றுமதிக்கு சாதகமாக உள்ளது. இக்காலத்தில், ஆயத்த ஆடை ஏற்றுமதி, கடந்த ஆண்டின் இதே காலத்தைவிட, 26.18 சதவீதம் அதிகரித்து, ரூ.49,096 கோடியை எட்டியுள்ளது.

பொருளாதார நெருக்கடி நீங்கியுள்ளதால், அமெரிக்காவுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்திலும், சிறப்பான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஜன., முதல் செப்., வரையிலான மாதங்களில், அமெரிக்காவின் ஆடை இறக்குமதியில் இந்தியாவின் பங்களிப்பு, 5 சதவீதம் உயர்ந்துள்ளது.மிக பெரிய வர்த்தக நாடான ஐரோப்பாவின் ஆடை இறக்குமதி மதிப்பு 47.8 பில்லியன் டாலர் அளவில் மாற்றம் இன்றியே காணப்படுகிறது. ஆயினும், அந்நாட்டுக்கான இந்தியாவின் ஏற்றுமதி, கடந்த ஜன., முதல் ஜூலை வரையிலான காலத்தில் ஒரு சதவீதம் அதிகரித்து, 3.4 பில்லியன் டாலரை தொட்டுள்ளது.

ஆடை ஏற்றுமதியில் போட்டி நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு சலுகைகளை பயன்படுத்தி, போட்டி நாடுகள் உலகளாவிய சந்தைகளை பலப்படுத்தி வருகின்றன. அதேநேரம், பல்வேறு பிரச்னைகளால், இந்தியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பாதிப்படைந்துள்ளன. ஆயத்த ஆடை துறையின் ஏற்றுமதி வளர்ச்சியடைய, மத்திய ரிசர்வ் வங்கி, தனது நிதிக்கொள்கையில், ஜவுளித்துறைக்கு தனி பிரிவு ஏற்படுத்த, வேண்டும்; ப்ரீ பேக்கிங் கிரெடிட், பேக்கிங் கிரெடிட்களை 7.5 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும்.இவ்வாறு, சக்திவேல் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 1 நவம்பர், 2013

கிராமப்புறங்களில் பணியாற்றாத டாக்டர்களின் சொத்துகள் பறிமுதல்

மகாராஷ்டிராவில், கிராமப் புறங்களில் பணியாற்றாத, 99 டாக்டர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

கட்டாயம் பணியாற்ற வேண்டும் : மகாராஷ்டிரா மாநில சுகாதாரத் துறை இயக்குனர், சதீஷ் பவார் கூறியதாவது: மகாராஷ்டிராவில், எம்.பி.பி.எஸ்., படிப்பவர்கள், படிப்பு முடிந்ததும், கட்டாயமாக, கிராமப்புறங்களில் ஓராண்டு பணியாற்ற வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஒருவேளை, மேற்படிப்பு படிக்க வேண்டியிருந்தால், இரண்டு ஆண்டுகள் கழித்து, கிராமப்புறத்தில் பணியாற்ற வேண்டும்.
இதன் படி, இந்தாண்டில், கிராமப்புறங்களில் பணியாற்றுவதற்காக, 255 டாக்டர்கள் பணியமர்த்தப்பட்டனர். இவர்களில், 99 பேர், பணி ஒதுக்கப்பட்ட கிராமங்களுக்கு செல்லவில்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும், இவர்கள், தற்போது எங்கு உள்ளனர் என்ற விவரத்தையும் அறிய முடியவில்லை.
கிராமப் புறங்களில் பணியாற்றாததன் மூலம், இவர்கள், அரசுடன் செய்துள்ள ஒப்பந்த விதமுறைகளை மீறியுள்ளனர். 

உரிமங்கள் ரத்து : இதனால், இவர்கள் அளித்துள்ள பிணைய பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள தொகையை, அரசு பறிமுதல் செய்யும். அல்லது அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். இவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமங்கள் ரத்து செய்யப்படும். மேலும், இவர்கள், மகாராஷ்டிராவில், டாக்டராக பணியாற்ற முடியாது. இவ்வாறு, டாக்டர் சதீஸ் பவார் கூறியுள்ளார்.

