Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 6 அக்டோபர், 2012

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வரலாறு காணாத குடிநீர் மற்றும் மின்சாரம் தட்டுப்பாடு : ஓட்டல்கள் மூடல்


கடையநல்லூர், பகுதியில் ஏற்பட்டு வரும் மின்தடையினால் தொழில் இழப்புகள் ஏற்பட்டுள்ளது.
கடையநல்லூர், செங்கோட்டை பகுதிகளில் கடந்த நாட்களில் கடுமையாக காணப்பட்டு வரும் மின்தடையினால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மின்சப்ளை பெருமளவில் தடைபட்டு வருவதால் மின்சாரம் தொடர்பான அனைத்து பணிகளும் பெருமளவில் முடங்கி வருகின்றன.

ஏற்கனவே கடையநல்லூரில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் மின்தடையும் தொடர்வதால் பெரும்பாலான ஓட்டல்கள் மூடப்பட்டு வருகின்றன.
சிறு தொழில் நிறுவனங்களும் முறையாக தொழிலை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றன. கடந்த கடந்த நாட்களில்  இப்பகுதியில் ஏற்பட்டு வரும் மின்தடை காரணமாக  தொழில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என தெரிகிறது.

 மற்ற பகுதிகளை விட காற்றாலை மின்உற்பத்தியை வைத்து கடையநல்லூர், செங்கோட்டை பகுதிகளில் போதுமான அளவில் மின்சப்ளை பாதிப்பின்றி ஏற்படுத்தி வந்த நிலையில் கடந்த சில தினங்களாக காற்றாலைகளும் சீராக இயங்காததால் அதன் மூலமான மின் உற்பத்தி ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஏனைய பகுதிகளில் நிலவி வருகின்ற மின்தடை போன்று கடையநல்லூர், செங்கோட்டை பகுதிகளிலும் மின்தடை ஏற்பட்டு வருகிறது.

பகல் நேரத்தில் சுமார் 10 மணி நேரமும், இரவில் சுமார் 6 மணிநேரம் வரையிலும் மின்தடை தொடர்வதால் எவ்வித பணிகளையும் மேற்கொள்ள முடியாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகமான மின்தடை குறித்து இப்பகுதியில் உள்ள மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, மதுரையிலிருந்து உபமின் நிலையங்களுக்கு வரும் தகவல்களை பொறுத்தவரை சப்-ஸ்டேஷன்களில் இருந்து செல்லக்கூடிய மின் வினியோகத்தை நிறுத்தம் செய்திடவும், மீண்டும் தகவல் வரும்போது ஜார்ஜ் செய்தால் போதும் என்று கூறிவிடுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வெள்ளி, 5 அக்டோபர், 2012

