Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 2 அக்டோபர், 2013

நபிகள் நாயகத்துக்குப் பின் வந்த நான்கு கலிபாக்கள் வாழ்ந்து காட்டிய நேர்மையான எளிமையான வாழ்க்கையை தானும் வாழ முயன்று வெற்றி கண்டவர் காயிதே மில்லத் :சேயன் ஹமீது


இன்று லுஹர் தொழுகைக்குப் பின் பள்ளியில் என்னைச் சந்தித்த நண்பர் ஒருவர் காமராஜரையும், ப. ஜீவானந்தம் அவர்களையும் சிறந்த அரசியல் தலைவர் என்று சொல்லி இருக்கீங்க, ஏன் காயிதே மில்லத் இல்லையா? எனக் கேட்டார்.
நான் சொன்னேன், "நான் எப்பவும் காயிதே மில்லத் அவர்களை வெறும் அரசியல் தலைவராக மட்டும் பார்ப்பதில்லை, அவர் அரசியலையும் மீறி ஒரு ஆன்மீகத் தலைவர். எப்போதெல்லாம் உலகில் அரசியலும் ஆன்மீகமும் நாணயத்தின் இரு பக்கங்கள் போல செர்ந்திருந்ததோ அப்பவெல்லாம் அரசியலில் ஒழுக்க விழுமியங்கள் கோலோச்சின. 

காயிதே மில்லத் அவர்கள் மிக உயர்வான ஆன்மீக அரசியல் வாதி!
"தொடர்ச்சியாக தமிழர்கள் மறக்கக் கூடாத மாமனிதர்கள் பட்டியல் ஒன்று விருப்பு வெறுப்பின்றித் தயாரிக்கப்பட்டால், கட்டாயம் அப்பட்டியலில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் பெயர் இடம்பெற்றே தீரும்.
ஒரு தமிழனாக, ஒரு முஸ்லீமாக, ஒரு இந்தியனாக, ஒரு தலைவனாக, மாந்தநேயம் உள்ள மனிதனாக எப்படி வாழ வேண்டும் என்ற இலக்கணங்களைத் தனக்குத் தானே வகுத்துக் கொண்டு, அந்த இலக்கணங்களை விட்டு விலகாத இலக்கியமாகத் தானே வாழந்துகாட்டிய பெருமகன் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களில் ஒருவராக 1948 ஆம் ஆண்டு அவர் நியமிக்கப்பட்டார்.

14.9.49 அன்று அரசியல் நிர்ணய சபை கூடி இந்தியாவின் தேசிய மொழி பற்றி விவாதித்தபோது இந்தியாவின் தேசிய மொழியாக இருக்கும் தகுதி தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு என ஆணித்தரமாக எடுத்துரைத்தார். வரலாற்றின் பொன்னேட்டில் அன்று அவர் பொறித்துச் சென்ற வைர வரிகள் இவை:
“ஒரு மொழி இந்திய மொழியாக மட்டும் இருந்தால் போதாது. அம்மொழி இந்நாட்டின் பழமையான மொழியாகவும் இருக்க வேண்டும். அத்தகைய மொழியையே இந்நாட்டின் தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்து இங்கே முன்வைக்கப்பட்டது.

அக்கருத்தை ஏற்று அரசியல் நிர்ணய சபை தேசிய மொழி பற்றிய முடிவை எடுக்குமானால், ஒரு உண்மையை இச்சபை முன்பு துணிவோடு கூற விரும்புகிறேன். இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும், ஆரம்ப காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ்தான். எனது கூற்றை எந்த வரலாற்று ஆசிரியராலும் மறுக்க முடியாது. எந்தப் புதை பொருள் ஆராய்ச்சியாளராலும் எதிர்க்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ். இது எனது தாய் மொழி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மொழியை நான் நேசிக்கிறேன்.

அம்மொழியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். பழமையான மொழியைத்தான் இந்நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டுமென்றால் இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்”
பொதுவாழ்வில் நேர்மைக்கு நிரூபணமாய் விளங்கிய காயிதே மில்லத் அவர்கள் சொந்த வாழ்வில் எளிமைக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தார்.
குரோம்பேட்டையில் ஒரு சிறிய வீடு. வந்தவர்களை அமரவைக்க போதுமான அறையணிகள் இருக்காது. குரோம்பேட்டையில் இருந்து மின்சார ரயிலில் புறப்பட்டு, கடற்கரை ரயில் நிலையத்தில் இறங்கி, ரிக் ஷாவில் ஏறி மண்ணடி கட்சி அலுவலகம் செல்வார்.

அவருக்கு ஒரு காரை வாங்கித் தரப் பலரும் முயன்றனர். அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு முறை மலேசியா சென்று ஒரு அன்பர் வீட்டில் தங்கியிருந்தபோது, அவர் காயிதே மில்லத்திடம் ஒரு உதவி கேட்டார். “ஐயா என்னிடம் வெளிநாட்டுக் கார் உள்ளது. அதைத் தங்கள் வீட்டில் நிறுத்தி வைக்க அனுமதிக்க வேண்டும். நான் சென்னை வரும்போது அதைப் பயன்படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும் என்பதால் இந்த உதவியைக் கோருகிறேன்” என்றார். அதற்கு என் வீட்டில் கார் கொட்டகை இல்லையே என்றார் காயிதே மில்லத். “கார் கொட்டகையை நான் கட்டித் தருகிறேன்” என்றார் மலேசிய அன்பர். நேரடியாக காரை பரிசளித்தால் காயிதே மில்லத் வாங்கிக் கொள்ள மறுத்து விடுவார் என்பதற்காகவே அவர் சுற்றி வளைத்துப் பேசுகிறார் என்பதைப் புரிந்து கொண்ட காயிதே மில்லத் கண்டிப்புடன் அவரது வேண்டுகோளை நிராகரித்து விட்டார்.

கேரளாவில் ஒருமுறை அங்குள்ள கட்சிக்காரர்கள் ஒரு காரை வாங்கி சாவியை காயிதே மில்லத் அவர்களின் கையிலேயே கொடுத்து விட்டார்கள். ஆனால் காயிதே மில்லத் அங்குள்ள இஸ்லாமிய கல்லூரி ஒன்றின் உபயோகத்திற்கு அந்தக் காரை அங்கேயே கொடுத்து விட்டார்.