திங்கள், 28 அக்டோபர், 2013

சிறைச்சாலையில் சிந்தனையாளர்கள்! ----- புலவர் அ.ஹிலால் முஸ்தபா

அண்ணன் M.M.P(எம்.எம்.பீர் முஹம்மது சாஹிபு)  , ஒரு கூட்டத்தில் பேசி விட்டு திரும்புகிறார். அந்த நேரத்தில் தமிழகத்து போலீசார், அவரை கைது செய்து அழைத்து சென்றனர். இது நடந்தது 1965 செப்டம்பர் மாதம் 17 அன்று.

அந்தக் கூட்டத்தில், இந்தியச் சட்டத்துக்கு விரோதமாகவோ , கலவரங்களைத் தூண்டி விடும் கொடூரமாகவோ அல்லது, பிரமுகர்களைக் கொச்சைப் படுத்தி அவமானகரமாகவோ M.M.P அண்ணன் பேசி விட்டார் எனக் கருத வேண்டாம். இப்படியெல்லாம் முறையற்ற, ஒழுங்கு நெறிக்குத் தப்பிப் போன, சட்டத்திற்கு எதிரான எந்தப் பேச்சுகளையும் M.M.P அண்ணன் தன் வாழ்நாளில் பேசியதே கிடையாது. ஆனாலும் கைதானார்.

அந்தக் கூட்டம் முஸ்லிம் லீகின் கொள்கைப் பிரச்சாரக் கூட்டம் அன்று. மீலாது பெருவிழா மேடையுமன்று. இஸ்லாமிய இலக்கிய மன்றமுமன்று.

இந்திய பாகிஸ்தான் போர் நடந்த காலக்கட்டம் அது. பண்டித ஜவஹர்லால் நேரு, தேசிய ஒருமைப்பாட்டுக் குழு என்ற ஒரு அமைப்பை இந்தியப் பாராளுமன்றத்தில் வெளியிட்டு அதன் தலைவராகக் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களை நியமித்தார்.

இந்தியா முழுவதும் தேச ஒற்றுமை , தேச பாதுகாப்புக்கு மக்கள் ஆற்ற வேண்டிய பணி, இந்திய மக்களிடையே உருவாகி இருக்கும் ஐக்கியத்திற்குக் குந்தகம் விளைவிக்காத நடைமுறைகள் பற்றி எல்லாம் பிரச்சாரம் செய்ய வேண்டியதுதான் இந்தக் குழுவின் பணி.

இது மாதிரி நெல்லையில், காயிதே மில்லத்தின் உத்தரவின் பேரில் இந்தப் பிரச்சாரப் பணிக் கூட்டத்தில் பேசி விட்டு திரும்பிய M.M.P அண்ணனைத்தான் தமிழ் நாடு காவல்துறை கைது செய்தது.

1965 செப். 17 அன்று குளச்சலில் இருந்த ஷாஹுல் ஹமீது சாஹிப், பள்ளிவாயிலில் தொழுது விட்டு வெளியே வருகிறார். அந்த இடத்திலேயே காவல்துறை வந்து நின்று, அவரது இல்லத்திற்குக் கூட செல்ல அனுமதிக்காமல் காவல்துறை வேனில் ஏற்றிச் சென்றது. இந்த ஷாஹுல் ஹமீது சாஹிப்தான் பிந்தைய நாள்களில் சென்னைப் புதுக்கல்லூரி தமிழ்த் துறையில் சேவையாற்றிய குளச்சல் ஷாஹுல் ஹமீது சாஹிப்.

குளச்சலில் இந்தக் கைது அன்று பரபரப்பானது. காவல்துறை ஷாஹுல் ஹமீது சாஹிபை எங்கு அழைத்துச் சென்றது என்ற விவரம் தெரியவில்லை. ஷாஹுல் ஹமீது சாஹிபிற்கு திருமணம் ஆகி நான்கு மாதம் பத்து நாள்தான் ஆகி இருந்தது. இந்த நிகழ்வை நினைவுகூரும் பொழுது ஒருமுறை பேரா. ஷாஹுல் ஹமீது சாஹிப், “என் மனைவியை முதன்முதலில் பிரிந்தது அன்றுதான்” என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.

குளச்சல் இயக்கத்தார்கள், நண்பர்கள், இல்லத்தார்கள் கைது செய்து காவல்துறை எங்கே அழைத்துச் செல்கிறது என்று தேட ஆரம்பித்தார்கள். காவல்துறை இவர்களுக்குக் கண்ணாமூச்சி காட்டிவிட்டு இரணியல் காவல் நிலையத்தில் ரகசியமாக கொண்டு வைத்து விட்டார்கள்.