ஸ்காட்லாந்து - அருமையான சூழலில் வெளிநாட்டு படிப்பு


கடந்த பல ஆண்டுகளாகவே, உயர்கல்விக்கு வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதில், ஸ்காட்லாந்து புகழ்பெற்று விளங்குகிறது. ஸ்காட்லாந்தின் எந்த பல்கலையில் படித்தாலும், சிறந்த அனுபவத்தை ஒரு மாணவரால் பெற முடியும்.
தனித்துவமான கலாச்சாரம், நல்ல இயற்கையமைப்பு மற்றும் சிறந்த பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பல அம்சங்கள், ஸ்காட்லாந்தை நோக்கி வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கின்றன.
ஸ்காட்லாந்து சரியான இடமா?
உங்களின் வெளிநாட்டு கல்விக்கு ஸ்காட்லாந்து சரியான இடமா என்ற கேள்வி உங்களிடம் இருந்தால், அதற்கு பதில் ஆம் என்பதுதான். ஸ்காட்லாந்து பல்கலைக்கழகங்களிடமிருந்து கிடைக்கும் கல்வியால் உங்களுக்கு கிடைக்கும் நன்மை ஒருபுறமிருக்க, அந்நாட்டின் வலுவான பொருளாதாரமானது, உங்களுக்கு சிறந்த தொழில்துறை அறிவைக் கொடுக்கிறது.
நிதி, பாரம்பரிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள், லைப் சயின்சஸ், மருத்துவ தொழில்நுட்பம், சுற்றுலா, படைப்பாக்க தொழில்துறை, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்றவை அந்நாட்டிலுள்ள முக்கியமான தொழில்துறைகள். ஸ்காட்லாந்தில், மாணவர்கள், cross - faculty படிப்பை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஸ்காட்லாந்திலுள்ள ஒவ்வொரு பல்கலையும், ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், இங்கே படிப்பவர்கள் பெறும் அனுபவம், அவர்களின் நீண்ட நல்வாழ்விற்கு துணைபுரிகிறது.
உயர்கல்வி அமைப்பு
ஸ்காட்லாந்தின் உயர்கல்வி அமைப்பானது, பிற ஐரோப்பிய நாடுகளின் நடைமுறைகளிலிருந்து மாறுபட்டுள்ளது. இந்நாட்டிலிருக்கும் மொத்தம் 21 உயர்கல்வி நிறுவனங்கள், சுய நிர்வாக உரிமையும், சுதந்திரமும், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் மும்முரமாக ஈடுபடும் தன்மையும் கொண்டவை. டிகிரி மற்றும் இதர பட்டப்படிப்புகள், முற்றிலும் கல்வி நிறுவனம் சம்பந்தப்பட்டதே தவிர, ஸ்காட்லாந்து அரசாங்கம் சம்பந்தப்பட்டதல்ல.
பட்டம் வழங்குவதற்கு, ஸ்காட்லாந்து அதிகார அமைப்பினால் அங்கீகாரமளிக்கப்பட்ட பல்கலைகளின் விபரங்கள் www.dius.gov.uk என்ற இணையதளத்தில் கிடைக்கும். இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகள் அனைத்தும் போலோக்னோ அமைப்பினால் நிர்வகிக்கப்படுகின்றன. அந்நாட்டில், இளநிலை மற்றும் முதுநிலை அளவில் வழங்கப்படும் தகுதி நிலைகள், அந்நாட்டு உயர்கல்வி தகுதிகளுக்கான விதிமுறைகளின் கீழ் விவரிக்கப்பட்டுள்ளன.
சேர்க்கை விதிகள்
பொதுவாக, மாணவர் சேர்க்கை விதிமுறைகளை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்கின்றன. ஒரு மாணவர், தான் ஒரு பாடத்தை தேர்ந்தெடுக்க பொருத்தமானவர்தானா? என்பதை தெரிந்துகொள்ள, பாட உள்ளடக்கத்தை கவனமாக படிக்க வேண்டும்.
