Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 3 டிசம்பர், 2012

தமிழகத்தில் திறக்கபடாமல் முடங்கிக்கிடக்கும் ஐ.டி.பார்க் !


தமிழகத்தில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஐ.டி.,நிறுவனங்கள் தொழில் துவங்க, அரசின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. ஒரு லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு முடங்கியுள்ளது.

தமிழகத்தில், 48 சிறப்பு பொருளாதார மண்டலங்களில், ஐ.டி.,க்கான சிறப்பு பொருளாதார மண்டலங்கள் 17. இவற்றில் தொழில் துவங்க, சர்வதேச நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் துவங்கவில்லை. இன்டெல், விப்ரோ போன்ற நிறுவனங்களுக்கு சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இடம் ஒதுக்கி, 4 ஆண்டுகள் ஆகி, கட்டடம் கட்டி ஓராண்டாகி விட்டது. ஆனால் தொழில் துவங்காமல், முடங்கி கிடக்கின்றன.

இதற்கு அரசு துறைகளில், அனுமதியை பெறுவதில் உள்ள முறையே காரணம். ஐ.டி., நிறுவனங்கள் செயல்படுவதற்கான அனுமதி, தொழில் துறை மூலம் வழங்கப்படுகிறது. இங்கு காலதாமதம் ஆவதால், "எல்காட்' மூலம் வழங்க வேண்டும் என, ஐ.டி., கூட்டமைப்பினர் கோரி வருகின்றனர்.

ஐ.டி.,நிறுவனம் தொழில் துவங்க, உள்ளாட்சி, சுற்றுச்சூழல் உட்பட பல்வேறு அரசுத்துறைகளில், 40 அனுமதி பெற வேண்டியுள்ளது. பிற மாநிலங்களில் இல்லாத (10 சதவீத இடத்தை திறந்தவெளியாக ஒதுக்க வலியுறுத்தும்) நடைமுறையை தமிழகத்தில் பின்பற்ற வேண்டாம் என மத்திய வர்த்தகத்துறை செயலர், தலைமைச்செயலருக்கு கடிதம் எழுதினார். இதற்கு ஒப்புதல் வழங்கியும், வீட்டுவசதித்துறையின் ஒரு அதிகாரியால் இதற்கான அரசாணை வெளியிடப்படவில்லை.

தொழில் சட்டத்தில் சில திருத்தங்களை செய்தாலே, ஐ.டி.,நிறுவனங்களுக்கான அனுமதியை ஒற்றைச்சாளர முறையில் பெறலாம். மதுரை ஐ.டி.,பார்க் கட்டி முடிக்கப்பட்டு, ஓராண்டிற்கு மேலாகியும் செயல்படவில்லை. இங்கு மின்வாரியத்திற்கு மட்டும் மாதம் ரூ.17 லட்சம் கட்ட வேண்டியுள்ளது.

நெல்லை ஐ.டி.,பார்க் பராமரிப்பின்றி உள்ளது. தொழில் துறையில் முன்னேற "விஷன் 2023' என முதல்வர் அறிவிக்கிறார். ஆனால் அதிகாரிகளின் செயல்பாடுகளால், நிறுவனங்களை துவக்க இயலாமல், ஒரு லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு முடங்கி கிடக்கிறது.

சிறுபான்மையோர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சிக்கல் !


பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய அரசாணையால், தமிழகத்தில் உள்ள, சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத, அரசு உதவிபெறும் பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில், 2011 நவ., 15ம் தேதி, புதிய அரசாணை வெளியிடப்பட்டது. அதில், "தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்.சி.டி.இ.,), ஆசிரியர் நியமனத்துக்கு உரிய கல்வி தகுதியுடன், ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெறவேண்டும் என்பதும், குறைந்தபட்ச தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

இதனால், 2010 ஆக., 23க்கு பின், சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற உதவிபெறும் பள்ளிகளுக்கு, தகுதியுடைய பணியிடங்களை நிரப்ப அனுமதி அளிக்கும் போது, இதர பிற நிபந்தனைகளோடு, "ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப் பெற்றவரே நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி அளிக்கலாம்" என, கூறப்பட்டு உள்ளது.