இந்தக் கைதுக்கு காவல்துறைக்கும் காரணம் தெரியவில்லை. ஷாஹுல் ஹமீது சாஹிபுக்கும் காரணம் புரியவில்லை. ஆனால் இரவு காவல் நிலையத்தில் கைதியாக அடைக்கப் பட்டுவிட்டார்.

மறுநாள் காலையில் போலீசார் ஷாஹுல் ஹமீது சாஹிபிடம் சொன்னார்கள்.

“DIR ( Defence of India Rule) – இந்திய பாதுகாப்பு சட்டப்படி நீங்கள் கைது செய்யப் பட்டு இருக்கிறீர்கள். உங்களை வேலூர் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப் போகிறோம்” என்றார்கள்.

ஷாஹுல் ஹமீது சாஹிபிற்கு அப்பொழுதுதான் விவரம் புரிகிறது.

வேலூருக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கே M.M.P அண்ணனும் இதே சட்டப் பிரிவில் கைதாகி இருந்தார். திருச்சி A.M. யூசுப் சாஹிபும் இதே சட்டப் பிரிவில் கைதாகி இருந்தார்.

இந்த இந்தியப் பாதுகாப்புச் சட்டப்படி ஒருவரை கைது செய்ய சம்மன் தேவை இல்லை. கைதானவர் நீதிமன்றத்திற்குச் செல்ல முடியாது. கைதானவரை ஆறு மாதங்கள் வரை சிறையில் அடைத்து வைக்கலாம். இந்தச் சட்ட விதி இப்படித்தான் அமைக்கப் பட்டு இருந்தது.

இதில் ஒரு தந்திரமும் இருந்தது. ஆறாவது மாதத்தில் கைதியை விடுதலை செய்யும் பொழுது அவர் அந்த ஜெயில் வாசலைத் தாண்டி வெளியில் வந்தவுடன் மீண்டும் உடனடியே கைது செய்து ஆறு மாதம் உள்ளே வைத்து விடலாம்.

இந்தச் சட்டம் இயற்றப் பட்டதில் இருந்து , பொதுவுடைமைக் கட்சிக்காரர்கள் மீதுதான் பாய்ந்துக் கொண்டு இருந்தது. அப்போதுதான் முதல் முறையாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் மீதும் பாய்ந்து இருக்கிறது.

வேலூர் சிறைச்சாலையில் M.M.P அண்ணனுக்கு 17 ஆம் எண் அறை. குளச்சல் ஷாஹுல் ஹமீது சாஹிபிற்கு அறை எண் 18. திருச்சி யூசுப் சாஹிபிற்கு அறை எண் 16 ஒதுக்கப் பட்டிருந்தன. யூசுப் சாஹிபின் கைது எண் 151, M.M.P அண்ணனுக்கு 152, குளச்சல் ஷாஹுல் ஹமீது சாஹிபிற்கு 153. அதாவது, ஒட்டுமொத்த இந்தியாவிலும் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தில் 151 ஆவது கைதி A.M. யூசுப் சாஹிப். 152 கைதி M .M.P , 153 கைதி குளச்சல் ஷாஹுல் ஹமீது.

இவர்களுக்குப் பக்கத்தில் பொதுவுடமைக்காரர்கள் அடைக்கப் பட்டு இருந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தோழர் P. ராமமூர்த்தி, தோழர் கோவை ஈஸ்வரன் போன்றோர்.

ஆனால் ஜெயிலில் இவர்கள் சந்தித்து கொள்ளாதவாறு தடுப்பு செய்யப்பட்டு இருந்தது.

காலையில் ஆறு மணிக்குச் சிறை அறைக் கதவைத் திறப்பார்கள். குறிப்பிட்ட அந்த பகுதிக்குள் அவர்கள் நடமாடிக் கொள்ளலாம். மாலை ஆறு மணிக்கு இவர்களை உள்ளனுப்பி அறைக் கதவைப் பூட்டி விடுவார்கள்.

இவர்களுக்குப் பணிபுரிய தேர்ந்தெடுக்கப் பட்ட சில கைதிகளை சிறைத்துறை ஏற்பாடு செய்து இருந்தது.