சேர்க்கை நடைமுறைகளின்போது பின்பற்றப்பட வேண்டிய சில வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன,
www.ucas.com என்ற இணையதளமானது, பலவிதமான பாடங்களைப் பற்றியும், அவற்றை வழங்கும் கல்வி நிறுவனங்கள் பற்றியும் விபரங்களை வழங்குகிறது.
www.ucas.com இணையதளத்தில், ஆன்லைன் அப்ளிகேஷன் அமைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
www.ucas.com மூலம் அப்ளிகேஷன் செயல்பாட்டை தெரிந்துகொள்ளலாம். உங்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற விபரங்களையும் இத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
* உங்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டுவிட்டால், சம்பந்தப்பட்ட பல்கலை, உங்களுக்கான முறையான வழங்கல் கடிதத்தை அனுப்பும்.
கல்வி செலவினம்
பட்டப்படிப்பு அளவில், ஒரு வெளிநாட்டு மாணவருக்கான கல்விச் செலவு, வருடத்திற்கு 9000 பவுண்டுகள் முதல் 20000 ஆகிறது.
அதேசமயம், கல்விக் கட்டணமானது, படிப்புக்கு படிப்பு, பல்கலைக்கு பல்கலை வேறுபடும். மருத்துவம், பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகளுக்கு, பிற படிப்புகளை விட அதிக செலவாகும். மாணவர் விசா பெர்மிட் பெறுவதற்கு முன்பாக, உங்களின் நிதி ஆதார நிலையை நிரூபிக்க வேண்டும்.
உதவித்தொகை
Saltire என்பது, மாணவர்களுக்கான மிக முக்கியமான உதவித்தொகையாகும். முதுநிலைப் படிப்பில் 1 வருட கல்விக் கட்டணத்தை சமாளிப்பதற்கான 2000 பவுண்டுகள் உதவித்தொகை இதன்மூலம் கிடைக்கிறது. இந்தவகை உதவித்தொகைகளைப் பெறுவதற்கு, மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த உதவித்தொகை, இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த மணாவர்களுக்கு வழங்கப்படுகிறது.
Commonwealth scholarship, Fellowship plan and British Chevening scholarships(available only at post-graduate level) போன்றவை இதர சில முக்கிய உதவித்தொகைகளாகும். மேலும், ஒவ்வொரு பல்கலையும், தங்களிடம் சில குறிப்பிட்ட படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகைகளை வழங்குகின்றன. இவைப் பற்றிய விபரம் அந்தந்த பல்கலை இணையதளங்களில் உள்ளது.
படிப்பின்போதான பணி
டிகிரி நிலையிலான படிப்பை(பவுண்டேஷன் அல்லது ஹையர்) மேற்கொள்கையில், வாரம் 20 மணிநேரங்கள் வரை பணிசெய்து, உங்களின் சில பொருளாதார தேவைகளை நிறைவுசெய்து கொள்ளலாம். அதேசமயம், படிப்பை முடித்தப்பிறகு, அந்நாட்டில் சிறந்த பணி வாய்ப்புகள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.
ஆனால், ஸ்காட்லாந்து பல்கலையிலிருந்து பெற்ற பட்டமானது, உலகளவில் நல்ல மதிப்பை கொண்டிருப்பதால், உங்களுக்கான வேலை வாய்ப்பை பற்றி கவலை வேண்டியதில்லை.