இது, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசாணையின் நகல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

மேலும், அனைத்து அரசு உதவிபெறும் சிறுபான்மை, சிறுபான்மையற்ற மற்றும் சுயநிதி பள்ளிகளுக்கு அரசாணை நகலை அனுப்பி, ஒப்புதல் பெற்று, கோப்பில் வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த அரசாணை மூலம், தமிழகத்தில் உள்ள, சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத, அரசு உதவிபெறும் பள்ளிகளில், புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த அரசாணையினால் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையினால், தமிழகத்தில் உள்ள, "சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத, அரசு உதவிபெறும் பணி நியமனம் பெறுபவர்கள், ஐந்தாண்டுகளுக்குள் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்" என்ற தமிழக அரசின் முந்தைய அரசாணையின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.

அரசாணை தெரிவித்துள்ளபடி, 2010 ஆக., 23க்கு பின் என, குறிப்பிடப்பட்டு உள்ளதால், ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிக்கப்பட்டதே, தற்போதைய, அ.தி.மு.க., அரசில் தான். தேர்வு நடத்தப்பட்டதோ, 2012 அக்., 14ம் தேதி தான். இதற்கிடையே, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட துவக்கக் கல்வி அலுவலரின் ஒப்புதல் பெற்று, தமிழகம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 2,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஏராளமானோர் பணியில் உள்ளனர். இவர்களுக்கு, மாதந்தோறும் அரசு சம்பளம் வழங்கி வரும் நிலையில், புது அரசாணையால், இனிமேல் அவர்களுக்கு சம்பளம் வழங்கபடுமா? என்ற குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

வியாபாரம் ஆகும் கல்வி : ப.சிதம்பரம் வேதனை


நாட்டில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் வெறும் கல்வி கடைகளாகவே உள்ளதாக குற்றம்சாட்டி உள்ள மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், மாணவர்கள் இந்தியாவை முன்னேற்ற பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.மொகாலியில் இந்திய தொழில் பள்ளியின் துவக்க விழாவில் கலந்து கொண்ட சிதம்பரம் இவ்வாறு தெரிவித்துள்ளார். பல்கலைகழகங்களின் தரமும், உள்கட்டுமான வசதிகளும், பழமை பேசும் பாட திட்டங்களைக் கொண்டதாகவும் இருப்பதாக சிதம்பரம் தெரிவித்துள்ளார். கல்வி நிறுவனங்கள் குறித்து சிதம்பரம் விமர்சித்துள்ளது கல்வியாளர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

சிதம்பரம் பேச்சு:
பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் தரம் குறைவான உள்கட்டமைக்கள், மோசமான அறிவியல் மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் மற்றும் போதிய பயிற்சி இல்லாத ஆசிரியர்கள் ஆகியவற்றை கொண்டதாக உள்ளது என சிதம்பரம் தெரிவித்து உள்ளார். பஞ்சாப்பில் 8 பல்கலைக்கழகங்கள் மற்றும் 17 கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 18 பல்கலைக்கழகங்களுக்கு பதிலாக 8 பல்கலைக்கழகங்களே உள்ளன எனவும், வரும் காலங்களில் அவற்றின் கல்வி கட்டமைப்புக்களை உயர்த்துவது அத்தியாவசியமாகிறது எனவும் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு வேண்டுகோள்:
மாணவர்கள் தங்களின் படிப்பபை முடித்த பிறகு வளர்ந்த நாடுகளில் பணிபுரிய ஆர்வம் கொள்ள வேண்டும்; அது போன்ற வெளிநாட்டு வாய்ப்புக்களை பெற மாணவர்கள் முயற்சி மேற்‌கொள்ள வேண்டும்; மாணவர்களின் தங்களின் வேலை திறனை வளர்த்து கொள்ள வேண்டும்; குடும்பத்தை முன்னேற்ற வேண்டும்; பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற வேண்டும் ; அதற்கு பிறகு இந்தியாவிற்கு திரும்பி வந்து இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். இவ்வாறு சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் கல்வி தரம் குறித்த பேச்சை தொடர்ந்து விழாவில் பேசிய பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பண்டல், நேஷனல் ஃபுட் பயோ-டெக்னாலஜி மற்றும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் நேனோ டெக்னாலஜி ஆகிய இரு கல்வி நிறுவனங்களும் ஐஎஸ்பி வளாகத்தில் விரைவில் துவங்க உள்ளதாக அறிவித்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய தேசிய நிர்வாகிகள் தேர்வு !


இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர்  இ. அகமது மீண்டும் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தற்போது பதவி வகிக்கும் பேராசிரியர் கே.எம்.காதர் முகைதீன் தேசிய பொதுச் செயலாளராகவும், கேரள மாநில தொழில் துறை மந்திரி பி.என்.குஞ்சலிக்குட்டி தேசிய பொருளாராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த இக்பால் அகமது எம்.பி., கர்நாடகாவை  சேர்ந்த தஸ்தகீர் ஆகா ஆகியோர் துணைத் தலைவர்களாவும், இ.டி.முகமது பஷீர் எம்.பி ,அப்துஸ்ஸமது சமதானி எம்.எல்.ஏ. (கேரளா), குர்ரம் அனிஸ் உமர் (டெல்லி), நயீம் அக்தர் (பீகார்), ஷகீன்ஷா ஜகாங்கிர் (மேற்கு வங்காளம்) ஆகியோர் புதிய செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஷமீம் சாதிக் (மகாராஷ்டிரா), மதீன் கான் (உ.பி.), சிராஜ் இப்ராகீம் சேட் (கர்நாடகம்), அப்துல் பாசித் (தமிழ்நாடு) சர்புதீன் அன்சாரி (ராஜஸ்தான்) ஆகியோர் உதவி செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நன்றி :மாலைமலர்

சனி, 1 டிசம்பர், 2012

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் கூட்டம்

கேரளா மாநிலம் கோழிக்கோடில் இரண்டு நாள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் கூட்டம் நடக்கின்றது ;இன்று (டிச - 1 ) முதல் நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் தேசியத் தலைவர் இ.அஹமது சாஹிபு தலைமையில் நடை பெற்றது .

தொடரும் இஸ்ரேலின் அத்துமீறிய அடாவடி .................!


ஐ.நா., சபையில் சமீபத்தில் , பலஸ்தீனை அங்கீகரித்து கொண்டு வரப்பட்ட  தீர்மானம்  193 நாடுகள் ஆதரவுடன் நிறைவேறியது. மசோதாவுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 9 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அமைச்சரவையை நேற்று கூட்டி இது தொடர்பாக விவாதித்தார். அப்போது, பாலஸ்தீனத்திற்கு சொந்தமான,  மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் பகுதிகளில் புதிய குடியிருப்புகளை கட்டுவது என முடிவெடுக்கப்பட்டது. அப்பகுதியில் யூதர்களை பெருமளவில் வசிக்க வைப்பதற்காக இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இஸ்ரேலின் இந்த முயற்சிக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் விக்டோரியா நூலண்ட், இஸ்ரேலின் இந்த நடவடிக்கை வருங்காலத்தில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைக்கும், சுமூக முடிவுக்கு எதிரானதாகும் என்று தெரிவித்துள்ளார்.

அந்தரத்தில் மிதக்கும் கூண்டு படுக்கை


சுற்றுலா பயணிகளை ஈர்க்க கடற்கரை பகுதியில் குடில்கள் மற்றும் மரத்தின் மீது வீடுகள் அமைப்பது போன்ற யுக்திகள் கையாளப்படுகிறது. பிரான்சு நாட்டை சேர்ந்த பெர்னி டூ பய்ராட் என்பவர் வித்தியாசமான கூண்டு படுக்கையை உருவாக்கி இருக்கிறார். இது பார்வைக்கு பெரிய பட்டுப்புழு கூடு அல்லது நெருப்பு கோழியின் முட்டை போல காட்சி தருகிறது.

அலுமினிய கம்பிகள், கயிறு ஆகியவற்றை கொண்டு தயாரித்து மரங்களில் கட்டி அந்தரத்தில் மிதக்க விட்டுள்ளார். இந்த கூண்டிற்குள் படுக்கை மெத்தை, தலையணைகள் இருக்கும். இளம் காதல் ஜோடி அல்லது ஒரு குழந்தையுடன் தம்பதி தங்கியிருக்கவும், படுத்து ஓய்வு எடுக்கவும் வசதிகள் இருக்கிறது.

இதை அமைக்க ரூ.2 லட்சம் முதல் ரூ.7 லட்சம் செலவாகும் என கூறும் பெர்னி, வரும் காலத்தில் சூரிய ஒளி, காற்று ஆகியவை மூலம் மின்சாரத்தை தயாரித்து ஏ.சி. வசதியை ஏற்படுத்த இருக்கிறேன் என்றும் கூறுகிறார்.