சிறையில் இருந்த முஸ்லிம் லீகர்களாகிய இவர்களுக்கு உதவி செய்ய நாவித சமுதாயத்தைச் சார்ந்த துர்வாசர் என்பவர் வந்தார். அவர் நல்ல மனிதராம். குளச்சல் ஷாஹுல் ஹமீது இந்தத் தகவலைக் குறிப்பிட்டார்.

துர்வாசரை M.M.P அவர்கள், ஒருமுறை கூப்பிட்டு சொன்னாராம்.
“ஐயா உம் துர்வாசர் பெயரை மாற்றிக் கொள்ளும். முன்னால் உள்ள துர் –ஐத் தூக்கிப் போட்டு விட்டு திருவைச் சேர்த்துக் கொண்டு திருவாசர் ஆகிவிடும்” என்றாராம்

ஒரு நாள், இந்தத் துர்வாசர் மூலமாக , இவர்களுக்குத் தோழர் P.ராமமூர்த்தியிடமிருந்து ஒரு செய்தி வந்ததாம்.

“நீங்கள் கைதாகி இங்கிருப்பதைச் செய்தித்தாளில் படித்தேன். நாம் சந்தித்துக் கொள்ள வேண்டாம். நான் ஒரு செய்தியை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். அதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்” எனச் சொல்லி அனுப்பி இருக்கிறார்.

இந்தியப் பாதுகாப்பு சட்டம் எதற்காக? அதனுடைய சரத்துகள் என்ன? என்ற முழு விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று பொதுவுடைமை இயக்கம், உச்சநீதி மன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்தது. அதற்கு உச்ச நீதிமன்றம், அந்த விதிகளை வெளியிட அரசுக்கு ஆணையிட்டுத் தீர்ப்புக் கூறியது.

இந்தத் தீர்ப்பு நகலின் ஒரு பிரதியைத் துர்வாசர் வழியே தோழர் ராமமூர்த்தி இவர்களுக்குக் கொடுத்து அனுப்பினார்.

அதில் , சிறைச் சாலைக்குள் இந்தக் கைதிகளை எப்படி நடத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

தினம் ஒரு மருத்துவர் வந்து பரிசோதிக்க வேண்டும். இவர்கள் விரும்பிய உணவிற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும். சிகை அலங்காரங்கள் போன்றவற்றை செய்துக் கொள்ள வழி வகுக்க வேண்டும். ஆடைகளைத் துவைத்து தர ஏற்பாடு செய்து தர வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு புது ஆடை கொடுக்க வேண்டும் போன்ற விதிகள் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தன.

வேலூர் ஜெயிலர் வாசுதேவன் நாயர். தினம் ஒருமுறை இவர்களைச் சந்தித்து செல்வார். மிக நல்ல மனிதர். சிறைச் சூப்பிரண்டண்ட் ஜெகன்னாத முதலியார். இவரும் ஒரு அற்புதமான மனிதர். இப்படி இவர்களைப் பற்றி குளச்சல் ஷாஹுல் ஹமீது சாஹிப் குறிப்பிடுகிறார்.

ரமலான் மாதம் வந்துவிட்டது. சூப்பிரண்டண்ட் ஜெகன்னாத முதலியார் இவர்களைப் பார்க்க வருகிறார். முஸ்லிம் லீகின் மூவரும் சூப்பிரண்டண்டிடம் கோரிக்கை வைத்தனர்.

“ரமலான் மாதத்தில் எங்களுக்குச் சஹர் உணவிற்கு (சூரிய உதயத்திற்கு முன்னர்) ஏற்பாடு செய்ய வேண்டும். மாலையில் சூரிய அஸ்தமனத்திற்குப் பின் நோன்பு திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.இரவு எட்டு மணிக்கு மேல் தராவீஹ் தொழுவதற்கு ஆவன செய்ய வேண்டும்.” என கோரிக்கைகள் வைத்தார்கள்.

இவர்கள் வைத்த இந்தக் கோரிக்கைகளைச் சூப்பிரண்டண்ட் ஜெகன்னாத முதலியார் , தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைத்தார்.

தலைமைச் செயளாலரிடமிருந்து, நோன்பின் முப்பது தினங்களுக்கும் இந்த கோரிக்கைக்கு அனுமதி வழங்க உத்தரவு வந்து சேர்ந்தது.