புதன், 3 அக்டோபர், 2012

மணிச்சுடர் தந்த மாமனிதர்


அக்டோபர் 4 !
ஆம், சமுதாய சங்கநாதமாம் "மணிச்சுடர் " வெள்ளி விழா !
ஆம், அன்று தான் ,மணிச்சுடர் தந்த மாமனிதர்  சிராஜுல் மில்லத் பிறந்த நாள் !
1926 அக்டோபர் 4ல் காரைக்காலில பிறந்தார்  சிந்தனைச் செல்வர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ்ஸமத் சாஹிபு .
அவர் வாழ்க்கையை பிற மக்களுக்கு பாடமாக வல்ல அல்லா ஆக்கினான் ,ஆம் அவரை ,தன சமுதாயப் பணிக்கு அல்லா தேர்ந்தெடுத்தான் என்றே சொல்லவேண்டும் . அவர் இஸ்லாமிய சமுதாயத்தின் கல்விப்பணிக்கு ஆற்றியே தொண்டு மகத்தானது . சென்னை புதுக்கல்லூரி முதல் நெல்லை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி வரை மட்டுமல்ல ,தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் தோன்றுவதற்கும் அவர்பணி காரணமாயிற்று என்று சொன்னால் மிகையாகாது .
    எல்லா மக்களும் எல்லா வளமும் பெற வேண்டுமானால் ,கல்வி முக்கியம் என்பதை தன் குறிக்கோளாக வைத்து தன் சமுதாயப் பணிகளை மேற்கொண்டுவந்துள்ளார் என்பதை அவர் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் நாம் காணலாம் .
    அந்த காலக் கட்டத்தில் ,இன்று அப்போலா மருத்துவ மனை இருக்கும் இடத்திற்கு அருகில் , வாலஸ் கார்டனில் 'மணிச்சுடர் ' அலுவலகம் செயல் பட்டு வந்தது . அப்துஸ் சலாம் காகா என்பவர் வரவேற்பு அலுவலராக செயல் பட்டு வந்தார் . அந்த கால கட்டத்தில் ,ஒரு நாள் ஒரு சகோதர சமுதாயத்தை சார்ந்த ஒருவர் ,தன் மகளுடன் மணிச்சுடர் அலுவலகம் வந்தார் .சலாம் காகா என்ன வேண்டும் என்று கேட்டார் ,."பெரியவரை" பார்க்க வேண்டும் என்று பதில் சொன்னார் . சலாம் காகா ,உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா ? என்று கேட்டார் ,அதற்க்கு அந்த மனிதர் ,இதுவரைக்கும் நேரில் பார்த்து பேசியது இல்லை ,துதான் முதல் முறை என்று பதில் கூறினார் .உடனே , முகவரியை கேட்டு தெரிந்து கொண்டு , தலைவர் சிராஜுல் மில்லத்திடம் சென்று விபரம் கூற , தலைவர் உள்ளே வர அனுமதி கொடுத்தார்கள் . வந்த விபரம் என்ன ? என்று தலைவர் கேட்டார்கள் ; அதற்க்கு வந்த மனிதர் அளித்த பதில் தலைவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது . 
அப்படி என்ன அந்த மனிதர் கூறியிருப்பார் , வேறொன்றும் இல்லை , அவர் கூட அழைத்து வந்திருக்கும் அவர் மகள் அரசு கோட்டாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் டாக்டர் படிக்க இடம் கிடைத்து முதல் வருடம் முடித்துவிட்டு , இரண்டாம் வருடம் ஆரம்பித்துவிட்டது ; ஆனால் , கல்விக் கட்டணம் கட்டுவதற்கும் , மற்றைய செலவிற்கும் எங்களிடம் பணம் இல்லை ,அவள் படிப்பு நின்று விடும் என்று பயப்படுகிறோம் ,எப்படியாவது என்மகள் டாக்டர் படித்து முடிக்க வேண்டும் என்று அந்த மனிதர் தலைவர் சிராஜுல் மில்லத்திடம் அழுத வண்ணம் வேண்டுகோள் வைத்தார் .
தலைவர் சிராஜுல் மில்லத் அவர்கள் ,வந்தவர் எந்த மதம் ,எந்த சாதி என்று பார்க்கவில்லை .அந்த ,மனிதரை ஆறுதல் கூறி உங்கள்   மகள் படிப்பு இன்ஷாஅல்லாஹ் ,ந்த விதத்திலும் தடை படாது என்று கூறி ஆறுதல் படுத்திவிட்டு . அன்று துபையில் பணி செய்துகொண்டிருந்த ,அன்றைய காயிதே மில்லத் பேரவையின் பொதுச்செயலாளர் ,இன்றைய நாடாளுமன்ற உறுப்பினருமான சமுதாயப் போர்வாள் அண்ணன் அப்துல் ரகுமான் அவர்களை தலைவர் சிராஜுல் மில்லத் அவர்கள் தொடர்பு கொண்டு அந்த மாணவியின் டாக்டர் படிப்புக்கான செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்ள கட்டளையிடுகிறார்கள் .அந்த தலைவரின் தொண்டரல்லவா ,அண்ணன் அப்துல் ரகுமான் ,மறு பேச்சு பேசாமல் உடனே ஏற்றுக் கொள்கிறார்கள்.
அந்த மாணவியின் படிப்பு முடியும் வரை  செலவுகள் முழுவதும் செலவு செய்யப் படுகின்றது .அந்த மாணவியும் நன் முறையில் படித்து மருத்துவராகி விட்டார் .ஆனால் ,சிராஜுல் மில்லதோ, அவர் வழி நடத்திய இயக்கமோ அவர்கள் மூலம் எந்த ஒரு உதவியும் ,பிரதி பலனோ அடைந்தது இல்லை ,இன்னும் சொல்லப் போனால் ,அண்ணன் அப்துல் ரகுமான் அவர்களுக்கு இன்னும் அந்த டாக்டர் முகம்  தெரியாது .
இது ஒரு சிறிய உதாரணம் தான் , தமிழகத்தில் எத்தனையோ மருத்துவர்களும் ,பொறியாளர்களும் ,பட்டதாரிகளும் உருவாக சிராஜுல் மில்லத்தும் ,அவர் கட்டிக் காத்த இந்திய யூனியன் முஸ்லிம்லீக்கும் ,அதன் தொண்டர்களும் காரணமாக இருந்துள்ளார்கள் ,இனிமேலும் இருப்பார்கள் .
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர்கள் காயிதே மில்லத்தும் , அவர் வழிவந்த சிராஜுல் மில்லத்தும் தன்னலம் கருதாமல் சமுதாய நலனை மட்டுமே முன்னிறுத்தி ,தன் சுகங்களை அழித்துக்கொண்டு வாழ்ந்தார்கள் . அதே ,வழியில் இன்றைய நம் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் பெருந்தகை அவர்களும் அவரை தொடர்ந்துள்ள நிர்வாகிகளும் சமுதாயத்திற்காக தங்கள் வாழ்வை அர்பணித்துக் கொண்டுள்ளனர்  கொண்டுள்ளார்கள் .அவர்கள் ,செல்லும் வழி வெல்லும் வழியாகட்டும் ! வல்ல அல்லா அருள் புரிவானாக !

