Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 25 நவம்பர், 2012

ராம் ஜெத்மலானி சஸ்பெண்ட்


 கட்சி மேலிடத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதை அடுத்து, பா.ஜ., எம்.பி.,யான, ராம் ஜெத்மலானி, கட்சியிலிருந்து நேற்று "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

பா.ஜ., சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவரும், மூத்த சட்ட நிபுணருமான, ராம் ஜெத்மலானி, சமீபகாலமாக, பா.ஜ., மேலிடத்துக்கு எதிராக, குரல் கொடுத்து வந்தார். "ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய, நிதின் கட்காரி, பா.ஜ., தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ரஞ்சித் சின்கா, சி.பி.ஐ., இயக்குனராக நியமிக்கப்பட்டதை, பா.ஜ., தலைவர்கள் எதிர்த்தது கண்டனத்துக்குரியது' என, அவர் கருத்து தெரிவித்தார்.

இதனால், பா.ஜ., தலைவர்கள், ராம் ஜெத்மலானி மீது, கடும் அதிருப்தி அடைந்தனர். அவர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தனர். "முடிந்தால், என் மீது நடவடிக்கை எடுக்கட்டும்' என, பா.ஜ., மேலிடத்துக்கு, அவர், சவால் விடுத்திருந்தார்.இந்நிலையில், கட்சி கட்டுப்பாட்டை மீறி, கருத்து தெரிவித்ததற்காக, கட்சியிலிருந்து, ராம் ஜெத்மலானி சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும், இந்த நடவடிக்கை, உடனடியாக அமலுக்கு வருவதாகவும், பா.ஜ., சார்பில், நேற்று அறிவிக்கப்பட்டது.ராம் ஜெத்மலானி, காங்கிரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாகவும், பா.ஜ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. முன்னாள் அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ் மரணம்


தி.மு.க. முன்னாள் அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ். இவர் சில மாதங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு திருவான்மியூரில் உள்ள மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு சிறுநீரக கோளாறு இருந்தது. அவரது உடல்நிலை முன்னேற்றம் ஏற்படாததால் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். என்றாலும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இன்று காலை உடல்நிலை மேலும் மோசம் அடைந்தது. இந்நிலையில் மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் தி.மு.க. ஆட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தார்.

சனி, 24 நவம்பர், 2012

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


குற்றாலம் பகுதிகளில் நேற்று விடிய விடிய பெய்த தொடர்மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை வித்திக்கப்பட்டது.குற்றாலம் பகுதியில் அவ்வப்போது பெய்த மழையால் அருவிகளில் சுமாராக தண்ணீர் விழுந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு மேல் குற்றாலம் பகுதிகளில் மழை பெய்ய துவங்கியது. நள்ளிரவு முதல் தொடர்ந்து விடிய விடிய பெய்த மழை காரணமாக அருவிகளுக்கு வரும் தண்ணீர் அதிகரித்தது.

நேற்று அதிகாலை 5 மணிக்கு மேல் மெயினருவியில் ஆர்ச் பகுதியை தாண்டி தண்ணீர் விழுந்தது. தொடர்ந்து தண்ணீர் அதிகரித்து அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தண்ணீர் செம்மண் நிறத்தில், சிறிய கற்கள், மரக்கட்டைகள், கிளைகள் போன்றவையும் விழுந்தது. இதனால் மெயினருவியில் நேற்று காலை முதல் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.அருவிப்பகுதியில் ஏற்பட்ட தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றலாம் கடை வீதி, பஜார் பகுதிகளிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. சுமார் 2 அடி உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் சுற்றுலா பயணிகள்  அப்பகுதிக்கு செல்லவதற்கு தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவியிலும் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் யாரும் குளிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.பழைய குற்றால அருவி, புலியருவியிலும் தண்ணீர் அதிகரித்து காணப்பட்டது. மதியத்திற்கு பின்பு அருவிகளில் தண்ணீர் படிப்படியாக குறையத் துவங்கியது.