ரமலான் மாதம் வேலூர் சிறைச்சாலையில் இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை எண்கள் 16,17,18 மட்டும் அதிகாலை 3 மணிக்குக் கதவுகள் திறக்கப் பட்டன. இரவு 9 மணிக்குத் தராவீஹ் தொழுகை முடிந்தபின் சிறைக் கதவுகள் மூடப்பட்டன.

ரமலான் மாதம் முழுவதும் வேலூர் சிறைச் சாலையில் சுவனத்து நிழல் சோபிதம் கொண்டு இருந்தது.

M.M.P. அண்ணன்,A.M. யூசுப் சாஹிப், குளச்சல் ஷாஹுல் ஹமீது ஆகிய மூவரும் கைதாகிய இரண்டு மாதங்களுக்குப் பின்னர், இதே சட்ட விதியில் திருச்சி A.M. ஹனீஃப் கைதாகி உள்ளே வந்து சேர்ந்தார்.

டெல்லி பாராளுமன்றத்தில் மேலவையிலும், மக்களவையிலும் தமிழகத்தின் இந்த நிகழ்வு குறித்து பேசப்பட்டது.

ராஜ கோபாலச்சாரியார்(ராஜாஜி) காங்கிரஸை விட்டு வெளியே வந்து சுதந்திரா கட்சியை நிறுவி அரசியல் செய்து கொண்டிருந்தார். இந்த சுதந்திரா கட்சியின் பொதுச் செயளாலர் S.S. மாரிச்சாமி மாநிலங்களவையில் இந்த கைது பற்றி வினா எழுப்பினார்.

மாநிலங்களவைக்கு மேற்கு வங்கத்தில் இருந்து வந்திருந்த தோழர் புபேஷ் குப்தாவும் கேள்வி எழுப்பினார். மக்களவையில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் வினா தொடுத்தார்கள்.

“தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவை பிரதமர் பண்டித நேரு அமைத்து , அதற்கு என்னைத் தலைவராகப் போட்டு இருக்கிறார். இந்த ஒருமைப்பாட்டு விளக்கப் பொதுக் கூட்டம் நெல்லையில் நடந்தது. எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த M.M.பீர் முஹம்மது என்பவர் அந்தக் கூட்டத்தில் பேசிவிட்டு மேடையை விட்டு இறங்கிய உடன் தமிழ்நாடு காவல்துறையினர் , இந்திய பாதுகாப்புச் சட்டவிதியில் கைது செய்து இருக்கிறார்கள்.இந்திய ஒருமைப்பாட்டுக் குழுவுக்கு நான் தலைவன். , இந்திய பாதுகாப்புச் சட்டத்தில் எங்கள் இயக்கத் தோழர் கைதாகிறார். இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது?” என்று காயிதே மில்லத் மக்களவையில் கேட்டார்கள்.

அப்போது இந்திய உள்துறை அமைச்சராகக் குல்சாரிலால் நந்தா இருந்தார். (இவர்தான் பண்டித நேரு மரணித்தவுடன் தற்காலிகப் பிரதமராகச் சில நாள் இருந்தார். அதன் பின்னர் லால்பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆனார். இவரை அடுத்துத்தான் இந்திரா காந்தி பிரதமாராகப் பதவி ஏற்றார்).

மேலவையில் தோழர் புபேஷ் குப்தா, S.S. மாரிச்சாமி , மக்களவையில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இவர்களுடைய வினாக்களுக்கு எல்லாம் சேர்த்து ஒரே ஒரு பதில்தான் பாராளுமன்றத்தில் வைக்கப் பட்டது.

“எங்கோ ஒரு தவறு எப்படியோ நடந்து விட்டது”. என்பதுதான்.

வேலூர் சிறைச் சாலைக்கு , வேலூர் ஹபீபுல்லாஹ் சாஹிப் வாரம் வாரம் வந்து, சிறைச்சாலைக்குள்ளிருக்கும் நமது பெருமைக்குரியவர்களைச் சந்தித்து செல்வார்.

சிறை விதிகளின் படி கைதிகள் தங்களைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி தரலாம் என்று பட்டியல் தர வேண்டும். அந்த அடிப்படையில்தான் சிறைக்கு வெளியில் இருப்பவர்கள் சந்திக்க அனுமதி வழங்கப்படும்.