அல்லாஹு அக்பர் ! முஸ்லிம் லீக் ஜிந்தாபாத் !

-----அபு ஆஸிமா

திங்கள், 1 அக்டோபர், 2012

"4-10-2012 மணிச்சுடர் வெள்ளிவிழா" புதிய சகாப்தம் உருவாக்கும் விழாவில் உங்களை எளியேன் நான் காண வேண்டும்...... கே.எம்.கே.


4-10-2012 வியாழக்கிழமை மால 5 மணி! இந்த நாளின் தனித்தன்மையும் முக்கியத்துவமும் `மணிச்சுடர்’ வாசகர் நேசகர்கள் அறிவார்கள்! இ.யூ. முஸ்லிம் லீகினர் இதன் வரலாற்றுச் சிறப்பைப் புரிவார்கள்! சமுதாயப் பெரியயோரும், பெருமக்களும் இந்த நாளின் அருமையைத் தெரிந்து அலைஅலையாய் அன்றைய தினத்தில் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் கூடுவார்கள்! மணிச்சுடரின் வெள்ளிவிழாச் சிறப்பைப் பாடுவார்கள்!

அன்றைய நாளில்தான் `மணிச்சுடர்’ பிறப்பெடுக்க மூலகாரண கர்த்தா சிராஜுல் மில்லத் ஏ.கே.ஏ. அப்துஸ்ஸமத் சாஹிப் - நம் இதயங்களைக் கவர்ந்த இனிய தலைவர் பிறந்த நன்னாள்!

ஆகவேதான், தேசிய ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும், சமூக நல்லிணக்கத்துக்கும், சிறுபான்மையினரின் - குறிப்பாக, முஸ்லிம்களின் கலாச்சாரத் தனித்தன்மையை நிலை நிறுத்துவதற் கும் பாடுபடும் `மணிச்சுடர்’ நாளேட்டின் வெள்ளி விழாவை அன்றைக்குக் கொண்டாடுகிறோம்.

`குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்தில்’ என்பது தமிழ் மக்களிடையில் தவழும் பொன் மொழி! அக்டோபர் 4 - வியாழன் மாலை 5 மணிக்கு நடக்கும் `மணிச்சுடர்’ 25-வது ஆண்டு - வெள்ளி விழா சிறப்பு மலர் வெளியீட்டு விழா கொண்டாடப்படு கிறது என்று சொல்வதைவிட, இ.யூ. முஸ்லிம் லீகினர் கடந்த 65 ஆண்டு காலமாக நடந்து வந்த பாதையில் பட்டுள்ள பாடுகளையும், அவற்றால் படிக்கப் பெற்ற பாடங்களையும் இருபத்து ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதியும், பரப்பியும், பிரச்சாரம் செய்தும் வந்திருக்கின்ற மணிச்சுடருக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் விழா நடத்தப் பெறுகிறது என்று கூறுவதே பொருத்தமாகும்.

மணிச்சுடருக்குப் பாராட்டு என்பது அதனை உருவாக்கியவர் களுக்கும், அது தொடர்ந்து நடந்திட உதவியவர்களுக்கும், அதில் உழைத்தவர்களுக்கும், அதன் வளர்ச்சிக்கு உற்ற துணையானவர் களுக்கும் வாழ்த்துக் கூறுவதுதான்! அதற்காகவேதான் பத்திரிகைத் துறையில் பட்டறிவு மிக்க பார்போற்றும் கவிக்கோமான் - தமிழினத்தின் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களை அழைத்திருக்கிறோம்!