ஒருமுறை கட்சி அலுவலகத்துக்கு வந்த காயிதே மில்லத் அவர்கள் அங்கிருந்த அலுவலகப் பொறுப்பாளரிடம் ஒரு உறையைக் கொடுத்து பையில் இருந்து இரண்டு அணாவையும் கொடுத்து உரிய தபால் தலைகளை ஒட்டி அஞ்சலில் சேர்த்து விடுமாறு கூறி இருக்கிறார். உடனே அலுவலகப் பொறுப்பாளர் இதனை அலுவலகச் செலவிலேயே அனுப்பலாமே எனக் கேட்டிருக்கிறார். அதற்கு காயிதே மில்லத் அவர்கள் இது எனது சகோதரருக்கு எழுதுகின்ற கடிதமாகையால் அலுவலகப் பணத்தை இதற்கு செலவழிக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார். அலுவலகப் பொறுப்பாளர் உடனே, தலைவரின் சகோதரரும் கட்சிப் பொறுப்பில் இருப்பவர்தானே, எனவே கட்சிப் பணத்தை செலவு செய்வதில் என்ன தவறு எனக் கேட்டிருக்கிறார். உடனே காயிதே மில்லத் அவர்கள், இந்தக் கடிதத்தில் நான் கட்சி விஷயங்களை எழுதவில்லை. குடும்ப விஷயங்களை எழுதி இருக்கிறேன். எனவே கட்சிப் பணத்தை இதற்குச் செலவழிக்கக் கூடாது. நான் கொடுத்த இரண்டானாவை அஞ்சல் தலைகளை ஒட்டி அனுப்பி விடுங்கள் என கண்டிப்புடன் கூறிவிட்டார்.

இதுபோல் காயிதே மில்லத் அவர்களின் வாழ்வில் எத்தனையோ நிகழ்வுகள். நபிகள் நாயகத்துக்குப் பின் வந்த நான்கு கலிபாக்கள் வாழ்ந்து காட்டிய நேர்மையான எளிமையான வாழ்க்கையை தானும் வாழ முயன்று வெற்றி கண்டவர் காயிதே மில்லத் அவர்கள்."

செவ்வாய், 1 அக்டோபர், 2013

முஸ்லிம் மாணவர் பேரவையின் கடந்தகாலமும் நிகழ்காலமும் :பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன்

சென்னை வேப்பேரி பெரியார் திடலில் 5-10-2013 சனிக்கிழமை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் எம்.எஸ்.எஃப் முஸ்லிம் மாணவர் பேரவை மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது.

மாணவர்கள் பங்கேற்கும் மாநில மாநாடா? - என்று சிலர் வினா தொடுக்கிறார்கள் - பலர் வியந்து மாநாட்டை எதிர் நோக்கியிருக்கிறார்கள். எம்.எஸ்.எஃப் முஸ்லிம் மாணவர் பேரவையில் உள்ள தம்பிகள் - நம் சமுதாயத்திற்கு பணிபுரிய வந்துதித்த தங்கக் கம்பிகள். சில ஆண்டுகளாக மாவட்ட அளவில் பயிலரங்கங் கள் என்று நடத்தி பேரும், பாராட்டும் பெற்று வந்தவர்கள்.

இப்போது முதல் முறையாக மாநில மாநாடு என்று அறிவித்து மிகுந்த உற்சாகத்துடன் களம் இறங்கி காரியங்கள் செய்து வருகிறார்கள். முதலில், சில இடங்களில் எம்.எஸ்.எஃப் மாநில மாநாடு என்று சுவர் விளம்பரம் எழுதினார்கள். அதற்கு பிறகு பார்த்தால் தமிழ்நாட்டின் பெருநகரங்கள், நகரங்கள், பேரூர்கள், சிற்றூர்கள் என்று எங்கு பார்த்தாலும் சுவர் விளம்பரங்கள் தெரிகின்றன! இதனை பார்த்து சிலர் வயிறும் எரிகின்றனர்.

நமக்குந்தான் பெரு வியப்பாக இருக்கிறது. மாநில அளவில் செய்யது பட்டாணி - ஒரு பொறியியல் கல்லூரி மாணவர் - தலைமையில் 12 பேர் அடங்கிய அமைப்புக்குழு தான் அமைத்தோம்.

அவரும், அவரது அணியினரும் எம்.எஸ்.எஃப் அமைப்புப் பணிகளில் முழுவீச்சுடன் ஈடுபட்டு முழுமூச்சுடன் பாடுபட்டு இப்போது எங்கு பார்த்தாலும் எம்.எஸ்.எஃப் என்பதை பார்ப்பவர்களின் கண்களில் படும்படி செய்திருக்கிறார்கள்.

சுவர் விளம்பரத்தில் ஆரம்பித்து ஸ்டிக்கரில் பரவி, டிஜிட்டல் பேனர்களில் ஒளிவீசி இன்றைக்கு தமிழக முஸ்லிம் சமுதாயத் தில் உள்ள அனைவரும் பேசக்கூடிய அளவுக்கு எம்.எஸ்.எஃப் மாநில மாநாட்டுச் செய்தி விளம்பரம் ஆகியிருக்கிறது.

இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது?


எம்.எஸ்.எஃப் தலைமை குழுவுக்கு ஆதரவும், ஒத்துழைப்பும், அறிவுரையும், அறவுரையும் ஒவ்வொரு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிர்வாகிகளும், சமுதாயப் பெரியோரும் சங்கைமிகுந்த உலமாகளும் வழங்கியுள்ளதே காரணமாகும்.

சமுதாயத்தின் சான்றோரும், ஆன்றோரும், பெரியோரும் மனம் மகிழும் அளவுக்கு மாணவர்கள் எழுச்சி பெற்றிருக்கிறார்கள்.

தமிழகம் முழுவதிலும் புதுச்சேரி உள்பட 43 மாவட்டங்கள் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என அமைப்பு விதிகள் கூறுகின்றன.