ஒருமுறை , இவர்களைச் சந்திக்க லெப்பைக் குடிக்காடு ஜமாலி சாஹிப் (இவர் முஸ்லிம் லீகின் சென்னை ராஜதானி சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார்) வேலூர் சிறைக்கு வந்தார். ஆனால் A.M . யூசுப் சாஹிப் இவர் பெயரைக் குறித்துக் கொடுக்காததினால் ஜமாலி சாஹிப் தடுக்கப் பட்டார். இவர்களைப் பாராமலேயே ஜமாலி சாஹிப் திரும்பிச் செல்ல நேர்ந்தது.

1966 ஜனவரி 25 ஆம் தேதி, இவர்களுக்கு வேலூர் சிறைச்சாலையிலிருந்து விடுதலைக் கிடைத்தது.

சென்னையிலிருந்து காயிதே மில்லத் , சென்னை மேயராக இருந்த Dr.ஹபீபுல்லாஹ் பேக் , சென்னை மாநகராட்சி துணை மேயராக இருந்த சிலார் மியான் , வேலூர் ஹபீபுல்லாஹ் ஆகியோர் வேலூர் சிறைச்சாலைக்கு வந்தார்கள். சிறையில் இருந்தவர்கள் , சிறைக்கு வெளியே விடுதலையாகி அனுப்பப்பட்டார்கள்.

அழைத்து செல்ல வந்திருந்த காயிதே மில்லத்தைச் சிறையைச் சுற்றிப் பார்க்க அழைத்தார் ஜெயில் சூப்பிர்ண்டன்ட் ஜகன்னாத முதலியார். காயிதே மில்லத்தும் சம்மதித்துச் சென்றார்கள். ஒரு ஜீப்பில் அமர வைத்து உள்ளே சுற்றிக் காட்டினார். அப்பொழுது காயிதே மில்லத், ஜெயில் சூப்பிரண்டன்டிடம் கேட்டார்களாம்,

“எங்கள் இயக்கத்தவர்கள் உள்ளே எப்படி நடந்துக் கொண்டார்கள்” என்று .

”இதுவரை உள்ள என் பணிக்காலத்தில் இப்படிபட்ட நபர்களை நான் சந்தித்ததே இல்லை, இவர்களை அரசு ஏன் கைது செய்தது என இந்த நிமிடம் வரை எனக்குப் புரியவில்லை” என்று சூப்பிரண்டன்ட், வாக்குமூலம் தந்தாராம்.

ஜெயிலைச் சுற்றிப் பார்த்துவிட்டு அங்கு ஏற்கனவே வெளியில் நின்றிருந்த M.M.P. அண்ணன் A.M. யூசுப் சாஹிப், குளச்சல் ஷாஹுல் ஹமீது சாஹிப், A.M. ஹனீஃப் சாஹிப் ஆகியோர் காயிதே மில்லத்திற்கு மாலைப் போட்டு வரவேற்றார்களாம்.

இந்தச் சிறை அனுபவங்களைப் பேரா. குளச்சல் ஷாஹுல் ஹமீது சாஹிப் சொல்லிக் காட்டும் பொழுது ஒரு காப்பிய ரசனை நமக்கு ஏற்படும்.

புதன், 23 அக்டோபர், 2013

இரத்த உறவுகளுக்கு அப்பாற்பட்ட அதற்கு இணையான உறவுகள் ------------2

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் , எனது பள்ளித் தோழன் ஒருவன் நெல்லை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான் .அவன் 3 -ஆம் ஆண்டை பூர்த்தி செய்யும் நிலை வரும் போது ,என்னிடம் வந்து ,மாப்ளே நான் MCA திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் சேரணும் என்று கூறினான் . விண்ணபித்து போய் சேர வேண்டியதுதானே என்று கூறினேன் . அங்கே , மார்க் அடிப்படையில் தான் ,எடுப்பாங்க அதோடு கொஞ்சம் சிபாரிசு இருந்தால் நல்லா இருக்கும் என்று கூறினான் .அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன் . அதற்கு அவன் ,என் மாமா விடம் இது விசயமாக பேசினேன் ,அவர் உன்னால் முடியும் என்று கூறினார் என்றான் .எனக்கு ஒன்றும் புரியவில்லை ,நாளைக்கு பேசுவோம் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன் .