இவர் ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் - அவருக்கு ஆதரவாக எழுதிய காலத்திலும், அவரின் அரசை விமர்சித்து எழுதிய காலத்திலும் மணிச்சுடருக்கு அரசு விளம்பரம் தந்து ஆதரவளித்து வந்த அறிஞர்!அவர் வழியில் நிற்கும்தனயன் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும் விழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகிறார்.

திராவிடர் கழகத் தலை வர் மானமிகு கி. வீரமணி அவர்கள் பெரியாரின் நிழலாகவும், குரலாகவும் நம்மிடையில் வாழ்பவர் `விடுதலை’யின் சிறப்புமிகு ஆசிரியர்! மணிச்சுடர் எழுதி வரும் கருத்துக்களையும், கொள்கைகளையும் பாராட்டுவதுடன், விடுதலையில் அவற்றை பிரசுரித்து பேராதரவு காட்டும் பகுத்தறிவுப் பண்பாளர்! அவரின் வாழ்த்துரையை அனைவரும் கேட்க வேண்டும் அல்லவா! சகோதரர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் உள்ளவர் என்பதற்காக விழாவுக்கு அழைக்கப்படவில்லை.

மக்கள் தலைவர் மறைந்த மனிதநேயர் ஜி.கே. மூப்பனார் அவர்கள், ஒரு நெருக்கடியான நேரத்தில் மணிச்சுடர் நாளிதழுக்கு மூன்று இலட்சம் ரூபாய் தந்து, காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் களுக்குரிய சந்தா என்று கூறி பேராதரவு தந்துள்ளார்கள். அந்தத் தலைவரின் அருமைத் தொண்டர் என்னும் முறையில் பீட்டர் அல்போன்ஸ் வருகிறார்! வாழ்த்துரை தருகிறார்!

இவற்றை எல்லாம் நேரில் பார்க்க வேண்டும்! வரலாற்றை உணர்ந்து பார்த்து வருங்காலத்துக்கான வரைவுத் திட்டங்களை வடிக்க வேண்டும் என்னும் நல்ல நோக்கத்தில்தான் இந்த வெள்ளி விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னணியினரும் முஸ்லிம் லீகரும் அணிஅணியாக வந்து விழாவுக்கு அணியும், அழகும் சேர்க்கிறார்கள். நமது தேசியத் தலைவர் இ.அஹமது அவர்களின் ஆசியுரையும் விழாவுக்குச் சிறப்புச் சேர்க்கிறது.

இன்றைக்கு `மணிச்சுடர்’ 26-வது ஆண்டுப் பயணத்தில் இருக்கிறது. 25 ஆண்டு வெள்ளிவிழா என்று அறிவித்திருக்கி றோம். ஆனால், இருபத்து ஐந்து ஆண்டு `மணிச்சுடர்’ தடைபடாமல் தொடர்ந்து வந்ததா என்றால் அது இல்லை. 1991-லிலும், 2007-லிலும் இரண்டு முறை நிறுத்தப்பட்டு, ஒவ்வொரு முறையும் இரண்டு ஆண்டுகள் வெளி வராமல் இருக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டிருக் கின்றன.

அத்தகைய தடைகளும், இடைஞ்சல்களும், நிறுத்த வேண்டிய சூழ்நிலைகளும் அடுத்து வரும் `மணிச்சுடர்’ பொன்விழாவுக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே, இந்த வெள்ளி விழாவை - சிறப்புக்குரிய விழாவாக நடத்திக் காட்ட வேண்டும் என்று முனைந்திருக்கிறோம்.

அக்டோபர் 4 - வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெறும் `மணிச்சுடர்’ வெள்ளி விழாவில் இ.யூ. முஸ்லிம் லீகில் இயக்கத்தை வளர்ப்பவர் ஒவ்வொருவரும் இயக்கத்தை வளர்க்கப் பணியாற்றும் ஒவ்வொருவரும் பங்கேற்பது வரலாற்றை உருவாக்குவது ஆகும்!