கிராம பகுதிகளில் இடைநிற்கும் மாணவர்கள் அதிகரிப்பு


கட்டாயக்கல்வி சட்டம் அமல்படுத்தி, இரண்டாண்டுகளாகியும், பள்ளியில் இடைநிற்கும், மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. தீவிர நடவடிக்கை இல்லாததால், கிராமப்பகுதிகளில் இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், 2010, ஆகஸ்ட் மாதத்தில் கட்டாயக்கல்வி சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, அனைவரும் கல்வி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, பள்ளிகளில் ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை படிக்கும், 10 சதவீதம் மாணவர்கள் இடைநிற்கும் நிலை உள்ளது. இதை மறைத்து, பெரும்பாலான பள்ளிகளில், புள்ளி விவரங்கள் தயாரிக்கப்படுகிறது. கட்டாயக்கல்வி சட்டத்தில், இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கையே இருக்கக்கூடாது எனவும், இதற்காக, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், அனைவரையும் பள்ளியில் சேர்ப்பதற்கான பிரச்சாரம், "பிரிட்ஜ் கோர்ஸ்&' மையங்கள் என, பல்வித செயல்பாடுகள் இருந்தன. தற்போது, அவையும் செயல்படுத்தப்படுவதில்லை. இதனால், கிராமப்பகுதிகளில், இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றை தடுத்து நிறுத்தவும், அனைவருக்கும் கல்வி வழங்கவும், தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலர் ஒருவர் கூறியதாவது: அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ், அனைத்து மாணவர்களையும், பள்ளிகளில் சேர்ப்பதற்கான, பல்வேறு செயல்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

பள்ளியில், இடைநிற்கும் மாணவர் எண்ணிக்கை அதிகமாக உள்ள பகுதிகளில், சிறப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, மூன்று மாதம் வரை பயிற்சி வழங்கி, அந்தந்த வயதுக்குரிய வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

பல குழந்தைகளை, பெற்றோரே பள்ளிக்கு அனுப்பாமல், விவசாயம் உட்பட, பல்வேறு பணிகளுக்கு அனுப்பி விடுகின்றனர். கலெக்டரிடம் புகார் கொடுத்து, போலீஸ் மூலம் மிரட்டி, இடைநின்ற மாணவனை பள்ளிக்கு வரவழைத்தாலும், ஒரு சில நாட்கள் மட்டுமே வருகின்றனர். இதனால், இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியாத நிலை உள்ளது.

உயர் அதிகாரிகள் கண்டிப்பார்களோ என்ற பயத்தில், ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் இடைநிற்கும் மாணவர் எண்ணிக்கையை மறைத்து விடுகின்றனர். இடையில் நிற்கும் மாணவன், தனியார் பள்ளியில் சேர்ந்து விட்டதாகவோ, வேறு ஊருக்கு மாறுதல் பெற்றுச் சென்றதாகவோ, கணக்கு காட்டி விடுகின்றனர். தீவிர நடவடிக்கை இல்லாததால், கிராமப்பகுதிகளில் இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

வெள்ளி, 23 நவம்பர், 2012

கிராமப்புற மேம்பாடு தொடர்பான டிப்ளமோ படிப்பு


 கிராமப்புற மேம்பாட்டிற்கான தேசிய கல்வி நிறுவனம், கிராமப்புற மேம்பாட்டு மேலாண்மைத் துறையில், தனது 6வது 1 வருட முழுநேர ரெசிடென்ஷியல் முதுநிலை டிப்ளமோ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

PGDRDM என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த டிப்ளமோ படிப்பு, வரும் 2013-14ம் கல்வியாண்டில் வழங்கப்படவுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான அகில இந்திய நுழைவுத்தேர்வு 2013ம் ஆண்டு, பிப்ரவரி 10ம் தேதி நடைபெறும். 2013, ஆகஸ்ட் மாதம் தொடங்கும் இந்தப் படிப்பு, 2014ம் ஆண்டு ஜுலை மாதம் நிறைவடையும்.

விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் இறுதி தேதி  ஜனவரி 11, 2013. அதேசமயம், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், அந்தமான்-நிகோபர் மற்றும் லட்சத்தீவுகளை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கும் கடைசித் தேதி 2013, ஜனவரி 18ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பிக்கும் முறை, கட்டணம் மற்றும் இதர விபரங்களை அறிய www.nird.org.in/pgdrdm என்ற வலைத்தளம் செல்க.

எளிதான வெளிநாட்டுக் கல்வி! (சிங்கப்பூர்)


இந்தியாவிலிருந்து சில மணி நேரங்களில் அடைந்துவிடக்கூடிய ஒரு இடமான சிங்கப்பூர், பலவித காரணங்களுக்காக இந்திய மாணவர்களைக் கவரும் இடமாக உள்ளது.

QS போன்ற சர்வதேச அளவிலான சர்வேக்களில், உலகளவில் சிறந்த பல்கலைகளில், முதல் 20 இடங்களுக்குள் சிங்கப்பூர் பல்கலைகள் வருகின்றன. ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்திற்கு, சிங்கப்பூர் பல்கலைகள் பெயர்பெற்று விளங்குகின்றன.

சர்வதேச மாணவர்களின் பாதுகாப்பிற்கு சிறப்பான உத்தரவாதம் கிடைக்கும் இந்நாட்டில், பல நாடுகளை ஒப்பிடும்போது, கல்விக் கட்டணமும் குறைவே. அதேசமயம், தரமான கல்வியும் உண்டு. வெளிநாடு சென்று படிக்க விரும்பும் ஒருவர், அமெரிக்கா அல்லது பிரிட்டன் நாடுகளுக்கு செல்வதற்கு ஆகும் பயண செலவை விட, சிங்கப்பூர் செல்வதற்கு ஆகும் செலவு மிக மிக குறைவு.

சர்வதேச அறிவுக் கூடல்
சிங்கப்பூரில், INSEAD, SP Jain Centre of Management and SIM university போன்ற வெளிநாட்டுப் பல்கலைகளின் செயற்கைக்கோள் வளாகங்களும் உண்டு. வலுவான சர்வதேச தொடர்பை இந்நாடு பெற்றுள்ளதால், உலகளவிலான பல பல்கலைகளின் ஒருங்கிணைப்பை பெற முடிகிறது. Massachusetts institute of technology, US and Zhejiang university(China), MIT, Washington university, Carnegie Mellon university, Yale Stanford போன்ற பல பல்கலைகளுடன் ஒத்துழைப்புகள் உள்ளன.

படிப்புகள் மற்றும் செலவினங்கள்
இந்திய மாணவர்கள் பொதுவாக, பொறியியல், மேலாண்மை, ஐடி மற்றும் சுற்றுலாத் தொடர்பான படிப்புகளை மேற்கொள்ள சிங்கப்பூர் வருகின்றனர். இளநிலைப் படிப்புகளுக்கு, வருடத்திற்கு, சராசரியாக, 25,000 முதல் 30,000 சிங்கப்பூர் டாலர்கள் வரை செலவாகின்றன. அதேசமயம், தகுதிவாய்ந்த(Meritorious) மாணவர்களுக்கு, வருடத்திற்கு 11,000 சிங்கப்பூர் டாலர்கள் வரை உதவித்தொகை கிடைக்கிறது.

தோராயமாக, ஒரு மாதத்திற்கான தங்குமிட செலவினம் 700 முதல் 900 சிங்கப்பூர் டாலர் வரை செலவாகிறது. இளநிலைப் பட்டப் படிப்புகள் 3 வருடங்களும், முதுநிலைப் படிப்புகள் 2 வருடங்களும் கொண்டவை. அதேசமயம், இரட்டைப் பட்டப் படிப்புகள், 4 முதல் 5 வருடங்கள் வரை ஆகும்.

உதவித் தொகைகள்
National university of Singapore(NUS), Nanyang technological university(NTU), Management university(SMU) போன்ற சிங்கப்பூர் பல்கலைகள், வெளிநாட்டு மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டங்களை வழங்குகின்றன.

விசா விதிமுறைகள்
பல்கலையிடமிருந்து அனுமதி பெற்ற பிறகு, மாணவர் அனுமதி சீட்டிற்காக(Student pass), Immigration and Check points Authority -ஐ அணுகவும்.

உங்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டவுடன், ஏற்பு(acceptance) விண்ணப்பம் மற்றும் மாணவர் அனுமதி சீட்டு விண்ணப்பம் ஆகியவற்றை நிறைவுசெய்து, அவற்றை பல்கலையில் திருப்பி ஒப்படைக்க வேண்டும்.

உங்களின் ஏற்பு விண்ணப்பம் மற்றும் மாணவர் அனுமதி சீட்டு விண்ணப்பம் ஆகியவை ஏற்கப்பட்ட பின்னர், சம்பந்தப்பட்ட பல்கலையானது, சிங்கப்பூர் குடியேற்ற மற்றும் சோதனை அத்தாரிடியிடமிருந்து(ICA), மாணவர் அனுமதி சீட்டிற்கு விண்ணப்பிக்கும்.

அந்த அனுமதியை ICA -இடமிருந்து பெற்ற பின்னர், அதற்கான கடிதத்தை, அந்தப் பல்கலை அல்லது கல்வி நிறுவனம், உங்களுக்கு அனுப்பும்.

கலை-அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள்!


மாநில திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 20 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கு, மென் திறன்கள் மற்றும் வேலை வாய்ப்புத் திறன்கள் தொடர்பாக பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும், மூன்றாமாண்டு மாணவர்களுக்கு, மொத்தம் 235 மணி நேரங்கள் பயிற்சியளிப்பது இத்திட்டத்தின் நோக்கம். இதன்மூலம், கல்லூரி படிப்பை முடித்து வெளிவரும் மாணவர்கள், ஐ.டி, ஐ.டி.இ.எஸ், சில்லறை வர்த்தகம் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் பணிவாய்ப்புகள் பெறுவது எளிதாக்கப்படும்.

தகவல் தொடர்பு திறன்கள், ஆங்கில உச்சரிப்பு மற்றும் இலக்கணம், வாடிக்கையாளர் சேவை திறன்கள், பி.சி அப்ளிகேஷன்ஸ், சட்டச்சு திறன்கள், நேர்முகத் தேர்வுக்கு தயாராதல் போன்ற அம்சங்கள் இப்பயிற்சி திட்டத்தில் அடங்கும். இவைத்தவிர, ஐ.டி.இ.எஸ், சில்லறை வர்த்தகம் மற்றும் விருந்தோம்பல் போன்ற குறிப்பிட்ட துறைகளுக்கு தேவையான திறன் வளர்ப்பு பயிற்சிகளிலும் கவனம் செலுத்தப்படும்.

இப்பயிற்சி திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, அனுபவம் வாய்ந்த தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் கல்வி நிறுவனங்கள், மாநிலம் முழுவதுமுள்ள 62 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுடன் இணைந்து செயல்படும்.

இந்த தனியார் நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுவதற்கான ஒத்துழைப்பை, மாநில அரசின் கல்லூரி கல்வித்துறை வழங்கும். கல்லூரி இறுதியாண்டில், 6 முதல் 7 மாதங்கள் வரை நீடிக்கும் இந்த பயிற்சிகள், வாரத்திற்கு தோராயமாக 8 மணிநேரங்கள் வரை வழங்கப்படும்.

இத்தகைய பயிற்சிகள், கிராமப்புறங்களிலிருந்தும், தமிழ் வழியில் கல்விக் கற்றும் வரும் மாணவர்களுக்கு, பேருதவியாக இருந்து, அவர்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்த உறுதுணையாக இருக்கும். பயிற்சியளிக்கும் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு உதவிக் குழுவானது, ஐ.டி. ஐ.டி.இ.எஸ், சில்லறை வணிகம் மற்றும் விருந்தோம்பல் துறை நிறுவனங்களிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு, மாணவர்களின் வேலை வாய்ப்புகளை உறுதிசெய்யும் விதமாக பணியாற்றும்.

படிப்பு மற்றும் பயிற்சிகளை முடித்த மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்கள், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் மற்றும் வேலூர் ஆகிய 7 இடங்களில் நடத்தப்படும். இதன்மூலம், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள மாணவர்கள் எளிதாக கலந்துகொள்ள வழியேற்படும். மாநில அரசின் இந்த புதிய திட்டத்தை, கல்வியாளர்கள் பலர் வரவேற்றுள்ளனர்.