வீட்டிற்கு வந்த பின்தான் அவன் சொன்னதற்கு விடை கிடைத்தது . மறுநாள் காலையில் மாப்ளே ,கிளம்பு என்று அவனை கூப்பிட்டேன் ,எங்கே ? என்று கேட்டான் ,உடனே கிளம்பு என்றேன் ,அவனது இருசக்கர ஹீரோ ஹோண்டாவை எடுத்துக் கொண்டு குற்றாலம் அருகில் இருக்கும் நன்னகரத்திற்கு சென்றோம் . அங்கே ,அன்றைய மத்திய அமைச்சர் அருணாசலத்தின் வீட்டிற்கு எதிரே இருந்த ,பள்ளிவாசலோடு இணைந்த இஷாத்துல் இஸ்லாம் சபையின் கட்டிடத்தில் ,அதன் தலைவர் ,காயிதே மில்லத்தின் அன்பு தொண்டராக ,சமுதாயத்தை பற்றியே சதாவும் சிந்தித்துக் கொண்டிருந்த ,எனது சமுதாயப் பணியின் ஆசான், தலைவர் அஹமது கபீர் ரிபாயி (ரஹ்) அவர்களை சந்தித்தோம் .அன்பான வரவேற்பு , முறுக்கும் சாயாவும் வந்தது . என்னுடன் வந்த நண்பனை அறிமுகம் செய்துவிட்டு , பல விஷயங்கள் AK .ரிபாயி (ரஹ்) அவர்கள் சொல்ல அதனை கேட்டு நாங்களும் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டு ,சென்ற காரணத்தை சொன்னேன் .

அப்போது , தலைவர் அவர்கள் ,எனக்கு ஜமால் முஹம்மது கல்லூரியில் ஒரே ஒரு இடம் கிடைக்கும் , அது இந்த வருடம் உனது நண்பனுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறதா என்று பார்ப்போம் ,இன்ஷாஅல்லாஹ் என்று கூறிவிட்டு . அன்றைய ஜமால் முஹம்மது கல்லூரியின் செயலாளருக்கு தொலைபேசி மூலம் பேசினார்கள் ,நண்பனின் பட்டபடிப்பு விசயமாக கூறினார்கள் .தலைவர் பேசிவிட்டு ,அல்ஹம்துலில்லாஹ் என்று கூறினார்கள் . அப்போம், நான் லட்டர் தருகிறேன் அதனை கொண்டு போய் கொடுங்கள் ,அட்மிஷன் கிடைத்துவிடும் என்று கூறி எங்களை அனுப்பிவைத்தார்கள் .

வெளியில் வந்த உடன் என் நண்பன் கேட்டான் , மாப்ளே ,எல்லோரும் முதலாளினு சொல்றாங்க , முன்னாள் MP , பெரிய ஆளு ,எப்படிப்பா ,இப்படி எளிமையாக இருக்காங்க ? அதுவும் , ,சின்ன பையன்கள் நாமோ கேட்டவுடன் விசயத்தையும் முடித்து தந்துவிட்டார்கள் ,எனக்கு ஆச்சரியமாக இருக்குது என்று கூறினான் . நான் , அதுதான் நான் தேர்ந்தெடுத்த பாதையின் தலைவர்கள் . சமுதாயத் தியாகம் தான் அவர்களது வாழ்க்கை என்றும் , இஷா அத்துல் இஸ்லாம் சபையின் மூலம் ரிபாயி சாஹிபும் அவர்தம் குடும்பத்தார்களும் ,சமுதாய பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் செய்த சேவைகளையும் ,காயிதே மில்லத்திற்கும் ரிபாயி சாஹிபு (ரஹ் ) அவர்களுக்கும் உள்ள குடும்ப உறவுகளையும் எடுத்துக்கூறினேன் .

நண்பனும் ,கல்லூரியில் சேர்ந்தான்,MCA படிப்பை முடித்தான் ;வெளிநாடு சென்றான் நல்ல சம்பாத்தியம் செய்கிறான் .ஆனால் ,ஒரு தடவை கூட அவன் என்னிடம் தனக்கு சிபாரிசு செய்த அந்த மனிதரை பற்றி கேட்டதில்லை . அவருக்கு நன்றி கூட சொன்னதில்லை .