தமிழக இ.யூ. முஸ்லிம் லீக் வரலாற்றில் புதிய சகாப்தம் உருவாக்கும் விழாவுக்கு எல்லோரும் வாருங்கள்! உங்களை இந்த எளியேன் காண வேண்டும்! ஏனெனில் பொன்விழா நடக்கும் போது அந்த வாய்ப்பு இவனுக்கு கிட்டுமா? அது சந்தேகந்தானே!

சனி, 29 செப்டம்பர், 2012

இந்தியாவில் ஆண்டு தோறும் 15 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்


இந்தியாவில் ஆண்டு தோறும் சுமார் 15 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று சென்னை அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி கேன்சர் ஆஸ்பத்திரி சீனியர் கன்சல்டன்ட் ரேடியேஷன் ஆன்கோலஜிஸ்ட் டாக்டர் மகாதேவ் கூறினார்.

இதுகுறித்து நெல்லையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 லட்சம் பேருக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக வயிறு, வாய், மார்பகம், கர்ப்பப்பை, கணையம், மூளை, தண்டுவடம் உட்பட பல்வேறு உறுப்புகளை இந்த நோய் தாக்குகிறது. புற்று நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து உரிய சிசிக்சைகளை மேற்கொண்டால் குணப்படுத்தலாம். ஆனால் பெரும்பாலான நோயாளிகள் கடைசி கட்டத்திலேயே கேன்சர் நோய் சிகிச்சைக்கு வருவதால் இதனை குணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. ஒவ்வொரு புற்றுநோய் வகைக்கும் வித்தியாசமான அறிகுறிகள் தென்படும். சில நோய் ஆரம்ப கட்டத்தில் தெரியாது. நோயின் பாதிப்பு தீவிரமடைந்ததும் வெளியே தெரிய வரும். ஆரம்ப காலங்களில் புற்று நோய்க்கு ஆபரேஷன் மட்டுமே சிகிச்சை முறையாக இருந்தது. ஆனால் தற்போது நவீன சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது ரேடியேஷன் சிகிச்சையில் "சைபர் நைப்' என்பது நவீன சிகிச்சை முறையாகும். பாதித்த உறுப்பின் மிகவும் சிறிய இடத்திலும் சரியான முறையில் சிகிச்சை அளிக்க இந்த வசதி பயன்படுத்தப்படுகிறது. ஆபரேஷன் செய்ய முடியாத இடங்களில் இச்சிகிச்சை முறை பயன்படுகிறது. தற்போது நவீன சிகிச்சை முறைகளின் மூலம் 70-80 சதவீதம் நோயாளிகள் இந்நோயில் இருந்து காப்பாற்றப்படுகின்றனர்.

 தமிழகத்தை பொறுத்தவரை சென்னை உட்பட பல்வேறு பெரு நகரங்களில் வயிறு புற்றுநோய் பிரச்னையில் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. புற்று நோய் ஏற்படாமல் தடுக்க பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மருத்துவ கருத்தரங்குகள், தூத்துக்குடியில் விரைவில் இம்மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

விறகு மூலம் மின்சாரம் தயாரிப்பு "யூனிட்' மூடல்


மதுரை மாவட்டம் பேரையூரில் ரூ.7 லட்சத்தில் அமைக்கப்பட்ட, விறகு மூலம் மின்சாரம் தயாரிக்கும் "யூனிட்' மூன்றாண்டுகளாக மூடிக்கிடக்கிறது.பேரையூர் பேரூராட்சிக்கு மின்தேவையை பூர்த்தி செய்ய, சமன்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 லட்சத்தில் 2006ல் இந்த "யூனிட்' அமைக்கப்பட்டது. சீமை கருவேல் மரக் குச்சிகளை காய வைத்து, துண்டுகளாக வெட்டி, அவற்றை எரிப்பதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. பேரூராட்சி அலுவலகம், குடிநீர் வினியோகத்துக்கான மோட்டார் இயக்கம், பஸ் ஸ்டாண்ட்டில் உள்ள விளக்குகள், கடைகளுக்கு தேவையான மின்சாரம், இந்த யூனிட்டில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த யூனிட் துவங்கி சில மாதங்கள் மட்டும் செயல்பட்டது.