எம்.எஸ்.எஃப் மாநில மாநாட்டையொட்டி இந்த 43 மாவட்டங்களிலும், மாவட்ட எம்.எஸ்.எஃப். அமைப்பாளர்களை நியமித்து பட்டியலும் தந்திருக்கும் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் பாராட்டுக் குரியவர்கள்.

காலங்காலமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்காக சேவை செய்து வரும் மூத்த தலைவர்கள் சமயம் வரும்போது எப்படி சாதனை புரிவார்கள் என்பதற்கு இந்த மாவட்ட அமைப்பு பட்டியல் ஓர் அத்தாட்சியாகும்.

இதுதான் இன்றைய தேவை! இளைஞர்கள் குறிப்பாக மாணவர்கள் அரவணைப்பு தேடுகிறார்கள். அதனை மூத்தவர்கள் தரும்போது அவர்களுக்கு மத்தியில் புதியதொரு எழுச்சி பிறக்கிறது - இதனால் சமுதாயம் சிறக்கிறது.

ஒவ்வொரு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் தத்தமது மாவட்டங்களிலிருந்து 200, 300, 500 மாணவர்களை மாநாட்டுக்கு அழைத்து வருவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் நடக்கின்றன என தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை தலைமை நிலையத்திற்கு வந்துள்ள தகவல்களை பார்க்கும் போது சென்னை பெரியார் திடல் மாணவர் பேரவை மாநில மாநாட்டுக்கு போதுமா? என்ற ஐயத்தை எழுப்பியிருக்கிறது.

போகிற போக்கைப் பார்த்தால், எம்.எஸ்.எஃப். மாநில மாநாட்டுக்கு இனிமேல் சென்னை தீவுத்திடல்தான் சரியான இடம் எனத் தெரிகிறது. இதை இன்று சமுதாயம் புரிகிறது.

அக்டோபர் 5 சனிக்கிழமையில் எம்.எஸ்.எஃப். மாநாடு வன்முறைக்கு பணியவும் கூடாது!

வன்முறைக்கு துணியவும் கூடாது! - என்று ஒங்கி ஒலிக்கப் போகிறது. இந்த ஓங்கார ஒலிதான் நாட்டில் எங்கும் இனி ஒலிக்கப் போகிறது.

காயிதெ மில்லத் காலத்தில் மாநில பொதுச் செயலாளராக செயல்பட்ட பன்னூலாசிரியர் ஏ.கே. ரிபாயி சாஹிப் அவர்களால் முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் என இந்த எளியேன் அறிவிக்கப்பட்டபோது நான் ஒருவன்தான் எம்.எஸ்.எஃப். உறுப்பினன் என்ற நிலை இருந்தது.

சிந்தனைச்செல்வர் சிராஜுல் மில்லத் காலத்தில் இன்றைய பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் மற்றும் மில்லத் இஸ்மாயில், கவிஞர் ஷேக் மதார், ஏ.எச். முஹம்மது இஸ்மாயில், காரை சஹாபுதீன், ஆடுதுறை ஜமால் இப்றாஹீம், வந்தவாசி அப்துல் காதர் ஷெரீப், கீழக்கரை எஸ்.கே.எஸ். அமீதுர் ரஹ்மான், இப்றாஹீம் மக்கீ, மேட்டுப்பாளையம் யு.எஃப். அப்துல் ஹக்கீம், ஹாங்காங் ஹசன், பள்ளபட்டி யூனுஸ், காயல் ஜரூக், லால்பேட்டை அப்துல் ரஹ்மான், திருச்சி பைஸுர் ரஹ்மான், கடையநல்லூர் ஹபீபுல்லாஹ் போன்ற தம்பிகள் மாணவர் பேரவையில் முன்னணியில் இருந்து ஒவ்வொரு கல்லூரியிலும் எம்.எஸ்.எஃப். அமைப்புப் பணியில் ஈடுபட்டனர். மீலாது விழாக்கள் நடத்தினர். மீலாது கட்டுரைப் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கினர்.

அன்றைக்கு இந்த மாணவர் பேரவையினர் குற்றாலத்தில் மாபெரிய மாநாடு ஏற்பாடு செய்து பனாத்வாலா சாஹிப் மற்றும் கேரளத் தலைவர்களை பங்கேற்கச் செய்து சாதனை புரிந்தனர்.

இன்றைக்கு அந்த மாணவர் பேரவையில் தோன்றிய சகோதரர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் இன்று மாநில பொதுச் செயலாளர் பொறுப்பில் பணியாற்றுகிறார்.

பொதுச் செயலாளர், மாநிலப் பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான், மற்றும் ஹமீதுர் ரஹ்மான், லால்பேட்டை அப்துல் ரஹ்மான், நாகூர் ஆலியா சேக் தாவூது மiடிரக்காயர், கத்தார் கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மது, முகம்மது முஸ்தபா, சிங்கை கவுஸ் முகம்மது, ஆடிட்டர் முகம்மது ஹஸன், குவைத் பாரூக், ஷகீன்ஷா, பாங்காக் வாவு சம்சுதீன், ஹாங்காங் முகம்மது ஹஸன் ஆகியோர் பெரும் தூண்டு சக்தியாக இருந்து இன்றைக்கு செய்யது பட்டாணி தலைமையில் மாநில மாநாடு நடக்கிறது.

மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் எம்.எஸ்.எஃப். பிரதிநிதிகளுக்கு மதிய உணவை அளிக்கும் பொறுப்பை விருதுநகர் ஹோட்டல் அதிபர் இப்ராஹிம்ஷா பெருமன துடன் ஏற்று உற்சாகப்படுத்துகிறார்.

இது சரித்திரம் படைக்கும் சாதனை மாநாடு. மாணவர் எழுச்சிக்கு இது தொடக்கம். இனி ஆண்டுதோறும் நாடு வியக்க எழுச்சி மாநாடு நடக்கும். புதிய சரித்திரம் படைக்கும்.

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

மோடியின் பேச்சு முஸ்லிம்களுக்கு விடப்பட்ட சவால் : பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன்

திருச்சி மாநகர் நத்தர் ஷா தர்கா பகுதி 12 வது வட்ட இ.யூ.முஸ்லிம் லீக் செயலாளர் ஜே.கே.வஜீர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசியதாவது ,

இன்றைக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரளா, தமிழகத்தில் மட்டுமின்றி எல்லா மாநிலங்களிலும் எழுச்சி பெற்ற இயக்கமாக வளர்ந்து கொண்டி ருக்கிறது.

இளைஞர்கள், தொழிலாளி கள், மகளிர், மாணவர் என்று எல்லா தரப்பினர்களும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொள்கையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருகி றார்கள். வரும் அக்டோபர் 5-ம் தேதி சென்னை பெரியார் திடலில் காலையில் மாநில முஸ்லிம் லீகின் பொதுக்குழு கூட்டமும், மாலை 3 மணி முதல் 8 மணி வரை எம்.எஸ். எஃப். - முஸ்லிம் மாணவர் பேரவை மாநில மாநாடு - குற்றாலத்தில் நடந்த மாநாட் டுக்குப் பிறகு -நடக்கிற மாநாடாக ஏற்பாடாகியிருக்கிறது.

தமிழகம் முழுவதிலுமி ருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பங்கேற்கிறார்கள். திருச்சி மாவட் டத்திலிருந்து பன்னூற்றுக் கணக்கில் பங்கேற்க உள்ளார் கள் என அறியும் போது மிகுந்த மகிழ்ச் சியை தருகி றது.

இந்திய முஸ்லிம்களாகிய நாம் நமது உண்மையான அடையாளங்களை பாதுகாப்ப தற்கே, இத்தகைய நிகழ்ச்சிகள் - மாநாடுகளையெல்லாம் நடத் துகிறோம்.

சிறுபான்மையாக உள்ள முஸ்லிம்கள் தங்களின் கலாசார தனித்தன்மையை பாதுகாக்கும் முயற்சியாகவே முதலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகை வலுப்படுத்த வேண்டும் - பலப்படுத்த வேண்டும். முஸ்லிம் லீகை பலப்படுத்துவதோடு தேசிய அளவிலும், மாநில அளவிலும் அரசியலில் முக்கியத்துவம் பெற்று செயல் பட்டுக் கொண்டிருக்கிற பிற முஸ்லிம் இயக்கங்களையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையில் ஒரு குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்ப டையில் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற கருத்து இப்போது பிறந்திருக்கிறது. இத்தகையதொரு ஐக்கி யத்தை உருவாக்கிக் கொண்டு, தேசிய அளவில் உள்ள ஜன நாயக, சமயசார்பற்ற, சமூக நீதிக் கொள்கைகளை நிலை நிறுத்துகிற அரசியல் சக்திக ளுடன் இணைந்து பாடு படுதல் வருங்கால இந்தியா விற்கு வலிமையும், வளமும் சேர்ப்பதாகும் என்னும் எண்ணம் சமுதாய மக்களிடம் பரவலாகி வருகிறது.

வகுப்புக் கலவரங்களை தூண்டும் பா.ஜ.க.
இத்தகைய சிந்தனை ஏற் படுவதற்கு 26-9-2013 அன்று இதே திருச்சியில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திரமோடி அவர்களின் பேசிய கூட்டம் மட்டுமல்ல, தேசத்தின் பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க. கூட்டங்களும் அதில் பேசப்படும் கருத்துக்களும் முக்கிய காரணங்களாக அமைந்திருக்கின்றன.

இந்திய நாடு அதன் அரசியல் சாசனப்படி ஜன நாயக நாடு - சமயசார் பற்ற நாடு - சமூக நீதியை நிலை நிறுத்தும் மக்கள் ஆட்சியில் உள்ள நாடு. இந்த நாட்டை பாரதீய ஜனதா கட்சி இந்து ராஷ்ட்ரம் என்னும் இந்துக்கள் நாடாக்க முயற்சிக்கிறது. இந்தியாவில் வாழும் முஸ்லிம் கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்று அழைக்கப்பட வேண் டும் என்றால் முஸ்லிம்கள் எல் லோரும் தங்களுடைய மூதாதைகள் இந்துக்கள் என்று அறிவிக்க வேண்டும் என்கிறார் கள்.

முஸ்லிம்களின் அடையாள மாக உள்ள முஸ்லிம் தனியார் சட்டம் இருக்கக் கூடாது. எல்லோருக்கும் ஒரேவிதமான சிவில் சட்டம் - பொது சிவில் சட்டம் ஒன்று தான் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

கஷ்மீருக்குள்ள தனி அந்தஸ்து ஒழிக்கப்பட வேண் டும் என்று பிரச்சாரம் செய்கிறார் கள். இவற்றிற்கெல்லாம் மேலாக குஜராத்தில் வகுப்பு கலவ ரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல் லப்பட்டதிலும், அஸ்ஸாமில் 5 லட்சம் முஸ்லிம்களை அகதி முகாம்களில் தங்க வைத்து வேடிக்கை பார்ப்பதிலும், இப் போது உ.பி.மாநிலம் முசாபர் நகர் கலவரத்தில் பல்லா யிரக்கணக்கான முஸ்லிம் களை ஊரை விட்டும் வெளி யேற்றி கொடுமைப் படுத்தி வருவதிலும் பி.ஜே.பி. யை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சிய டைந்து கொண்டிருக்கிறார் கள்.

முஸ்லிம்களை அடையா ளங்களே இல்லாமல் ஆக்க நினைப்பதோடு அவர்களை அழிக்கவும் முடிவு செய்திருப் பதைப் போல தொடர்ச்சியாக கலவரங்கள் தூண்டப்பட்டு வருகின்றன. கலவரத்தில் மாண்டு போன முஸ்லிம்கள், அவர்களின் பார்வையில் நாய்க் குட்டிகளாக தெரிகிறார்கள்.

சுதந்திர இந்தியாவில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகுப்பு கலவரங்கள் நடந்துள்ளன என பத்திரிகைகள் செய்தி தருகின்றன. சென்ற வாரம் டெல்லியில் நடந்த ஒருமைப் பாட்டு கவுன்சில் கூட்டத்தில் 2013 ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் நடந்து வகுப்புக் கலவரங்களின் பட்டியல் வெளி யிடப்பட்டது. அதில் பாதிக்கப் பட்டவர்களில் முஸ்லிம்கள் அதிகம் என்னும் தகவலும் தரப்பட்டிருக்கிறது.

இதேபோலத்தான் 13 ஆயிரம் வகுப்பு கலவரங்களி லும் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள் - சொத்து இழந்த வர்கள் முஸ்லிம்கள் - எல்லா விதமான சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் ஆளான வர்கள் முஸ்லிம்கள். ஆனால், இவ்வளவு காலமும் இவ்வாறாக பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமுதாயம் அமைதி யாகவே இருந்து அரசியல் ரீதியான தீர்வுகளுக்கு குரல் கொடுத்து வருகிறது.

இன்னல்லாஹ் ம அஸ் ஸாபிரீன் - நிச்சயமாக பொறுமையாளர்களுடன் இறைவன் இருக்கிறான் - என்பதில் நம் பிக்கை கொண்டவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் கள்.

தங்களுக்கு தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் கொடு மைகளை பற்றி உலகிலுள்ள 57 முஸ்லிம் நாடுகளுக்கு புகார் மனுக்கள் அனுப்பிய தில்லை. ஐ.நா. சபையின் மனித உரிமை கமிஷனுக்கு பெட்டிஷன் போட்ட தில்லை.

ஆனால், சுதந்திர இந்தியா வில் 1984-ல் திருமதி இந்திரா காந்தி அம்மையாரை ஒரு சீக்கியர் கொன்றார் என்பதற் காக 2 ஆயிரத்திற் கும் மேற் பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட் டனர். அந்த ஒரே ஒரு கலவரத் திற்காக நிவாரணங்கள் தரப்பட்டன. சீக்கியரான மன் மோகன்சிங் இருமுறை நாட்டின் பிரதமராக ஆக்கப்பட்டிருக் கிறார். பலரும் குற்றவாளிகள் என தண்டிக்கப்பட்டிருக்கி றார்கள். இவை மூலம் சீக்கிய சமுதாயம் இன்னமும் திருப் தியடையவில்லை. சர்வதேச நீதி மன்றத்தில் வழக்கு தொடுப்போம் என்கிறார்கள். அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக் கிறார்கள்.

திருமதி சோனியாகாந்தி மருத்துவம் செய்ய அமெ ரிக்கா சென்ற போது அவரிடம் கோர்ட் சம்மன் தரப்படுகிறது. இப்போது ஐ.நா. சபை கூட்டத் தில் பங்கேற்கச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக் கும் கோர்ட் சம்மன் காத்தி ருக்கிறது.

சீக்கியருக்கு எதிராக நடந்த ஒரே ஒரு கலவரத்திற்கு நியாயம் கோரி சர்வதேச அளவில் சீக்கிய சமுதாயம் வழக்கு தொடுக்கிறது. ஆனால், 13 ஆயிரத்திற் கும் மேற்பட்ட வகுப்பு கலவ ரங்களால் பாதிக்கப்பட்டும், இந்திய முஸ்லிம் சமுதாயம் அமைதி வழியில் - அறவழி யில் - அரசியல் ரீதியில் - நாட்டுக்கு உள்ளேயே நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக் கையில் வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள்.

இதைப்பற்றி நாட்டிலுள்ள நல்லவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்ற வேண்டு கோளைத்தான்நாம் முன் வைக்கிறோம்.

நாட்டுப் பிரிவினையின் போது காயிதெ மில்லத் முஹம் மது இஸ்மாயில் சாஹிப் அவர் கள் கராச்சியில் பாகிஸ்தான் பிரதமர் நவாப் லியாகத் அலிகான் அவர்களிடம் விடை பெற்றார். அப்போது லியாகத் அலிகான் சொன்னார்:

இந்தியாவில் முஸ்லிம்க ளுக்கு எதிராக இந்துக்கள் செயல்பட்டால் எங்களின் உதவிகளை நீங்கள் உடனே பெற்றுக் கொள்ளலாம். என்றார்.

அதற்கு காயிதெ மில்லத் சொன்ன பதில் இதுதான்:


`நவாப் அவர்களே! பாகிஸ் தானில் உள்ள சிறுபான்மை மக்களாகிய இந்துக்களை பாதுகாப்பாக வைத்திருப்பது உங்கள் கடமையாகும். இந்தியா எங்கள் நாடு. அதில் முஸ்லிம் களுக்கு எதிராக யார் எதை செய்தாலும் தடுக்கவும், எங்க ளைக் காப்பாற்றி கொள்ளவும் எங்களுக்கு அல்லாஹ் உதவி புரிவான். அதைப் பற்றிய கவலை உங்களுக்குத் தேவை யில்லை’’ என்றார்கள்.

அதனால்தான் காயிதெமில்லத் அவர்களை ஜிந்தா வலியுல்லாஹ் என்று சமுதாயம் போற்றியது.

அல்லாஹ்வின் பேரருள் கொண்டு இந்திய முஸ்லிம்க ளாகிய நாம் நமது அடையாளங் களை பாதுகாப்போம் - நமது கலாசார தனித்தன்மையை நிலை நிறுத்துவோம்.

இதற்கு உகந்த ஒரே ஒரு வழி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எனும் இந்த பேரியக்கத்தை கட்டிக் காப்பதுதான். இந்தியா வின் பெருமையை உலக அரங் கில் உயர்த்தவும், இந்திய முஸ்லிம்களின் தனித்தன் மையை பாதுகாக்கவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செல்லும் பாதைதான் என்றும் வெல்லும் பாதை. -இதை வரலாறு நிச்சய மாக சொல்லும்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார்.


தமிழக அரசியலில் திடீர் திருப்பங்கள்!

தமிழக அரசியலில் திடீர் திருப்பங்கள் ஏற்படுவது சாதாரண நிலை ,அதே போல் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலை மையமாக வைத்து திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு வருவதாக கட்சிகளின் மேலிடத்தகவல்கள் கூறுகின்றன .

அதிமுக தலைமையில் வாசன் காங்கிரஸ் அதோடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ,இடதுசாரி கட்சிகள் ,விடுதலை சிறுத்தைகள் என்று ஒரு அணி உருவாகி வருகிறது .

திமுக தலைமையில் பாஜக ,தேமுதிக , பாமக ,மதிமுக என்று மற்றொரு அணி உருவாகி வருகிறது .

அதிமுக கதவை தட்டும் சில கட்சிகளை அதிமுக நீங்கள் துரோகம் செய்தவர்கள் உங்களுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்று கதவை சாத்தி விட்டது .அப்படி கதவு சாத்தப்பட்ட கட்சிகளை இணைத்துக் கொண்டு காங்கிரஸ் களம் காண நேரிடும் நிலை உருவாகிவருகிறது .

மேற்கண்ட  விசயங்களுக்கான சத்திய கூறுகள் அதிகம் என்றும் , அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டதாகவும் அரசியல் கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள் உறுதி பட கூறுகிறார்கள் .

புதன், 25 செப்டம்பர், 2013

உலக பல்கலைக்கழகங்களுக்கு நிகராக இந்திய பல்கலைக்கழகங்கள் தரம் உயரவில்லை: ஜனாதிபதி பிரணாப் வேதனை

புதுவை பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி பேசியதாவது:–

மாணவர்கள் பட்டங்களை பெற்று தங்கள் வாழ்க்கை பயணத்தை தொடங்கி உள்ளீர்கள். இனிமேல் மாணவர்கள் தங்களுடைய கல்வியை வாழ்க்கையில் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். மாணவர்கள் அர்ப்பணிப்பையும், முயற்சியையும் வாழ்க்கை பயணத்துக்கு துணையாக கொண்டால் சரியான பாதைக்கு செல்ல முடியும்.

மாணவர்கள் தங்கள் பெற்ற கல்வியை நாட்டின் வளர்ச்சிக்கு கொண்டு செல்ல உதவ வேண்டும். கட்டாய கல்வி உரிமை சட்டத்தை தற்போது அமுல்படுத்தி உள்ளோம். கட்டாய கல்வி தரமான கல்வியாக இருக்க வேண்டும். நான் பொதுச்சேவைக்கு வருவதற்கு முன்பு ஆசிரியராக பணிபுரிந்து உள்ளேன். அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கும்போது மனதில் சந்தேகமும், திருப்தியும் ஏற்படும். அதனை நானும் பெற்றுள்ளேன்.

மாணவர்கள் இங்கு கல்வி கற்றதோடு நின்று விடாமல் ஒவ்வொரு நாளும் அறிவை மேம்படுத்தி கொள்ள வேண்டும். 6–ம் நூற்றாண்டில் இந்தியாவில் நாளந்தா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட போது பிற உலக நாடுகளுடன் நாம் கல்வியில் போட்டியிட்டோம். ஆனால் இன்று நாம் பல வசதிகளை பெற்றிருந்தும் உலக அளவில் தரமான 200 பல்கலைக்கழகங்களில் இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பெற முடியவில்லை. இது எனக்கு வேதனையை அளிக்கிறது. புதிராகவும் உள்ளது.

12–வது ஐந்தாண்டு திட்டத்தில் கல்விக்கென்று அதிக நிதியை ஒதுக்கி உள்ளோம். சமூகத்தில் அறிவியல், தொழில் நுட்பமே ஆதிக்கம் செலுத்துகிறது. எனவே ஆராய்ச்சி தரத்தை உயர்த்த வேண்டும். புதிய கண்டு பிடிப்புகளை தினசரி வாழ்க்கைக்கு உதவுவதாக இருக்க வேண்டும். ஆராய்ச்சி சாலைகளை கிராமப்புறங்களிலும் அமைக்க வேண்டும்.

மாணவர்கள் தாங்கள் பெற்ற கல்வியை கடமையை உணர்த்து நாட்டின் மேம்பாட்டுக்காக உதவ வேண்டும்.

இவ்வாறு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி பேசினார்.

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

இந்திய முஸ்லிம்களே! நமது தனித்தன்மையை காக்க தயாராகுங்கள் ! ------- பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன்

சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜனாபா பத்ரு சயீது அவர்கள் ஒரு பொது நல வழக்குத் தொடுத்திருக்கிறார் என்பதும், அதில் அவர் காஜிகளுக்கு மார்க்க ரீதியாக சான்றிதழ் வழங்குவதற்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்றும், தலாக் என்னும் விவாகரத்து செய்வது, கோர்ட் மூலம் தான் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார் என்பதும் எல்லோரும் அறிந்திருக்கும் விஷயமாகும்.

ஜனபா பத்ரு சயீது அவர்களைப் பின்பற்றி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஜனாபா சுல்தானா ரிஸ்வானா பானு (வயது 29) ஒரு பொது நல வழக்கை தொடுத்திருக்கிறார்.

தலாக் என்னும் மணமுறிவு ஏற்பட்டுள்ளதற்கு காஜிகள் சான்றிதழ் தருவதற்குத் தடை விதிக்கக்கோரியும் மனுவில் கூறியி ருக்கிறார்.

இந்திய முஸ்லிம் பெண்களின் கணவர்கள் தன்னிச்சையாக தலாக் சொல்லி விடுகிறார்கள். மனைவிகளுக்கு தெரியாமலேயே தலாக் கொடுக்கிறார்கள். இத்தகைய பாதகமான ஆண்களின் போக்குகளை காஜிகள் தலாக் சான்றிதழ் அளித்து ஊக்கு விக்கிறார்கள்.

காஜிகளுக்குஇவ்வாறு தலாக் பற்றிய சான்றிதழ் கொடுப்பதற்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்றும் அந்த மாது, தனது வழக்கில் கூறியிருக்கிறார். இதனை டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஆங்கில நாளிதழ்கள்  செய்தி பிரசுரித்துள்ளன.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுபோன்ற வழக்கு தொடரப் பட்டுள்ளதால், மதுரை கிளை, இந்த வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய (24.9.13) தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் ஷரீயத் கோர்ட்டுகளை எதிர்த்து போடப்பட்டுள்ள பொது நல வழக்கை உச்சநீதிமன்றம் மீண்டும் விசாரணைக்கு எடுத்திருக்கிறது என்னும் செய்தி வெளியாகியிருக்கிறது. அதில் பிரசுரமாகியுள்ள செய்தியின் விவரமாவது:

நான்கு மாதங்களுக்கு முன்பு (ஓய்வு பெற்ற) உச்சநீதிபதி அல்தமஸ் கபீர் தலைமையிலான பெஞ்சின் முன்பு ஷரீயத் கோர்ட்டுகள் பத்வாகள் அளித்து வருவதன் மூலம் தேசத்தில் உள்ள நீதித்துறைக்கு பகரமானதொரு நீதித்துறையாக ஷரீஅத் கோர்ட்டுகள் இருக்கின்றன. ஆகவே, அவற்றைத் தடை செய்ய வேண்டும் என்று பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது. அதை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த வழக்கைத் தொடுத்திருந்த வக்கீல் விஸ்வலோசன் மதன், நீதிபதி சி.கே.பிரசாத் தலைமையிலான பெஞ்சின் முன்பு, செப்,11 ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கு மீண்டும் விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று கோரி இருந்தார். இந்த வழக்கு மே மாதம் 10 ம் தேதி விசாரணைக்கு வந்த போது, தனது தாயார் உடல்நலமில்லாமல் ஆகிவிட்டபடியால் தான் ஆஜராக முடியவில்லை என்று கூறி தனது வழக்கை ஏற்கும்படி கோரினார்.

அட்வகேட் மதன், தனது வாதத்தின் போது ஷரீஅத் கோர்ட் டுகள், தேசத்தில் உள்ள கோர்ட்டுகளுக்கு சமமான பகரமான கோர்ட்டுகள் போல் செயல்படுகின்றன. முஸ்லிம்களின் சமூக, மத விவகாரங்கள் பற்றி தீர்ப்புகள் கூறுகின்றன. இது, இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானதாகும் என்று கூறினார்.

மத்திய அரகின் சார்பில், அட்வகேட் மதன் கூறிய வாதங்க ளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ஷரீஅத் கோர்ட்டுகள் பற்றிய மத்திய அரசின் அணுகுமுறைகளை வெளிப்படுத்தும் படி இந்த வழக்கின் மூலம் கட்டாயப்படுத்துவதாக இருக்கிறது என்று கூறி வழக்கை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என்று மத்திய அரசின் சார் பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டுள்ள நீதிபதி சி.கே.பிரசாத் தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்சு, வழக்கை மீண்டும் விசார ணைக்கு ஏற்று, வரும் நவ.11 ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தி ருக்கிறது.

இந்தச் செய்திதான் ஆங்கில நாளிதழில் இன்றைக்கு வெளிவந்திருக்கிறது.

சமுதாய மக்களுக்கு ஓர் எச்சரிக்கை! 

 இந்திய முஸ்லிம்கள், தங்களை முஸ்லிம்கள் என்று அடையாளப்படுத்துவதற்கு உரிய ஆதாரமும் அத்தாட்சியும் அவர்கள் பின்பற்றி வரும் ஷரீஅத் சட்டத்தின் குடும்பச் சட்டப் பகுதி மட்டும் தான்.

அந்த குடும்பச் சட்டத்தில் கூட ஷரீஅத் படி நடக்கும் வழி அடைக் கப்படுமானால், முஸ்லிம்கள் என்று பெயர் மட்டும் இருக்கும் ஆனால் உண்மையில் முஸ்லிம்களாக இருக்க முடியாது.

தேசம் முழுவதிலும் ஷரீஅத் சட்டத்திற்கு எதிரான அரசியல் ரீதியாகவும், நீதிமன்றத்தின் மூலமும், சட்டமன்றத்தின் மூலமும், பாராளுமன்றத்தின் மூலமும் வருவதற்கான சூழ்நிலைகள் இப்பொ ழுது பெருகி வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில், இந்திய முஸ்லிம் சமுதாயம் தன்னை ஒருமுகப்படுத்தி, தனது மார்க்கத் தனித் தன்மையை நிலைநிறுத்தியாக வேண்டும். இதற்கு எந்தத்தியாகமும் ஒரு பொருட்டாகாது.

திங்கள், 23 செப்டம்பர், 2013

நரேந்திர மோடி திருச்சி வருகையையொட்டி முஸ்லிம்களை கொடுமை படுத்தப்படுவதை வேடிக்கை பார்க்க மாட்டோம் : தமிழக காவல்துறைக்கு பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் எச்சரிக்கை

சேலத்தில் செப்டம்பர் 22 மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்  பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் கூறியதாவது ,

இலங்கை வடக்கு மாகாண முதல்வருக்கு வாழ்த்து
இலங்கையில் தேர்தல் நடைபெற்று வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்று சி.வி. விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

அவருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

காஷ்மீரில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடை பெற்று அங்கு ஒரு மக்களாட்சி அமைக்கப் பட்டுள்ளதை போல் இலங்கையின் வடக்கு மாகாணத்திலும் ஜனநாயக ஆட்சி அமைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒரு நல்ல அறிகுறி.

ராஜீவ்காந்தி-ஜெயவர்த் தனா ஒப்பந்தத்தின் அடிப்படை யில் உறுதியாக இருந்து இத்தேர்தல் நடத்தப்பட்டுள் ளது. ஒன்று மட்டும் நிச்சயம் இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடப்பதுதான் இலங்கைக்கு நல்லது. 13ஏ திருத்த சட்டத்தின்படி நடந்தால்தான் இலங்கைக்கு விடிவு காலம் இதை அதிபர் ராஜபக்சே உணர வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்.

மோடி வருகை: முஸ்லிம்கள் மீது அடக்குமுறை
நரேந்திர மோடி வரும் 26ம் தேதி திருச்சி வருகிறார். அவரது வருகையையொட்டி பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்தைச்சுற்றியுள்ள வட்டாரங்களிலுள்ள முஸ்லிம் களை போலீசார் அச்சுறுத்தி கொடுமைப்படுத்தி வருகிறார் கள்.

தமிழ்நாட்டில் காவல் துறையினரின் இந்த நடவடிக்கை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் களை தனிமைப்படுத்தி அச் சுறுத்துவது என்பது ஜனநாயக நாட்டில் ஏற்றுக் கொள்ள முடியாது. இதை தமிழக முதல்வரின் கவனத் திற்கு கொண்டு வருகிறோம்.

திருச்சியில் முஸ்லிம் வீடுகளில் சோதனை யிடுவதும், விவரங்களை சேகரிப்பதும் ஜனநாயக நாட்டில் கேள்வி படாத விஷயங்கள்.

ஏழைகளாகவும், கூலித்தொழிலாளர்களாகவும் உள்ள முஸ்லிம்களை ஒரு பொது கூட்டத்தின் பெயரால் வரம்பு மீறி காவல்துறை நசுக்குகிறது என்றால் அதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதை நாட்டு மக்களுக்கு கொண்டு செல்வோம்.

ஐதராபாத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் கூட நிரபராதிகளான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு 7,8 ஆண்டுகள் சிறையில் அடைக் கப்பட்டு உண்மை யான குற்றவாளிகள் கைது செய்யப் பட்டதற்குப்பின் முஸ்லிம் இளைஞர்கள் அப்பாவிகள் என விடுவிக்கப்பட்டனர். அவர் களுக்கு ஆந்திர அரசு நஷ்ட ஈடு அறிவித்தது.

இதை எதிர்த்து சிலர் நீதிமன்றம் சென்றார்கள். இப்படி நஷ்ட ஈடு வழங்கியது செல்லாது என அறிவித்த நீதிமன்றம் அந்த தீர்ப்பை திரும்பப் பெற்றுக் கொண்டது. இது எந்த தமிழ் பத்திரிகை யிலும் வரவில்லை. தி ஹிந்து ஆங்கில நாளேடு மட்டுமே இது பற்றி தலையங்கம் எழுதியது. அதை மணிச் சுடரில் நாங்கள் வெளியிட்டி ருந்தோம்.

தமிழ்நாட்டில் இப்படி நிரபராதிகளாக விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டதில்லை. அது வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

முஸ்லிம்களின் தியாகம்
இந்த நாட்டிற்காக முஸ்லிம் கள் எவ்வளவோ தியாகங்கள் செய்திருக்கிறார்கள். தேச எல்லையை காப்பாற்ற லட்சக் கணக்கானவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளார் கள். சுதந்திரத்திற்காக உடல், பொருள் தியாகம் செய்த முஸ்லிம்கள் கணக்கில் அடங்காது.

ஆனாலும் எங்களை ஏன் பகைமை உணர்வோடு பார்க்கிறார்கள். குஜராத்தில் கலவரம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் உயிரிழந்தார்கள். ஆனால் இறந்த முஸ்லிம் களை காரில் அடிப்பட்ட நாய் குட்டியோடுதான் ஒப்பிட்டார் நரேந்திர மோடி.

அப்படிப்பட்ட ஒருவர் நாட்டில் பிரதரானால் நாடு என்ன ஆவது. ஒரு கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பொது கூட்டம் ஒன்றில் பேச வரும்போதே முஸ்லிம்களுக்கு இவ்வளவு பெரிய சோதனை கள் என்றால் தப்பித் தவறி இவர் பிரதமராகி விட்டால் எவ்வளவு பெரிய கொடுமை கள் நடக்கும் என்பதை நாட்டு மக்கள் எண்ணி பார்க்க வேண்டும்.

65 ஆண்டுகளில் 13 ஆயிரம் வகுப்பு கலவரங்கள்
நாடு விடுதலையடைந்த இந்த 65 ஆண்டு காலத்தில் 13 ஆயிரத்திற்கு மேற்பட்ட வகுப்பு கலவரங்கள் நடை பெற்றுள்ளன. பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள் பலியாகியுள்ளனர். அவர் களின் பலநூறு கோடி ரூபாய் சொத்துக்கள் சூரையாடப் பட்டுள்ளன.

இதை எந்த ஒரு முஸ்லிமும் ஐ.நா. சபைக்கு எடுத்து செல்லவில்லை. உலகில் 57 முஸ்லிம் நாடுகள் இருக்கின்றன. கலவரத்தால் பாதிக்கப்பட்ட இந்திய முஸ்லிம்களுக்கு உதவுங்கள் என்று நாங்கள் கோரிக்கை மனு தூக்கி அலையவில்லை.

இந்தியாவில் சீக்கியர் களுக்கு எதிராக இந்திரா காந்தி கொல்லப்பட்ட சமயத் தில் ஒரே ஒரு கலவரம்தான் நடந்தது. அதை சர்வதேச நீதிமன்றத்திற்கு சீக்கியர்கள் எடுத்து சென்றுள்ளனர்.

திருமதி சோனியா காந்தி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற போது அவரிடத்தில் இதற்கான சம்மனை கொடுப் பதற்கு முயற்சித்திருக் கிறார்கள்.

சீக்கிய சமூகத்தை சேர்ந்த மன்மோகன்சிங் 2 முறை பிரதமராக்கப்பட்டு சீக்கியர் களுக்கு எதிரான கலவரத் திற்கு மன்னிப்பு கேட்டதற்கு பின்பும் சீக்கியர்கள் விடுவ தாக இல்லை.

ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து ஐ.நா. சபைக்கு எடுத்து சென்றார்கள். இந்திய முஸ்லிம்கள் இப்படியெல்லாம் எதாவது செய்தார்களா? அப்படி இருந்தும் ஏன் முஸ்லிம்கள் மீது மட்டும் துவேஷம் கொள்கிறார்கள்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதை தானே நாங்கள் வலியுறுத்துகிறோம். இதைத் தவிர இந்திய முஸ்லிம்கள் என்ன பாவத்தை செய்து விட்டார்கள்?

இவ்வாறு தலைவர் பேராசிரியர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.