ஆனால் ,ஆயிரக்கணக்கான மக்களால் முதலாளி என்றும் ,தலைவர் என்றும் மனம் நிறைய அன்போடு அழைக்கப்பட்ட அந்த தலைவர் என்னை காணும் போதெல்லாம் ,அந்த பையன் படிப்பை பற்றி விசாரிப்பார்கள் .

அந்த பெரிய மனிதரின் உறவு எனக்கு கிடைத்தது எனக்கு அல்லாஹ் இந்த உலகத்தில் தந்த பெரும் பேராக ,பெரும் பாக்கியமாக நான் எண்ணுகிறேன் . வல்லா அல்லா , அந்த தலைவரின் மண்ணறையை சொர்க்கச்சோலையாக்கிவைபானாக !

திங்கள், 21 அக்டோபர், 2013

புதிய தொழில் படிப்பை முன்மொழிந்தது யு.ஜி.சி!

பிளம்பிங், கார்பென்டரி மற்றும் பிற திறன்கள் ஆகியவைத் தொடர்பான பயிற்சிகளை அளிக்க, தொழிற்கல்வி பிரிவில், ஒரு புதிய பட்டப்படிப்பை யு.ஜி.சி., முன்மொழிந்துள்ளது.

பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்தப்பிறகு, பட்டப் படிப்பை மேற்கொள்ளாமல், பல்வேறு சூழல்களால் தொழில்துறை பணிகளுக்கு சென்றுவிட்ட நபர்களுக்காக இப்படிப்பு(B Voc) தொடங்கப்படுகிறது. இதன்மூலம் பிளம்பிங், கார்பென்டரி மற்றும் அதையொத்த பிற தொழிற்பிரிவுகளில் ஈடுபட்டுள்ள நபர்கள், எளிதில் பட்டதாரிகளாக மாறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

வரும் கல்வியாண்டு முதல், கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்றவை இப்படிப்பை வழங்கலாம் என்று UGC தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பு, கிரெடிட் சிஸ்டம் அடிப்படையில் நடத்தப்படும் மற்றும் வருகைப்பதிவு விஷயத்தில் நெகிழ்வுத் தன்மையும் உண்டு. இதன்மூலம், தங்களின் பணிச்சூழல் காரணமாக, மாணவர்களால் தொடர்ச்சியாக வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாமல் போனாலும், அவர்களால் தேர்வெழுதி பட்டம் பெற முடியும்.

இப்படிப்பு(B Voc), 3 வருட பட்டப் படிப்பு என்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள், தங்களுடைய பகுதியின் சூழலுக்கு ஏற்ப பாடத்திட்டங்களை தாங்களே வடிவமைத்துக் கொள்ளலாம். () தவிர்த்து, துணைநிலைப் பாடங்கள் மற்றும் trades ஆகியவைகளுக்கு கிரெடிட்டுகள் வழங்கப்படும். அதேசமயம், ஒரு தொழில் திறனற்ற நபர், பட்டம் பெறுவதற்கு இந்தப் படிப்பு உதவுமா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கல்வியாளர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால், "நாட்டில் இருக்கும் கலை-அறிவியல் கல்லூரிகள், தங்களின் வழக்கமான படிப்புகளையே சிறப்பாக நடத்த முடியாத சூழல் நிலவுகையில், புதிதாக இன்னொரு படிப்பை நடத்துமாறு கூறுவது ஏற்கத்தக்கதல்ல. இதனால், மாணவர்கள்தான் பாதிக்கப்படுவார்கள். இப்படிப்பால், புதிய பயன் ஒன்றும் ஏற்படாது.

மேலும், பல கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக்குகளில், போதுமான ஆய்வக வசதிகள் மற்றும் ஆசிரியர்கள் இல்லை. எனவே, இப்போதைய தேவை என்னவெனில், இருக்கும் படிப்புகளுக்கு தேவையானதை செய்வதுதானே ஒழிய, புதிய படிப்புகள் அல்ல. ஆனால், இதையும் மீறி அந்தப் படிப்பை(B Voc) நடத்தியே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், அது தொழில்நுட்ப கல்லூரிகளிலேயே நடத்தப்படு வேண்டும். ஏனெனில், அங்குதான் அதற்கான அடிப்படை வசதிகள் உள்ளன" என்று தங்களின் ஆதங்கத்தை அவர்கள் முன்வைக்கிறார்கள்.