இதை இயக்கும் ஆப்பரேட்டர்கள் பற்றாக்குறை காரணமாக காலப்போக்கில் யாரும் இந்த யூனிட்டை கண்டுகொள்ளவில்லை. மூன்றாண்டுகளாக மூடப்பட்டு, தயாரிப்பு இயந்திரங்கள் துருபிடித்து உள்ளன. தற்போது நிலவும் மின்தட்டுப்பாட்டில் இந்த யூனிட்டை செயல்படுத்தினால், பேரூராட்சி பகுதிக்கு குடிநீர் வினியோக மோட்டாருக்கு மின்சாரம் கிடைக்கும். மின் தடையால் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடு வராது. பேரூராட்சி நிர்வாகம் இதை கண்டுகொள்ளவில்லை. ரூ.பல லட்சம் மதிப்புள்ள உபகரணங்கள் வீணடிக்கப்படுகின்றன.
பேரூராட்சி நிர்வாக அலுவலர் கலையரசி கூறுகையில், ""விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நாள் ஒன்றுக்கு எத்தனை மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம் என்ற விவரம் எனக்கு தெரியவில்லை,'' என்றார்.மின் தட்டுபாடு நேரத்தில் இத்தகைய யூனிட்டுகளை பேரூராட்சி நிர்வாகங்கள் இயக்கி, மின் தேவையை பூர்த்தி செய்யலாம்.

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

ஆழ்வார்குறிச்சியில் இல்லம் தோறும் காய்கறி தோட்டம்



ஆழ்வார்குறிச்சியில் பரமகல்யாணி கல்லூரி என்எஸ்எஸ் சார்பில் இல்லம் தோறும் காய்கறி தோட்டம் எனும் புதிய திட்டம் துவக்கப்பட்டது.
ஆழ்வார்குறிச்சியில் வாழும் குடும்பங்களுக்கு பூச்சி மருந்து, செயற்கை உரம் பயன்படுத்தப்படாத புதிய காய்கறிகளை அவர்களாகவே உற்பத்தி செய்து கொள்வதற்காக இல்லம் தோறும் ஒரு காய்கறி தோட்டம் என்ற திட்டத்தின் கீழ் இலவசமாக அன்றாடம் பயன்படுத்தப்படும் காய்கறி விதைகளை வழங்கி வீட்டு தோட்டம் அமைப்பதற்கான சிறப்பு முகாம் நடந்தது.

முகாமிற்கு கல்லூரி முதல்வர் ரஞ்சித்சிங் தலைமை வகித்தார். என்எஸ்எஸ் திட்ட அலுவலர்கள் ஆர்.ரஞ்சித், செல்வக்குமார் முன்னிலை வகித்தனர். இல்லம் தோறும் காய்கறி தோட்டம் எனும் திட்டத்தை அறிமுகம் செய்து தோட்டம் அமைக்கும் ஆலோசனை, செய்முறை பயிற்சி ஆகியவற்றை என்எஸ்எஸ் அலுவலர் ரஞ்சித் எடுத்து கூறினார்.

என்எஸ்எஸ் திட்ட அணிகள் 18, 19, 120, 177, 178 ஆகியன சார்பில் திட்ட அலுவலர்கள் முத்துலட்சுமி, சுதாகரன், ராஜகோகிலா மேற்பார்வையில் மாணவ ஒருங்கிணைப்பாளர்கள் மாரிமுத்து, ராஜசேகர், பாண்டியராஜா, சிதம்பர பிரியதர்ஷினி, மணிமேகலா ஆகிய குழுவினர் வீடு வீடாக சென்று காய்கறி விதைகளை வழங்கினர். சிறப்பு அழைப்பாளராக டவுன் பஞ்., தலைவர் முத்தையா கலந்து கொண்டு திட்டத்தை துவக்கி வைத்து காய்கறி விதைகளை வழங்கினார். சுதாகரன் நன்றி கூறினார்.

வீடுகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் காய்கறி விதைகளை பயன்படுத்தி சிறந்த முறையில் காய்கறி தோட்டம் அமைத்திருக்கும் வீடுகளுக்கு 1 மாதத்திற்கு பின்னர் சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது.